Published:Updated:

திருமணத் தடை நீக்கும் தீவனூர் பொய்யாமொழி பிள்ளையார்... இணையம் மூலம் தரிசிக்கலாம்!

தீவனூர் பொய்யாமொழி பிள்ளையார்
தீவனூர் பொய்யாமொழி பிள்ளையார்

கணநாதர் இங்கு லிங்க ரூபமாய் இருப்பதால் 'கணபதி லிங்கம்' எனப்படுகிறார். நந்தி அவருக்கு முன்பாக அமர்ந்துள்ளது. மூஞ்சூறும் யானையும் வாகனமாய் இருக்கின்றன. லிங்க வடிவில் விநாயகர் இருந்தாலும் பாலபிஷேகம் செய்கையில் தும்பிக்கையோடு பிள்ளையார் தரிசனம் தருவது அற்புதக் காட்சி.

விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்பாலிக்கும் அற்புத விநாயகர் பொய்யாமொழி பிள்ளையார். இவரை நெல் குத்தித் தந்த விநாயகர் என்றும் சொல்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிறுவர்கள் கண்டெடுத்து, நெல்குத்திப் பயன்படுத்திய இந்த லிங்க விநாயகத் திருமேனியே பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு பொய்யாமொழி பிள்ளையார் என்றும் வணங்கப்படுகிறார்.

விநாயகர்
விநாயகர்

மிளகை உளுந்தாக்கிய விளையாடல்...

முருகப்பன் என்னும் வணிகர் 100 பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோயிலின் வழியே சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த கோயில்காரர்கள் விநாயகருக்குப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு வணிகர், ‘‘மூட்டையில் உள்ளது அத்தனையும் உளுந்து! என்னிடம் மிளகு இல்லையே’’ என்று பொய் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னபடியே மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தால் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. வணிகர் கதறி அழுது விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதும் மீண்டும் மிளகாகி விற்பனையானது. அந்தப் பணத்தில் வணிகர் ஆலமரத்தடி விநாயகருக்குக் கோயில் எழுப்பி, பொய்யாமொழி விநாயகர் என்ற பதிகமும் பாடினார் என்கிறது தலவரலாறு.

லிங்க ரூப கணபதி...

கேட்ட வரத்தைப் பொய்க்காமல் நிறைவேற்றித் தரும் இவரின் கோயிலுக்குப் பின்புறக் குளக்கரையை ஒட்டி மூன்று ஆலமரங்கள் உள்ளன. இந்த மூன்றும் மும்மூர்த்திகளின் வடிவாகக் கருதப்படுகின்ற தெய்வ மரங்கள். கணநாதர் இங்கு லிங்க ரூபமாய் இருப்பதால் 'கணபதி லிங்கம்' எனப்படுகிறார். நந்தி அவருக்கு முன்பாக அமர்ந்துள்ளது. மூஞ்சூறும் யானையும் வாகனமாய் இருக்கின்றன. சிறிய லிங்க வடிவில் விநாயகர் இருந்தாலும் பாலபிஷேகம் செய்யும்போது எழும் காட்சியில் தும்பிக்கையோடு பிள்ளையார் தரிசனம் தருவது அற்புதக் காட்சி. இந்தக் கோயிலின் பிராகாரத்தை வலம் வந்தால் விதவிதமான விநாயகர்களின் தரிசனம் காணலாம். தனிச் சந்நிதியில் ஜோதிர்லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் நவகிரக சந்நிதி, நாகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி ஆகியவையும் உண்டு.

லிங்க வடிவில் விநாயகர்
லிங்க வடிவில் விநாயகர்

புதுமணத் தம்பதியர் போக வேண்டிய கோயில்...

இந்தத் திருக்கோயில் திருமண தோஷம் நீக்கும் தலமாகவும், குழந்தைப்பேறு அளிக்கும் தலமாகவும் சிறப்புற்று விளங்குகிறது. குடும்பம் குடும்பமாக இங்கு வந்து பொங்கலிட்டுப் படையலிட்டு வேண்டிக்கொள்ளும் வழக்கம் பல பக்தர்களிடம் உள்ளது. புது வீடு கட்டியவர்கள், புதிய வாகனம் வாங்கியவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்வது இங்கு வழக்கம். சுற்றுவட்டார மாவட்டங்களில் யாருக்குத் திருமணம் நடைபெற்றாலும் இங்கு வந்து புதுமணத் தம்பதிகள் பிள்ளையாரின் ஆசி வாங்கிச் செல்கிறார்கள். எப்போதும் பல அதிசயங்களையும் அற்புத அனுபவங்களையும் அளிக்கும் இந்தப் பிள்ளையார் தமிழகத்தின் பிரசித்திபெற்ற கணபதிகளில் ஒருவர் எனலாம்.

கொம்பு முளைத்த தேங்காய்...

மரக்காணம் சூணாம்பேட்டை ஜமீனுக்குச் சொந்தமான தென்னந்தோப்புக்கு வந்து ஒரு பக்தர் பொய்யாமொழி பிள்ளையாருக்கு உடைக்க என்று ஒரு தேங்காய் கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த தோப்புக்காரர்கள் 'பிள்ளையாருக்குத் தேங்காய் கொடுக்காவிட்டால் அவற்றுக்கு என்ன கொம்பா முளைத்துவிடும்' என்று ஏளனம் பேசி அனுப்பிவிட்டனர். மறுநாளே தோப்பில் இருந்த எல்லாத் தேங்காய்களுக்கும் தும்பிக்கை போன்ற கொம்பு நிஜமாகவே முளைத்துவிட்டதாம். இதனால் பயந்துபோன தோப்பின் சொந்தக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வேண்டி வணங்கித் தேங்காய்களை வழிபாட்டுக்குக் கொடுத்தார்களாம். கொம்பு முளைத்த தேங்காய்களில் ஒரு குலை இன்றும் இங்கு கட்டப்பட்டுள்ளது.

கொம்பு முளைத்த தேங்காய்
கொம்பு முளைத்த தேங்காய்

இங்குள்ள நவகிரங்களை வணங்கி அந்த மேடையில் கைகளை அழுத்தி வைத்து வணங்குவது வழக்கம். எந்த அழுத்தமும் இன்றித் தானாகவே கைகள் கூடிவிட்டால் எண்ணியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சித்திரை மாதம் பிரம்மோற்சவம், மாசி மாசம் தீர்த்தவாரி, ஆங்கிலப் புத்தாண்டு, காணும் பொங்கல், சங்கடஹர சதுர்த்தி என இங்கு பல விழாக்கள் இங்கு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

எங்கிருக்கிறது?

திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் இருக்கிறது தீவனூர். திருவண்ணாமலைக்குப் போகும் மார்க்கத்தில் உள்ளதால் பேருந்து வசதிகள் அதிகம் உள்ளது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

நேரடி தரிசனம் காணலாம்...

அதிசயங்கள் பல கொண்ட இந்த அற்புத விநாயகரின் நேரடி தரிசனத்தை வரும் விநாயகர் சதுர்த்தி (22-8-2020) அன்று மதியம் 3 மணி முதல் 4 மணி வரை சக்தி விகடன் ஒளிபரப்ப உள்ளது (ஜூம் மீட்டிங்கில்). கணநாதர் அவதரித்த நன்னாளில் உங்கள் வீடு தேடியே வந்து அருள்பாலிக்கவிருக்கிறார் பொய்யாமொழிப் பிள்ளையார். தவறாமல் கலந்துகொண்டு லிங்கவிநாயகரின் சிறப்பு ஆராதனைகளைக் கண்டு தரிசியுங்கள்; வளமும் நலமும் பெறுங்கள்!

நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த கட்டுரைக்கு