Published:Updated:

படையெடுப்புகளால் சிதைந்தாலும் பேரழகு குறையாத செஞ்சி வெங்கடரமணர் திருக்கோயில்! #Video

செஞ்சி வெங்கடரமணர் கோயில்
News
செஞ்சி வெங்கடரமணர் கோயில்

'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என 'அமர்க்களம்' படத்தில் அஜித் ஒரு கோயிலில் நின்றபடி பாடுவார். அந்தக் கோயில் இப்போதும் ஆரவாரம் இல்லாத தனிமையில் அமைதியாக பக்தி மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. செஞ்சிக் கோட்டையின் ஒரு பகுதியாக இருக்கும் வெங்கடரமணர் கோயில்தான் அது.

கோட்டை கட்டி வாழ்ந்த மன்னர்கள், அந்தக் கோட்டைக்குள் தாங்கள் வழிபடவும், மக்கள் வந்து வேண்டுதல் செய்யவும் நிறைய கோயில்களையும் கட்டி வைத்தார்கள். புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் இருக்கும் செஞ்சி நகரில் தமிழ் மன்னர்கள் கட்டிய பழைமையான கோட்டை இருக்கிறது. இயற்கை தந்த மலைகளும், அவற்றினூடாக அமைந்த மதில்சுவரும், இந்தியாவின் மிகப் பாதுகாப்பான கோட்டையாக இதை மாற்றியது. இந்தக் கோட்டைக்குள் நிறைய கோயில்கள் இருக்கின்றன.

செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை

கோன் அரசர்களும் நாயக்கர்களும் உருவாக்கிய செஞ்சிக் கோட்டையை பிற்காலத்தில் கைப்பற்றி செல்வங்களைச் சூறையாடியவர்கள் ஏராளம். குறிப்பாக கோயில்களில் புகுந்து இங்கிருந்த சிலைகள் பலவற்றையும் பீஜப்பூர் படைகளும் மொகலாயர் படைகளும் உடைத்தன. இதனால் சிவன் கோயில், ரங்கநாதர் கோயில், வேணுகோபால சுவாமி கோயில் என எங்குமே சிலைகளும் இல்லை; வழிபாடுகளும் நடைபெறுவதில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செஞ்சிக் கோட்டைக்குள் இருப்பதிலேயே மிக பிரமாண்டமான கோயிலான வெங்கடரமணர் ஆலயத்தில் மட்டும் நீதிமன்ற உத்தரவோடு வழிபாடு நடக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு முத்தியாலு நாயக்கர் கட்டிய கோயில் இது. 25 அடி உயரத்தில் நெடிதுயர்ந்த மதில் சுவர், கிழக்கு பார்த்த ஏழு நிலை ராஜ கோபுரத்துடன் அழகாகக் காட்சி தருகிறது கோயில். ராஜ கோபுரத்துக்கு வெளியில் ஒற்றைக் கல்லால் செய்யப்பட்ட தீப ஸ்தம்பம் கம்பீரமாக நிற்கிறது. சுற்றிலும் அழகிய மண்டபங்களும் இருக்கின்றன.

ராஜகோபுரத்தின் உட்புறத்தில் அழகிய புடைப்புச் சிற்பங்களாக தசாவதாரக் காட்சிகள் நீள்கின்றன. ராமாயணக் காட்சிகளும் நுணுக்கமான சிற்பங்களாக நம் கண்முன்னே விரிகின்றன. சிவபெருமானின் கயிலாகக் காட்சி, பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் காட்சி, கஜலட்சுமி என இந்த ராஜ கோபுர வாசலின் இருபுறத்திலும் சிற்பக் கண்காட்சி நடத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

ராஜகோபுரத்தை வணங்கிவிட்டு உள்ளே சென்றால், கல்யாண மண்டபம், உற்சவ மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவை இருக்கின்றன. சிறிய உள்கோபுரம் ஒன்று இருக்கிறது. அதில் இருக்கும் சுதைச் சிற்பங்கள், 500 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன.

கருவறையில் திருமகள், நிலமகளுடன் திருவேங்கடமுடையான் நமக்கு அருள் பாலிக்கிறார். உட்பிராகாரச் சுற்றில் நரசிம்மர், ஆண்டாள் மற்றும் தாயார் சந்நதிகள் அமைந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெங்கடரமணர் ஆலயத்தின் திருவாராதனை, பூஜை மற்றும் திருத்தேர் உலா போன்ற நியமங்களுக்காக 11 கிராமங்களை நாயக்க மன்னர்கள் நிவந்தமாக வழங்கியதற்கு கல்வெட்டு இருக்கிறது. செஞ்சி வாரச்சந்தையின் வருமானமும் கோயிலுக்கு வந்துகொண்டிருந்தது. காலப்போக்கில் அந்த வழக்கங்கள் காணாமல் போய்விட்டன, கோயிலில் தேரும் இல்லை. இந்தக் கோயிலில் இருந்த தேர் மண்டபம் பிற்காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு மேல் சித்தாமூர் என்ற ஊரில் இருக்கும் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. கோயிலை அழகுறக் கட்டிய நாயக்க மன்னர்களின் சிலைகளும் சிதைந்த கோலத்தில் கோயிலுக்குள் இருக்கின்றன.

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின்போது வெங்கடரமணர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த அழகிய சிற்பத் தூண்களை பாண்டிச்சேரிக்கு எடுத்துச் சென்றனர். பிரெஞ்சு ஆளுநராக இருந்த டூப்ளே சிலை அருகே அவற்றை நிறுவினர். இன்று புதுவை கடற்கரையில் காந்தி சிலை, நேரு சிலை அருகே நிற்கும் ஒரே கல்லால் ஆன பிரமாண்டத் தூண்களும், பாரதி பூங்காவில் இருக்கும் சிற்பப் பொக்கிஷங்களும் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவைதான்.

செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை

செஞ்சி நகர மக்களின் முயற்சியால் கடந்த 2014ம் ஆண்டு முதல் வெங்கடரமணர் கோயிலில் வழிபாடு நடைபெற்று வருகிறது. தினசரி வழிபாடுகளுடன், பிரதி சனிக்கிழமை விசேஷ வழிபாடும் நடைபெறுகிறது. புத்தாண்டு, மாசிமகம், மார்கழி உற்சவம் இங்கு விசேஷம்.

செஞ்சிக்கோட்டை தினமும் மாலை ஐந்து மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால், பகல் நேரத்தில் மட்டுமே வெங்கடரமணரை தரிசிக்க முடியும்.