Published:Updated:

பிப்ரவரி 4-ல் தெப்ப உலா.. திருப்பரங்குன்றம் தெப்போற்சவம் கோலாகலாத் தொடக்கம்!

கொடியேற்றம்
கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் இந்தாண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அறுபடைகளில் முதல்வீடு, பாடல் பெற்ற தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது, திருப்பரங்குன்றம். பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம் என இந்தத் தலத்தில் உற்சவங்கள் களைகட்டும்.

அந்த வகையில், தலத்தில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியசுவாமிக்கு முக்கிய விழா, தெப்பத்திருவிழா. மலைக்கு வடக்கே அமைந்துள்ள சரவணப்பொய்கையில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் ஆண்டுதோறும் முருகப்பெருமான் எழுந்தருள்வார்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்
`மலைக்குப் பயணமாகும் வேல்!' - வேலெடுத்தல் திருவிழாவுக்குத் தயாராகும் திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் இந்தாண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிபீடத்தில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து வேத மந்திரங்கள் முழங்க காலை 11 மணியளவில் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

முதல்நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. தினமும் காலை தங்கச் சப்பரத்தில் சுவாமி வலம் வருவார். இன்றிரவு பூதவாகனத்தில் உலா வருகிற சுப்பிரமணியர், நாளை அன்னவாகனம், அடுத்தடுத்து சேஷவாகனம், புஷ்ப சப்பரம் ஆகிய வாகனங்களில் வலம் வந்து அருள்பாலிப்பார்.

முருகன் தெய்வானை
முருகன் தெய்வானை
தமிழ்முறை... வேதமுறை... தஞ்சைக் கோயில் குடமுழுக்கு குறித்து ஆன்மிக அன்பர்கள் விளக்கம்!

முதல் நாளான நேற்றிரவு மயில் வாகனரூபராய் அருள் வழங்கிய பெருமான் அடுத்ததாக ஆறாம் நாளிலும் மயில் வாகனம் ஏறிவருவார். அவர்களோடு ஆவுடைநாயகி சமேத சத்தியகிரீஸ்வரர் ரிஷபவாகனத்தில் உடன் எழுந்தருள்வார். ஏழாம் நாளன்று காலை கங்காளநாதர் புறப்பாடு நடைபெறும். சிவனாரின் பிச்சாடனர் திருக்கோலமே அருள்மிகு கங்காளநாதர்.

ஏழாம் நாள் இரவு சுவாமி நடராஜபெருமான் சிவகாமி அம்பாளுடன் ரத்தின சிம்மாசனத்தில் ஆசி வழங்குவார். சிவகாமி சமேத நடராஜர் எட்டாம் நாள் காலை விடையாத்தி சப்பரத்திலும் அன்றிரவு தெய்வானை சமேத சுப்ரமணியர் பச்சைக் குதிரை வாகனத்திலும் வீதியுலா வருவர்.

`பாசிப்போர்வை; துர்நாற்றம்!' திருப்பரங்குன்றம் `தெய்வானை தீர்த்தம்' நிலையால் கலங்கும் பக்தர்கள்

இதையடுத்து, பிப்ரவரி 3-ம் தேதி திங்கள்கிழமையன்று தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து முருகப்பெருமான் சிறிய தேரில் எழுந்தருளி வீதியுலா வருவார். பிப்ரவரி 4-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 7 மணியளவில் முருகப்பெருமான் தெய்வானை சமேதராக நகரத்தார் மண்டபத்தில் தோன்றி பின்னர் காலை 11 மணியளவில் சுவாமி தெப்பத்தில் எழுந்தருள்வார்.

கொடியேற்றம்
கொடியேற்றம்

மாலை 6 மணிக்கு மைய மண்டபத்தில் சுவாமி பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர் இரவு 8.30 மணிக்கு சுவாமி தெப்பத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். தெப்பத்திருநாளன்றைய தினம் இரவு பதினாறுகால் மண்டபம் அருகில் சூரசம்ஹார லீலையோடு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.

தெப்பத் திருவிழாவைக் கண்டு வணங்க நம் மனக்குறை எல்லாம் தீரும் என்பது ஐதிகம்.

அடுத்த கட்டுரைக்கு