கட்டுரைகள்
Published:Updated:

அதிசய வாழைகள்... நான்கு பிரார்த்தனைகள்!

அதிசய வாழைகள்... நான்கு பிரார்த்தனைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அதிசய வாழைகள்... நான்கு பிரார்த்தனைகள்!

ஸ்ரீசௌந்தரநாயகி திருக்கோயிலை எழுப்பினாராம். தொடர்ந்து ஸ்ரீகதலிவனேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளை பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகே அமைந்துள்ள ஊர் திருக்களம்பூர். வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் ஒருங்கே கொண்ட புண்ணியத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள சிவாலயம் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இந்தக் கோயிலின் மூலவர், தீராத நோய்களும் குணம் அடைய வரம் தருபவர் ஆதலால், ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். கதலி என்றால் வாழை. இந்த மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டதால், கதலிவனேஸ்வரர் என்ற திருப்பெயரும் இங்குள்ள இறைவனுக்கு உண்டு.

முற்காலத்தில் வால்மீகி முனிவர் இங்கே தபோவனம் அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் இறைவனைத் தம்முடைய இதயத்தில் ஆட்கொண்டதால், `திருப்புரம் ஆண்ட நாயனார்’ என்ற திருப்பெயரும் இத்தலத்து இறைவனுக்கு உண்டு.

ஒருமுறை பாண்டிய மன்னர் பகைவர் மீது படைநடத்திச் சென்றார். வழியில் இந்தப் பகுதியில் வாழைத்தோப்புகளின் ஊடே பயணித்தன படைகள். வெகுவேகமாகச் சென்ற மன்னரது குதிரையின் கால் குளம்பு சிவலிங்கத்தின் மேல் பட்டதால், லிங்கம் மூன்று பிளவுகள் ஆகி, அதிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியது. தெய்வக் குற்றத்தால் மன்னரின் பார்வை பறிபோனது.

அதிசய வாழைகள்... நான்கு பிரார்த்தனைகள்!

இதனால் பரிதவித்த மன்னர், இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். அதற்கு இரங்கிய இறைவன், ‘‘எனக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்பு. உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்’’ என்று அருளினார். மன்னனும் ஆலயம் எழுப்புவதாக உறுதி கூற, அவரின் பார்வை திரும்பியது. மன்னர் அங்கே அழகிய ஆலயத்தை நிர்மாணித்தார் என்கிறது தலபுராணம். இன்றும் மூலவரின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களைக் காணலாம்.

ஆதிசங்கரரும் திருக்களம்பூர்த் திருத்தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளார். இங்கே அம்பாள் சந்நிதி இல்லை என்பதை அறிந்தவர், ஸ்வாமியே ஸ்வாமியைப் பார்ப்பது போன்று இந்தக் கோயிலுக்கு எதிரில், ஸ்ரீதிருவளர் ஒளி ஈஸ்வரர், ஸ்ரீசௌந்தரநாயகி திருக்கோயிலை எழுப்பினாராம். தொடர்ந்து ஸ்ரீகதலிவனேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளை பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். அதனால் இந்த அம்பாளுக்கு ஸ்ரீகாமகோடீஸ்வரி என்ற திருப்பெயரும் உண்டு.

அதிசய வாழைகள்... நான்கு பிரார்த்தனைகள்!

ஸ்ரீராமரின் குழந்தைகள் அவதரித்த தலம் இதுதான் எனவும், சீதாதேவி கர்ப்பிணியாக இருந்தபோது, ராமனின் ஆணைப்படி லட்சுமணன் சீதையைக் கொண்டுவந்து விட்ட இடம் இதுதான் என்றும் தகவல்கள் உண்டு. ராமபிரானின் அசுவமேதயாகக் குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டுவிட, புரவியை மீட்க வந்த லட்சுமணன் தோல்வி கண்டான். பின்னர் ராமபிரானே நேரில் வந்தார். வெற்றி தோல்வியின்றி நீண்டது போர்.

நிறைவில் வால்மீகி மூலம் லவனும் குசனும் தன் மைந்தர்கள் என்பதை அறிந்தார் ராமன். குடும்பம் இணைந்ததற்கு அடையாளமாக, அந்த இடத்தில் மகாகணபதியை பிரதிஷ்டை செய்தார்கள். உளியால் செதுக்காமல், பெரியதொரு கல்லை மற்றொரு கல்லால் தட்டித் தட்டி அவர்கள் உருவாக்கிய கன்னிமூல கணபதியை இன்றைக்கும் நாம் தரிசிக்கலாம்.

இங்கு வீற்றிருக்கும் மூலவர், சுயம்புலிங்கம். அவரைச் சுற்றிலும் பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. மழைநீரை மட்டுமே உறிஞ்சி வளரும் வாழைமரங்கள் இவை. இங்கு தோன்றும் வாழைக்கன்றுகளை வெளியே வேறு எங்கு கொண்டு போய் வைத்தாலும் வளராது. அதேபோல், வெளியிடங்களிலிருந்து வாழைக் கன்றுகளைக் கொண்டுவந்து கோயிலுக்குள் வைத்தாலும் வளராது.

அதிசய வாழைகள்... நான்கு பிரார்த்தனைகள்!

இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் எதையும் மனிதர்கள் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் பழுத்த பின்னர், அதைப் பஞ்சாமிர்தம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னரே சாப்பிடலாம். இதனால் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

இங்கே நிகழும் நான்கு விதமான வழிபாடுகள் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகின்றன.

1. கல்யாண வரம் வேண்டி பாயச நைவேத்தியம்

திருமணம் ஆகாத ஆண்களோ பெண்களோ, வியாழக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பாயசம் நிவேதனம் செய்து வழிபடவேண்டும். பின்னர் இறைப் பிரசாதமாகத் தரப்படும் பாயசத்தைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இந்தப் பிரார்த்தனையின் பலனாக விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதிசய வாழைகள்... நான்கு பிரார்த்தனைகள்!

2. பிரிந்த தம்பதி ஒன்றுசேர...

கருத்துவேற்றுமையால் பிரிந்துபோன தம்பதியர் மீண்டும் வாழ்க்கைத் துணைவருடன் இணையவேண்டி, இந்த ஆலயத்தை 108 முறை வலம் வந்து, நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து வழிபடுவதோடு, குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கவேண்டும். இந்த வழிபாட்டின் பலனாக தம்பதியருக்குள் ஒற்றுமை உண்டாகும். பிரிந்த தம்பதியர் மனம் ஒருமித்து வாழ்வார்கள் என்பது ஐதிகம்.

3. பிள்ளை வரம் தரும் வாழைக்காய் வழிபாடு

திருமணம் முடிந்து வெகுகாலம் ஆகியும் குழந்தை இல்லாமல் தவிக்கும் அன்பர்கள் அவசியம் வழிபடவேண்டிய ஆலயம் இது. குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து வாழைக்காய்களைப் பலியாகச் சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அதிசய வாழைகள்... நான்கு பிரார்த்தனைகள்!

4. நோய்கள் குணமாகச் சிறப்பு அபிஷேகம்!

பிணிகளால் அவதிப்படும் அன்பர்கள், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.