பெருமாள் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது சங்கு சக்கரம்தான். பொதுவாக எல்லா விண்ணகரங்களிலும் பெருமாள் சங்குசக்கரதாரியாகக் காட்சி தருவதுதான் வழக்கம். ஆனால், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடி தலத்தில் மட்டும் பெருமாளை சற்று வித்தியாசமான கோலத்தில் தரிசிக்கலாம்.
வாமன அவதாரத்தின்போது, கண்பார்வை இழந்த சுக்கிரபகவான், பல தலங்களில் தவம் செய்து பூஜித்து வந்தார். இறுதியில் இத்தலத்தில் வழிபட்டபோதுதான் சுக்கிரனுக்கு பெருமாள் மீண்டும் கண் பார்வையை அனுக்கிரகித்தார்.

அது மட்டுமன்றி, சுக்கிர பகவானின் கோரிக்கைக்கு இணங்க அழகு நிறைந்த சுந்தரக்கோலத்தில் ஸ்ரீ ராமபிரானாகக் காட்சியளித்தார் இத்தலத்துப் பெருமாள். அப்போது தன்னிடமிருந்த சங்கு சக்கரத்தினைக் கருடாழ்வாரிடத்து அளித்துவிட்டாராம். அது கண்ட சுக்கிரன் எப்போதுமே பக்தர்களுக்கு வேண்டுதலை அருள்பாலிக்க சங்கு சக்கரம் இல்லாத நிலையிலேயே இருக்க வேண்டிக்கொண்டாராம். அவ்வாறே பெருமாளும் ஒப்புக்கொண்டதாக ஐதிகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனாலேயே, இத்தலத்தில் மட்டும் பெருமாளின் சங்கு சக்கரத்தினைக் கருடாழ்வார் தம்மிடத்திலேயே இருத்திக் கொண்டுள்ளார்.
மூலவர் சுதாமூர்த்தி தனது வலக்கரத்தினை சிரசிற்கு அணையளித்து, இடக்கரத்தினைத் தளர்த்தி ஓய்வெடுப்பது போன்ற சயனத் திருக்கோலத்தில் காட்சி தருவது தரிசிக்கப் பரவசமாகும்.

வைணவ சுக்கிரத் தலமாகிய இது நேத்ர தோஷங்களுக்கு (கண்பார்வை) உரிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.