Published:Updated:

அடர்ந்த வனம்... நோய் தீர்க்கும் மூலிகைகள்... வேண்டியவை அருளும் நம்பிமலை மார்கழி தரிசனம்!

நம்பி மலை
நம்பி மலை

பக்தர்கள் திருக்குறுங்குடி, நம்பிமலை இரண்டு தலத்தையும் ஒருங்கே தரிசிப்பது பெரும்புண்ணியம்! சகல தோஷங்களும் விலகி, வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.

கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது, மகேந்திரகிரி மலை. மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனம் இது. நீரோடைகள் எப்போதும் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் மகேந்திர கிரி மலையின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது, நம்பி மலை. புராணங்களில் போற்றப்படும் முக்கியமான மலை இது. எந்தத் திசையில் நோக்கினாலும் விழிகளுக்கு விருந்தாகப் பச்சைப் பசேல் என்று அடர்ந்த வனம் மூடியிருக்க நம்பி மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது, திருமலை நம்பி கோயில்.

நம்பி
நம்பி

நம்பி மலை, 180 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மலை மேல் நம்பி எனும் பெயரில் `நம்பினோரைக் கைவிடேன்’ என்று அருளும் வண்ணம் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் நம்பி. முன்னொரு காலத்தில் உலகம் வளம் பெற சிவபெருமானும், பார்வதி தேவியும் தவம் செய்த இடம் இம்மலை என்பது கூடுதல் சிறப்பு.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகேயிருக்கிறது திருக்குறுங்குடி. திருக்குறுங்குடி திருத்தலத்திலுள்ள கோயிலில் நின்ற நம்பி - திரிவிக்கிரமனாகவும், இருந்த நம்பி - ஸ்ரீதரனாகவும், கிடந்த நம்பி - பத்ம நாபனாகவும் அருள்புரிந்து பக்தர்களை ரட்சிக்கிறார்.

நம்பி மலை
நம்பி மலை

இங்கிருந்து களக்காடு செல்லும் வழியில் பெரியகுளம் ஒன்று இருக்கிறது. இதற்கு வட்டக்குளம் என்று பெயர். இங்கிருந்து பயணித்தால் வழியில் சிவாசாமி ஆசிரமம், வெள்ளவேஷ்டி சாமி ஆசிரமம் எனப் பல ஆசிரமங்கள் காணப்படுகின்றன. இங்கிருந்து 5 கி.மீ தொலைவுக்கு மலைப்பாதையில் நடந்தால் நம்பி மலையை அடையலாம்.

மலைப்பாதை சற்றே கடினமானது; பாதையெங்கும் ஓடும் நீரோடைகள், சலசலக்கும் அருவிகள், மூலிகைகளின் வாசம் ஆகியவை மலையேற்றத்தை எளிமைப்படுத்திவிடும். பக்தர்கள் பயணிக்கும் மகேந்திரகிரி மலைப்பகுதி அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உட்பட பல சித்தர்கள் நித்யவாசம் செய்வதாக நம்பப்படுகிறது. மலைமேல் ஏறியிருக்கும் பக்தர்கள் பலர் சித்தர்களைக் கண்டு அருள்பெற்றதாகவும் கூறியிருக்கிறார்கள்.

மார்கழி தரிசனம்
மார்கழி தரிசனம்

மலைமேல் தொழு கண்ணி, அழுகண்ணி, இடிநருங்கி, மதிமயங்கி, கருணைக் கிழங்கு, மலைநீலி, நீலத்தும்பை, அழவணம், கல்தாமரை, குமரி, குறிஞ்சிச் செடி, மருள், நாகதாளி, திருநீற்றுப் பூண்டு, பொன்னா வாரை, பேய்த்தி, பூவரசு, காட்டுச் சீரகம், மகா வில்வம், தான்றிக்காய் போன்ற மருத்துவக் குணம் மிக்க அரிய மூலிகைகள் நிறைந்திருக்கின்றன.

ஏழு மலைகளுடன் காணப்படுகிறது திருப்பதி. அதே போல ஏழு ஏற்றங்களுடன் திகழ்கிறது நம்பிமலை. இந்த ஏழு ஏற்ற - இறக்கங்களைக் கடந்து பயணித்தால்தான் நம்பிமலையை அடையமுடியும். பிறவிப் பெருங்டலுக்கு ஒப்பாகக் கருதப்படுகிறது இந்த ஏற்ற - இறக்கங்கள். இந்த ஏற்றங்களைக் கடந்து செல்லும் ஒருவர் பிறவிப் பெருங்கடலைக் கடந்ததாகவே கருதப்படும்.

விஷ்ணு
விஷ்ணு

மலையேறும்போது சிறு ஓடையாகக் குறுக்கிட்டு ஓடுகிறது, நம்பியாறு. இது மாயவன் பரப்பு எனுமிடத்தில் ஐந்து சுனைகளாகத் தோன்றி பிறகு கடையார் பள்ளம் வழியாகத் தாய்ப்பாதம் எனும் இடத்தைத் தொட்டு பிறகு நம்பி மலையை வந்தடைகிறது. பல மூலிகைகளின் சாரத்தை ஏற்று, நம்பியின் அருளுடன் பாயும் நம்பியாறு நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கிறது.

நம்பியாற்றில் நீராடிய பிறகுதான் திருமலை நம்பியை வழிபடவேண்டும் என்பது ஐதிகம். அங்கிருந்து மேலேறும் மலைப் படிகட்டுகளில் மேலேறினால் கோயில் தென்பட்டுவிடும். மலை முகட்டின் உச்சியில் கோயில் கொண்டருளி எழுந்தருளியிருக்கிறார், திருமலை நம்பி. நின்ற கோலத்தில் நம்பாடுவானுக்கு அருள்புரிந்தவர், நாம் கேட்கும் வரங்களை அருள்வதற்காக இன்னும் அதே கோலத்தில் அருளாட்சி தருகிறார். எனவேதான் பக்தர்கள் தங்கள் மலையேற்றத்தைப் பொருட்படுத்தாமல் மேலே வந்து வணங்கி நிற்கின்றனர்.

நம்பி மலை
நம்பி மலை
அனுமத் ஜயந்தி, திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி... மார்கழி மாத விழாக்கள்... விசேஷங்கள்! #VikatanPhotoCards

மலை முகட்டின் அடிவாரத்தில் பக்தர்களால் வழிபடப்படுகிறது புற்று ஒன்று. இதில் 201 சித்தர்கள் அரூபமாக வீற்றிருப்பதாகவும், தினம் ஒருவர் நம்பி மலைப் பெருமாளை பூஜித்து வணங்குவதாகவும் நம்பிக்கை. தினமும் சித்தர்கள் எழுந்தருளியிருக்கும் புற்றுக்கு பூஜை நடந்த பிறகே பெருமாளுக்கு பூஜை செய்யப்படுகிறது. பக்தர்களும் புற்றை வழிபட்டு பேறு பெறுகிறார்கள். மலை மேல் நம்பியை சனிக்கிழமையன்று தரிசிப்பது விசேஷம். பக்தர்கள் வேண்டும் வரத்தை அருள்பாலிப்பவர் நம்பி.

இந்தத் தலத்தையும், மலையேறுபவர்களையும் சங்கிலி பூதத்தார் காவல் காக்கிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கருட சேவை நடைபெறும் போது சாமியாடும் சங்கிலிபூதத்தாரின் பக்தர்கள் சங்கிலியால் தம் உடலில் அடித்துக்கொள்வது பரவசத்தை ஏற்படுத்தும்.

பக்தர்கள் திருக்குறுங்குடி, நம்பிமலை இரண்டு தலத்தையும் ஒருங்கே தரிசிப்பது பெரும்புண்ணியம்! சகல தோஷங்களும் விலகி, வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். மாலவனுக்கு உகந்த மார்கழியில் நம்பியைத் தரிசிப்பது கூடுதல் சிறப்பை அளிக்கும்.

மார்கழித் திருவாதிரையான் என்று போற்றப்படும் நடராஜரை இதே மார்கழியில் தரிசிப்பதும் சிறந்தது. நடராஜரையும் மாலவனையும் மார்கழி மாதத்தில் ஒருசேர தரிசிக்கும் வண்ணம் சக்தி விகடன் சார்பில், `மார்கழி தரிசனம்’ ஜனவரி 3, 4, 5 ஆகிய மூன்று நாள்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆன்மிக யாத்திரையில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்குக் கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்...

அடுத்த கட்டுரைக்கு