Election bannerElection banner
Published:Updated:

செல்வம் அருளும் லட்சுமி தீர்த்தம்... நோய் நீக்கும் நவபாஷாண கருடர்... சிங்கவரம் ரங்கநாதர் கோயில்!

சிங்கவரம் ரங்கநாதர் கோயில்
சிங்கவரம் ரங்கநாதர் கோயில் ( NIZAR )

இந்த சிங்கவரம் குடைவரையில் காணப்படும் ரங்கநாதப் பெருமாளின் திருமேனியானது திருமயத்திற்கு இணையான திருமேனியாகவும், ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாள் திருமேனியைவிடப் பெரியதாகவும் காணப்படுகிறது.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் தந்தையான ஸ்ரீசிம்மவிஷ்ணு ஆட்சி செய்துகொண்டிருந்த காலகட்டம். அவரது செஞ்சி அரண்மனைக்கு அருகே எழில் மிகு மலர்வனம் ஒன்று அமைந்திருந்தது. ஆனால், அந்த வனத்திலிருந்து மலர்கள் எதுவும் சிலகாலம் அரண்மனைக்கு வரவில்லை. மன்னன் என்னவென்று விசாரித்தபோது, வராகம் ஒன்று நந்தவனத்தின் மலர்களையெல்லாம் தின்று தீர்த்துவிடுகிறது. எவ்வளவு முயன்றும் அந்த வராகத்தைப் பிடிக்கவோ கொல்லவோ முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர். ஒருநாள் சிம்மவிஷ்ணு, அந்த வராகத்தைப் பிடிக்க நந்தவனத்தில் ஒளிந்திருந்தார். அப்போது வராகம் வந்து மேயத் தொடங்கியது. உடனே, மன்னன் அதன் முன் குதித்து அதை வேலால் குத்த முயன்றான். ஆனால் அந்த வராகம் தப்பி ஓடியது. மன்னன் விடாமல் துரத்தினான். ஒருகட்டத்தில் வராகம் நந்தவனத்தைத் தாண்டி மலைமேல் ஏறத்தொடங்கியது.

சிங்கவரம் தனிப்பாறை
சிங்கவரம் தனிப்பாறை
NIZAR

மன்னனும் விடாமல் பின்தொடர்ந்தான். மலை உச்சிவரை சென்ற வராகம் அங்கே ஒரு கணம் நின்று மன்னனைத் திரும்பிப் பார்த்து மறைந்தது. மன்னன் வராகம் மறைந்த உச்சிக்குச் சென்று பார்த்தால் அங்கே பிரமாண்டமான ரங்கநாதர் திருமேனி இருந்ததாம். வந்தது சாதாரண வராகம் இல்லை என்று உணர்ந்த அந்த மன்னன் அன்றுமுதல் அந்த ரங்கநாதரை வழிபடத் தொடங்கினார். அந்த சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன் அந்த மலையைக் குடைந்து அந்த ரங்கநாதருக்குக் கோயில் எடுத்தார். அந்த அற்புத ஆலயம் இருக்கும் இடம் சிங்கவரம்.

செஞ்சிக்கு அருகே 4 கி.மீ தொலைவில் உள்ளது சிங்கவரம் திருத்தலம்.

மலையடிவாரத்தில் உயர்ந்தோங்கிய ஊஞ்சல் மண்டபம் நம்மை இனிதே வரவேற்கிறது. மலைகோயிலை தரிசிக்கப் படிக்கட்டுகள் ஏறுவதற்கு முன் ஒற்றைப் பாறையில் திருமாலுக்கு உகந்த சங்கு. சக்கரம், நாமம், திருப்பாதம், பஞ்சமுக அனுமன் ஆகிய திருவடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சிங்கவரம்
சிங்கவரம்
NIZAR

அவற்றை வணங்கிப் பின் செங்குத்தாகக் காணப்படும் 150 படிக்கட்டுகளைக் கடந்து மேலே சென்றால் 5 நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்தைக் காணலாம். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் சந்நிதி கொண்டருளும் அருள்மிகு வரதராஜ பெருமாளை தரிசிக்கலாம். அவரை வழிபட்டு வலப்புறமாக உள்ளே சென்றாள், சுனை ஒன்று உள்ளது. இந்த சுனை ‘லட்சுமி தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. பொதுவாக, மகாலட்சுமி பெருமாளை வழிபட்ட தலங்களில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் லட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப்படும். லட்சுமி தீர்த்தம் இருக்கும் தலத்தில் மகாலட்சுமியை வணங்கி வழிபட்டால் செல்வ வளம் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு. இங்கு அதற்கேற்ப லட்சுமி தீர்த்தமும் தாயாருக்கு சந்நிதியும் அமைந்து சிறப்புற்று விளங்குகிறது. சக்கரத்தாழ்வார், கருடன், ஆஞ்சநேயர், ராமாநுஜர் ஆகியோரின் சந்நிதிகளும் இங்கே அமைந்துள்ளன.

இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் தொன்மைவாய்ந்த குடைவரையைக் காணலாம். இக்குடைவரை மண்டபத்தில் துவாரபாலகர்களும் மற்றும் இரண்டு வரிசை தூண்கள் அமைந்துள்ளனர். ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு புறமும் பக்கச் சுவர்களை ஒட்டியவாறு இரண்டு அரை தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பல்லவர்கால கலையமைப்பின் படி தூண்கள், மேலும் கீழும் சதுரவெட்டு முகத்துடன் நடுப்பகுதி எண்பட்டை வடிவிலும் அமைந்துள்ளன. தாமரை வடிவமும் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு இணையான அளவில் கருவறை உள்ளது. இந்தக் கருவறையில் திருமால் ‘பள்ளிகொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார். இந்த மூர்த்தி ஒரே தாய்பாறையிலேயே உருவானவராக பிரமாண்டமாகக் காட்சியருள்கிறார். ஆதிசேஷன்மீது அனந்த சயன கோலத்தில் திருக்காட்சியருளும் பெருமாளுக்கு அருகே, பிரம்மதேவர், மதுக்கடைபர், நான்முகன், கந்தர்வர், கருடன், திருமாலின் பாதமருகே பூதேவி ஆகியோர் காட்சி தருகின்றனர்.

சிங்கவரம் வரதராஜபெருமால்
சிங்கவரம் வரதராஜபெருமால்
NIZAR

இந்த சிங்கவரம் குடைவரையில் காணப்படும் ரங்கநாதப் பெருமாளின் திருமேனியானது திருமயத்திற்கு இணையான திருமேனியாகவும், ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாள் திருமேனியைவிடப் பெரியதாகவும் அமைந்துள்ளது.

இந்தக் குடைவரையில் வலப்புறமாக ரங்கநாயகி தாயார் தனி சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்தபடி காட்சி அருள்கிறாள். அதே அறையின் பின்புறமாக குடைவரையை ஒட்டியபடி உக்கிரமான துர்கையும் வீற்றிருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், துர்கையம்மனை ஜன்னல் வழியாகவே தரிசிக்க முடியும். துர்கையை வயதான ஒருவரும், இளம் வயதுடைய ஒருவரும் வணங்குவது போல் அருகில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் எதிர்புறம் பலிபீடமும், கல்கொடிமரமும் காணப்படுகின்றன.

செஞ்சிக் கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ராஜாதேசிங்குக்கு இத்தலத்து இறைவன் குலதெய்வம் என்றும் அம்மன்னன் எங்கு போருக்குச் சென்றாலும் ரங்கநாதரிடம் அனுமதி பெற்றுத்தான் செல்வார் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு ஆற்காடு நவாபை எதிர்கொள்ள இருந்த நிலையில் இத்தலத்து இறைவனிடம் அனுமதி கோரியபோது பெருமாள் முகத்தைத் திருப்பிக்கொண்டு அனுமதி மறுத்தாராம். அதனை ஏற்காமல் சென்ற தேசிங்கு அப்போரில் தோல்வி அடைந்ததோடு மரணத்தையும் தழுவினார் என்ற கருத்தும் நிலவுகிறது.

சிங்கவரம்
சிங்கவரம்

இங்கு மாசிமகம், அமாவாசை தினங்கள், தை, ஆடி மாத சிறப்பு தினங்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும். 60-ம் எனப்படும் சஷ்டி அப்தபூர்த்தி இத்தலத்தில் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்தத் தலத்தில் இருக்கும் கருடர் நவபாஷாணத்தால் செய்யப்பட்டவர் என்கிறார்கள். இந்தக் கருடரை வணங்கினால் ஆரோக்கியம் மேம்படுவதோடு மனபயமும் அகலும் என்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக ஆலய தரிசனங்கள் தடை செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது மீண்டும் ஆலயங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாளை, பெருமாளை வழிபட உகந்த ஏகாதசி திதி. இந்த நாளில் வாய்ப்பிருப்பவர்கள் சிங்கவரம் ரங்கநாதரை வழிபட்டு சகல நலன்களும் பெறுவோம்.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை | மாலை 4 மணி முதல் 7 மணி வரை

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு