Published:Updated:

இல்லறம் செழிக்க அருளும் காந்திமதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்! - நெல்லையில் கோலாகலம்

ஐப்பசி மாத திருக்கல்யாண உற்சவம் இன்று நெல்லையப்பர் கோயிலில் தொடங்கியது.

நெல்லையப்பர் கோயில்
நெல்லையப்பர் கோயில்

உயிர்களின் நன்மைக்காக அம்பிகை பூவுலகம் வந்து தவம் இயற்றியதாகச் சொல்லப்படும் தலங்கள் நிறைய உண்டு. அவற்றுள் பிரசித்தி பெற்ற தலம் திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஆலயம். இந்தத் தலம் அன்னையின் தவத்துக்கு மகிழ்ந்து காட்சிகொடுத்து, ஈசன் மகிழ்வுடன் அம்பிகையைக் கரம்பிடித்த அற்புத நிகழ்விற்கும் பெருமைக்கும் உரியது. இந்த நிகழ்வினை ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவமாக திருநெல்வேலியில் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாத இறுதியில் தொடங்கும் இந்தக் கல்யாண உற்சவம் தீபாவளிக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பாக முடிவடையும்.

காந்திமதி அம்மன்
காந்திமதி அம்மன்

சிவத்தலங்களுள் நெல்லையப்பர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு அன்னை காந்திமதி அம்மனாக அருள்பாலிக்கிறாள். இந்தக் கோயிலுக்கான பிரத்யேகச் சடங்குகள் பல உண்டு. குறிப்பாக அன்னை நாள்தோறும் மதியம் ஈசனுக்குத் தன் கைகளாலேயே உணவு பரிமாறுவதாக ஐதிகம். அம்பாள் சந்நிதி அர்ச்சகர், மதிய வேளையில் சுவாமி சந்நிதிக்கு உணவுடன் சென்று நைவேத்தியம் செய்வார். மற்ற தலங்களில் சுத்த அன்னம் நைவேத்தியம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு சுவாமிக்கு சுத்த அன்னத்துடன் ஒரு கூட்டு, ஒரு பொரியல், ஒரு குழம்பு என அறுசுவையுடன் கூடிய உணவையே பிரசாதமாக நைவேத்தியம் செய்வது தனிச்சிறப்பு. கணவன் மனைவி எப்படி ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக வாழவேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்தச் சடங்கு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பூமியை சமன் செய்வதற்காக அகத்தியரைத் தெற்கு நோக்கிச் சிவபெருமான் அனுப்பியபோது, இறைவனின் கல்யாணத் திருக்கோலத்தைத் தானும் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட அகத்தியருக்கு, தமது கல்யாணக் கோலத்தை முழுமையாகக் காட்டியருளிய தலம் என்கிறார்கள். இங்கு நடைபெறும் திருமணச் சடங்குகள் வாழ்வியல் சடங்குகளைப் போன்றே சிறப்பாக நடைபெறும்.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண வைபவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பத்து நாள்களும் வீதிஉலாவும் சிறப்பு உற்சவங்களும் நடைபெறும். குறிப்பாக 20.10.19 அன்று திருஞான சம்பந்தருக்கு ஞானப்பாலூட்டும் வைபவம் நடைபெறும். அன்றைய தினம் அம்பாள் வெள்ளி அன்னவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பாள். இந்தத் திருக்காட்சியில் கலந்துகொள்வதன் மூலம் அறியாமை நீங்கி ஞானம் பிறக்கும் என்பது ஐதிகம்.

25.10.19 அன்று காலை சுவாமி கம்பைக்குழத்திற்கு எழுந்தருளிவார். அன்றைய தினம் அம்பாள் கோயில் பெருமாளுக்குக் திருக்காட்சியருளலும் திருஞானசம்பந்தருக்கு திருக்காட்சியருளலும் நடைபெறும். 26.10.19 அன்று மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாண உற்சவம், நலுங்கு, ஊஞ்சல் முதலிய உற்சவங்களும் நடைபெறும்.

நெல்லையப்பர்
நெல்லையப்பர்

அம்பிகையை அவரின் சகோதரரான பெருமாள் தாரைவார்த்துத் தருவதாக ஐதிகம். இங்கு திருக்கல்யாண உற்சவத்தில் நெல்லை கோவிந்தர் எழுந்தருளியிருப்பார். உற்சவத்தில், வைணவர் ஒருவர் வந்து தாரை வார்த்துக் கொடுக்க சிவாச்சார்யர் பெற்றுக் கொள்வார். சமய வேற்றுமைகளின்றி அனைவரும் கூடி மகிழும் அற்புதமான திருக்கல்யாண உற்சவமாக இவ்விழா நடைபெறும். இதில், கலந்துகொண்டு தரிசனம் செய்பவர்களின் இல்வாழ்க்கை செழிக்கும் என்பது ஐதிகம்.