Published:Updated:

கொரோனாவால் களையிழந்த திருச்செந்தூர் ஆவணித் திருவிழா... ரத்து செய்யப்பட்ட தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இந்த ஆண்டின் ஆவணத் திருவிழா, பக்தர்கள் பங்கேற்பின்றித் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்ட நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் கடந்த 1-ம் தேதி முதல் பல நெறிமுறைகளின்படி பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரைத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி நாள் ஒன்றுக்கு 2,000 பக்தர்கள் மட்டுமே தற்போது இங்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

சுவாமி ஜெயந்திநாதர்
சுவாமி ஜெயந்திநாதர்

திருக்கோயிலில் சுப்பிரமணியர் மற்றும் சண்முகர் சந்நிதிகளில் மட்டுமே பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். பிராகாரத்திலுள்ள பிற சந்நிதிகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. அத்துடன், சண்முகார்ச்சனை, பால் அபிஷேகம் செய்தல், பூஜைபொருள்கள் எடுத்து வருதலுக்கும் அனுமதியில்லை. கடலில் நீராடுதல், நாழிக்கிணற்றில் குளித்தல், முடிக்காணிக்கை செலுத்துதல், காதுகுத்துதல் ஆகியவற்றிற்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், முடிகாணிக்கை செலுத்தும் மண்டபத்திற்கு எதிரே உள்ள பகுதியிலும், திருக்கோயில் நிர்வாக அலுவலகம் அருகிலுள்ள கலையரங்கத்தின் பார்வையாளர் அரங்கிலும் அமர வைக்கப்படுகின்றனர். 25 நபர்களாக அழைத்துச் செல்லப்பட்டு, 6 அடி இடைவெளியுடன் கோயிலுக்குள் வரிசையில் நிறுத்தப்பட்டு, கோயிலின் நுழைவு வாசலுக்கு அருகில் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொடியேற்றம்
கொடியேற்றம்

இந்நிலையில், 6-ம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்காகக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து, அதற்கான பிரிண்ட் அவுட்டுடன் ஆதார் அட்டையையும் எடுத்துவந்தால் மட்டுமே அனுமதி எனத் திருக்கோயில் இணை ஆணையர் அம்ரித் தெரிவித்தார். இதையடுத்து இணையதளத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திறகாக அனுமதிக்கப்படுகின்றனர்.

திருக்கோயிலின் மூலம் தினமும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம், இடும்பன் விரத மண்டபம் அருகிலுள்ள அன்னதாகனக்கூடத்தில் பக்தர்களை அமர வைத்து பரிமாறப்படாமல், பொட்டலங்களாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டிற்கான ஆவணித் திருவிழா, கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் தேதி மாலை, தூண்டுகை விநாயகர் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட கொடிப்பட்டம், மேளதாளம் முழங்க யானை மீது ஊர்வலமாகத் திருகோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.

பக்தர்களுக்கு  உடல் வெப்பநிலை சோதனை
பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை

6-ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு கொடிமரத்தில் கொடிபட்டம் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் கொடிமர அலங்காரத்திற்குப் பிறகு, 6.40 மணிக்கு தீபாராதணை நடைபெற்றது. அன்று மாலையில், அப்பர் பெருமான், ஸ்ரீபெலி நாயகர் கோயில் கிரிப்பிராகரத்தில் வலம் வந்தார். வரும் 17-ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறும் 7-ம் நாள் திருவிழாவான வரும் 12-ம் தேதி அதிகாலை 5 முதல் 5.30 மணிக்குள் உருகுசட்டசேவை, 108 மகாதேவர் சந்நிதி முன்பு நடக்கிறது.

சர்வ தரிசனம் கிடையாது; புரட்டாசி பிரம்மோற்சவம் எப்படி நடக்கிறது? திருப்பதி அப்டேட்ஸ்!

அதனைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வேர்ச் சப்பரத்தில் எழுந்தருளலும் மாலையில் சிவப்புச் சாத்தி எழுந்தருளலும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனியாக கேடயச் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெறும். 8-ம் நாள் திருவிழாவான வரும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி எழுந்தருளலும், 11.30 மணிக்கு எழுந்தருளலும், உள்பிராகாரத்தில் சுவாமி, அம்பாள் தனித்தனியாக கேடயச்சப்பரத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. 7 மற்றும் 8-ம் நாள் திருவிழா நாள்களிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. மற்ற நாள்களில் திருவிழா நிகழ்வுகள் நீங்கலான இடைப்பட்ட நேரங்களில் மட்டும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்காக அனுமதி அளிக்கப்படுகிறது.

பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய கடற்கரை
பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய கடற்கரை

உள் பிராகாரத்திலேயே திருவீதியுலாக்கள் நடைபெறும். வழக்கமாக 10-ம் நாள் திருவிழாவன்று நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ மற்றும் திருவிழா நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கூடும் திருச்செந்தூர், தற்போது கொரோனாவால் அதிக பக்தர்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு