Election bannerElection banner
Published:Updated:

20 புண்ணியத் தீர்த்தங்கள்... 9 கிணறுகள்... மாசிமகம்... அறிந்துகொள்ள வேண்டிய அற்புதத் தகவல்கள்!

மகாமகம்
மகாமகம்

பிரளயத்துக்குப் பிறகு, உலக உயிர்கள் அனைத்தும் ஒரு குடத்தில் இருந்து தோன்றிய தலம் என்பதால் கும்பகோணமே உலக உயிர்களின் பிறப்பிடம் என்பர். ஒட்டுமொத்த உயிர்களின் பீஜங்களும் பாதுகாக்கப்பட்டு பெரும் ஊழிக்குப் பிறகு இங்கேதான் உடைக்கப்பட்டு மீண்டும் சிருஷ்டி தொடங்கியது என்பது ஐதிகம்.

கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் தினம் பெளர்ணமி வரும். இந்தக் கும்ப மாத பெளர்ணமி திருநாளே மாசிமகம். இத்தகு புண்ணிய தினத்தில் நவகன்னிகா நதிகளும் மகாமக தீர்த்தத்தில் சங்கமிப்பதாகவும், பிரம்மாதி தேவர்கள் கும்பகோணத்தில் கூடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆகவே, இத்திருநாளில் குடந்தை தரிசனமும், மகாமக தீர்த்த நீராடலும் மகத்துவம் வாய்ந்தது.

பிரளயத்துக்குப் பிறகு, உலக உயிர்கள் அனைத்தும் ஒரு குடத்தில் இருந்து தோன்றிய தலம் என்பதால் கும்பகோணமே உலக உயிர்களின் பிறப்பிடம் என்று கூறுவர். ஒட்டுமொத்த உயிர்களின் பீஜங்களும் பாதுகாக்கப்பட்டு பெரும் ஊழிக்குப் பிறகு இங்கேதான் உடைக்கப்பட்டு மீண்டும் சிருஷ்டி தொடங்கியது என்பது ஐதிகம்.

மாசிமகம் கும்பேஸ்வரர்
மாசிமகம் கும்பேஸ்வரர்

பிரம்மன் பூஜித்து வந்த அமிர்தக் குடம் சிவனாரின் கணையால் உடைபட்டு அதிலிருந்த அமிர்தம் வழிந்தோடி தேங்கிய இடங்கள் இரண்டு. ஒன்று கும்பேஸ்வரர் கோயிலின் பொற்றாமரைக் குளம். மற்றொன்று மகாமக தீர்த்தக்குளம்.

மகாமக குளத்தின் கரையில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோனேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தியேஸ்வரர், வ்யாஸேஸ்வரர், உமை பாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்த தீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர் என 16 ஈஸ்வர சந்நிதிகளை அமைத்தவர் மகான் கோவிந்த தீட்சிதர்.

20 தீர்த்தங்களும் 9 கிணறுகளையும் கொண்ட இந்த மகாமகம் தீர்த்தம், புண்ணிய நதிகளுக்கே புண்ணியம்தரும் மகிமை கொண்டது!

கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்திரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நதிகளின் பாவத்தை நீக்கிய திருக்குளம் இது. மகாமக தினத்தில், ஒன்பது நதிகளும் இங்கு வந்து நீராடி மீண்டும் புண்ணிய நதிகளாகப் பொலிவு பெறுவதாகப் புராணம் கூறும்.

மாசி மகத்தில் மகாமகக் குளத்தில் நீராடுவோரின் பாவங்கள், தோஷங்கள், நோய்கள் யாவும் நீங்கி ஞானமும், ஆரோக்கியமும், சகல சம்பத்துகளும் பெறுவார்கள். அதேபோல், ஒருமுறை மகாமகக் குளத்தில் நீராடினால், காசியில் நூறாண்டு காலம் வாழ்ந்த புண்ணியமும், உலகை வலம் வந்த பலனும் கிட்டும் என்பர்.

மகாமக குளத்தில் உள்ள 20 தீர்த்தங்களும் சிறப்பானவை. அதில் நீராட கீழ்க்காணும் புண்ணிய பலன்கள் கிட்டும் என்பர்.

1. இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்.

2. அக்னி தீர்த்தம்- பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

3. யமதீர்த்தம் - மரண பயம் போக்கும்.

4. நிருதி தீர்த்தம் - தீய சக்திகளின் பயங்கள் நீங்கும்.

5. வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.

6. வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும்.

7. குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்.

8. ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்.

9. பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோரைச் சாந்தப்படுத்தும்.

10. கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்.

11. யமுனை தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்.

12. கோதாவரி தீர்த்தம் - எண்ணியது நடக்கும்.

13. நர்மதை தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்.

14. சரஸ்வதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்.

15. காவிரி தீர்த்தம் - புத்தியை மேம்படுத்தும்.

16. குமரி தீர்த்தம் - ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும்.

17. பயோஷ்னி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்.

18. சரயு தீர்த்தம் - மனக் கவலை தீர்க்கும்.

19. அறுபத்தாறு கோடி தீர்த்தம் - துன்பம் நீங்கி இன்பம் கூடும்.

20. தேவ தீர்த்தம் - சகல பாவங்களும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.

மாசி மகத்தில் நீராடுவது மட்டுமல்ல தானங்கள் கொடுப்பதும் விசேஷமானது. அந்த வகையில், 20 வகை தானங்களை விளக்குவார்கள் பெரியோர்கள். பூமி தானம், திருமணதுக்கான தானம், ஸ்வர்ண தானம், பூணூல் தானம், கோ தானம், அஸ்வ தானம், காளை தானம், அன்ன தானம், பாயஸ தானம், தான்ய தானம், தென்னங் கன்று தானம், குப்த தானம், சந்தன தானம், முத்து தானம், நவரத்ன தானம், தேன் தானம், எள்ளு தானம், மாதுளம் பழ தானம், உப்பு தானம் மற்றும் பதினாறு வித பழங்களை பதினாறு பேருக்கு தானம் அளிப்பது.

* குப்த தானம் என்றால், பூசணிக்காய் அல்லது பலாப்பழம் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஒற்றை ரூபாய் அளவுக்கு துளையிட்டு, அதில் ரத்னம், ஸ்வர்ணம், வைரம், வைடூரியம், வெள்ளி, முத்து ஆகியவற்றை நிரப்பி, மீண்டும் துளையை மூடிவிட்டு அப்படியே வழங்குவதுதான் குப்த தானம் என்று பெயர்.

* கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம். மகாமக தீர்த்தத்தில் சங்கமிக்கும் ஒன்பது நதிப் பெண்களும் அருள் பாலிப்பது இந்த கோயிலில் தான். குறிப்பிட்ட வயது வந்தும் பூப்படையாதவர்கள், திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், குழந்தைச் செல்வம் இல்லையே எனக் கலங்குபவர்கள் எனப் பலரும் இங்கு வந்து நவ கன்னியரை வணங்கினால் நல்லது நடக்கும்.

* மாசிமக யாத்திரை கிளம்பும்போதே ஏழை ஒருவருக்கு அன்னதானம் இட்டு அந்த நிறைவோடு கிளம்புவது நல்லது. முதல் நாளே திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கருப்பூர், தாராசுரம், சுவாமிமலை முதலிய பஞ்ச குரோசத் தலங்களுக்குச் சென்று முறையாக வழிபடுதல் வேண்டும்.

மக நாளில் அதிகாலையில் நல்ல நேரம் பார்த்து சுவாமியை நோக்கி குளத்திலே மூழ்க வேண்டும். மூழ்கி எழும் நேரத்தில் இறைவனைத் துதி பாடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையிலும் மனம் ஒப்பக்கூடாது. நீராடலின் பலனை நிறைவாகப் பெற தீர்த்தக் கிணறுகளை நோக்கியும் கைகூப்பி வணங்க வேண்டும். பிறகு கோயிலின் பொற்றாமரைக் குளத்தில் சுவாமி இருக்கும் திசையை நோக்கி மூழ்கி எழ வேண்டும். பிறகு காவிரி தீரத்திலும் நீராட வேண்டும். உடம்பிலுள்ள ஈரம் வடிய வடிய ஒட்டுமொத்த பாவங்களும் வடிவதாக ஐதிகம் கூறுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு