
பூமியில் சிவமும்சக்தியும் கால் ஊன்றிய திருத்தலம் காசி!
சுமார் 25,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது காசி நகரம். கிருத யுகம்- திரிசூல வடிவம், திரேதா யுகம்- சக்கர வடிவம், துவாபர யுகம்- தேர் வடிவம், கலி யுகம்- சங்கு வடிவம் என்று காசி நகரம் விளங்குவதாக காசி ரகசியம் நூல் கூறுகிறது.

சிவனும் பார்வதியும் மணம் முடித்து பூமிக்கு வந்த போது பிரளய காலத்திலும் அழியாத காசியை தாங்கள் வசிக்க தேர்ந்தெடுத்தனர் என்றும், அவர்கள் கால் ஊன்றிய இடமே காசி என்றும் காசிகாண்டம் கூறுகிறது.
காசியில் உயிர் துறக்கும் உயிர்களின் காதுகளில் காசி விஸ்வநாதர் பிரணவ மந்திரம் ஓதி, மோட்சமடையச் செய்கிறார் என்பது ஐதீகம். இங்கு பல கோடி சிவ லிங்கங்கள் இருப்பதாக பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பகவான் மகாதேவ், தனது திரிசூலத்தின் மீது நின்று, காசியைப் படைத்தார் என்பது ஐதீகம்.
காசிக்கு அருந்தனா, சுதர்சனா, பிரம்மாவதாரா, பூபவதி, ராமநகரா, மாளநி, காசிபுரா, கேதுமதி ஆகிய பெயர்களும் உண்டு. தவிர மச்ச புராணம் அவிமுக்தா க்ஷேத்திரம் என்றும், கூர்ம புராணம் மற்றும் காசி ரகசியம் ஆனந்தவனம் என்றும் குறிப்பிடுகின்றன.
மேலும், ஈசன் இங்கு தங்கி அருளுவதால் ‘ருத்ர வாசம்’ என்றும் ஞானம் வளர்க்கும் பூமி என்பதால் ஞானபுரி என்கிற பிரம்மவர்த்தனா என்றும் ஸ்காந்த புராணம் கூறுகிறது. வெள்ளைக்காரர்களால் ‘பனராஸ்’ என்று குறிப்பிடப்பட்டதும் இந்த நகரமே.
முதன் முதலில் கங்கைக் கரையில் வந்து தங்கிய `காசியஸ்’ என்ற மரபினரின் நினைவாக இந்த நகரம், `காசி’ எனப் பெயர் பெற்றது எனும் தகவல் உண்டு. காசா என்ற மன்னர், இந்த நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தபோது காசி என்று பெயர் சூட்டியதாகவும் தகவல் உண்டு.
காசி மாநகரின் தெற்கே உள்ள கேதாரக் கண்டத்தில் கேதாரீசுரரும், மத்தியிலுள்ள விச்வேச்வரக் கண்டத்தில் ஸ்ரீவிசுவநாதரும் வடக்கே உள்ள ஓங்காரக் கண்டத்தில் ஓங்காரேஸ்வரரும் அருள் புரிகின்றனர்.
சிவபெருமான் அருளால் சனி பகவான் நவக்கிரகங்களில் ஒன்றா னது இங்குதான். காசி மாநகரிலுள்ள சிவலிங்கங்கள்: சுயம்பு லிங்கங்கள்- 11, தேவர்கள் ஸ்தாபித்தது- 46. முனிவர்கள் பிரதிஷ்டை செய்தது- 47, கிரகங்கள் வணங்கியது- 7, கணங்கள் வழிபட்டது- 40. பக்தர்கள் நிறுவியது- 295. திருத்தலங்களது நினைவாக நிறுவப் பட்டவை- 65.
‘முந்தைய ஜன்மங்களில் ஏராளமான ஆலயங்களுக்குச் சென்று வழிபட்ட உயிர்களுக்கு மட்டுமே இந்த ஜன்மத்தில் காசி நகரின் கதவுகள் திறக்கும்’ என்கிறது சிவமகா புராணம்.
- கே.மகாலிங்கம், திருநெல்வேலி