Published:Updated:

அம்பாள் தந்த எலுமிச்சை!

காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதம்!

பிரீமியம் ஸ்டோரி

`புவனேஷ்! இன்னைக்கு அலங்காரம் அபாரமா இருக்கே’ என்று சக அர்ச்சகர் சொன்னபோதுதான் புவனேஷ் அதைக் கவனித்தான். வழக்கத்தைவிட அலங்கார ரூபிணியாக ஜொலித்தாள் அம்பிகை. அவளின் திருமுகத்தில் பூரணச் சந்திரனை மிஞ்சும் பொலிவு!

காளிகாம்பாள்
காளிகாம்பாள்

‘அம்மா! இந்த அலங்காரம் செய்தது நான்தானா... இல்லை நீயே என் கைகளைக் கொண்டு உன்னை அலங்கரித்துக் கொண்டாயா... காலையிலிருந்து என் மனம், என்ன செய்தோம்... என்ன செய்கிறோம்... என்ற தெளிவில்லாமல் திண்டாடுகிறது. இதில் எப்படி இவ்வளவு அற்புதமாய் அமைந்தது உன் அலங்காரம்...’

புவனேஷ் குழம்பியிருந்தான். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. எதையும் உண்ணவில்லை. சிறுநீரகக் கோளாறு அதிகரித்து உபாதைகள் அனுபவிக்கிறார். இதில் நேற்றிலிருந்து உடல் கழிவுகள் வேறு வெளியேறவில்லை; தவிக்கிறார்.

ஆஸ்பத்திரிக்கு எத்தனை முறை அழைத்துப்போனாலும் ஒரு வாரம் பிரச்னை இருக்காது. மீண்டும் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். பிரியமானவர்களை ஊசிகளால் துளைத்து மருந்துகளால் துன்புற வைப்பதைப் பார்ப்பதைப் போன்ற துயரம் வேறு எதுவும் இல்லை.

‘அம்மா, இதுக்கு முடிவேயில்லையா’ என்று மனம் கதறியது. இவ்வளவு மனக்குமுறல்கள் உள்ளுக்குள் இருந்தாலும்... அம்பிகைக்கான பணியில் மட்டும் குறையே இருக்காது. இப்போதும் அப்படித்தான் மிக அற்புதமாய் நிறைந்திருந்தது அம்பாள் அலங்காரம்.

அம்பாள் தந்த எலுமிச்சை!

புவனேஷ் மலர்கூடையைத் தன் பக்கம் இழுத்தான். கொத்து மலர்களைக் கைகளில் அள்ளினான்.

`ஓம் பைரவ்யை நம:
ஓம் பைரவாராத்யாயை நம:
ஓம் பூதிதாயை நம:
ஓம் பூதபாவனாயை நம:’

உதடுகள் மந்திரத்தை அனிச்சையாய் உச்சரிக்க மலர்களால் அர்ச்சித்தான் புவனேஷ். ஆனால் மனமோ அப்பாவின் மீதே இருந்தது.

`அம்மா! உன் காரியங்களை நீ எப்படியோ நிறைவேற்றிக் கொள்கிறாய். நாங்கள் அற்பர்கள். நினைவு பிசகிவிட்டால் எங்கள் வேலைகளை எங்களால் சரிவரச் செய்ய முடியவில்லை. நீ அல்லவா எங்களை வழிநடத்த வேண்டும்...’ பிரார்த்தனையும் உள்ளுக்குள் ஓட மந்திர அர்ச்சனை தொடர்ந்தது....

`ஓம் மோஹின்யை நம:
ஓம் மாலதி மாலாயை நம:
ஓம் மஹாபாதகநாசின்யை நம:
ஓம் க்ரோதின்யை நம:’


‘எவ்வளவு கஷ்டப்படுறார் பார்... வீட்டிலேயே வச்சிண்டுருக்கியே...ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போயேன்’

‘ஏதாவது ஜூஸ் போட்டுக் கொடுத்துப் பாருங்களேன்... இப்படித் தான் என் பாட்டிக்கு...’

நாலாபக்கமும் இருந்து ஆலோசனைகள் குவிந்த வண்ணம் இருக்கிறதே... நான் என்ன செய்வது? இன்று எதுவும் முடியாவிட்டால் ஆஸ்பத்திரிக்குதான் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்.

பழங்கள்... ஏதேனும் ஜூஸ் போட்டுத் தந்து பார்க்க வேண்டும். ஆனால் வீடெங்கும் தேடும்போது ஒரு பழம்கூடக் கண்ணில் படவில்லை. பெருந்தொற்று கட்டுப்பாட்டுக் காலம் வேறு... வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை!

சே... என்ன மனம் இது... இந்த உலகில் யாருக்கும் கிடைக்காத உன்னதமான சந்நிதியில் நின்றுகொண்டு எவ்வளவு அற்பமாகப் பழங்களைப் பற்றி நினைக்கிறது மனம்... அம்மா! இந்த மனதைக் கொஞ்சம் ஆற்றுப்படுத்தி, உன் வழிபாட்டில் ஆனந்தப்படுத்தேன்.

புவனேஷ் கண்கள் கசிய மலர்களை அள்ளி அன்னையின் திருமேனி மீது போட்டான். அலைக்கழியும் மனதை உறுதியாய் ஒரு நிலையில் நிறுத்த, மந்திரங்களை சத்தமாக உச்சாடனம் செய்ய ஆரம்பித்தான். அன்னையின் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டே உன்மத்தம் வந்தவன் போல அர்ச்சித்தான்.

அம்பாள் தந்த எலுமிச்சை!

சட்டென்று ஒரு கணம்... கூடைக்குள் கைவிட்டு அள்ளி அதிவேக மாக எடுத்தவனின் கை கொஞ்சம் நிதானமானது. எடுத்தது மலர்போல கை உணரவில்லை. நிதானித்து அதைப் பார்த்தான். தீப ஒளியில் ஒளிரும் அம்பிகையின் மஞ்சள் முகம்போன்ற ஓர் எலுமிச்சை. வழக்கமான எலுமிச்சைப் பழத்தைவிடப் பெரிய அளவிலான பழம். இது எப்படி இந்த மலர்க்கூடைக்குள் வந்தது. காலியாய் இருந்த கூடையில் மலர்களை வாங்கிக் கொட்டிக்கொண்டது அவன்தான். அப்போது இல்லாத எலுமிச்சை இப்போது எங்கிருந்து வந்தது?

`அம்மா! பழம் பழம் என்று புலம்புகிறானே என்று பழம் தந்து விட்டாயா... இது என்ன அற்புதமா... இல்லை திருவிளையாடலா... கேலியா...’

அன்னையின் செயலை ஆராய்கிற தகுதி இருக்கிறதா என்ன என்று எண்ணியபடி பழத்தை அன்னையில் திருவடியில் சமர்ப்பித்தான். சொல்ல வேண்டிய மந்திரங்களைச் சொல்லி பூஜையை முடித்தான். பின்பு அன்னையின் திருவடியை வணங்கிப் பழத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

அப்பாவுக்கு எலுமிச்சைச் சாறு பிழிந்து தந்தான். அடுத்த சில நிமிடங்களில் அப்பா, தன் உபாதை நீங்கினார். அதன்பின் அவர் அம்பாளின் திருவடி சேர்கிற வரைக்கும் அவருக்கு அந்த உபாதை வரவேயில்லை. எல்லாம் அந்த காளிகாம்பாளின் திருவருள்!

அம்பாள் தந்த எலுமிச்சை!

ஆம்! காளிகாம்பாள்... சென்னை மண்ணடியில் கோயில் கொண்டிருக்கும் ஆதிதெய்வம். இந்த நிலத்தின் பூர்வகுடிகள் ஆராதித்து வழிபாடுகள் செய்து, போற்றி வணங்கிய தேவி. அவளின் அற்புதங்களுக்கு எல்லையே இல்லை. இன்றும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்குப் பல அற்புதங்களைச் செய்து அருள்பாலிப்பவள் இந்த அம்பிகை.

இந்த அம்பிகையின் ஆலயத்தில்தான் புவனேஷ் அர்ச்சகராக திருத்தொண்டு புரிகிறார். அம்பிகை அவருக்குப் புரிந்த அற்புதங்களில் ஒன்றாக இதை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அதுவே இக்கதையாக மலர்ந்தது. காளிகாம்பாள் கலியுகத்திலும் பிரத்யட்சமாய் அருளும் அன்னை. வாருங்கள், வாய்ப்புக்கிடைக்கும்போது காளிகாம்பாளை தரிசனம் செய்து வணங்கி அருள்பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு