Published:Updated:

நினைத்த காரியம் கைகூடும்... கூடுவாஞ்சேரி ரயிலடி மாமர சுயம்பு விநாயகர் திருக்கோயில்! #Video

Ganesh Pooja
Ganesh Pooja

அஷ்டபுஜ துர்கை, ராசி மண்டல தட்சிணாமூர்த்தி, மாமரத்து ஈஸ்வரர்... வரங்கள் அருளும் மாமர சுயம்பு விநாயகர் திருக்கோயில்!

எளிமையே வடிவானவர் விநாயகர். யானை முகனைக் கண்ட உடனேயே நம் கவலைகள் பறந்துஓடும். இந்தப் பிரபஞ்சத் தத்துவமான பிரணவத்தின் வடிவானவர் என்றபோதும் அவரின் எளிமைத் தோற்றமே நம்மை அவரை நோக்கி ஈர்க்கும். அறுகம்புல்லும் புதர்களில் வளரும் எருக்கம் மலரும் அவருக்குப் பிரியம். சாணம் என்றாலும் சந்தனம் என்றாலும் அதில் ஆவாஹனம் செய்து அவரை வழிபட முடியும்.

Mamara Vinayagar
Mamara Vinayagar

அவரை வணங்காது தொடங்கும் செயல்களில் வெற்றி வசப்படுவதில்லை என்பதைப் புராணங்கள் விளக்குகின்றன. பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் விநாயகர் எழுந்தருளியிருப்பார். விநாயகரே மூலவராக எழுந்தருளியிருக்கும் ஆலயங்களும் உண்டு. இவை தவிர்த்து சில இடங்களில் அவர் சுயம்புவாகவும் எழுந்தருளி அருள் செய்கிறார். அப்படி விநாயகர் எழுந்தருளியிருக்கும் தலமே கூடுவாஞ்சேரி மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம்.

பூந்தோட்டங்கள் நிறைந்து ஈசனின் பூஜைக்குப் பூதொடுக்கும் பணி நடைபெற்ற இடம் என்பதால் இந்தத் தலத்தின் ஆதிப்பெயர், 'பூ இடுவாஞ்சேரி' என்கின்றனர். பிற்காலத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்கி பல்வேறு பகுதிகளிலும் இருந்து வணிகர்கள் கூடியதால் கூடுவாஞ்சேரி என்று புகழ்பெற்றது. இந்தத் தலத்தில் ஒரு மாமரத்தில்தான் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதை மெய்ப்பிக்க இங்கே, மாமரத்தில் எழுந்தருளியிருக்கிறான்.
கிருபானந்த வாரியார்
Vikatan

ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் வசித்துவந்த கிழவி ஒருத்தி விநாயகப் பெருமான் மேல் பெரும்பக்தி கொண்டுவிளங்கினாள். ஆதரிப்பார் யாரும் அற்ற அந்தக் கிழவி தினமும் சுண்டல் விற்றுப் பிழைத்தாள். அவள் அடிக்கடி ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்து சுண்டல் விற்பது உண்டு. அப்படி அவள் விற்கும்போது சீக்கிரமே சுண்டல் விற்றுத் தீர்ந்துவிடும். மற்ற இடங்களில் நின்று அலைந்து திரிந்து விற்றலும் விற்பனை ஆகாமல் மிச்சம் விழும். இதைப் பல நாள் கவனித்த கிழவி, ஒரு நாள் அந்த மாமரத்தின் அடிப்பகுதியைப் பார்த்தாள்.

மரத்தின் அடிப்பகுதியைக் கண்ட கிழவிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காரணம், அங்கு மரத்தில் விநாயகர் வடிவம் சுயம்புவாக எழுந்தருளியிருந்தது. அவள் விநாயகப் பெருமானைத் துதித்து ஊருக்குள் ஓடிச் சென்று அனைவரையும் அழைத்து வந்து காட்டினாள். ஊர்மக்கள் ஒன்று திரண்டு விநாயகரை வழிபட்டு அங்கு ஓர் ஆலயம் ஏற்படுத்தினர். இன்று அந்த ஆலயமே கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது.

Vinayagar
Vinayagar

மாமர விநாயகர் ஞான வடிவானவர். எனவே, பல ஞானியரும் இங்கு வந்து அவரைத் தியானித்து அருள் பெற்றனர். இதனால் விநாயகரின் பெருமை மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது. இங்கு விநாயகரை வழிபட்ட திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள், 'இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதை மெய்ப்பிக்க இங்கே, மாமரத்தில் எழுந்தருளியிருக்கிறான்' என்று கூறிப் போற்றினார்.

பிள்ளையாரோடு ஒரு Selfie எடுக்கலாமே! #Vinayakar_Chaturthi_Contest

2004-ம் ஆண்டு இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டு காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் திருவாவடுதுறை ஆதினம் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Vinayagar
Vinayagar

இங்கு ஈசன், மாமரத்து ஈஸ்வரராகவும் அன்னை லலிதாம்பிகை என்னும் திருநாமத்தோடும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் இங்கு ஈசனுக்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிவபெருமானுக்கு, கார்த்திகை சோமவார வழிபாடும், ஏகாதச ருத்ர ஹோமமும் தீப உற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் இங்கு சீரும் சிறப்புமாக நடைபெறும்.

இங்கு அன்னை அமர்ந்த திருக்கோலத்தில் கால்களில் கொலுசணிந்து சுந்தர ரூபம் கொண்டு காட்சியளிக்கிறாள். நவராத்திரி வழிபாடுகள் இங்கு அன்னைக்குச் சிறப்பாக நடைபெறுகிறது.

இங்கு வந்து நவகிரகங்களையும் வேண்டிக்கொள்ள அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தியாகி நன்மைகள் பெருகுகின்றன.
பக்தர்கள்
Vinayagar
Vinayagar
ஶ்ரீ முத்துமாரியம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், தர்ம சாஸ்தா ஐயப்பன், அஷ்டபுஜ துர்கை, பர்வகிரி ஆஞ்சநேயர் ஆகியோரின் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன.

இங்கு அமைந்திருக்கும் ராசி மண்டல தட்சிணாமூர்த்தி சந்நிதி மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இதில் பன்னிரண்டு ராசிகளும் மலைகள்போல சிற்பமாக வடிக்கப்பட்டு அவற்றின் மீது ஜகத்குரு தட்சிணாமூர்த்தி அமர்ந்து ஞான உபதேசம் செய்கிறார். பன்னிரண்டு ராசிக்காரர்களும் இங்குவந்து வேண்டிக்கொள்ள அவர்களின் வாழ்வில் கெடுபலன்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கப்பெறுகிறார்கள்.

Dhakshana Moorthi
Dhakshana Moorthi

இந்த ஆலயத்தின் மற்றுமொரு விசேஷம் நவகிரக சந்நிதி. இங்கு நவகிரகங்களும் தங்களின் துணைவியரோடும் வாகனங்களோடும் அனுக்கிரக மூர்த்திகளாக எழுந்தருளியிருப்பது சிறப்பு. 'இங்கு வந்து நவகிரகங்களையும் வேண்டிக்கொள்ள அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தியாகி நன்மைகள் பெருகுகின்றன' என்கின்றனர் பக்தர்கள்.

'மாமரத்தில் அருள்பாலிக்கும் விநாயகரை தரிசித்து வணங்க, அனைத்துக் குறைகளும் தீர்கின்றன' என்கின்றனர் பக்தர்கள். குறிப்பாக திருமணமாகாதவர்கள், குழந்தைப் பேறில்லாதவர்கள், வேலை வாய்ப்பு வேண்டுபவர்கள், கல்வியில் முன்னேற்றம் வேண்டுபவர்கள் தொடர்ந்து 21 நாள்கள், இந்த விநாயகரை வலம் வந்து 21 தீபம் ஏற்றி, 21 தேங்காய் மாலையணிவித்து தங்களின் வணங்க வேண்டுதல் நிறைவேறப் பெறுகிறார்கள்.

Vinayagar
Vinayagar

'மாதம்தோறும் நடைபெறும் ஶ்ரீ அகோர கணநாத மூலமந்திர ஹோமத்தில் கலந்துகொண்டு வேண்டிக்கொள்ள எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் மறைந்து காரிய ஸித்தி ஏற்படும்' என்கிறார்கள் வழிபட்டு பலன் அடைந்த பக்தர்கள்.

அடுத்த கட்டுரைக்கு