திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

திக்கெட்டும் திருப்புகழ்!

திருப்புகழ் வைபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்புகழ் வைபவம்

திருப்புகழ் குடும்பம் பிரேமா நாராயணன்

தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகள் வரையிலும் அழகன் முருகனைப் போற்றும் திருப்புகழ் பாடல்கள் ஓங்கி ஒலிக்கும்படி பணியாற்றி வருகிறது சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பம்.

திக்கெட்டும் திருப்புகழ்!
மெய்யப்பனின் மகள் மகன் - திருப்புகழ் அரங்கேற்றம்

று வயது குழந்தை முதல் அறுபது வயதைக் கடந்த முதியோர் வரை அனைவரையும் ஆர்வத்துடன் திருப்புகழ் பாட வைத்திருக்கும் அந்தத் திருப்புகழ் குடும்பத்தின் தலைவர் சுப்பிரமணியனுடன் பேசினோம்.

``சொந்த ஊர் காரைக்குடி. பணியின் நிமித்தம் சென்னை திருவொற்றியூரில் செட்டிலாகி 40 வருஷம் ஆயிடுச்சி. 1968-ல் எங்க பெற்றோர் பழநி பாதயாத்திரை போனபோது நானும் சென்றேன். அப்போது எல்லோரும் அரோகரா கோஷத்துடன் முருகன் பாடல்களையும் பாடுவாங்க. எனக்கு பாடுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.

பக்திப் பாடல்களை சினிமாப் பாடல் போல மெட்டு அமைத்துப் பாடினால் என்னன்னு தோணுச்சு. தமிழில் ஆர்வம் மிக்க குறள் லெட்சுமணன், கு.செ.ராமசாமி போன்ற பெரியவங்க எல்லாம் சில முருகன் பாடல்களைக் கொடுத்து, மெட்டுப் போட்டுப் பாடித் தரச் சொன்னாங்க. நானும் மெட்டுடன் பாடிக் காண்பிச்சேன். இப்படி ஆரம்பிச்சதுதான் எங்கள் பாடல் பயணம்..!’’ என்று அவர் முடிக்க, அவருடைய மனைவி மெய்யம்மை தொடர்ந்தார்.

``எங்களுக்கு நாலு மகன்கள், ரெண்டு மகள்கள். என் கணவரும் அவங்க நண்பர்களும் பாட்டுப் பாடி பிராக்டீஸ் பண்றதை எல்லா பிள்ளைகளும் பார்த்துக்கிட்டிருப்பாங்க. நாங்க யாரும் திணிக்காமலேயே பாடும் ஆர்வம் அதிகம் இருந்ததால், அவங்களும் எங்ககூட உட்கார்ந்து பாட்டுப் படிப்பாங்க. சிதம்பரத்தில் ‘சங்கீத பூஷணம்’ பட்டம் வாங்கிய புதுவயல் ராமநாதன் செட்டியார்தான் எங்க பிள்ளைகளுக்குச் சங்கீதம் கற்றுக் கொடுத்தார். அந்தச் சின்ன வயசில் போட்ட விதைதாங்க இப்போ உலகம் முழுவதும் ‘திருப்புகழ் வகுப்பு’ என்கிற ஆல மரமாக விரிஞ்சிருக்கு!’’ என்கிறார் மெய்யம்மை.

பிள்ளைகள் எல்லோரும் நாசிக், கொல்கத்தா, ஹைதராபாத், ஓசூர் ஆகிய நகரங்களிலும் துபாய், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் பெரிய பதவிகளில் இருந்தாலும், தினமும் திருப்புகழ் பாடுவது, திருப்புகழ் வகுப்பு எடுப்பது என்று செயல்பட்டு வருகிறார்கள் என்ற தகவல் வியப்பைத் தருகிறது.

திருப்புகழ் குடும்பம்
திருப்புகழ் குடும்பம்
திக்கெட்டும் திருப்புகழ்!

``எப்படிங்க இது சாத்தியம்! பிள்ளைகள் சரி... வீட்டுக்கு வந்த மருமக்களும், மாப்பிள்ளைகளும்கூட இந்த ஜோதியில் ஐக்கியமானது எப்படி’’ என்று கேட்டோம்.

``எங்க வீட்டில் ரொம்ப வருஷமா ஒரு பழக்கம் உண்டு. சின்ன வயசில் காலமாயிட்ட எங்கள் கொழுந்தன் பையனுக்கு வெள்ளிக் கிழமைகளில் பால், பழம் வச்சு கும்பிடுவோம். அதுக்குப் பிறகு, கூட்டு வழிபாடு இருக்கும். வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எல்லாரும் அதில் கண்டிப்பா உட்காரணும். மருமக்களும் இதுக்கு விதிவிலக்கில்ல. ஒவ்வொருத்தரும் அவசியம் ரெண்டு ஸ்லோகம் சொல்லணும், ஒரு பாட்டு பாடணும். மனப்பாடமா தெரியாவிட்டாலும் புத்தகத்தைப் பார்த்தாவது படிக்கணும்.

வேலைக்குப் போய்ட்டு வந்து, இரவு 11 மணிக்குக்கூட கும்பிடுவோம். இந்தப் பழக்கத்தில் மருமக்கள், மருமகன்கள்கூட நாளாவட்டத்தில் பாட ஆரம்பிச்சிட்டாங்க. இன்றைக்கு வெளியூர், வெளிநாடுகளில் இருந்தாலும் எங்கள் பேரன் - பேத்திகளோடு பிள்ளைகள் குடும்பத்தோடு கூட்டு வழிபாடு செய்வது மனசுக்குச் சந்தோஷமா இருக்கு’’ என்று நெகிழ்கிறார் மெய்யம்மை.

``திருப்புகழில் தனி ஈடுபாடு வந்தது எப்படி?’’ - இந்தக் கேள்விக்கு சுப்பிரமணியன் பதில் தந்தார்.

``சின்ன வயசிலிருந்தே எனக்கு ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ பாட்டு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி பாடுவேன். அது திருப்புகழ்னு தெரிஞ்ச பிறகு, அதில் இன்னும் சில பாடல் களை நானாக மெட்டு அமைத்துப் பாட ஆரம்பிச்சேன். என்னுடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவில் திருவாசக முற்றோதுதல் வெச்சிருந்தோம். திருவாசக முற்றோதுதலைப் பார்த்துத்தான் திருப்புகழ் பாராயணம் பண்ணும் யோசனை வந்தது.

திக்கெட்டும் திருப்புகழ்!

எங்க பையன் மெய்யப்பன் என்ற மூர்த்தி தான் இந்த யோசனையைச் சொன்னான். அவனாகவே 108 திருப்புகழ் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, மெட்டுப் போட்டு எங்களிடம் காண்பித்தான். எல்லோரும் அவன் வீட்டிலேயே உட்கார்ந்து 108 திருப்புகழ் பாடல்களைப் பாடிப் பழகினோம். பிரபல பாடகர் பித்துக்குளி முருகதாஸிடம் திருப்புகழ் பாடுவதைப் பற்றி நேரில் போய் சொன்னோம். ‘திருப்புகழை மகன் தலைமுறை, பேரன் தலைமுறை வரைக்கும் கொண்டு போய்ட்டீங்க. ரொம்ப நல்ல விஷயம்’ என்று அவர் ஆசி கொடுத்தார்.

2009-ல் முதல் முறையாக 108 திருப்புகழ் பாடல்கள் அடங்கிய முதல் தொகுப்பை, சென்னையில் எங்க மகன் மெய்யப்பன்-அலமேலு தம்பதியரின் இல்லத்தில் பாடி அரங்கேற்றம் செய்தோம். அந்த நிகழ்வில், திருப்புகழ் திலகம் மதிவண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

சிறுவாபுரிக்கு பாத யாத்திரை போறப்போ, அங்கே கோயிலில் பாட்டுப் போட்டி வைப்பாங்க. வழக்கமாக கர்னாடக சங்கீத ராகத்தில் பாடறவங்களுக்குத்தான் பரிசு கிடைக்கும். ஆனால், முதல்முறையா எங்க மகன்கள் மூணுபேரும் திருப்புகழைத் தனி மெட்டில் பாடி பரிசு வாங்கினாங்க. அது ஒரு நல்ல ஆரம்பமாக இருந்ததுடன் உற்சாகமும் தந்துச்சு!’’ என்றார் சுப்பிரமணியன்.

இந்தத் தம்பதியரையும் சேர்த்து, இவர்களின் ஆறு பிள்ளைகளும் அவரவர் இருக்கும் இடத்தில் திருப்புகழ் குழுவைத் தொடங்கிப் பாராயணம் செய்து வருவதுடன், இணைய வழியில் திருப்புகழ் வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள். அவர்களில், முதன்முதலில் ‘திருப்புகழ் 108 மணிமாலை’ முதல் தொகுப்பை மெட்டமைத்துப் பாடியதுடன், தன் மனைவியுடன் சேர்ந்து ‘திருப்புகழ் 108 மணி மாலை’ இரண்டாவது தொகுப்பை மெட்டமைத்து, தங்களது குழந்தைகளை வைத்து அரங்கேற்றம் செய்தவர் சுப.மெய்யப்பன் என்ற மூர்த்தி. துபாயில் ஆடிட்டர் பணியில் இருக்கும் அவரிடம் தொலைபேசியில் பேசினோம்.

``திருப்புகழ் இல்லாத வாழ்க்கையை இப்போ எங்களால் நினைச்சுக்கூடப் பார்க்க முடியல. குறிப்பாக ‘சந்தனம் திமிர்ந் தணைந்து’ என்ற பாடலைச் சந்தத்தோடும் ராகத்தோடும் கேட்டுக் கேட்டு என்னையறியாமல் திருப்புகழ் மீது ஆர்வம் வந்தது. அற்புதமான அந்தப் பாடல்களை, ஜனரஞ்சகமா எல்லோரும் பாடற மாதிரி மெட்டமைத்துப் பாடினால் நன்றாக இருக்குமே என்ற யோசனையில் விளைந்ததுதான் எனது அந்த முயற்சி.

முதலில் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் பாடினோம். அப்புறம் பிரசித்திபெற்ற கோயில்களில் போய் பாடினோம். என் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி எல்லாம் அவரவர் ஊரில் பாட ஆரம்பிச்சாங்க’’ என்று அவர் நிறுத்த, அவரின் மனைவி அலமேலு தொடர்ந்தார்.

திக்கெட்டும் திருப்புகழ்!

``என் பெற்றோர் வெங்கடாசலம் - உண்ணாமலை ரெண்டு பேருக்குமே ஆன்மிக ஈடுபாடு அதிகம். நானும் நல்லா பாடுவேன். இரண்டாவது தொகுப்பாக 108 திருப்புகழ் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, பாடிப் பழகி, என் மகன் சுப்பிரமணியன் (9 வயது) கீபோர்டு வாசிக்க, மகள் ரமணி மெய்யம்மை தனது 13-வது வயதில் மனப்பாடமாகப் பாடினாள். 2018-ல் சென்னையில் அரங்கேற்றம் செய்தோம். என் பெற்றோர் அதை விமர்சையான விழாவாக நடத்தி மகிழ்ந்தாங்க. எங்க குழந்தைகள் இருவரும் இரண்டாம் தொகுப்பு முழுவதையும் புது தில்லி, துபாய், அபுதாபின்னு பல இடங்களில் பாராயணம் செய்திருக்காங்க!’’ என்றார்.

இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து புது தில்லி, சென்னை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் என பல ஊர்களில் உள்ள குழுக்களுக்கு வாரம் ஒரு நாள் இணைய வழியில் திருப்புகழ் கற்றுக் கொடுக்கிறார்கள். அயல்நாடுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஓமன், பஹ்ரைன், யு.கே., கத்தார், மலேசியா, குவைத் போன்ற நாடுகளிலுள்ள தமிழர்கள் வெகு ஆர்வமாக இவரிடம் திருப் புகழ் கற்பதுடன், மாதம்தோறும் ஒருவர் வீட்டில் பாராயணமும் செய்கின்றனராம்!

``திருப்புகழ் படிக்கப் படிக்க சிக்கல்கள் தீர்வதாக அன்பர்கள் சொல்கிறார்கள். மதுரையில், திருமணமாகி 15 வருஷம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி எங்களை அவங்க வீட்டில் வந்து திருப்புகழ் பாராயணம் செய்யச் சொன்னாங்க. அடுத்த வருஷமே ஆண் குழந்தை பிறந்துச்சு.. இந்த மாதிரி நிறைய அனுபவங்கள்..” என்கிறார் மெய்யப்பன் நெகிழ்ச்சியுடன்.

திருப்புகழ் 108 மணிமாலை மூன்றாம் தொகுப்பு புத்தகத்தை நாசிக்கில் வசிக்கும் இவருடைய மூத்த சகோதரர் சுப.அண்ணா மலை – கீதா தம்பதியினர், அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

``திருப்புகழைப் பாடுபவர்களின் வீடுகளில் எல்லாம் சுபிட்சம் கிடைக்குது. காலேஜ் சீட், வெளிநாட்டு வேலை, திருமண பாக்கியம், குழந்தைப்பேறுன்னு அன்பர்கள் கேட்பதை எல்லாம் கொடுக்கிறான் என்னப்பன் முருகன்.

திருமணம், கிரஹப்பிரவேசம், சஷ்டி அப்த பூர்த்தி போன்ற சுப நிகழ்வுககளில் பாடுறதுக்குக் கூப்பிடறாங்க. இந்த மாதிரி வீடுகளில் பாராயணம் செய்ய நாங்க 40 பேர் போவோம். 108 பாடல்களைப் பாட நாலரை மணி நேரம் ஆகும். இதுவரை 152 முறை பாராயணம் செய்திருக்கோம்’’ என்கிறார் சுப்பிரமணியன்.

இவர்களின் மகன் வெங்கடாசலம் கொல்கத்தாவில் பிரபல கார்ப்பரேட் கம்பெனி யில் உயர் பதவி வகிப்பவர். ஒவ்வொரு கார்த்திகைக்கும் கொல்கத்தா நகரேஷ்வர் கோயிலில் தன் குழுவினருடன் திருப்புகழ் பாடி வருகிறாராம்.

``நாங்க திருப்புகழ் படிக்கிறதைப் பார்த்துட்டு, காசி அரு.சோ. ஐயா, ‘மிகக் கடினமான திருப்புகழையே இவ்வளவு அழகாகப் பாடும் நீங்கள், ஏன் திருவாசகமும் படிக்கக் கூடாது!’ என்று ஒரு முறை சொன்னார். அப்போது தொடங்கியதுதான் திருவொற்றியூர் திலக வதியார் திருவாசக முற்றோதுதல் குழு.

மாதாமாதம் ஒரு கோயிலில் முற்றோதுதல் படிக்கிறோம். இதுவரை ராமேஸ்வரம் தொடங்கி, காளஹஸ்தி வரையில் 274 சிவாலயங்களில் திருவாசகம் படிச்சிருக்கோம். திருப்புகழும் திருவாசகமும் எங்களுக்கு ரெண்டு கண்கள் மாதிரி!’’

பக்திப் பரவசத்துடன் மெய்யம்மை கூறி நிறைவுசெய்த போது, ‘நாமும் திருப்புகழ் கத்துக்கலாம் போலவே!’ என்ற தீவிர ஆர்வம் மனதுக்குள் எழுகிறது. இந்தக் குடும்பத்தின் திருப்புகழ் சேவை மென்மேலும் தொடரட்டும்!