கிறிஸ்தவ தேவாலயங்கள் என்றால் மேற்கத்திய பாணியில் கட்டிய கட்டுமானங்களே நம் நினைவுக்கு வரும். ஆனால் திருப்பத்தூர் மாவட்டம் ஜோதிமங்கலம் என்னும் கிராமத்தில் உள்ள ஓர் கிறிஸ்துகுல ஆசிரமம் எனப்படும் தேவாலயம் நம் மண்ணின் கோயில்களைப் போலவே கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த ஆலயம் இப்படிக் கட்டப்பட்டிருக்கிறது? இதைக் கட்டியவர் யார் என்னும் கேள்விகளுக்கு விடை தேடியபோது பெரியண்ணன் சின்னண்ணன் பற்றிய பல சுவையான வரலாற்றுத்தகவல்கள் கிடைத்தன.
குற்றாலத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஏசுதாசன் என்பவர்தான் 'பெரியண்ணன். இவர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பிற்காக ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ளார். ஸ்காட்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட எர்னஸ்ட் போர்ரேச்ட்டர் பேட்டன் என்பவரை அங்கு சந்தித்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இங்கு சின்னண்ணன் என்று குறிப்பிடப்படுபவரும் அவர்தான். இவர்கள் இருவருக்கும் நண்பர்களாகப் பழகி வந்தனர். இருவரும் FRCS (Fellowship of the Royal Colleges of Surgeons) என்னும் அறுவை சிகிச்சை படிப்பை முடித்துவிட்டு தங்களது வாழ்க்கையை முழுமையாக மக்களுக்கும் இறைவனுக்கும் அர்ப்பணித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து திருமணம் செய்து கொள்ளாமல் அனைத்து ஆசைகளையும் துறந்து மக்களுக்குச் சேவையாற்ற தமிழக வந்தனர். அப்போது நம் நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது.
வேலூர் மாவட்டத்திலிருந்த திருப்பத்தூருக்கு வந்த அவர்கள் அங்கிருக்கும் மக்களின் வறுமையைக் கண்டு வருந்தினர். சுமார் 100 ஏக்கர் நிலத்தை ஜமீன்தாரிடம் வாங்கியுள்ளனர். சின்ன அண்ணன், பிறப்பிலேயே செல்வந்தர். அவருக்குச் சொந்தமாக 15 கப்பல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. வாங்கிய 100 ஏக்கர் நிலத்தில் அப்பகுதியில் ஜமீன்தாருக்கு அடிமைகளாக இருந்த ஏழைகளுக்கு இலவசமாக நிலத்தைக் கொடுத்துள்ளனர் இருவரும். அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கான கால்நடைகளை இலவசமாக மக்களுக்குக் கொடுத்துள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் பால் மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து கொண்டுவரப்படும் பிஸ்கட்களையும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைவரும் இலவசமாகக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்கள் பசிப்பிணி ஆற்றியுள்ளனர்.
மக்களுக்குத் தானமாகக் கொடுத்த நிலம் போக எஞ்சிய நிலத்தில் கண் மருத்துவமனை ஒன்றையும் கட்டியுள்ளனர். அதற்கு 'அமெரிக்கா மருத்துவமனை' என்ற பெயர் வைத்து அங்கு வரும் மக்களுக்கு இலவசமாகவே கண் அறுவை சிகிச்சையைச் செய்துள்ளனர். இன்றளவும் அம்மருத்துவமனையில் குறைவான விலையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கே ஓர் ஜெப ஆலயம் ஒன்றைக் கட்ட முடிவு செய்தனர். அப்போது ஆங்கிலேயர்களை எதிர்த்து மக்கள் போராடிக் கொண்டிருந்த காலம் என்பதால் மக்கள் தங்களையும் ஆங்கிலேயர்கள் எனத் தவறாக எண்ணி விடக்கூடாது என்று நம் தமிழர்களின் கட்டிடக் கலை பாணியிலேயெ ஜெபாலயம் ஒன்றைக் கட்டி மக்களுடன் ஒன்றி வாழதிட்டமிட்டனர்.

இதற்காக 17.2.1928 அன்று அதற்கான அடிக்கல் நாட்டி உள்ளனர். இதற்கென கைதேர்ந்த கலைஞர்களை அழைத்து வந்து யானைகளின் பலத்தாலும் மக்களின் உழைப்பாலும் சுமார் 5 ஆண்டுகள் பார்த்துப் பார்த்து வடிவமைத்து கோபுரங்களைக் கட்டி 9.6.1933 அன்று வேலைகளை முடித்துள்ளனர். இந்த ஜெபாலயம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில் இன்றளவும் ஒரு சேதம் கூட ஏற்படாமல் கம்பீரமாக நிற்கிறது.
இந்த ஜெபாலயத்தின் பொதுச்செயலர் கிறிஸ்டோபரிடம் பேசினோம்.
"சின்னண்ணன், பெரியண்னன் இருவரும் மக்களோடு இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடியுள்ளனர். அதனால் இவர்கள் வேலூர் சிறைக்கும் சென்றிருக்கிறார்கள். இவர்களின் செயல்களை அறிந்த மகாத்மா காந்தி இங்கு வந்து மூன்று நாள்கள் தங்கியிருந்தார். இவர்கள் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் மீது பல புகார்கள் கொடுத்த போதும் ஆங்கிலேயர்களே இவர்களைப் பார்த்து வியந்தனர். இந்த ஆலயத்தில் இருக்கும் மணியை அடித்தால் சுமார் ஐந்து கி.மீ தூரத்திற்குக் கேட்கும். இன்றளவும் சாதி, மதம், இனம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் இந்த ஆலயத்திற்கு வந்து மனநிம்மதி பெறுகின்றனர். இந்தக் கட்டிடக் கலையைப் பார்த்து வியக்கின்றனர். தற்பொழுது இந்த ஆசிரமத்தில் பழங்குடியின மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்" என்றார்.

பெரிய அண்ணனான ஏசுதாசன் மற்றும் சின்ன அண்ணனான எர்னஸ்ட் போர்ரேச்ட்டர் பேட்டன் ஆகிய இருவரின் உடலும் ஆலயத்திற்குப் பின்புறத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு கல்லறையும் கட்டப்பட்டுள்ளது.
தியாகத்தாலும் செயலாலும் இன்றளவும் அப்பகுதி மக்களின் மனதில் பெரியண்ணன் சின்னண்ணன் என்று நிலைத்து நிற்கின்றனர்.