காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்த்தக் குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளி தரிசனம் கொடுக்கும் வைபவம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. ஆதி அத்திவரதரின் சிறப்பு, அத்திமரத்தினால் ஆன அவரின் திருமேனி.
அத்திவரதரைப்போலவே, காஞ்சிபுரத்தில் இருக்கும் மற்றுமொரு திவ்யதேசத்திலும் அத்திமரத்தினால் ஆன ஆதி மூர்த்தி உண்டு. சிலா ரூபத் திருமேனியின் பிரதிஷ்டைக்குப் பின்னர் அக்கோயிலின் தீர்த்தக் குளத்தில் அத்தியினால் ஆன பெருமாளின் திவ்ய மங்கள ரூபத்தை எழுந்தருளச் செய்யப்படும் வழக்கம் உண்டு. அத்திவரதர் வைபவம் நடைபெறும் இந்தத் தருணத்தில் அந்தத் திவ்ய தேசப் பெருமாளைக் குறித்தும் அறிந்துகொள்வது சிறப்பாகும்.

காஞ்சி மாநகரம் ஆன்மிகச் சிறப்பு பெற்றது. சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான கோயில்களோடு கோயில் நகரமாகத் திகழ்வது. திருவாரூரில் பிறக்க முக்தி, காஞ்சியில் வாழ முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி... என்ற வரிகளே காஞ்சிபுரத்தின் ஆன்மிக மகிமையை அனைவருக்கும் உணர்த்தும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 14 திவ்ய தேசங்கள் இங்கு உண்டு. அவற்றுள் சிறப்பு பெற்றது, ஆதி அத்திவரதர் அருளும் வரதராஜப் பெருமாள் கோயில். காஞ்சியில் அருளும் மற்றுமொரு திருத்தலம் பவள வண்ணப் பெருமாள் கோயில். இங்குதான் அத்திமரத்தினால் ஆன பவள வண்ணப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
காஞ்சியின் புராதன வரலாறு, `வேகவதி’ நதியிலிருந்து தொடங்குகிறது. வேகவதி நதியானது சரஸ்வதி தேவியின் அம்சம் என்கின்றன புராணங்கள். காஞ்சியில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்துக்கும் மூல காரணமாக இருப்பது இந்த வேகவதி நதிதான். காஞ்சியின் பெருமைகளுள் ஒன்றாக இருக்கும் பவளவண்ண பெருமாள் கோயிலின் புராணக் கதையும் வேகவதி நதியிலிருந்தே தொடங்குகிறது.

காஞ்சியில் எந்தப் புண்ணியச் செயலைச் செய்தாலும் அதன் பலன் பலமடங்கு பெருகும் என்பது ஐதிகம். அதனாலேயே, பிரம்மன் காஞ்சிபுரத்தைத் தேர்ந்தெடுத்து மிகப்பெரிய யாகம் செய்ய நினைத்தான். அப்போது, பிரம்மனை விட்டுப் பிரிந்து சென்றிருந்த கலைமகள் சரஸ்வதி நதிக்கரையில் தவம் செய்துகொண்டிருந்தாள். அதனால், பிரம்மன் யாகத்துக்குச் சரஸ்வதி தேவியை அழைக்காமல், தம் துணைவியார்களான சாவித்திரி மற்றும் காயத்திரி ஆகிய இருவரையும் தம்முடன் அமரவைத்து யாகத்தைத் தொடங்கினான். இதை அறிந்துகொண்ட சரஸ்வதி தேவி கடுஞ்சினம் கொண்டு பிரம்மனின் யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள். சரஸ்வதியின் கோபத்தை அறிந்த நான்முகன் திருமாலிடம் தனது யாகத்தைக் காக்கும்படி சரணடைந்தான்.
சரஸ்வதி தேவி தன் தெய்வ சக்தி மூலம் பல்வேறு கொடிய அரக்கர்களை உருவாக்கி, பிரம்மனை நோக்கி ஏவினாள். பிரம்மனுக்குத் துணையாக எழுந்தருளிய திருமால் கொடிய அசுரர்கள் அனைவரையும் அழித்து அவர்களின் குருதி படிய நின்றார். இவ்வாறு குருதிதோய நின்ற காரணத்தால் பவளம் போன்ற மேனியராகக் காணப்பட்டார். அவ்வாறு பவளம்போலப் பெருமாள் எழுந்தருளிய திருத்தலமே `திருப்பவளவண்ணம்’. இவருக்குப் `பிரவாளேச பெருமாள்' எனும் பெயரும் உண்டு.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு நேரே கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். இங்கு தாயார் பவளவல்லி எனும் திருநாமத்தோடு சேவைசாதிக்கிறார். கோயிலின் தீர்த்தக் குளமான சக்கர தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள பவளவல்லித் தாயார் சந்நிதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டுத்திசை அதிபர்களும் அருள்புரிகிறார்கள். இந்தச் சந்நதியின் கீழ்நின்று வணங்கினாலே லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதிகம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது, பவளவண்ண பெருமாள் கோயில். இங்கு அருள்புரியும் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

இந்தத் தலத்தில் ஆதியில் இருந்த திருமூர்த்தம் அத்திமரத்தினால் ஆனது. பின்பு சிலாரூபத் திருமேனி செய்து பிரதிஷ்டை செய்த காரணத்தால், அத்திமர மூர்த்தத்தை சக்ரத் தீர்த்தத்தில் எழுந்தருளச் செய்துவைப்பது வழக்கம். பல காலமாக நீர் இல்லாத காரணத்தினால், மூர்த்தியை ஆழ்வார்கள் சந்நிதியிலேயே வைத்திருந்தனர். தற்போது ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெறுவதையொட்டி, ஆதி பவள வண்ணரின் அத்திமரத் திருமேனியை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் கருவறையில் மூலவருக்கு முன்பாகவே எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்புரியும் ஆதி அத்திபவளவண்ணரை மக்கள் கண்டு சிலிர்ப்புடன் வழிபட்டுச் செல்கிறார்கள்.
இவருக்கு நேர் எதிர்த் திசையில் தான் பச்சைவண்ண பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளது. பச்சை வண்ண பெருமாள் தனித்த திவ்ய தேசமாக இல்லாவிட்டாலும் பவளவண்ண பெருமாளை வணங்கிவிட்டு பச்சை வண்ண பெருமாளை வணங்குவது மரபாகக் கருதப்படுகிறது.
இரண்டு தலங்களும் ஒரே தலமாக `பச்சை வண்ணர் - பவள வண்ணர் தலம்’ என்றே அழைக்கிறார்கள் பக்தர்கள்.
ஆதி அத்திவரதரை தரிசித்துப் பேறுபெறும் பக்தர்கள் தவறாமல் ஆதிபவள வண்ணப் பெருமாளையும் தரிசித்து இன்புறலாம்.