Published:Updated:

`சிசிடிவி கண்காணிப்பு; திரிசுந்திரருக்கு தடை!'- திருச்செந்தூர் கோயிலில் அதிரடி காட்டும் ஜே.சி

திருச்செந்தூர் கோயில்
திருச்செந்தூர் கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பணம் பெற்றுக்கொண்டு பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்துச்சென்ற திரிசுதந்திரரை இரண்டு மாதம் கோயிலுக்குள் நுழையத் தடை விதித்தும், அதை அனுமதித்த உள்துறை பணியாளரைப் பணியிலிருந்து விடுவித்தும், இணை ஆணையர் அம்ரித் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், கடற்கரை ஓரத் தலமுமாக பார்க்கப்படுகிறது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இது, ’குரு ஸ்தலம்’ என்பதால், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வந்துசெல்கின்றனர்.

திருச்செந்தூர் கோயில்
திருச்செந்தூர் கோயில்

வெளி மாவட்டங்களிலிருந்து திருச்செந்தூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம், திரிசுதந்திரர்கள் பணம் கேட்பதாகவும், இவர்களுக்கு திருக்கோயில் பணியாளர்களில் சிலர் சாதகமாகச் செயல்படுவதாகவும் பக்தர்கள் புகார் கூறி வந்தனர். இதையடுத்து, திருக்கோயில் இணை ஆணையர் அம்ரித், அடிக்கடி திடீர் விசிட் செய்துவந்தார்.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி மேற்கொண்ட ஆய்வில், சுவாமி தரிசனத்திற்காக வரும் வெளியூர் பக்தர்களிடம் பணம் வசூலித்த சோமாளி ஹரிஹரன் மற்றும் சுற்றுப்பிராகாரத்தில் நிர்வாகத்தின் அனுமதியின்றி நைவேத்ய பிரசாதம் என்ற பெயரில் ‘பொங்கல் கட்டி’களை விற்பனை செய்த சுப்பிரமணியன் ஆகிய இரண்டு திரிசுதந்திரர்களையும் கடுமையாக எச்சரித்ததுடன், இரண்டு பேரும் திருக்கோயிலுக்குள் ஒருமாதம் நுழைய அதிரடியாகத் தடை விதித்தார். ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கையால் திரிசுதந்திரர்கள் ஆடிப்போனார்கள்.

திருச்செந்துர்  கோயில்
திருச்செந்துர் கோயில்

இந்நிலையில், ரூ.250 கட்டணத்திற்கான சிறப்பு தரிசன வரிசையில் திரிசுதந்திரர்களில் ஒருவரான ஆண்டி என்ற மூக்காண்டி, பக்தர்களை தரிசனத்திற்கான கட்டணச்சீட்டு பெறாமலும், முறையாக வரிசையில் இல்லாமலும் சட்டவிரோதமாக அழைத்துச்சென்றுள்ளார். இதை, உள்துறை உதவியாளர் கணேசன் என்பவர் அனுமதித்துள்ளார்.

சிசிடிவி கேமராவில் இதைக் கண்காணித்த ஜே.சி. அம்ரித், கணேசனை அப்பணியிலிருந்து விடுவித்தும், திரிசுதந்திரர் ஆண்டியை இரண்டு மாதம் கோயிலுக்குள் நுழையக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திருக்கோயில் பணியாளர்கள் சிலரிடம் பேசினோம், “போன மாசம் இரண்டு திரிசுதந்திரர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டபோதே திரிசுதந்திரர்கள் சுதாரித்துக்கொண்டார்கள்.

இணை ஆணையர்- அம்ரித்
இணை ஆணையர்- அம்ரித்

அதற்குப் பிறகு, திருக்கோயில் முகப்பு, உள் பிராகாரம், பக்தர்கள் வெளியேறும் பகுதி, சண்முகவிலாச மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்ட பகுதியில் பழுதாகியிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டன. இருந்தாலும், ”ஆடிய காலும் பேசுன வாயும் சும்மா இருக்குமா”ன்னு சொல்ற மாதிரி, சிலர் வழக்கம் போல பக்தர்களை அழைச்சுட்டுப் போறதை நிறுத்தல. இந்த நிலையில், ரூ.250 கட்டண சிறப்பு தரிசன வரிசையில், நுழைவுச்சீட்டு பெறாமல் திரிசுதந்திரர் ஆண்டி என்பவர் 40 பேரை வரிசையில் நிறுத்தாமலும் அழைத்துச்சென்றுள்ளார்.

அவர்களை உள்ளே அழைத்துச்சென்றது முதல், கழுத்தில் மாலை போட்டு தனிமரியாதையுடன் வெளியே அழைத்துவந்ததை அமைதியாகப் பார்த்தார். சம்பந்தப்பட்ட திரிசுதந்திரர் ஆண்டி, உள்துறை உதவியாளர் கணேசன் ஆகியோரிடம் தரிசன டிக்கெட் இல்லாமல் எப்படி அழைத்துச்செல்லலாம், சோதனை செய்யாமல் எப்படி இத்தனை பேரை கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என கேள்விகளால் துளைத்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். பின்னர், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரிசையில் பக்தர்கள்
வரிசையில் பக்தர்கள்

கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் உத்தரவிட்டுள்ளார் ஜே.சி” என்றனர். இணை ஆணையரின் நடவடிக்கை குறித்து நம்மிடம் பேசிய சில ஆன்மிக அன்பர்கள், “திருக்கோயிலின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கவேண்டிய திரிசுதந்திரர்களே பணம் பெற்றுக்கொண்டு பக்தர்களை அழைத்துச்செல்வது வேதனை அளிக்கிறது.

கோயிலுக்குள் அர்ச்சகர், திரிசுதந்திரகளிடம் ரூ.100 கொடுத்தால்தான் தேங்காய், பழக்கூடையை கையிலேயே வாங்குகிறார்கள் எனவும் புலம்புகிறார்கள் பக்தர்கள். இதுபோன்று தேங்காய் உடைப்பு, அர்ச்சனை, துலாபாரம் ஆகியவற்றிற்கான கட்டண விவர அறிவிப்புப் பலகைகளை வெளிப்படையாகத் தெரியும்படி கோயிலைச் சுற்றி வைக்க வேண்டும். இதனால், திருக்கோயிலுக்குச் சேரவேண்டிய வருவாயும் பெருகும். ஜே.சி, அவ்வப்போது திடீர் விசிட் அடித்தால் படிப்படியாக தவறுகள், முறைகேடுகள் குறையும்” என்றனர்.

கடற்கரையில் பக்தர்கள்
கடற்கரையில் பக்தர்கள்

இதுகுறித்து இணை ஆணையர் அம்ரித்திடம் பேசினோம், “பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்துச்சென்றதாலும், அதை அனுமதித்ததாலும் திரிசுதந்திரர், உள்துறை உதவியாளர் ஆகியோர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஆய்வு செய்திட உள்துறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு