Published:Updated:

`ஆலமரத்தில் தொட்டில் கட்டினால்...'

தீக்குதித்த அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
தீக்குதித்த அம்மன்

தாமரங்கோட்டை தீக்குதித்த அம்மன்

`ஆலமரத்தில் தொட்டில் கட்டினால்...'

தாமரங்கோட்டை தீக்குதித்த அம்மன்

Published:Updated:
தீக்குதித்த அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
தீக்குதித்த அம்மன்

`பொறப்பும் இறப்பும் மனுஷனால தேர்ந்தெடுக்க முடியாது'ன்னு பெரியவங்க சொல்வாங்க. இந்த ஊருல, இந்தக் குலத்துல, இவங்களுக்குப் புள்ளையா பொறக்கணும்னு யாரும் தீர்மானம் பண்ணிப் பொறக்க முடியாது. பெத்தவங்களும், ஊரும், பேரும் தானா அமையுறது.

வளர வளரத்தான் மனுஷன் தனக்குன்னு ஓர் இஷ்டத்தை உருவாக்கிக்கிறான். தெய்வ வணக்கமும் அப்படித்தான். வளர்ந்த பிறகு இஷ்ட தெய்வமா ஆயிரம் தெய்வங்களை வணங்கினாலும், மனுஷங்க பொறக்கும்போதே காவலா இருப்பது - குடும்பத்தின் சாமியாய் அமைவது அவரவர் குலதெய்வம்தான்.

`ஆலமரத்தில் தொட்டில் கட்டினால்...'

பெத்தவங்க எப்படியோ அப்படித்தான் குலதெய்வமும். உலகத்துல எங்க போனாலும் வருஷத்துக்கொரு தரமாவது வந்து பார்க்கலைன்னா, எப்படித் தாயும் தகப்பனும் ஏங்கிப் போவாங்களோ அப்படி ஏங்கிப் போகிற சாமி உண்டுன்னா, அது குலதெய்வம் தான். எங்க இருந்தாலும் ஒரு விளக்கேத்தி மனசால நினைச்சு வேண்டிக்கிட்டா, கூடவேயிருந்து காக்கும் குலதெய்வத்தைக் கொண்டாடுவது நம்ம கடமை.

தஞ்சாவூர் மாவட்டம் - தாமரங்கோட்டை, வயலும் வாய்க்காலுமா செழிச்ச பூமி. இங்க சிவனுக்கு ஒரு கோயில் இருக்கு. ராமரே இங்க வந்து சிவனை வழிபட்டாருன்னு சொல்லு வாங்க. அதனால் ஊர்க்காரங்க பலருக்கும் இஷ்டதெய்வம் சிவபெருமான்தான். ஆனா குலதெய்வம் தீக்குதித்த அம்மன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஆலமரத்தில் தொட்டில் கட்டினால்...'

ஊருக்கு வெளியில சாலை ஓரத்துல ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்துக்குக் கீழதான் தீக்குதித்த அம்மா குடியிருக்கா. அம்மான்னு சொன்னா அதுக்கு மறுபொருள் கிடையாது. தன் மக்கள் படுற பாட்டைப் பொறுக்கவே மாட்டா. அவ சந்நிதில சொல்லி முறையிட்டா அதைத் தீர்க்காம இருக்கவே மாட்டா. இந்தத் தாயி இந்த ஊருல கோயில்கொண்டு 300 வருஷமாச்சுன்னு சொல்றாங்க.

அந்தக் காலத்துல இங்க விவசாயம் பண்ணின ஒரு தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதைப் பார்த்த உடனேயே அது தெய்வப் பிறப்போன்னு தோணுச்சி. அவ்வளவு தேஜஸ். அது சிரிக்கிற சிரிப்புல ஊரே மயங்கிப்போகும். மத்த பிள்ளைகள் மாதிரி அமக்களம் பண்ணாம நல்லத்தனமா இருந்ததால அந்தப் பிள்ளைக்கு நல்லம்மாள் என்றே பேரு வச்சிட்டாங்க.

நட்டுவச்ச நாத்து நெடுநெடுன்னு வளர்றது போல நல்லம்மாள் நாளுக்குநாள் தங்க விக்ரகம் மாதிரி வளர ஆரம்பிச்சா. அழகா இருக்கோமுன்னு கர்வம் கிடையாது. சாமிமேல அப்படியொரு பக்தி. வீட்டு வேல செஞ்சாலும் வயல் வேலை செஞ்சாலும் அவ மனசுல சாமி நினைப்புதான்.

`ஆலமரத்தில் தொட்டில் கட்டினால்...'

பொம்பளப் பிள்ளையை எத்தனை காலத்துக்குப் பொறந்த வீட்டுலயே வெச்சிக்க முடியும்... அப்பனும் ஆத்தாளும் நல்ல வரன் தேட ஆரம்பிச்சாக. ஆனா நல்லம்மாளுக்கோ கல்யாணம் கட்டிக்கிட்டுக் குடும்பம் நடத்துறதுல விருப்பம் இல்லை. அவதான் சாமி நினைப்போட வாழ்றவளாச்சே. ஆனா, பெத்தவங்க மனசு கேக்குமா. நல்ல இடமா பார்த்து கட்டி வெச்சாங்க.

பூவோட சேர்ந்து நாரும் மணக்கிறதைப் போல, நல்லம்மாளோட புருஷனும் பக்திமானாயிட்டான். நல்லம்மாளை அவ விருப்பத்துக்கு விட்டுட்டான். அவளும் பூஜை, புனஸ்காரம்னுட்டு இருந்தா. அதுக்காக புருஷனுக்குச் செய்ற சேவைகள்ல குறை வைக்கலை. 25 வருஷம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையப் பாத்து யார் கண்ணு பட்டதோ, அவ புருஷன் ஒருநாள் திடீர்னு நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு விழுந்து காலமாயிட்டான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனுஷ வாழ்க்கைல சாவுங்கிறது தவிர்க்க முடியாததுன்னு புரியாதவ இல்ல நல்லம்மா. ஆனா, புள்ளைகள்கூட இல்லாம தனக்காகவே வாழ்ந்து செத்த அந்த நல்ல மனுஷனுக்குத் தானே இறுதிக் காரியங்களைச் செய்யணும்னு உறவுகள்கிட்ட சொன்னா.

பெண்கள் கடைசிக் காரியம் செய்றது நம்ம வம்சத்துல வழக்கம் இல்லைம்மா. அதனால நாங்களே செய்துக்கறோம்னு ஊர் சனம் மறுத்துச்சு. ஆனா, அவ பிடிவாதமா இருந்தா.

ஊருக்கு வெளில சுடுகாடு. பக்கத்துலேயே பெரிய மாமரம். அந்த மாமரம் பக்கமா நல்லம்மா வந்துடக் கூடாதுன்னு ஏற்பாடு செஞ்சி வச்சி, அவ புருஷனோட காரியங்களை ஆரம்பிச்சாங்க. ஆனா, நல்லம்மா அங்க வந்தா. கையில தீப்பந்தத்தோட பட்டுச் சேலை கட்டிக்கிட்டு பூவும் பொட்டுமா அங்க வந்த நல்லம்மாளைப் பார்க்கையில் எல்லைக் காளி மாதிரியே இருந்துச்சு ஊர் சனத்துக்கு.

அவளை மாமரத்துக்கு முன்னாடியே தடுத்து நிறுத்தினாங்க. நல்லம்மாள் திரும்பவும் தன் கருத்தை அழுத்தமா சொன்னா.

அப்போ ஊர்த் தலைவரு, ``அம்மா, நீ பதிவிரதை. நீ சொல்ற தைத் தடுக்கிற சக்தி எங்களுக்கு இல்லை. அந்த ஆண்டவனுக்குத் தான் உண்டு. நீ இந்த மாமரத்துக்கிட்ட உன் விண்ணப்பத்தைச் சொல்லு. அது வழிவிட்டா நீ போகலாம்'' என்றார்.

நல்லம்மா மாமரத்துக்கிட்டப்போய் நின்னு வேண்டினா. அடுத்த நிமிஷம் மாமரம் இரண்டாகப் பிளந்து வழிவிட்டது.

`ஆலமரத்தில் தொட்டில் கட்டினால்...'

இந்த அதிசயத்தைப் பார்த்த பின்னால் யாரு அவளைத் தடுப்பா... அவ நேரா தன் புருஷன் உடல் இருந்த சிதைக்குப் பக்கத்துல போய் நின்னு கும்பிட்டா. பின்னாடி மூணு தரம் வலம் வந்தா. பின்பு தீப்பந்தத்தால தீ மூட்டினா. அவ நின்ன கோலத்தைப் பார்த்து ஊரே மிரண்டுபோய் நின்னது.

அவளோ, நிதானமா பேசினா. ``யாரும் கிட்ட வராதீங்க. இந்தப் பிறவியோட பயன் முடிஞ்சுபோச்சு. ஆனா, நான் எங்கேயும் போகமாட்டேன். இங்கேயே தெய்வமாநின்னு உங்க வம்சாவளிகளைக் காப்பாத்துவேன்''னு சொல்லிட்டுத் தன் புருஷன் சிதைக்குள்ள, எந்த முக வாட்டமும் இல்லாம சிரித்தபடியே புகுந்தாள்.

இதைப் பார்த்த ஊர்சனம் அப்படியே திகைச்சுப்போச்சு. அந்த இடத்துலையே விழுந்து கும்பிட்டுட்டு, அதிசயத்தைப் பற்றி பேசிக்கிட்டே ஊருவந்து சேர்ந்தாங்க.

மறுநாள், சிதை இருந்த இடத்துல, நல்லம்மாள் கட்டியிருந்த புடவையோட ஒரு பகுதி எரியாம புதுசுபோல கிடந்தது. அதுவும் தெய்வ சங்கல்ப்பமேன்னு நினைச்சுக்கிட்டு அதை எடுத்து இரண்டாப் பிளந்திருந்த மாமரத்தின் அடிப்பகுதியைச் சுற்றிக் கட்டி அந்த மரத்தையே அம்மனாக நினைச்சு வழிபட ஆரம்பிச்சாங்க. அன்னைல இருந்து தீக்குதித்த நல்லம்மாள், ஊரோட குலதெய்வமா விளங்கினாள். காலப்போக்கில அங்க ஓர் ஆலமரம் முளைச்சது. அது மாமரத்தைச் சேர்த்து மூடுறமாதிரி 20 அடி சுத்தளவுக்கு பிரமாண்டமா வளர்ந்திருச்சி.

அந்த மரத்தின் அடியிலேயே அம்மனுக்குச் சிலை வச்சி வழிபடலாம்னு ஊர் சனம் முடிவுக்கு வந்தது. அதுதான் இப்போ இருக்கிற தீக்குதிச்ச அம்மன் கோயில். இந்த ஊர் சனம் மட்டுமல்ல, சுத்தியிருக்கிற ஊர்க்காரங்க எல்லாம் வந்து இந்த அம்மாவை வணங்கிட்டுப் போறாங்க. பெத்த தாயாக இந்த அம்மா தங்களோட பிரச்னைகளை விரைவில் தீர்த்துவைப்பாள் என்பது அவங்களோட நம்பிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிள்ளை வரம் வேண்டும் பெண்கள் சின்னதாக மரத்தொட்டிலை வாங்கி வந்து, அதுல குழந்தை பொம்மை வச்சு இந்த ஆலமரத்துல கட்டி ஆட விட்டா, அவங்களுக்கு அடுத்த வருஷமே குழந்தை பிறந்து வீட்டுல தொட்டில் ஆடும் என்பது நம்பிக்கை.

அதேமாதிரி, ஜாதக தோஷத்தால திருமணம் தடைப்பட்டுக்கிட்டே இருக்கிறவங்க, இங்க வந்து மஞ்சள் கயிறு, வளையல், ரிப்பன் வாங்கி ஆலமரத்துல கட்டினால், சீக்கிரமே கெட்டிமேளம் கொட்டுமாம். தீராத நோய், கடன் பிரச்னை, மனக்கவலைகள், உடல் பாதிப்புகள், தொழில் பாதிப்புன்னு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தீக்குதித்த அம்மனை வேண்டிக்கிட்டா உடனே சரிசெய்து தருவா.

ஒவ்வொரு வருஷமும் சித்திரை முதல் நாள் இங்க திருவிழா களை கட்டும். அம்மா பூமில அவதாரம் பண்ணினது சித்திரை மாதம் ஞாயிற்றுக் கிழமைல என்பதால், ஞாயிற்றுக் கிழமைகள் இங்க ரொம்ப விசேஷம்.

அம்மனுக்குப் பல வேண்டுதல் இருந்தாலும் தாங்காத துயரம் உள்ளவங்க விரதமிருந்து பூக்குழி இறங்கினால், இந்தத் தாய் மனமிரங்கி பிரச்னைகளைத் தீர்த்து, வாழ்வில் வசந்தத்தை தொடங்கிவைப்பாள். அம்மனுக்கு உகந்த ஆடி மாசத்தில் இங்க சுமங்கலி பூஜை, விளக்கு பூஜை எல்லாம் விமர்சையா நடக்கும்.

வந்து வழிபடும் மக்களுக்கு வரம் அருளும் அன்னையா இருக்கும் இந்த தீக்குதித்த அம்மனை, நீங்களும் வாய்ப்பு கிடைக்கிறப்ப ஒரு முறை வந்து தரிசனம் பண்ணுங்க. காலமெல் லாம் கூட இருந்து காக்கும் தெய்வமா உங்ககூடயே இருந்து உங்க குலத்தையும் குடும்பத்தையும் காத்து ரட்சிப்பாள் தீப்பாய்ந்த நல்லம்மன்.

அம்மனின் கோயில் காலை 8 முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் 8 மணி வரையும் ஞாயிறுகளில் காலை 8 முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது? : பட்டுக் கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் 10 கி. மீ தொலைவில் உள்ளது தாமரங்கோட்டை கிராமம். பட்டுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism