திருக்கதைகள்
Published:Updated:

எடுத்த காரியங்களில் வெற்றி தரும் காளிதேவி!

வெற்றி தரும் காளிதேவி!
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றி தரும் காளிதேவி!

வெற்றி தரும் காளிதேவி!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகில் உள்ளது சிவகுருநாதபுரம். இங்கே வெற்றி முகத்தோடு சகல காரியங்களிலும் வெற்றி தரும் அன்னையாக அருளாட்சி நடத்துகிறாள், அருள்மிகு வெற்றி பத்ரகாளியம்மன். இந்த அம்மனின் கோயிலில் பரிவார தெய்வங் களும் `வெற்றி’ எனும் பெயருடன் திகழ்வது கூடுதல் சிறப்பம்சம்.

எடுத்த காரியங்களில் வெற்றி தரும் காளிதேவி!

விரும்பிய மேற்படிப்பு, நல்ல உத்தியோகம், கல்யாண வைபோகம், பிள்ளைப் பாக்கியம், சொந்த வீடு, வழக்குகளில் ஜயம் என நம் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும், அது வெற்றிகரமாக நிறை வேற அருள்கிறாள் இந்த அம்பிகை. இந்த அன்னையின் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் வெற்றிவேல் ஐயனாரும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க நல்லருள் புரியும் தெய்வமாகத் திகழ்கிறார்!

வெற்றி பத்ரகாளியம்மன் சிவகுருநாதபுரத்தில் கோயில்கொண்ட திருக்கதை சிலிர்ப்பானது. இதே ஊரைச் சேர்ந்தவர் பொன்னுத்தாயி. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் கனவில் தோன்றிய பத்ரகாளியம்மன், “ஊருக்கு வெளியே உள்ள வேப்பமரத்தடியில் வெற்றிமுகத்துடன் நான் குடியிருகிறேன். அங்கே எனக்குச் சிலை அமைத்து வழிபடு. என்னை நாடி வருவோருக்கு வினைகள் நீங்கி சகல காரியங்களும் வெற்றியாகும்’’ என்று அருள்பாலித்தாளாம்.

திடுக்கிட்டுக் கண்விழித்த பொன்னுத்தாயி, கனவு விவரத்தைக் குடும்பத்தாரிடம் சொல்ல, அனைவரும் சிலிர்த்துப்போனார்கள். விடிந்ததும் ஊர்க்காரர்களிடம் தகவல் தெரிவித்தார்கள். அம்மன் கனவில் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றார்கள்.

வெற்றிவேல் ஐயனார்
வெற்றிவேல் ஐயனார்
வெற்றி கருப்பசாமி
வெற்றி கருப்பசாமி
வெற்றி பத்ரகாளியம்மன் கோயில்
வெற்றி பத்ரகாளியம்மன் கோயில்
சின்னத்தம்பி
சின்னத்தம்பி

அங்கே வேப்பமரத்தடியில் சர்ப்பம் ஒன்று படமெடுத்து ஆடிய தாம். அதேநேரம் பொன்னுத்தாயிக்கு அருள் வந்தது. அவர் மூலம் ``இந்த இடத்தில்தான் நான் குடியிருக்கேன்’’ என்று அம்மன் சுட்டிக் காட்டினாள். அங்கிருந்த கூட்டம் பரவசம் அடைந்தது. பெண்கள் குலவைச் சத்தம் எழுப்பி வணங்கினார்கள். தொடர்ந்து, அங்கிருந்த சர்ப்பத்துக்குக் கற்பூரம் காட்டி வழிபட்டனர்.

அந்த நாகம், மரத்தின் வடக்குப் பகுதியில் ஓரிடத்தை, நெளிந்து வளைந்து வட்டமிட்டு அடையாளம் காட்டியது. அந்த இடத்தில் செம்மண்ணால் ஆன பீடம் எழுப்பி வழிபடத் தொடங்கினார்கள். காலப் போக்கில் அம்மனின் சிலை நிர்மாணிக்கப்பட்டு, திருக் கோயிலும் எழுப்பப்பட்டதாம். வேம்பு, அரசு, வில்வம் ஆகியவை ஸ்தல விருட்சமாக உள்ளன.

இங்கே கருவறையில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள், வெற்றி பத்ரகாளியம்மன்கோயிலின் வெளிப் பிராகாரத்திலும் 10 திருக்கரங்களுடன் சுமார் 63 அடி உயரத்துடன் பிரமாண்டமாக அபயம் அளிக்கும் தேவியாய் அருளும் வெற்றி பத்திரகாளியம்மனைத் தரிசிக்கலாம்.

வெற்றிவேல் ஐயனார் பூரணை, புஷ்கலை தேவிய ருடன் கிழக்கு நோக்கி சந்நிதிகொண்டுள்ளார். மட்டுமன்றி நாகக்கன்னி அம்மன், வெற்றி சந்தன மாரியம்மன், வெற்றி பேச்சியம்மன், பைரவர், சின்னத்தம்பி, வெற்றி விநாயகர், வெற்றி கருப்பசாமி ஆகிய தெய்வங்களையும் இங்கே தரிசிக்கலாம். இந்தக் கோயிலின் பரிகார வழிபாடுகள் விசேஷமானவை.

திருமணத் தடை நீங்கிட: வெற்றி பத்ரகாளியம்மனுக்கு 101 விரலி மஞ்சள்களை மாலை யாகக் கோத்துக் கட்டியும், ரோஜா மாலை சாற்றியும் வழிபட வேண்டும். அத்துடன், வெளிப்பிராகாரத்தில் அருளும் வெற்றி பத்ரகாளியம்மன் முன்பு வாழை இலை விரித்து, அதில் தடியங்காயை (சாம்பல் பூசணி) இரண்டு துண்டு களாக வெட்டி குங்குமம் தடவி வைக்கவேண்டும். மேலும் இலையில் தேங்காய்முறிகள் இரண்டு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, கையளவு மிளகைச் சிவப்புத் துணியில் கட்டி தீபம் ஏற்றிவைக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து, அம்பாளை 11 முறை வலம் வந்து வணங்கி வேண்டிக்கொண்டால், விரைவில் வரன் வாசல் தேடி வரும்; கெட்டிமேளம் கொட்டும் என்கிறார்கள் பக்தர்கள். திருமணம் நிச்சயம் ஆன பிறகு, வாழைப் பழம், வெற்றிலை - பாக்கு வைத்து, அம்பாளுக்கு நிச்சய தாம்பூலமாகக் கொடுத்து சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியர் கோயிலுக்கு வந்து வணங்கவேண்டும். அவர்கள் சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை வண்ணப் பட்டு சாற்றி, ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபட வேண்டுமாம்.

குழந்தை பாக்கியம் கிடைக்க: குழந்தை வரம் வேண்டுவோர், இந்தக் கோயிலில் உள்ள நாகக் கன்னியம்மனுக்குப் பால், பழம் நிவேதனம் செய்து 11 முறை மனமுருக வேண்டிக்கொள்ளவேண்டும். அத்துடன் இந்த அம்மன் முன்பு அமர்ந்து எலுமிச்சைப்பழச்சாறு பருகவேண்டும். இந்த முறைப்படி தொடர்ந்து 3 செவ்வாய்க் கிழமைகள் இங்கு வந்து வழிபடவேண்டும். 3-ம் செவ்வாய் அன்று திரிசூலத்தில் வளையல் சாற்றி, அதில் இரண்டு வளையலை கையில் அணிந்துகொள்ள வேண்டும். இப்படி வழிபடுவதால் விரைவில் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குடும்ப ஒற்றுமை மேலோங்க: குடும்பத்தில் குழப்பம், உடன்பிறந்த வர்களுடனான மனச் சஞ்சலம் ஆகியவை நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை துலங்கிட மகிழ்ச்சி பெருகிட அருள்பவர் வெற்றிவேல் ஐயனார். இவருக்கு 13 வகை வாசனைத் திரவியங்களால் அபிஷே கம் செய்து, மல்லிகைப் பூ மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட, குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்கும் என்கிறார்கள்.

கடன் பிரச்னை நீங்க: 7 செவ்வாய்க் கிழமைகள் கோயிலுக்கு வந்து, ராகு காலத்தில் சிவப்பு அரளி மாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். இதனால் கடன் பிரச்னை, காரியத் தடை, வழக்குகளில் தொய்வு ஆகிய பிரச்னைகள் நீங்கும். புரட்டாசியில் கொடை விழா, பங்குனி உத்திரம், ஆடிப்பூரம், தை மாதம் மஞ்சள் நீராட்டு ஆகியவை இத்தலத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் ஆகும்.

மாங்கல்ய பலம் அருளும் மஞ்சள் நீராட்டு: தை மாத மஞ்சள் நீராட்டு வைபவத்தன்று விரதம் இருந்து, திருக் குற்றாலம் அருவியிலிருந்து தீர்த்தம் எடுத்துவருவார்கள். அந்தத் தீர்த்தத்தால் மூலவர் அம்மனுக்கும் 63 அடி உயர வெற்றிபத்ரகாளி அம்மனுக்கும் அபிஷேகம் நிகழும். இந்த வைபவத்தில் பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்கிறார்கள்.

ஆடிமாதமும் மஞ்சள் நீராட்டு வைபவம் நிகழும். ஆடி மாதப் பிறப்பன்று ஊரில் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதிச் சீட்டுக் குலுக்கிப் போட்டு, ஒன்பது சிறுமிகளைத் தேர்வு செய்வார்கள். இந்தச் சிறுமியர் 7 நாள்கள் விரதம் இருப்பார்கள். ஆடுப்பூரத் திருநாளில், குற்றால அருவித் தீர்த்தம் எடுத்து வந்து 63 அடி உயர பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அம்பாளை வழிபட்டு வளையல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை.

குற்றாலம், தென்காசி மற்றும் நெல்லை பகுதிகளுக்குச் செல்லும் அன்பர்கள், தவறாமல் வெற்றிபத்ரகாளியம்மன் கோயிலுக்கும் சென்று தரிசித்து வாருங்கள்; உங்கள் வாழ்விலும் சகல காரியங்களிலும் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்.

எப்படிச் செல்வது?: திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது சுரண்டை. இந்த ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் சிவகுருநாதபுரம் அமைந்துள்ளது. தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து சுரண்டைக்குப் பேருந்து வசதி உண்டு. காலை 6 முதல் மதியம் 1 மணி வரையிலும்; மாலை 6 முதல் 8:30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

மூன்று சீடர்கள்!

மூன்று சீடர்கள் குருவிடம் உபதேசங்களைக் கற்று முடித்து, காட்டு வழியாக ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். வழியில் சற்றுத் தூரத்தில் புலி ஒன்று வருவது தெரிந்தது.

``நாம் கற்றதெல்லாம் யாருக்கும் உபயோகப்படாமல் போய்விடும் போலிருக்கிறதே... அந்தப் புலி நம்மைக் கொன்று தின்னப் போகிறது’’ என்று திகைத்து, செய்வதறியாது நின்றான் ஒருவன்.

``நாம் தரையில் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நினைத்துக்கொண்டால், அவர் காப்பாற்றுவார்’’ என்றபடி தரையில் படுத்துக்கொண்டான் இரண்டாமவன்.

மூன்றாவது சீடனோ, ``புலி நம்மிடம் வருவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. நம் முயற்சியால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்போம். முடியாதபட்சத்தில் கடவுளிடம் வேண்டுவோம். இப்போதைக்கு மரத்தின் மீது ஏறினால் உயிர் தப்பலாம்’’ என்று மற்ற இருவரையும் கூப்பிட்டான். அவர்கள் வரவில்லை. ஆகவே மூன்றாமவன் மட்டும் மரத்தில் ஏறிக்கொண்டான்.

தன்னம்பிக்கை இல்லாமல் திகைத்து நின்றவனையும், மூடநம்பிக்கை வைத்தவனையும் புலி அடித்துக்கொன்றது. தன் முயற்சியில் நம்பிக்கை வைத்த சீடன் தப்பித்துவிட்டான்.

-கே.பானுமதி, சேலம்-3