Published:Updated:

திருமலை திருப்பதி! - 8

பெருரு  தாயார் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
பெருரு தாயார் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் மகிமைகள்

திருமலை திருப்பதி! - 8

திருப்பதி ஏழுமலையான் மகிமைகள்

Published:Updated:
பெருரு  தாயார் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
பெருரு தாயார் தரிசனம்!

வேங்கடமே விண்ணோர் தொழுவதும் மெய்ம்மையால்

வேங்கடமே மெய்வினை நொய்தீர்ப்பதுவும் - வேங்கடமே

தானவரை வீழத் தானாழிப் படைத் தொட்டு

வானவரைக் காப்பான் மலை

- திருமழிசை ஆழ்வார்

பெருரு  தாயார் தரிசனம்!
பெருரு தாயார் தரிசனம்!

கலியுகத்தில் பக்தர்களின் கஷ்டங்கள் தீர்ப்பதற்காகக் கல்லிலே இறங்கி அருள்பவன் அந்த திருமலை நாயகன். அவனை அர்ச்சா வதார மூர்த்தியாக - சங்கு, சக்ர, கதாதரனாகக் காணும்போது, அவர் சாட்சாத் அந்த ஶ்ரீமந் நாராயணனே என்பதை அறிந்துகொள்வது ஒன்றும் சிரமம் இல்லை.

ஆனால் அவனே ராஜகுமாரனாக எழிலார்ந்த தோற்றத்தில் மானுட ரூபம் தாங்கி வரும் நிலையில், காண்பவர்களுக்கு ஒரு மயக்கம் ஏற்படும். அப்படி மயங்கும்போதெல் லாம் கேட்கப்படும் கேள்வி `நீங்கள் யார்?' என்பதுதான். திருமலையின் வரலாற்றில் சில முறை பெருமாளிடம் இந்தக் கேள்வி கேட்கப் பட்டுள்ளது. அப்போதெல்லாம் பெருமாள் சொல்லும் பதில் ஒன்றுதான்.

“நான் சந்திர வம்சம், வசிஷ்ட கோத்திரம். தேவகி என் தாய். வசுதேவர் என் தந்தை. பலராமர் எனக்கு மூத்தவர், சுபத்திரை என் தங்கை” என்பாராம். தேவகியின் வயிற்றில் அவதரித்தவர்தான். ஆனால் ‘என்ன தவம் செய்தனை...’ என்று தேவரும் மூவரும் வியந்து போற்றுவது அவளை அல்லவே... யசோதையைதானே!

கண்ணனைச் சீராட்டிப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்த புண்ணியவதி யசோதை அல்லவா. கண்ணனுக்குச் செய்ய வேண்டிய அத்தனை பணிவிடைகளையும் செய்து காத்து வளர்த்தவள் அவள். அவனுக்கு ஒருகுறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று போற்றி வளர்த்த வளுக்கு அந்த மாயக்கண்ணன் ஒரு குறையை வைத்துவிட்டான்.

பிள்ளைக்குப் பெண்பார்த்து அவனுக்குத் திருமணம் செய்துகொடுப்பதில் ஒரு தாய்க்கு இருக்கும் ஆனந்தம் வேறு யார்க்கு இருக்கும்? அந்த ஆனந்தத்தைக் கண்ணன் யசோதைக்குத் தரவேயில்லை. அந்தக் குறை நீங்காது அவள் வைகுண்டம் போகவும் விரும்பவில்லை. மாறாக பூலோக வைகுண்டத்தில் மறுபிறப்பு எடுக்க நினைத்தாள். அதற்குப் பிரம்மன் வழிகாட்டினார்.

வராக சுவாமியின் க்ஷேத்திரத்தில் வந்து பிறந்தாள். வராகமூர்த்திக்குச் சேவை செய்து அந்த ஹரியின் வரவுக்காய்க் காத்திருந்தாள். இப்பிறப்பில் அவள் பெயர் வகுளாதேவி. வகுளா என்றால் மலர்... வகுளா என்றால் புத்திக்கூர்மை... வகுளா என்றால் பொறுமை... வகுளா என்றால் பொறுப்பானவள்!

அந்த ஹரிக்கு மீண்டும் அன்னையாகிட பொறுமையுடன் காத்திருந்தவளுக்கு ‘வகுளா’ என்ற பெயர் பொறுத்தம்தானே! வராக சுவாமியின் கருணையோடு காலம் கழித்த வளைஶ்ரீநிவாசன் கண்டார். தன் தாயாகக் கொண்டார். திருமலையில் ஶ்ரீஹரி ஶ்ரீநிவாசனாய் அவதரிக்கப் பல காரணங்கள். அவற்றில் ஒரு காரணம் வகுளாதேவி; மறுகாரணம் வேதவதி.

ராமாவதாரக் காலத்தில் இருந்து ஹரியைச் சேரக் காத்திருப்பவள் வேதவதி. திரேதா யுகத்தில் அந்தணர் குலத்தில் தோன்றிய கன்னிகை. ஶ்ரீமந் நாராயணனே தனக்கு மணாளன் ஆகவேண்டும் என்று ஆசைகொண்டு வாழ்ந்தவள். ஆனால் ராமாவதாரத்தில் ஶ்ரீராமர் ஏக பத்தினி விரத நாயகன். அந்தப் பிறப்பில் அவனை மணப்பது சாத்தியமில்லை என்பதை வேதவதி அறிந்துகொண்டாள். ஆனால், தனது வேண்டுதல் நிச்சயம் மற்றொரு பிறப் பில் நிறைவேறும் என்று புரிந்துகொண்டாள்.

ராவணன், வேதவதியைப் பார்த்தான். அவள் அழகில் மோகம் கொண்டு வலுக் கட்டாயமாக அவளை அடைய விரும் பினான். நெருப்பைவிடத் தூயவள் வேதவதி. அவளைத் தொட முயன்று தோற்றான் ராவணன். `ஶ்ரீஹரியின் வில்லால் விரைவில் நீ வீழ்வாய்’ என்று ராவணனுக்குச் சாபம் இட்டு அக்னியில் வீழ்ந்தாள் வேதவதி. அவளைப் பத்திரப்படுத்தி பிரம்மலோகம் அனுப்பிப் பாதுகாத்தான் அக்னி.

அவள் காத்திருப்பு நிறைவேறும் கலியுகம் நெருங்கியது. அந்தக் கார்முகிலோன் மண்ணுலகில் மானுட ரூபம் கொண்டு அவதாரம் செய்தார். வேதவதியும் அவதரிக்க முடிவு செய்தாள். பிறப்பெடுக்க ஆகாச ராஜனைத் தெரிந்துகொண்டாள்.

திருமலை திருப்பதி! - 8

ஆகாசராஜன், நாராயணபுரத்தைத் தலைமையாகக் கொண்டு ஆட்சி செய்த அரசன். தரணிதேவி என்னும் அழகான மனைவி இருந்தும் மகப்பேறு இல்லாமல் தவித்தவன். அவன் குறை நீங்கும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த பிருகஸ்பதி, ஆகாசராஜனை புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வற்புறுத்தினார்,

யாகம் செய்ய நிலத்தைப் பண்படுத்தினர். அப்போது ஆயிரம் இதழ்களோடு ஒரு தாமரை மலர்ந்தது. அதில் ஆனந்தவல்லியாய் ஒரு மகவு தவழ்ந்தது.

“ஆகாசராஜனே! இந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து வா. எல்லா நலன்களும் கிட்டும்” என்று அசரீரியும் ஒலித்தது. ஆசையோடு அந்த மகவை அள்ளிக் கொண் டாள் தரணிதேவி. பத்மத்தில் தவழ்ந்தவள் ஆதலால் `பத்மாவதி' என்று பெயரிட்டாள்.

ஶ்ரீநிவாசன் ஒரு\முறை குதிரையில் ஏறி ஏழு மலைகளிலும் சஞ்சாரம் செய்தார். காட்டில் ஒரு மதயானை அவரை வழிமறித்தது. வேங்கடவன் முன் ஓடியது களிறு அல்ல... களிறின் ரூபம் கொண்ட காலம். ஶ்ரீநிவாசனுக்கு பத்மாவதியைக் காட்ட காலம் எடுத்த கோலம். வில் ஏந்திய வேங்கடவன் அதைத் துரத்தினார். மலைகளைக் கடந்தும் விரட்டினார். பாதை மாறி பத்மாவதி தோட்டத்தில் தன் குதிரையைச் செலுத்தினார்.

அப்போது, அந்த வனமே நடுக்கும்படிக் களிறு பிளிறி மறைந்தது. அதைக் கேட்டு நடுங்கினார்கள் பத்மாவதியும் தோழியரும். குதிரையில் வந்த ஆண்மகனைப் பார்த்து அஞ்சினார்கள். களிறு போன திசை தெரியவில்லை. ஆனால் ஹரியோ கலியுகம் முடியுமட்டும் தன் துணை இருக்கும் திசையை அறிந்துகொண்டார்.

தலைவி நாணத்தால் அஞ்சி மறைந்து நின்றாள். தலைவனோ அச்சமின்றிக் குதிரையில் இருந்து இறங்கி நடந்துவந்தார். துணிச்சல் கொண்ட தோழி ஒருத்தி ஶ்ரீநிவாசனை நிறுத்தினாள். “இது பரபுருஷர்கள் பிரவேசிக்கக் கூடாத அந்தப்புரம். யார் நீங்கள்? உங்கள் ஊர் என்ன?” என்று கேட்டாள்.

ஶ்ரீநிவாசனோ வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டதை உணர்ந்தார். “நான் சந்திர வம்சம், வசிஷ்ட கோத்திரம். தேவகி என் தாய். வசுதேவர் என் தந்தை. பலராமர் எனக்கு மூத்தவர், சுபத்திரை என் தங்கை” என்றார்.

தாமரை போன்ற மலர்ந்த முகம் உடைய பத்மாவதி, அந்த அழகனின் பதில் கேட்டு செடிகளுக்கு இடையே தெரியும் மலரைப் போல எட்டிப் பார்த்தாள். அவளுக்கு எல்லாம் அவர்தான் எனப் புரிந்துவிட்டது!

- தரிசிப்போம்.

திருமலை திருப்பதி! - 8

`வேங்கடவனின் மகிமை!'

திருப்பதி வேங்கடாசலபதி என் இஷ்ட தெய்வம். ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவரை தரிசித்து வரவில்லை என்றால் என்னவோ போல் இருக்கும். ஒவ்வொரு முறையும் ஓர் அனுபவம் வாய்க்கும் எங்களுக்கு!

30 ஆண்டுகளுக்கு முன்பு - திருமணமான புதிதில், நண்பர் ஒருவர் திருப்பதிக்குச் செல்வதா கக் கூறினார். புதுமணத் தம்பதி என்பதால் எங்களையும் உடன் அழைத்தார்.

நாங்களும் அவரோடு சென்றோம். இரவு விடுதியில் தங்கியிருந்துவிட்டு அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் தயாராக இருந்தோம். நண்பர் தரிசனத்துக்கு அழைத்துச்சென்றார்.

சிறு காத்திருப்பு. பின்பு பெருமாளின் தரிசனம் கிடைத்துவிட்டது. அதுவும் எப்படி... சுமார் 20 நிமிடம் பெருமாள் சந்நிதானத்திலேயே நின்று தரிசனம் செய்யும் சுப்ரபாத சேவை கிடைத்தது!

20 நிமிடங்கள் என்கிறேனே... ஆனால் அப்போது என்ன வேண்டிக்கொண்டேன் என்று கேட்டால், எதுவுமே இல்லை. அப்படியே மலைத்துப் போய் அந்த மலையப்பனைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தோம் நானும் என் மனைவியும். அதன் பிறகு ஆண்டுதோறும் திருப்பதிக்குச் சென்று வருகிறோம். ஆனால், மீண்டும் அப்படி நீண்ட நேரம் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றபோது, எனக்கு 60 முடிந்துவிட்டது. மனைவிக்கு 58. உடல்நலக் குறைவுகள் எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்ட வயது. திருப்பதிக்குச் செல்லும் வழக்கத்தை மட்டும் கைவிட முடியவில்லை. அந்தமுறை கடுமையான கூட்டம். ஒரு நாள் முழுக்கக் கூண்டுகளில் அடைபட்டுக் கிடந்தோம்.

திறந்துவிட்டதும் மக்கள் முண்டி அடித்துக் கொண்டு ஓட, என் மனைவி திணறிவிட்டாள். அவளைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு வெளியே செல்லமுடியுமா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது. `இனி திருப்பதிக்கு வரவே வேண்டாம்' என்று மனம் சொன்னது. கஷ்டத்தோடு கஷ்டமாக சந்நிதிக்குச் சென்றோம். ஒரு கணம் நின்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தரிசனம் செய்தோம். பின்பு வெளியே வந்தோம்.

அதிகாலை குளிர்ந்த காற்று மேனியில் பட்டது. `நெருக்குண்டு தவித்தோமே' என்கிற எண்ணமே மனதில் இல்லை. மனைவியும் அவ்வளவு சந்தோஷமா இருந்தாள். அடுத்த முறை வீட்டில் அனைவரையும் அழைத்து வரவேண்டும் என்று சொன்னாள்.

தரிசனத்துக்கு முன்பு `திருப்பதியே வேண்டாம்' என்ற எண்ணம் நிறைந்திருந்த எங்கள் மனதில், தரிசனம் முடிந்ததும் `மறுபடி எப்போது' எனும் ஆசை தோன்றியதென்றால் அது அந்த வேங்கடவனின் மகிமைதானே?


- எஸ். நாகராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism