Published:Updated:

அரியும் சிவனும் ஒன்று என்னும் அரிய தத்துவத்தை விளக்கும் சங்கரன்கோவில் ஆடித் தபசு!

நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில். இங்கு மூலவர், முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும்; இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவத்திலும் அருள்புரிகிறார்கள். மூன்றாவதாக தனிச்சந்நிதியில் பார்வதி தேவியார், கோமதி அம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`அரியும் சிவனும் ஒன்று என்ற உயரிய தத்துவத்தை அகிலத்திற்கு உணர்த்துவதற்காகவே, அன்னை ஊசி முனையில் ஒற்றைக் காலில் நின்று தவமியற்றினாள்.

ஆடித் தபசு திருவிழா
ஆடித் தபசு திருவிழா

சங்கன், பத்மன் ஆகியோர் அன்னை உமையவளின் பக்தர்கள். இருவரும் நாக அரசர்கள். இவர்களுக்குள் ஒரு சச்சரவு ஏற்பட்டது. இந்த உலகில் சிவபெருமானே உயர்ந்த தெய்வம் என சங்கனும், திருமாலே மேலானவர் என்று பதுமனும் விவாதிக்கத் தொடங்கினர். இது நீண்ட விவாதப் பொருளாக மாற இருவரும் வேறுவழியின்றி அம்பிகையைச் சரணடைந்து தம் ஐயம் தீர்க்கும்படிக் கேட்டனர்.

அம்பிகையோ, இது இந்த இருவரின் சந்தேகம் மட்டுமல்ல என்பதையும் அனைத்துலகில் வாழ்பவர்களுக்கும் உரிய கேள்வியாக இருப்பதையும் அறிந்தாள். திருமால் அன்னையின் உடன் பிறப்பு. சிவனாரோ அவள் மணவாளன். இருவரில் யாரை உயர்ந்தவன் என்று எவ்வாறு சொல்வாள்? ஹரியும் ஹரனும் ஒருவரேதான் என்பதை அனைவருக்கும் நிரூபிக்கும் வழி என்ன என்று சிவபெருமானிடமே கேட்டாள் அன்னை.

சங்கரநாராயணன்
சங்கரநாராயணன்

அன்னையின் திருவுளத்தை அறிந்த ஈசன், “அகத்திய முனிவர் தவமியற்றிய பொதிகை மலைப்பகுதியில் புன்னை மரங்கள் சூழ்ந்த இடத்திற்குச் சென்று தவம் இயற்று. அங்கே நீ விரும்பிய திருக்கோலத்தில் நான் உனக்குத் திருக்காட்சி தருகிறேன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'ஹரியும் ஹரனும் ஒரே சக்தியின் இரு வடிவங்கள் என்றும், இருவரும் இணைந்த அந்த மகா சக்தியை இந்த உலகிற்கு வெளிப்படுத்துவதே இதற்குச் சரியான விடை சொல்வதாகும்' என்று முடிவு செய்து அந்த மகாசக்தியை அந்த வடிவத்தை மனதில் நிறுத்தித் தவமிருக்க முடிவு செய்தாள்.

சங்கரநாராயணர் திருக்கோலத்தில் ஈசனை தரிசித்து வழிபடத் திருமண வரம் கிட்டும்.
ஐதிகம்

புன்னை வனத்துக்கு வந்து அங்கு தவமியற்றினாள் அன்னை. அன்னையைப் பிரிய மனமின்றி தேவர்கள் அனைவரும் புன்னை வனத்தில் மரங்களாகத் தோன்றினார்கள். தேவமாதர்களும் பசுவாக உருவெடுத்தனர். 'ஆ' வடிவெடுத்து தெய்வப் பெண்கள் உமாதேவியுடன் பூவுலகம் வந்ததால், அன்னை 'ஆவுடையாள்' என்றும் அழைக்கப்பட்டாள்.

அம்பிகை, முனிவர்கள், தேவர்கள், தெய்வப் பெண்கள் என அனைவருமே சேர்ந்து தவமியற்றினார்கள். இவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆடி மாதத்தில் உத்திராட நட்சத்திரத்தன்று திருமாலைத் தன்னுள் ஏற்று சங்கர நாராயணராகக் காட்சி கொடுத்தார். ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம்; ஒரு புறம் கங்கை - சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர - மாணிக்க மகுடம்; ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு; ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம்; ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை என சங்கரநாராயணன் திருக்கோலத்தில் எழுந்தருளினார் ஈசன்.

ஆடித் தபசு
ஆடித் தபசு

மூவுலகும் இந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தது. சங்கனும் பதுமனும் சங்கரநாராயணக் கோலத்திற்கு இருபுறமும் நின்று குடைபிடித்தனர். தேவர்கள் பூமாரிப்பொழிந்து போற்றினர். தன் தவம் நிறைவேறிய மகிழ்ச்சியில் உமையாள், “இந்தத் திருக்கோலத்தை மறைத்து உங்கள் திருவுருவைக் கொண்டு இந்தத் தலத்தில் எழுந்தருளுங்கள்” என்று வேண்டிக்கொண்டாள். அதை ஏற்றி ஈசன் லிங்க வடிவம் கொண்டு புன்னை வனத்தில் எழுந்தருளினார்.

இந்தத் தலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில். இங்குதான் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர், முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும்; இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவத்திலும் அருள்புரிகிறார்கள். மூன்றாவதாக தனிச்சந்நிதியில் பார்வதி தேவியார், கோமதி அம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறார். இங்கு ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா 12 நாள்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா ஆகஸ்ட் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஊசி முனையில் தவமிருக்கும் அன்னை கோமதிக்குச் சிவபெருமான் ‘சங்கர நாராயணனாக’க் காட்சிதரும் அற்புதக் காட்சி நாளை (13/8/19) நிகழவிருக்கிறது.

ஆடித் தபசு
ஆடித் தபசு

நாளைக் காலை தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருள்வார். பிறகு ஆடித்தபசு மண்டபத்தில் தன் வலதுகாலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் ஏந்தி அதைத் தன் இரு கரங்களால் பிடித்தபடி கோமதி அம்மன் தவக்கோலத்தில் காட்சிகொடுப்பார். மாலை வேளையில் அன்னையின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் சங்கர நாராயணராகக் காட்சி கொடுத்து அருள்வார்.

அம்பாளின் இந்தத் தவக் காட்சியைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பார்கள். அப்போது தம் விளை நிலத்தில் விளைந்த பருத்தி, மிளகாய் வைத்தல், நெல், கம்பு, சோளம், பூ என்று பலவற்றை வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இப்படிச் செய்வதனால் விவசாயம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சங்கரநாராயணராகக் காட்சிதரும் சிவபெருமான் நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாகவும் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

ஆடித்தபசு
ஆடித்தபசு
Vikatan

அன்னை அம்பிகை இந்த உலகின் துயர்தீர்க்கவே தவம் புரிந்தாள். எனவே கோமதி அம்மனின் தவக்கோலத்தைக் கண்டு வழிபட துன்பங்கள் யாவும் தீரும். சங்கரநாராயணர் திருக்கோலத்தில் ஈசனை தரிசித்து வழிபடத் திருமண வரம் கிட்டும் என்கின்றனர் பக்தர்கள். உலகின் மூலப்பொருளான சங்கரலிங்க சுவாமியை தரிசித்து வழிபட முன்வினைப் பாவங்கள் நீங்கி நல்வினைகள் பெருகும் என்பது ஐதிகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு