கலி தொடங்கிய காலத்தில் தங்களுக்கு எந்தவித கெடுதலும் நேரக்கூடாது என்று தேவர்கள் இந்தத் தலத்தில் வந்து தங்கி, தவமிருந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இந்த ஊர் தேவூர் என்றானது. இங்குள்ள ஸ்வாமிக்கும் தேவபுரீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானதாம். ஸ்ரீதேன்மொழி அம்பிகை சமேத ஸ்ரீதேவபுரீஸ்வரர் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பழைமையானது. தேவபுரி, ஈசானபுரம், விராடபுரம், அரசங்காடு, கதலீவனம், தேவனூர் எனப் பல பெயர்கள் கொண்ட இந்த ஊர் தற்போது தேவூர் என்று அழைக்கப்படுகிறது. காவிரியின் தென்கரைத் திருத்தலங்களில் இது 85-வது தலம். இங்கு அம்பிகை மற்றும் ஸ்வாமி சந்நிதிகளுக்கு நடுவே ஸ்ரீமுருகப்பெருமான் அருள்பாலிக்க, சோமாஸ்கந்த அமைப்பில் இந்த ஆலயம் திகழ்கிறது.

பிரகஸ்பதி தன்னுடைய ஆற்றல் அதிகரிக்க இந்தத் தலத்தில் வந்து ஈசனை குறித்து நெடுங்காலம் தவம் இருந்து வழிபட்டார். இதனால் ஈசனும் அவருக்குத் திருக்காட்சி தந்து ஆசிர்வதித்து தேவ குருவாக பதவி உயர்வு தந்து அருளினார். இதனால் இங்கு ஈசனே அனுக்கிரக ஸ்ரீதட்சிணாமூர்த்தியாகவும் அமர்ந்து குரு பரிகார புண்ணியத் தலம் என்ற பெருமையை அளித்தாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம் இழந்திருந்தால் அல்லது குருவின் பார்வை படாமல்இருந்தால், இந்த தலத்துக்கு வந்து, ஸ்ரீஅனுக்கிரக தட்சிணாமூர்த்திக்கு உரிய பரிகாரங்கள் செய்து வழிபட்டால் பலன் கிட்டும். மேலும் ஈசன், அம்பாள், விநாயகர், சுப்ரமணியர் ஆகியோரை 16 முறை வலம்வந்து வணங்கினால், குரு யோகம் கிடைக்கப் பெற்று பதவி உயர்வு பெறலாம். மேலும் காரியத் தடைகள் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
நாகை மாவட்டம் கீவளூர் வட்டம் தேவூரில் இந்த ஆலயம் உள்ளது. நாகப்பட்டினம் - திருவாரூர் இடையே உள்ளது கீவளூர். கீவளூரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது தேவூர் ஆலயம்.