Published:Updated:

`சிவம் எனும் பெருஞ்செல்வம்!'

சாமிநாத குருக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சாமிநாத குருக்கள்

திருத்தொண்டர்கள்

தமிழகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், நீங்கள் அந்தப் பகுதியில் சில கி.மீ தொலைவிலேயே ஒரு புராதன சிவன் கோயிலைக் கண்டடைந்து விடமுடியும். அவற்றில் பல புனரமைக்கப்படாமலும் வழிபாடுகள் இல்லா மலும் இருக்கலாம். ஆனால் ஒரு சில கோயில்கள், இயன்றளவு எடுத்துக் கட்டப் பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதற்குக் காரணம், ஒரு சிலரைத் தம் சேவைக்காகத் தேர்ந்தெடுத்து அவர்கள் மனதோடு பேசும் இறைவனும் அந்த இறைவனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட அடியவர்களும்தான். அப்படிப் பட்ட அடியவர்களில் ஒருவர் சாமிநாத குருக்கள்.

`சிவம் எனும் பெருஞ்செல்வம்!'

கீழப்புளியூர் மிகச் சிறிய கிராமம். திருவாரூரிலிருந்து ஐந்து அல்லது ஆறு கி.மீ தொலைவுதான் இருக்கும். இங்குதான் ஶ்ரீநாகநாதசுவாமி கோயில் கொண்டிருக்கிறார். புராணச் சிறப்பு வாய்ந்த தலம். நாக தோஷம் தீர்க்கும் அற்புதமான பரிகாரத் தலம்.

இங்கு இறைவன் சுயம்புமூர்த்தி. அம்பிகைக்கு புஷ்பவல்லி என்பது திருநாமம். இங்கு தனிச் சந்நிதியில் அருளும் சனிபகவானை வணங் கினால் சனி தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இப்போதுள்ள கோயிலின் கட்டுமானம் மராட்டியர்களால் ஆனது.

மராட்டிய வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நாகதோஷம் ஏற்பட்டு தொடர்ந்து துன்பங்கள் அனுபவித்து வந்தார். பரிகாரங்கள் பல செய்தும் கஷ்டங்கள் நிவர்த்தியாகாமலேயே இருந்தன. ஒருநாள் அவரின் கனவில் ஈசன் தோன்றி இந்தத் தலத்தைக் காட்டி, `இங்கு ஈரத் துணியுடன் வந்து எம்மை வணங்கினால் நாக தோஷங்கள் தீரும்’ என்று அருளி மறைந்தார்.

கண் விழிந்தவர் மறுநாள் இத்தலம் நாடிவந்து இறைவனை வழிபட்டு நாக தோஷம் நீங்கப் பெற்றார். அதற்குப் பலனாக இந்தக் கோயிலை எழுப்பினார்; வழிபாடுகள் சிறப்பாக நடந்தன. ஆனால், தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாமல் தனியாக அமைதியில் உறைந்து நிற்கிறது. சாமிநாத குருக்கள் தினமும் சென்று அந்த அமைதியைக் கொஞ்சம் கலைத்து இறைவனை ஆராதித்துவிட்டு வருகிறார்.

`சிவம் எனும் பெருஞ்செல்வம்!'
`சிவம் எனும் பெருஞ்செல்வம்!'

“இது நாங்க பரம்பரையா பூஜை செய்யுற கோயில். என் தாத்தா பேரு சுந்தர குருக்கள். அவர் இந்தக் கோயிலில் பூஜை பண்றதைப் பார்த்திருக்கிறேன். அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசு. கோயில் புனரமைக்கப்படாமலேயே இருந்தது. இடிஞ்ச கோயில்னே இதுக்குப் பெயர் என்றால் பார்த்துக்கோங் களேன். கோயிலைப் புனரமைத்துக் கொடுக்க ஆள் இல்லாமலேயே இருந்தது.

தாத்தாவுக்கு சாப்பாட்டுக்கு மட்டும் நெல் கூலியாகக் கொடுப்பாங்க. ஆனாலும் விடாமல் சுவாமிக்குப் பூஜை பண்ணினார். அவர் காலமாகும்போது, என் அப்பாக்கிட்டே `எப்படியாவது கோயிலை எடுத்துக் கட்ட முயற்சி செய்’னு சொல்லிட்டுக் காலமாயிட்டார். அப்பா பேரு சோமாஸ்கந்த குருக்கள்.

எங்க குடும்பத்தைப் பற்றி சொல்லணும்னா மொத்தம் 7 பேர். அம்மா பேரு பிச்சம்மாள். இருக்கிறதை வச்சிக்கிட்டு ஆக்கிப்போட்டு எங்களை எல்லாம் வளர்த்தார். எவ்வளவோ கஷ்டம். ஆனா, ஒரு நாள்கூட ஏன்டா இந்த வேலை பாக்குறோம்னு அப்பா புலம்பிக் கேட்டதில்லை. அப்பா, ஊர்க்காரங்களோட தொடர்ந்து பேசி கோயிலைப் புனரமைக்க முயன்றார்.

சுவாமியோட அனுக்கிரகம், சில பெரிய மனிதர்கள் கூடிவந்தாங்க. இப்போ இருக்கிற இந்தக் கோயில் உண்டாச்சு. அதற்குப் பிறகு, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரின்னா ஊர்க்காரங்க வந்து சாமி கும்பிட ஆரம்பிச்சாங்க. இன்னைக்குவரைக்கும் அது தொடருது. வேற வெளியூர்ல இருந்து பக்தர்கள் வருவது ரொம்பவும் குறைச்சல்.

அப்பாவைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அந்த சிரத்தை வந்துவிட்டது. ஆனால், வீட்டோட சூழல்... நாம வேற எங்காவது வேலைக்குப் போனா வீட்டில் ஓர் ஆள் சாப்பாடு மிஞ்சுமேங்கிற எண்ணம். சென்னைக்கு வந்து சில காலம் வேலை பார்த்தேன். ஆனால் ஆத்ம திருப்தி இல்லை. ஏதோ சம்பளம் வந்தது சாப்பாடு கிடைச்சதுன்னு இருந்ததே தவிர மனசுக்குப் பிடிக்கலை.

அப்பா காலமானதுக்கு அப்புறம் ஊருக்கே வர வேண்டியதா போச்சு. அப்பாவுக்குப் பிறகு சுவாமிக்குப் பூஜை செய்ய ஆள் இல்லை. ஒரு கணம் `வெறும் நெல் சம்பளத்துக்காகப் பூஜை பண்ணிக் காலம் தள்ளணுமா’ன்னு தோணித்து. ஆனா எங்க தாத்தா, அப்பா எல்லாம் எப்படி சிரத்தையா பூஜை பண்ணினாங்கன்னு நினைப்பு வந்தது. கோயிலுக்குப் போய் தரிசனம் செய்தேன்.

சுவாமி சந்நிதிக்குப் போனதுமே மனமெல்லாம் ஒரு பரவசம். நிம்மதி. `இதுதான் நமக்கானது... இதை விட்டுட்டு வேற எங்கே போனாலும் இந்த நிம்மதி கிடைக்காது’ன்னு தோணித்து. சுவாமியைப் பிடிச்சுண்டேன். அன்னைலேர்ந்து இன்னைவரைக்கும் என் அப்பா எப்படி பூஜை பண்ணினாரோ, அதேபோல குறைவில்லாம பண்ணிக்கிட்டு இருக்கேன்.

`சிவம் எனும் பெருஞ்செல்வம்!'

முன்னே மாதிரி நெல் கூலி எல்லாம் கிடையாது. இது ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கிற கோயில். அதனால் மாதமான 700 ரூபாய் சம்பளம். எனக்கு இரண்டு பெண்கள். இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தாச்சு. இந்தச் சம்பளத்தில் உலகத்தில் வேறு யாருக்காவது இது சாத்தியமா சொல்லுங்க. எல்லாம் நாகநாத சுவாமியோட கருணை சார்!

கையில் ஒரு பைசா இருக்காது. சுவாமிகிட்ட போய் என்ன வேணும்னு சொல்லிட்டு வந்துடுவேன். வரிசையா ஒவ்வொண்ணா வந்து சேரும். தெரியாத யாரோ ஒருத்தர் வருவாங்க. பொண்ணுக்குக் கல்யாணமாமே புடவை வாங்கிக் தர்றேன்னுவாங்க. மாங்கல்யம் செய்து தரட்டுமான்னுவாங்க. ஆச்சர்யமா இருக்கும்...” இதைச் சொல்லும்போது அவர் கண்களில் நீர் திரண்டது. வார்த்தைகள் வராது திண்டாடினார். அவர் ஆசுவாசம் ஆக அனுமதித்தோம். அதன்பின் அவரே தொடர்ந்தார்.

`சிவம் எனும் பெருஞ்செல்வம்!'

“இந்த நாற்பது வருஷத்தில்... இல்லைன்னு ஒரு நாளும் நான் வருந்தியதே இல்லை. பின்னே மிகப்பெரிய செல்வந்தன் இல்லையா என் சுவாமி. அவர்கூட இருக்கும்போது நாம ஏன் வருத்தப்படணும். பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்யணும்னு ஆசைப்பட்டு எல்லா ஏற்பாடும் செய்தேன். ஆளாளுக்கு ஓர் உபயம் எடுத்துக்கிட்டாங்க. கும்பாபிஷேகம் கோலாகலமா நடந்தது. முடிஞ்சதும் அதில் கலந்துகொண்ட சிவாசார்யர்கள் ஒரு ரூபாய்கூட தட்சிணை வாங்கவில்லை. `காலமெல் லாம் இந்த சுவாமிக்கு சேவை செய்ற பாக்கியம் உங்க குடும்பத்துக்குக் கிடைச்சிருக்கு. நாங்களும் இந்த இரண்டுநாள் சேவை செய்தோம்னு இருக்கட்டும்’னு சொல்லி மறுத்திட்டாங்க.

வேறு கோயில்களில் இதேபோன்று விஸ்தாரமாகக் கும்பாபிஷேகம் செய்தால், குறைந்தது லட்ச ரூபாயாவது கொடுக்க வேண்டியிருக்கும். நானே, பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கலாம்னு கொஞ்சம் பணம் எடுத்து வெச்சிருந்தேன். அவங்க பெருந்தன்மையா அதையும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இதெல்லாம் சுவாமி எல்லோரின் மனதோடு பேசி செய்ற லீலைங்கிறதைத் தவிர வேறு என்ன?

பன்னிரண்டு வருஷமாச்சுன்னு சொன்னேன் இல்லையா... இப்போ மறுபடியும் கும்பாபிஷேகம் செய்யணும். அதுக்கு அரசு அனுமதியில் இருந்து உபயதாரர்கள் வரை கிடைக்கணும். ஆனா, அந்தக் கவலை எல்லாம் பெரிசா இல்லை. ஏன்னா, சுவாமி அதைப் பார்த்துப்பார். சீக்கிரம் கோலாகலமா கும்பாபிஷேகம் நடக்கும்.நீங்க கண்டிப்பா வந்திருந்து கலந்துக்கணும்” என்று புன்னகையோடு சிரித்தார் சோமசுந்தர குருக்கள்.

இந்த உலகில் பலர் எல்லாம் இருந்தும் நிம்மதி இன்றி தவித்து வாழ்கிறார்கள். சாமிநாத குருக்கள் போன்ற திருத்தொண்டர்களோ செல்வம் என்று எதுவும் இல்லை என்றாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். காரணம் அவர் சொன்னதுதான்.

பெருஞ்செல்வம் என்னும் சிவம் அவர்களோடு இருக்கிறது. அது காலத்துக்கும் அவர்களைக் காத்து நிற்கும் என்று தோன்றியது. சீக்கிரம் அவர் சொன்னது பலிக்க வேண்டும் என்று நாமும் ஒருமுறை பிரார்த்தித்துக்கொண்டு விடைபெற்றோம்.

- தொண்டர்கள் வருவார்கள்...