குருவான பிரகஸ்பதிக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. பொன்னுக்கு ஏமம் என்ற ஒரு பெயரும் தமிழில் உண்டு. அந்த வகையில் குரு ஈசனை வழிபட்டு அருள் பெற்ற தலம் ‘ஏமநல்லூர்’. இன்று இத்தலத்தின் திருநாமம் ‘திருலோக்கி'. காவிரியின் வடகரையில் இருக்கும் இந்த ஏமநல்லூரில் எழுந்தருளியுள்ள சுந்தரேச பெருமானை குரு பசு நெய் விளக்கேற்றி, கொன்றை மாலை அணிவித்து, முல்லைப் பூவால் அர்ச்சித்து, சாம கானம் பாடி, தயிர் அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டாராம். அதனால் மகிழ்ந்த ஈசன், குருவை வாழ்த்தி இந்த தலத்துக்கு வந்து உனது பார்வை பெறும் எல்லோரும் எல்லாவிதமான தோஷங்களும் விலகி ‘குரு பலம்’ பெற்று அவர்களது இனிய இல்லறம் சிறக்க ஆசிர்வதிக்கிறேன் என்று அருளினாராம்.

திருலோக்கி தலத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் குருபகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர வடிவம் அற்புதமான திருவடிவமாகும். ரிஷப வாகனத்தில் அம்பிகையை ஆலிங்கனம் செய்தபடி ஈசன் காட்சியளிக்கும் அழகே அலாதியானது. இந்த கோலத்தை தரிசித்த குரு பகவான் தனது வழக்கமான அபய முத்திரை விடுத்து இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிக்கிறார். குரு பகவான் பூஜித்து குருபலம் அருளும் சிறப்பான தலம் திருலோக்கி. திருலோக்கி தலத்தில் அம்பிகையைத் தழுவிய தெய்விக வடிவைக் கண்டு நெகிழ்ந்த கருவூர்த்தேவர் திரைலோக்கிய சுந்தரனை திருவிசைப்பாவில் காந்தாரப் பண்ணில் பாடி மகிழ்ந்தார். அப்போது இந்தத் தமிழ் மாலையை இசையோடு பாடி வழிபடுவோர் இனிமையான இல்லற வாழ்க்கையைப் பெற்று நல்லறங்கள் பல புரிந்து இன்புறுவர் என்று போற்றுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவரன் அமையாத இளைஞர்கள், இளம் பெண்கள், பிரிந்துபோன தம்பதிகள், விதி வசத்தால் முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாதவர்கள் எல்லோரும் இங்கு வந்து குருபகவானை தரிசித்து பலன் பெறுகிறார்கள்.
கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கிலோ மீட்டரில் திருலோக்கி அமைந்துள்ளது.

வரும் நவம்பர் 15-ம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த நன்னாளில் திருலோக்கி கல்யாண குருவை தியானித்து அருள்பெறுவோம்.