Published:Updated:

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் அருளும் ஶ்ரீ ஞான தட்சிணாமூர்த்தி! சிறப்புகள் என்னென்ன?

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

சிவனுக்கான பஞ்ச ஆரண்யத் தலங்களிலும் இதுவும் ஒன்று. இந்த ஊரில், விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது. ஆலகால விஷத்திலிருந்து காத்த ஈசன் இருக்கும் தலத்தில் வேறு விஷங்கள் என்ன செய்யும் என்கிறார்கள் பக்தர்கள்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளியான நஞ்சை இறைவன் அருந்தி பிரபஞ்ச உயிர்களைக் காத்த தலம் ஆலங்குடி. ஆலமான நஞ்சைப் பரமனார் அருந்தியதால், ஆலம் குடி என்று அழைக்கப்பட்டு ஆலங்குடி ஆனது. ஆபத்திலிருந்து காப்பாற்றிய அந்த ஈசனுக்கு 'ஆபத்சகாயேஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

ஆலங்குடி
ஆலங்குடி

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் தெற்கு கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இவரே இங்கு குரு. எனவேதான், இது குரு ஸ்தலமாகத் திகழ்கிறது. வியாழன் தேவ குரு. வியாழனால் தோன்றும் துன்பங்களுக்கு தட்சிணாமூர்த்தியே தீர்வு தருவார். அபய ஹஸ்தத்துடன், வீராசனத்தில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன்; இருமருங்கிலும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கக் காட்சி கொடுக்கிறார். இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.

14 ஜன்மங்களில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, ஆலங்குடிக்கு ஒருவர் வரக்கூடும் என்பது நம்பிக்கை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆற்றுவெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது ஈசன் ரிஷப வாகனராகக் காட்சி கொடுத்து ஆலங்குடி அடைவதற்கும் வழி செய்தார். இந்தத் தலத்துக்கு வந்த சுந்தரர், இங்கு அருள்புரியும் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

குருபகவான்
குருபகவான்

ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி. மேற்குப் பகுதியில் காட்சி தருகிறார், கஜமுகாசுரனை வதம் செய்த 'ஸ்ரீகலங்காமல் காத்த விநாயகர்.' வெளிப் பிராகாரத்திலேயே, தெற்குப் பார்த்த அம்பாள் சந்நிதி.

உள் வாயில் வழியாக நுழைந்தால் சூரிய பகவான் சந்நிதி. அருகிலேயே உற்ஸவ சுந்தரர். உள் பிராகாரத்தில் நால்வர் பெருமக்கள், சூரியநாதர், சோமேசநாதர், குரு மோட்சேஸ்வரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்த லிங்கத் திருமேனிகள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர் - விசாலாட்சி, அகத்தியர் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். வடக்குச் சுற்றில் ஸ்ரீநடராஜர் சபை. ஆக்ஞா கணபதி, கல்யாண சாஸ்தா, சோமாஸ்கந்தர், சப்த மாதர்கள், சனகாதி முனிவர்களோடு கூடிய தட்சிணாமூர்த்தி என ஏராளமான உற்ஸவ மூர்த்தங்கள் அருள்பாலிக்கிறார்கள்.

கருவறையில் காட்சிகொடுக்கும் ஈசனுக்கு ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். ஸ்ரீஇரும்பூளை நாதர், ஸ்ரீகாசி ஆரண்யேஸ்வரர், ஸ்ரீஆரண் யேஸ்வரர், ஸ்ரீஆலங்குடிநாதர், ஸ்ரீஆலங்குடியான் எனப் பல்வேறு திருநாமங்கள் வழங்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் அகத்தியரை வழிபட்டபின், முருகனை வணங்கினால், மன நோய், மனக்குழப்பம் ஆகியன அகலும் என்பது நம்பிக்கை.

ஆலங்குடியின் தலவிருட்சம் பூளைச்செடி. தீர்த்தம்- அமிர்தப் பொய்கை. விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டு, அமுதத்தை நமக்கு வழங்குவதால், இந்தப் பொய்கைக்கு அமிர்தப் பொய்கை என்ற பெயர் ஏற்பட்டதாம். கிழக்கே சற்று தொலைவில் ஓடும் ஆறு, பூளைவள ஆறு. இதுவும் இத்தலத் தீர்த்தமே. கோயிலுக்குள்ளே உள்ள ஞான கூபம் என்ற கிணறும் விசேஷமானது. சுவாமிக்கு ஐப்பசி அபிஷேகம் பூளைவள ஆற்று நீரால் நடைபெறும்.

இந்தத் தலத்தில் பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம் ஆகிய பதின்மூன்றும், பூளைவள ஆறு, அமிர்த புஷ்கரிணி, ஞான கூபம் ஆகிய மூன்றும் சேர்த்து மொத்தம் 16 தீர்த்தங்கள் இருப்பதாக ஐதிகம்.

சிவனுக்கான பஞ்ச ஆரண்யத் தலங்களிலும் இதுவும் ஒன்று. இந்த ஊரில், விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது. ஆலகால விஷத்திலிருந்து காத்த ஈசன் இருக்கும் தலத்தில் வேறு விஷங்கள் என்ன செய்யும் என்கிறார்கள் பக்தர்கள்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

ஆலங்குடி குரு தட்சிணாமூர்த்தியை எல்லா நாள்களிலும் வழிபடலாம் என்றாலும் வியாழக்கிழமைகள் மிகவும் விசேஷம். இங்கு நடைபெறும் தீப வழிபாடு மிகவும் சிறப்புவாய்ந்தது. விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றிவிட்டும் தட்சிணாமூர்த்திக்கு 24 விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள் பக்தர்கள். பின்பு பிராகாரத்தை 24 முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து ஆபத்சகாயேஸ்வரரையும் ஏலவார்குழலி அம்மனையும் வேண்டி வழிபட சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. குருபலம் கைகூடும்.

சிறப்பு சங்கல்பம் செய்ய தொடர்பு கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு