Published:Updated:

ஆலங்குளம் ராமர் மலைக்கோயில் அதிசயங்கள்: ராமபிரான் ஒற்றைக்காலில் நின்று சீதையைத் தேடிய அதிசய மலை!

ராமர் மலைக்கோயில்

பொதுவாக மலைமேல் முருகன் கோயில்தான் அமைந்திருக்கும். ஆனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தில் ஒக்க நின்றான் மலை மீது ராமர் கோயில் அமைந்துள்ளது. நாம் வழிபடும் எல்லாக் கடவுளருமே இந்தக் கோயிலில் அமைந்துள்ளது விசேஷம்.

ஆலங்குளம் ராமர் மலைக்கோயில் அதிசயங்கள்: ராமபிரான் ஒற்றைக்காலில் நின்று சீதையைத் தேடிய அதிசய மலை!

பொதுவாக மலைமேல் முருகன் கோயில்தான் அமைந்திருக்கும். ஆனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தில் ஒக்க நின்றான் மலை மீது ராமர் கோயில் அமைந்துள்ளது. நாம் வழிபடும் எல்லாக் கடவுளருமே இந்தக் கோயிலில் அமைந்துள்ளது விசேஷம்.

Published:Updated:
ராமர் மலைக்கோயில்
ராமாயணத்தில் அனுமன் சிரஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் போது விழுந்த ஒரு பகுதிதான் இந்த `ஒக்க நின்றான் மலை' என்பர். போகர் சித்தர் எழுதிய குறிப்புகளிலும் இந்த மலையிலுள்ள அதிசயங்கள், மூலிகைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.
ஒக்க நின்றான் மலை
ஒக்க நின்றான் மலை

ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திச் சென்ற பிறகு ராமர், லட்சுமணன், அனுமன் மற்றும் வானரப் படைகளோடு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தங்கி சீதையைத் தேடியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதற்குச் சான்றாக இந்த ஒக்க நின்றான் மலையும் அதைச் சுற்றியுள்ள மாயமான் குறிச்சி, குத்தபாஞ்சான், சீதைக்குறிச்சி ஆகிய கிராமங்களும் விளங்குகின்றன. சீதையைத் தேடுவதற்காக ராமர் இந்த மலையின் மீது ஏறி ஒற்றைக் காலில் ஒக்கி நின்று பார்த்ததால் இந்த மலைக்கு, 'ஒக்க நின்றான் மலை' எனப் பெயர் வந்தது என்பர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பாற்கடல்
திருப்பாற்கடல்

ஒருமுறை சீதா தேவியும் ராமபிரானும் பேசிக் கொண்டிருக்கும்போது சீதாதேவி துள்ளிக்குடித்து ஓடும் மானை பார்த்து ரசிக்க, ராமபிரான் அதைப் பிடித்து வரச் சென்றார். அப்போது மான் குத்தரை (குப்புற) பாய்ந்து ஓடியது, இதனால் இந்த ஊருக்கு, 'குத்தபாஞ்சான்' எனவும், பிறகு ஒரு பகுதியில் மான் மாயமாகிப் போனது, அந்தப் பகுதி, 'மாயமான் குறிச்சி' எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு பல புராணப் பின்னணிகள் கொண்டது இந்த மலை. மலைப்பாதை கரடு முரடாக இருப்பதால் அனைவரும் தரிசிக்கும் வகையில் மலையின் அடிவாரத்தில் ராமபிரான் சீதாதேவி ஆலயம், அனுமன் சிலை அமைந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மேலும் இங்கு ஐயப்ப சுவாமி, சிவன் - பார்வதி, விநாயகர் பிருந்தாவனக் கண்ணன், கடன் தொல்லை தீர்க்கும் வால்கோட்டை ஆஞ்சநேயர், தென்பழநி முருகன், செந்தாமரைக் குளத்தில் மகாலட்சுமி சிலை எனப் பல சந்நிதிகள் அமைந்துள்ளன. தென் தமிழகத்திலேயே திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்து இங்குதான் திருப்பாற்கடல் அமைந்துள்ளது. திருப்பாற்கடலில் ஏழு சொர்க்க வாசல் தாண்டி ஸ்ரீலட்சுமியோடு நாராயணன் காட்சியளிக்கிறார்.
சூரியநாராயணர்
சூரியநாராயணர்

நுழைவு வாயிலின் இரு புறத்திலும் இரண்டு பெரும் யானைகள் வரவேற்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பாற்கடலில் ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் சூரியநாராயணர், 16 அடி உயர விஸ்வ பிரம்மா சிலை, குரு வசிஷ்டர், அகத்திய முனிகள், கருடர், ஸ்ரீ கௌதமர், ஸ்ரீ பரத்வாஜர், ஹயக்ரீவர், வேதநாராயணர், விநாயகர், சரஸ்வதி, சப்தரிஷி சிலை மற்றும் பசு சிலைகளும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் திருப்பாற்கடலைச் சுற்றி வரும்போது சில்லறைகளைத் திருப்பாற்கடலில் போட்டு வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபட்டால் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதிகம்.

சீதா தெப்பம்: இலங்கையில் போர் முடிந்து சீதா தேவியோடு ராமர் அயோத்தி செல்லும்போது சீதாதேவி அருந்த நீர் வேண்டும் எனக் கேட்க, ராமபிரான் நீர் கொண்டு வந்து கொடுக்கும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேயர் சிலைகளும், விலங்குகள் மற்றும் பறவைகள் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சீதா தெப்பம்
சீதா தெப்பம்
பிருந்தா வனக்கண்ணன்
பிருந்தா வனக்கண்ணன்

பிருந்தாவனக் கண்ணன்: கண்ணனைக் "கோபியர் கொஞ்சும் ரமணா" என்பார்கள். அதுபோல கோபியர்களோடும் பசுக்களோடும் புல்லாங்குழல் வைத்துக்கொண்டு குளத்தில் காட்சியளிக்கிறார் பிருந்தாவன கண்ணன். மேலும் 120 அடி உயரம் கொண்ட வீர அனுமார் சிலையும் அமைக்கப்பட உள்ளதாகக் கோயில் நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். மலை மீது ராமபிரான் சீதாதேவி ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமணனுடனும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையோடும் காட்சியளிக்கிறார்கள். மேலும் சிவபெருமான் லிங்க வடிவிலும் காட்சியளிக்கிறார். மலைமீது ஏறியவுடன் விநாயகரை வணங்கிவிட்டு ஸ்ரீ கருப்பசாமி கோயில், கங்கை அம்மன் கோயில், இசக்கியம்மன் கோயில் பேச்சியம்மன், நாகராஜன், சித்திரபுத்திர நாயனார், காவல் தெய்வங்கள், நவகிரகங்கள் என அனைத்துக் கடவுளையும் சுற்றி வணங்கி விட்டு சீதாராமரையும் வள்ளி தெய்வானையோடு முருகரையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

ராமர் சந்நிதிக்கு எதிர்புறமாக புதிதாக ராமரை வணங்குவது போல் ஓர் ஆஞ்சநேயர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இங்கு வந்து வணங்கிவிட்டு தியானம் செய்கிறார்கள். இயற்கையான காற்றும் மூலிகை வாசமும் நிறைந்துள்ளதால் தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக ஒக்க நின்றான் மலை ராமர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். முழு நேரமும் அன்னதானமும் வழங்கப்படும்.

ராமர் மலைக்கோயில்
ராமர் மலைக்கோயில்
சப்பரம் தூக்குதல், புஷ்பாஞ்சலி, பூத்தேர் வலம் வருதல், முளைப்பாரி, திருவிளக்கு பூஜை, ராமாயணப் பாராயணம் செய்தல், வில்லிசை, கும்மி அடித்தல், உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் திருவிழாவில் நடைபெறுவது வழக்கம். திருவிழாவைக் காண முந்தைய நாளிலேயே குடும்பத்தாரோடு சிலர் மலைமீது தங்கி தரிசனம் செய்கின்றனர். மற்ற மலைக் கோயில்களில் இருப்பது போல் படிகளும் சுற்றுக்கம்பிகளும் இல்லை என்றாலும் மலை ராமரைக் காண பக்தர்கள் படை பெருகிக் கொண்டே வருவதுதான் இங்கு சிறப்பு என்கிறார்கள் ஊர் மக்கள்.