Published:Updated:

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 13 | உலகின் பெருமிதம்... மதுரையின் சிறப்பு... மதுரை மீனாட்சி அம்மன் கோயில்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

உலகின் பெருமிதம் மதுரையின் சிறப்பு என்னும் அளவுக்குப் பற்பல ஆன்மிக கலை இலக்கிய வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட திருக்கோயில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்.

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 13 | உலகின் பெருமிதம்... மதுரையின் சிறப்பு... மதுரை மீனாட்சி அம்மன் கோயில்!

உலகின் பெருமிதம் மதுரையின் சிறப்பு என்னும் அளவுக்குப் பற்பல ஆன்மிக கலை இலக்கிய வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட திருக்கோயில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்.

Published:Updated:
மதுரை மீனாட்சியம்மன் கோயில்
மதுரை என்றதுமே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். மதுரை ஊரெங்கும் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான். ஈசன் தன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதும் இந்தக் கோயிலைச் சுற்றித்தான். ஓர் ஆண்டில் 274 நாள்கள் திருவிழாக்காணும் தலம் இது. நவகிரகங்களில் புதன் தலம். இங்கு வந்து அன்னையை வழிபாடு செய்தால் திருமணவரம் கைகூடுவதோடு கல்வி கேள்விகளிலும் சிறந்துவிளங்கலாம் என்பது நம்பிக்கை. `மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படும் தலம் இது. இந்த பீடத்துக்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்றும் பெயர்.

இங்கு அரசாட்சி செய்யும் அன்னை மீனாட்சிக்கு அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் என்கிற திருநாமங்களும் உண்டு.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மலையத்துவஜன் செய்த வேள்வித் தீயிலிருந்து தோன்றிய பெண் குழந்தை இந்த அன்னை. மூன்று மார்பகங்களுடன் தோன்றியவள் என்பதால் ஒரு கணம் மலையத்துவஜனும் அவன் மனையாளும் கலங்கியபோது 'இவள் தன் கணவனைக் காணும்போது இவளின் மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும்' என அசரீரி ஒலித்து ஆறுதல் படுத்தியது என்பார்கள்.

அம்மைக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான் மன்னன். அன்னையும் திக் விஜயம் புறப்பட்டாள். பல திசைகளுக்கும் வெற்றி யாத்திரை போனவள், திருக்கயிலாயத்துக்கும் சென்றாள். அங்கு சிவனாரைக் கண்டதும் அவள் தன் பெண்மையை உணர்ந்து நாணமுற்றாள். அப்போது அவளின் மூன்றாவது மார்பகம் மறைந்தது. அதன் பின்னர் சிவபெருமான் மதுரைக்குச் சொக்கனாக எழுந்தருளி, அம்மையை மணம் புரிந்து கொண்டார் என்கிறது தலவரலாறு.

மீனாட்சியம்மனை மணம் புரிவதற்காக, ஈசன், திருமணக்கோலத்தில் வந்தமையால் சுந்தரேஸ்வரர் என்றும், சொக்கன் என்றும் அழைக்கப்படுகிறார். மீனாட்சியம்மன் அரசியாக இருந்ததால், அவளுக்கான அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். இந்தத் தலத்தின் பிரசாதம் தாழம்பூ குங்குமம். இந்தக் குங்குமம் வேறு எங்கும் கிடைக்காது.

இங்கு அருள்பாலிக்கும் மீனாட்சியம்மனின் திருமேனி மரகதக் கல்லால் ஆனது என்கிறார்கள். பச்சைத் திருமேனி; வலது கரத்தில் மலர்; இடது கரம் லோல ஹஸ்தம் (தொங்கு கரம்) வலது தோளில் பச்சைக் கிளி; இடது பக்கம் சாயக் கொண்டை; சின்னஞ்சிறுமியின் முகம் என எழில் கொஞ்சும் திருவடிவாக அருள் காட்சி தருகிறாள் அன்னை மீனாட்சி.

சொக்கநாதர் - மீனாட்சி
சொக்கநாதர் - மீனாட்சி

இந்தத் தலத்தில் நிகழ்ந்த அற்புதங்களும் அதிசயங்களும் எண்ணிலடங்காதன. கலியுகத்தில் ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஶ்ரீசிருங்கேரி சாரதா பீடம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய மகான் தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பார்வை இழந்து அவதிப்பட்டார். அவர் மீனாட்சி அம்பாளை நோக்கிப் பதினைந்து பாடல்கள் கொண்ட துதி ஒன்றைப் பாடினார். அன்னை அவரின் அருட்பாடல்களில் மகிழ்ந்து பார்வை கிடைக்குமாறு அருளினாள். அன்று முதல் இந்தத் தலத்துக்கு வந்து பார்வை குறைபாடு உள்ளவர்கள், அந்தப் பாடல்களைப் பாடி வேண்டினால் நல்ல சுகம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் நம்பிக்கை.

அற்புதமான ஆயிரங்கால் மண்டபம்

இந்த ஆலயத்தின் சிறப்புகள் சொல்லில் அடங்காதன என்றாலும் அவற்றில் மகுடமாகத் திகழக் கூடியது ஆயிரங்கால் மண்டபம்.

கலைக்களஞ்சியமாகத் திகழும் இந்த மண்டபத்தை சிற்பக் கலைக்கூடம் என்பதே பொருத்தம். மண்டபத்தில் நுழையும் இடத்திலேயே, விதானத்தில் 60 தமிழ் வருடங்களைக் குறிக்கும் சக்கரம் காணப்படுகிறது. மண்டபத்தின் நாயகமாக, நடராஜபெருமான் காட்சிகொடுக்கிறார். கையில் வாளேந்தியபடி தீயவனுடன் போரிடும் சிவபெருமான், சிவலிங்கத்தின் மீது கால் வைத்தபடியே தனது கண்ணைத் தோண்டும் கண்ணப்பர், பிட்சாடனர், முன்னங்கால்களைத் தூக்கிப் பாயும் குதிரை மீதமர்ந்த வீரர் (அருகில் நரியன்றும் காணப்படுவதால், இது நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கிய சிவபெருமான்), ஹரிச்சந்திரன்- சந்திரமதி, குறவன்- குறத்தி, முப்புரம் எரித்த சிவனார், நாட்டியமாடும் வல்லப கணபதி, மயிலேறும் முருகர், பாணன்- பாணி, பிருகந்நளையாக இருக்கும் அர்ஜுனன், தட்சனை வதம் செய்யும் வீரபத்திரர், ரதி- மன்மதன், பீமன், புலிக்கால் முனிவர், கர்ணன், மோஹினி, கையில் குழந்தையை ஏந்தியபடி கவலையுடன் நிற்கும் சந்திரமதி, முப்புரம் எரிக்கும் சிவனாரை அடையாளம் காட்டும்படியாக அவருடைய அம்பில் மஹாவிஷ்ணு உருவமும், அம்பு நுனியில் அக்னியும் காணப்படுதல், கதாயுதத்தை உயர்த்தும் புலிக்கால் முனிவர் என அற்புதமான இறைவடிவங்கள் எல்லாம் சிலை ரூபங்களாக இங்கே காட்சி கொடுக்கின்றன. ஒவ்வொரு சிலையின் அழகும் நம் கருத்தைக் கவர்கின்றன.

மதுரை ஆயிரங்கால் மண்டப ஓவியங்கள்
மதுரை ஆயிரங்கால் மண்டப ஓவியங்கள்

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் தம் படைத்தலைவரை மதுரைக்கு அனுப்பினார். அவரைத் தொடர்ந்து, விசுவநாத நாயக்கர் இங்கே வந்தார். இவரே மதுரையில் நாயக்கர் ஆட்சியை நிறுவியவர். இவருடைய தளபதியாக, கி.பி.1529-ல் மதுரைக்கு வந்தவர்தான் அரியநாத முதலியார்.

விசுவநாத நாயக்கரிலிருந்து இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் வரை, நான்கு அரசர்களுக்கு தளவாயாகவும் அமைச்சராகவும் சுமார் 71 வருடங்கள் பணியாற்றிய அரியநாதர், கோயில் பணிகள், மத நல்லிணக்கப் பணிகள், சமூகப் பணிகள் எனப் பற்பல தளங்களிலும் செயல்பட்டவர்.

இந்த அரியநாதர்தான் ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டுவித்தார். இந்த மண்டபத்தில், குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரரின் சிலை இவருடையது என்கிறார்கள். சொக்கராவுத்தர் என்றும் இந்தச் சிலை அழைக்கப்படும்.

கற்சிலைகளைத் தவிர்த்து ஆயிரங்கால் மண்டபத்தில், இறைவன்- இறைவியின் செப்புத் திருமேனிகள், கண்ணாடிப் பேழைகளில் வைக்கப்பட்டுள்ளன. பெரிய பெரிய பலகைகளில் நாயக்கர் கால லேபாக்ஷி ஓவியங்களாகத் திருவிளையாடல் புராணக் காட்சிகள், தீட்டப்பட்டுள்ளன.

அதிசயங்கள் பல கண்ட பொற்றாமரைக் குளம்

விருத்திராசுரன் எனும் அரக்கனை, தேவேந்திரன் போரில் கொன்றான். அதனால் அவனுக்கு ஏற்பட்ட பாவம் நீங்க சிவத்தலங்களாகச் சென்று தரிசனம் செய்துவதான். எங்கும் தீராத பாவம், தென் தமிழ்நாட்டில் கடம்பவனத்தை அடைந்தவுடனேயேவிலகுவதை உணர்ந்தான். அங்கு சுயம்புவாக நின்ற சிவலிங்கத்தைக் கண்டான். இறைவனாரே தனது பாவத்தைத் தீர்த்தவர் என்பதைப் புரிந்துகொண்டு சிவலிங்க பூஜை செய்வதற்கு மலர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அதுவும் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினான்.

அவன் நினைத்த மாத்திரத்தில், அந்தக் குளத்தில் தங்கத் தாமரைகள் தோன்றின. தங்கத் தாமரைகள் தோன்றியதால் அது பொற்றாமரைக் குளம் எனப்பட்டது!

தேவலோகத்தைச் சேர்ந்த ஐராவத யானை, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, இறைவனை வணங்கிச் சாபம் நீங்கப்பெற்றுத் தன் சுய உருவை மீட்டுக்கொண்டு, தேவலோகம் சென்றது.

பொற்றாமரைக் குளம்
பொற்றாமரைக் குளம்

ஆற்றங்கரையில் தவம் செய்து வேதம் ஓதிய முனிவர்களைக் கண்டும் அவர்கள் ஓதிய சிவநாமத்தைக் கேட்டும் ஒரு நாரை நல்ல புத்தி கொண்டது. ஆற்றில் சில மீன்களை இரையாகக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும்... முனிவர்கள் நீராடிய தருணத்தில் அவர்களின் திருமேனியில் குதித்து விளையாடியவை என்பதால், அவற்றைப் பிடிக்காமல் விட்டுவிட்டது. முனிவர்களுடனே மதுரை வந்தது. அவர்கள் பொற்றாமரைக் குளத்தருகில் இருந்தபோதும், குளத்தின் மீன்களைப் பிடிப்பது பாவமென்று கருதி, உண்ணாமலே இருந்து சிவநெறியில் பிறழாது வாழ்ந்த அந்த நாரைக்கு இறைவன் முக்தி கொடுத்த தலமும் இதுவே. இந்தக் குளத்தில் மீன்கள் இருந்து, அவற்றை நாரைகள் தன்னியல்பில் பிடித்துவிட்டால்கூட அவற்றுக்குப் பாவம் வந்து சேருமே என்று பொற்றாமரைக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்துவிட்டாராம் ஈசன்.

தருமிக்குப் பொன் தர ஈசன் செய்த திருவிளையாடலில் நக்கீரன் நெற்றிக்கண்ணின் வெப்பம் தாளாமல் வந்து வீழ்ந்த இடம் இந்தப் பொற்றாமரைக்குளம்தான்.

இப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள் ஏராளம். சித்திரைத் திருவிழா நடைபெறும் இந்தச் சீர்மிகு மாதத்தில் மேலும் இந்த ஆலயத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வொம்.