திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

திருக்கோயில் திருவுலா: பிரமபுரம் மேவிய பெம்மானே - திருப்பட்டூர் - 2

திருப்பட்டூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்பட்டூர்

நான்கு திக்கு களையும் - ஆகாயத்தையும் கவனித்து சிருஷ்டி செய்யும் பொருட்டு ஈசன் அருளிய ஐந்து முகங்களே பிரம்மனுக்கு அழிவையும் தந்தன எனலாம்.

பிறவாப் பெருமையை அடைய விரும்பிய பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் ஈசன் திருநடனம் புரிந்து அருள் செய்த நவ புலியூர்களையும் தரிசனம் செய்துவிட்டு தவத்தில் ஆழ்ந்தனர்.

அப்போது அங்கு தோன்றிய ஈசன், ஆன்மாக்களின் உய்வுக்கும் பிறவாத தன்மைக்கும் வகை செய்யும் திருப்பிடவூர் எனும் க்ஷேத்திரத்தின் பெருமைகளைச் சொல்லத் தொடங்கினார்.

‘பிறக்கும் எல்லா உயிர்களும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூவகை தீங்குகளில் சிக்கிக்கொள்கின்றன. அதன் காரணமாக மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கின்றன. பிறப்பை ஒழிக்கவே ஆன்மாக்கள் பிறக்கின்றன. ஆனால் அந்த பிறவியிலும் அவை ஓயாத கர்மாக்களில் சிக்கி சலிப்புறும் வண்ணம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கின்றன.

தான் எனும் அகந்தை, செயல்களின் மீது அதீதப் பற்று, நிலையானதை மறந்து நிலையற் றதை நிலையானது போல கருதும் மாயை இந்த மூன்றையும் அறிந்து, அவற்றிலிருந்து விலகி நிற்கும் ஆன்மாக்கள், எனது திருவடியை அடைந்து இன்புறும். என் சாயலாக, என்னிலிருந்தே உருவாகும் இந்த ஆன்மாக்கள் உயர்வை அடைய பல வழிகளை நான் அருளியுள்ளேன்.

எனினும் ஆன்மாக்கள் பாசத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கின்றன. ஆகவே உங்களின் வழியாக, அவர்கள் பயன் பெறும் வகையில் புண்ணியம் அருளும் தலத்தின் மகிமையைச் சொல்கிறேன்.

செய்த வினைகள் மறையவும், பல புண்ணி யச் செயல்கள் தொடரவும் விரும்பும் ஆன்மாக்கள் திருப்பிடவூர் எனும் தலத்தை அடைந்தால், அங்கு அவர்களைப் புதிய ஆன்மாவாக மாற்றுவேன். அதுமட்டுமன்றி, பூர்வஜன்ம வினைகளால் பாதிப்புக்கு உள்ளான அவர்களின் தலையெழுத்தையும் மாற்றித் தரும்படி பிரம்ம தேவனைப் பணித்துள்ளேன்.

எனவே, நீங்கள் இருவரும் அந்தப் புனித தலத்துக்கு விரைந்து செல்லுங்கள். அங்கு தவமிருந்து என்னை அடையுங்கள். அவ்வப்போது நான் வந்து வழிகாட்டுகிறேன்!’ என்று அருளினார் பரம்பொருள்.

ஈசனின் வழிகாட்டல்படி முனிவர்கள் இருவரும் திருப்பிடவூருக்கு விரைந்தனர்.பயண வழியில் அந்தத் தலம் மண்ணுலகில் உருவான விதம் குறித்தும் சிந்தித்தனர். அது ஈசனால் நடத்தப்பட்ட மாபெரும் தத்துவ லீலை என்றே சொல்லலாம்!

அது மாபெரும் ஊழிக் காலம். மால், அயன் உள்ளிட்ட தேவர்களும் பஞ்ச பூதங்கள் உள்ளிட்ட சகலமும் சிவத்துள் அடங்கின. இடையறாது சிவம் மட்டுமே நள்ளிருளில் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. மீண்டும் சிருஷ்டிக்க வேண்டிய காலம் வந்தது.

சிருஷ்டி தொடர்ந்தது. சிவம் தன்னுள் இருந்தே உயிர்களைப் படைத்தது. சகலர், பிரளயகலர், விஞ்ஞானகலர் எனும் மூவகை ஆன்மாக்களும் பூமியில் பிரிந்து வாழ ஆணவம், கன்மம் மாயை எனும் மும்மலங்களும் உதவின.

மலங்கள் இருக்கும்வரை பிறப்பும் இறப்பும் இடையறாது நீடிக்கும் என்ற நிலை உருவானது. பிறப்பையும் அதைத் தொடர்ந்து வரும் இறப்பையும் அறுத்துக்கொள்ள பதி, பசு, பாசம் எனும் தத்துவம் உருவானது.

எனினும் ஒவ்வொரு ஜீவனும் குற்றத்தில் வீழ்ந்து மீண்டும் மீண்டும் பூமியில் தாழ்ந்தன. முந்தைய வினைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஜீவனின் விதியும் பிறக்கும்போதே எழுதவும் செய்யப்பட்டது!

ஈசனைத் தவிர வேறு எதுவுமே இங்கு நிலையானது இல்லை என்பதே சாஸ்திரங்கள் கூறும் கூற்று. ஊழிக் காலத்தில் அனைத்துமே சிவத்தில் ஓர் அணுவில் அடங்கிவிட, அண்ட சராசரங்களும் அமைதியில் நிற்கும். மீண்டும் சிவம் பிரபஞ்சங்களை உருவாக்கும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனும் பணிகளை மேற்கொள்ள எண்ணற்ற பிரம்மாக்கள், விஷ்ணுக்கள், ருத்திரர்கள் தோன்றுவர்.

360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஓர் ஆண்டு. இப்படியான 100 ஆண்டுகள், ஒரு பிரம்மனின் ஆயுள். அந்த ஆயுள் முடிந்ததும் பிரம்மன் திருமாலின் நாபியில் அடங்கி விடுவார் என்கின்றன புராணங்கள்.

இப்படியிருக்க, ஒருநாள் பிரம்மனின் போதாத வேளை... அவருக்குள் விநோத எண்ணம் முளைத்தது.

நான்கு திக்கு களையும் - ஆகாயத்தையும் கவனித்து சிருஷ்டி செய்யும் பொருட்டு ஈசன் அருளிய ஐந்து முகங்களே பிரம்மனுக்கு அழிவையும் தந்தன எனலாம்.

திருக்கோயில் திருவுலா: பிரமபுரம் மேவிய பெம்மானே - திருப்பட்டூர் - 2
perumal

ஆம்! ஈசனுக்கு நிகராக தாமும் ஐந்து சிரமும் அளவற்ற ஆற்றலும் கொண்டிருக் கிறோமே, பிறகு ஏன் சிவனுக்கு நாம் அடிபணிய வேண்டும் என்ற செருக்கு பிரம்மனுக்குத் தோன்றியது. விளைவு ஈசனை அவமதித்தார். கருணாமூர்த்தியான ஈசன், பிரம்மனின் ஆணவத்தை ஒழிக்க எண்ணினார்.

கர்வம் கொப்பளித்த பிரம்மனின் 5-வது (மேல் நோக்கிய) சிரத்தை அறுத்தார். பிரம்மன் நான்முகன் ஆனார். இது திருக்கண்டியூரில் நடைபெற்றது.

ஐந்தாவது தலையோடு ஆணவ மும் ஒழிய, ஈசனை அடிபணிந்தார் நான்முகன். பாவத்துக்கு பிராயச் சித்தம் கேட்டார். சிவம் கனிந்தது.

``தென்னகத்தின் தலம் தோறும் சென்று வா! எங்கு வேத மந்திரங்களின் அதிர்வால் நீ கட்டுண்டு அமர்கிறாயோ, அங்கு நான் காட்சி தந்து உன்னை ஆட்கொள்வேன்'' என்றது சிவம்.

பிரம்மன் புனித யாத்திரையைத் தொடங் கினார். தலம்தோறும் சென்றவர், திருப்பிடவூர் எனும் இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்தார். இந்தப் புண்ணிய பூமியில், உடலும் உள்ளமும் சிலிர்க்கும் வண்ணம் வேத கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது!

சப்த ரிஷிகளும் அவர்களின் கீழ் பல்லாயிரம் முனிவர்களும் இணைந்து வேதபாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். இதுதான் ஈசன் குறிப்பிட்ட திருத்தலம் என்பதை உணர்ந்த நான்முகன், பாவ விமோசனம் வேண்டி ஒரு மகிழ மரத்தடியில் அமர்ந்து தவமியற்ற தொடங்கினார். காலம் உருண்டது; சிவனருள் பிரம்மனுக்குச் சீக்கிரம் வாய்க்கவில்லை!

- திருவுலா தொடரும்...

கண்ணன்
கண்ணன்

கண்ணன் எனும் கள்வன்!

கண்ணன் பிறந்ததே இரண்டு காரணங்களுக்காகத்தான் என்பார்கள் பெரியோர். ஒன்று வெண்ணெய்; மற்றொன்று பின்னை... அதாவது, நப்பின்னையை மணம் புரிய!

கை நிறைய வெண்ணெய் கொடுத்தாலும், திருடித் தின்பதில்தான் கண்ணனுக்கு விருப்பம். இன்றைக்கும் துவாரகை முதலான திருத் தலங்களில், பக்தர்கள் பரவசத்துடன் உரத்த குரலில் உச்சரிப்பது, ‘மாகன் சோர்’ என்ற திருநாமத்தையே!

மாகன் சோர் என்றால், வெண்ணெய்த் திருடன் என்று பொருள். ‘திருடா’ என்று அழைத்தாலும் சிரிக்கிறது அந்தத் தெய்வம்.

பானையிலிருந்து வெண்ணெய் திருடுவது மட்டுமல்ல; மொத்த வெண்ணெய்யையும் விழுங்கிய பிற்பாடு, வெண்ணெய் இருந்த பானையை கீழே போட்டு உடைத்து, அந்த ஒலியைக் கேட்பதிலே அளவற்ற ஈடுபாடு கண்ணனுக்கு என்கிறார் பெரியாழ்வார். பானைகள் உடையும் சத்தம் கேட்டு, துள்ளிக்குதித்து தனது பிஞ்சுக் கைகளைத் தட்டி மகிழ்வானாம் கண்ணன்.

நாமும், கிருஷ்ண ஜயந்தி அன்று வெண்ணெய் படைத்து கண்ணனுக் காகக் காத்திருப்போம். அவன் நம் இல்லம் தேடி வந்து நம் வினைகள் கரையவும் அருள்பாலிப்பான்!