Published:Updated:

ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீக்கும் கோவை ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலின் தனிச்சிறப்புகள்!

லட்சுமி நரசிம்மர்

லட்சுமி நரசிம்மப் பெருமாளிடம் பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள்.

ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீக்கும் கோவை ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலின் தனிச்சிறப்புகள்!

லட்சுமி நரசிம்மப் பெருமாளிடம் பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள்.

Published:Updated:
லட்சுமி நரசிம்மர்
திருமால் அவதரித்த ஒன்பது அவதாரங்களில், சிறப்பானது நரசிம்ம அவதாரம். பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் இது. `அழகிய சிங்கர்' எனப் போற்றப்படுவதும் இவர்தான். திருமாலுக்கு ஆயிரம் ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் பஞ்ச நாமாக்களே முக்கியமானவை.

நரசிம்மர் என்றவுடன் அஹோபிலம், யாதகிரி கோட்டா, வட்டபல்லா, மட்டப்பள்ளி, சிம்மாசலம், கத்ரி, மங்களகிரி, பெஞ்சல கோணா, சென்னபட்னா, சோளங்கிபுரம், பழைய சீவரம், அந்திலி, சிந்தலவாடி, மங்கைமடம், திருக்குரவளூர், ஆவணியாபுரம், நாமக்கல், சிங்கப்பெருமாள் கோயில், பரிக்கல், பூவரசன் குப்பம், சிங்கிரி, காட்டழகியசிங்கர் கோயில், நரசிங்கபுரம், கத்தாழம்பட்டுபோன்ற திருத்தலங்களே ஞாபகத்துக்கு வரும். கோவையிலும் அழகிய லட்சுமி நரசிம்மர் ஆலயம் ஒன்றும் உள்ளது.

நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர்
நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர்

கோவையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் நரசிம்மநாயக்கன் பாளையம் அமைந்துள்ளது. இவ்வூரில் கடந்த 300 ஆண்டு காலமாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். லட்சுமி நரசிம்மர் இவ்வூரில் அவதரித்ததால்தான் நரசிம்மநாயக்கன்பாளையம் என்ற பெயர் இந்தப் பகுதிக்கு வந்ததாகக் கூறி பக்தர்கள் வியக்கின்றனர்.

லட்சுமி நரசிம்மப் பெருமாளிடம் பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள்.

இரணியனை வதம்செய்ய பெருமாள் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். இரணியன் என்ற அசுரனின் மகன் பிரகலாதன் அசுர குலத்தில் பிறந்தாலும் நாராயணின் தீவிர பக்தனாக விளங்கினான். அந்நாட்டில், இரணியனையே மக்கள் அனைவரும் கடவுளாக வணங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனை தன்னுடைய மகனே மீறியதால் அவனைத் துன்புறுத்தினான் இரணியன். தன் மீது பக்தி செய்ததற்காக பெற்ற பிள்ளையையே இரணியன் கொடுமை செய்ததைக் கண்ட திருமால், அவனை அழிப்பதற்காக மனித உடலும், சிங்கத்தலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை வதம் செய்தார் என்பது புராணச் செய்தியாகும்.

நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர்
நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர்

நரசிம்மரின் கர்ஜனையால் உலகமே நடுங்கிப் போனது. இதனையறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரின் கோபத்தைச் சாந்தப்படுத்துமாறு மகாலட்சுமியை வேண்டினார். தாயார் பெருமாளின் சினம் தணியும் வகையில் ஆசுவாசப்படுத்தினாள்.

இப்புராணச் செய்தியின் அடிப்படையில், லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது.

இத்திருத்தலத்தின் முன்பு அழகிய மண்டபத்துடன் கூடிய கருட கம்பம் உள்ளது. இதனையடுத்து வசந்த மண்டபத்தினுள் பலிபீடம், கருடாழ்வார் காட்சி கிடைக்கின்றது. மகாலட்சுமியின் சகோதரர் சந்திரன் திருக்கோயிலில் சுவாமிக்கு விமானமாக இருந்து காப்பதாக ஐதீகம். எனவே மூலவர் விமானம் சந்திர விமானம் எனச் சிறப்புடன் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள விநாயகரின் தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாகக் காட்சியளிக்கிறார். இவரைச் சர்ப்ப விநாயகர் என்று அழைக்கின்றனர். பெருமாள் பள்ளி கொண்டுள்ள கோயில் என்பதால் பிள்ளையார் ஆதிசேஷனுடன் காட்சியளிப்பதாகப் பக்தர்கள் வியக்கின்றனர்.
ராகு, கேது தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவருக்குத் திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக் கொள்கின்றனர். தோஷம் உடனே நிவர்த்தியாகி நல்லருள் பெற்றதாகக் கூறுகின்றனர், இறையருளை உணர்ந்தவர்கள்.

இத்திருத்தலத்தின் மகாமண்டபத்தினுள் காளிங்கநர்த்தனர் அருளுகின்றார். அர்த்தமண்டபத்தில் தேவியருடன் நரசிம்மப் பெருமாள் உற்சவ மூர்த்தமாகக் காட்சியளிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் உற்சவ மூர்த்தமும் உள்ளது. கருவறையில் மூலவர் லட்சுமி நரசிம்மப் பெருமாள் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சாந்த முகத்துடன், மகாலட்சுமியை மடியில் அமர்த்தி,மேல் இரு கைகளில் சங்கு சக்கரம் தாங்கியும், கீழ் இடது கையால் தாயாரை அரவணைத்த படி, கீழ்வலதுகரத்தை அபயஹஸ்தமாகக் காட்டிய நிலையில் தரிசனம் தருகிறார்.

கருடாழ்வார்
கருடாழ்வார்

புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று இவருக்கு விமரிசையாக பூஜைகள் செய்யப்படுகின்றன. மார்கழி மாதம் 30 நாள்களும் காலை ஆறு மணிக்கு பக்தர்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரத்தை பாராயணம் செய்து பெருமாளைச் சேவிக்கிறார்கள். வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய இரண்டு விரத தினங்களும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

லட்சுமி நரசிம்ம பெருமாளை மனதார வழிபடுவோருக்கு நாளும் நன்மையே!