Published:Updated:

திருக்கச்சி நம்பி அவதார உற்சவம்! - சூரியத் தலமான பூந்தமல்லியில் திவ்ய பிரம்மோற்சவம் கோலாகலம்

திருக்கச்சி நம்பிகள்
திருக்கச்சி நம்பிகள்

திருக்கச்சி நம்பிகள், கி.பி.1009-ம் ஆண்டு மாசி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தார். நம்பிகளின் திருநட்சத்திர தினம், இன்று அனைத்து வைணவக் கோயில்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

புஷ்பபுரி என அழைக்கப்படுகிற பூவிருந்தவல்லியில் கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு வரதராஜப்பெருமாள். இத்தலத்துப் பெருமாளுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்தவர், திருக்கச்சி நம்பிகள். இவர், உடையவர் ஸ்ரீமத் ராமாநுஜரின் குருவானவர். திருக்கச்சி நம்பிகள், கி.பி.1009-ம் ஆண்டு மாசி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தார். நம்பிகளின் திருநட்சத்திர தினம், இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

Vikatan

திருக்கச்சி நம்பிகளின் அவதார உற்சவம், பூவிருந்தவல்லி வரதராஜப்பெருமாள் திருக்கோயிலின் திவ்ய பிரமோற்சவமாக ஒவ்வோராண்டும் 10 நாள்களுக்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த வகையில், நம்பிகளின் 1011-ம் ஆண்டு திருநட்சத்திர தினமான இன்று, சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றுவருகிறது.

திருக்கச்சி நம்பிகள்
திருக்கச்சி நம்பிகள்

இந்தக் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் வைகாசியில் பிரம்மோற்சவம் நடைபெறும். பிரம்மோற்சவத்தில், வரதராஜப் பெருமாள் தினமும் வீதியுலா எழுந்தருள்வார். ஆனால், இந்த திவ்ய பிரம்மோற்சவத்தில் திருக்கச்சி நம்பிகளே பிரதானம். இந்த 10 நாள் உற்சவம் முழுவதும் நம்பிகள் மட்டுமே உற்சவராய் எழுந்தருளுவார். இந்த உற்சவத்துக்கான பந்தக்கால் நடும் வைபவம், பிப்ரவரி 17-ம் தேதியன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 22-ம் தேதி மாலை திருக்கச்சி நம்பிகள் ஆஸ்தானத்திலிருந்து மஞ்சத்திற்கு எழுந்தருளினார். மறுநாள் 23-ம் தேதியிலிருந்து உற்சவம் தொடங்கியது. தினமும் காலை 8 மணியளவில் ஒய்யாளி சேவையும், தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி மேனா திருவீதி புறப்பாடும் நடைபெற்றன.

மாலை 3.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு பத்தி உலாவும் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சிம்மம், யாளி, சந்திர பிரபை, சேஷ வாகனம், அம்ச வாகனம், குதிரை வாகனம், தங்கமுலாம் மங்களகிரி, யானை என நாளொரு வாகனத்தில் திருக்கச்சி நம்பிகள் எழுந்தருளினார். நேற்று காலையில் திருத்தேர் உலா நடைபெற்றது.

Vikatan

நம்பிகளின் திருநட்சத்திர தினமான இன்று, சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றுவருகிறது. அதிகாலை 6 மணியளவில் மூலவருக்குத் திருமஞ்சனமும் பகல் 12 மணிக்கு திருக்கைத்தல சேவையும் ஒய்யாளி சேவையும் நடைபெற்றன. மாலை 3 மணிக்கு, சுவாமி தங்கப்பல்லக்கில் திருவீதி புறப்பாடும், இரவு 8 மணிக்கு திருக்கச்சி நம்பிகளுக்கு விசேஷ திருமஞ்சனமும் நடைபெறும். மேலும், மங்களகிரி வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். நாளை காலை 10 மணிக்கு சாற்றுமுறை உற்சவம். திருப்பாவை சாற்றுமுறை, தீர்த்த விநியோகம் ஆகியன நடைபெறும்.

திருக்கச்சி நம்பிகள்
திருக்கச்சி நம்பிகள்

இந்த உற்சவங்களில் கலந்துகொண்டு பெருமாளையும் நம்பிகளையும் சேவிக்க, பிரச்னைகள் தீர்ந்து செல்வ வளம் சேரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, இங்குள்ள பெருமாளின் தலைக்குப் பின்புறம் சூரியபகவான் அருள்வதால், இது சூரியத் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு வந்து வேண்டிக்கொள்ள ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதிகம்.

அடுத்த கட்டுரைக்கு