Published:Updated:

ஆலயம் தேடுவோம்: ஒளி பெறுமா ஆதவன் பூஜிக்கும் ஆலயம்?

ஈசன் திருமூலநாதர்
பிரீமியம் ஸ்டோரி
ஈசன் திருமூலநாதர்

கோயில் சுவர்களில் பாண்டியனின் உருவமும் மீன் சின்னமும் காணக் கிடைக்கின்றன.

ஆலயம் தேடுவோம்: ஒளி பெறுமா ஆதவன் பூஜிக்கும் ஆலயம்?

கோயில் சுவர்களில் பாண்டியனின் உருவமும் மீன் சின்னமும் காணக் கிடைக்கின்றன.

Published:Updated:
ஈசன் திருமூலநாதர்
பிரீமியம் ஸ்டோரி
ஈசன் திருமூலநாதர்
கோயில்கள் ஓர் ஊருக்கு அழகு சேர்ப்பவை மட்டுமல்ல, உயிர் நாடியும்தான்.

எந்த ஊரில் கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு பூஜைகள் முறையாக நடைபெற்று வருகின்றனவோ, அந்த ஊர் மிகவும் செழிப்போடும் சீரோடும் திகழ்கிறது என்று பொருள்.

ஆலயம் தேடுவோம்: ஒளி பெறுமா ஆதவன் பூஜிக்கும் ஆலயம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரணம், கோயில் மக்கள் கூடும் இடம். செல்வங்கள் சேரும் இடம். கல்வி, கலைகள் முன்னுரிமை காணுமிடம். அதனால்தான் மன்னர்கள் அந்தக் காலத்தில் ஊர்தோறும் கோயில்களைக் கட்டினார்கள். இறைவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் தலங்களைக் கண்டறிந்து அங்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தனர். கோயிலை அடிப்படையாகக்கொண்டு ஒழுக்கமும் நீதியும் செல்வ வளமும்கொண்ட ஒரு சமூக அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால், அந்நியர்களின் படையெடுப்பால் இந்த மண்ணின் மதம் களையிழந்தது. அதன் அடையாளங்கள் பராமரிப்பின்றி மண்மூடிப் போயின. அப்படிப்பட்ட ஓர் ஆலயம்தான் ஈஸ்வரகண்ட நல்லூரில் உள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விழுப்புரத்திலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது ஈஸ்வரகண்ட நல்லூர், திருமூலநாத சுவாமி திருக்கோயில். இக்கோயில் 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட வரகுணராம பாண்டியன் என்னும் குலசேகர சோமாசிரியார் என்ற மன்னனால் கட்டப்பட்டது என்கிறது இங்குள்ள கல்வெட்டு. கோயில் சுவர்களில் பாண்டியனின் உருவமும் மீன் சின்னமும் காணக் கிடைக்கின்றன.

திருமூலநாத சுவாமி திருக்கோயில்
திருமூலநாத சுவாமி திருக்கோயில்

இங்கு ஈசன் திருமூலநாதர் என்ற திரு நாமத்தோடும் அம்மை திரிபுரசுந்தரி என்னும் திருநாமத்தோடும் அருள்பாலிக்கின்றனர். முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாய் இறைவன் எழுந்தருளியிருக்க, அதை அறியாது இருந்தனர் இப்பகுதி மக்கள். ஆனால், பசுக்களோ பதியை அறியும். ஈசனின் சுயம்புமூர்த்தங்கள் உள்ள இடங்களைத் தேடிச்சென்று தானாகப் பால் சுரக்கும். அதைக் காணும் மக்கள் வியப்புற்று அந்த இடத்துக்குச் சென்று லிங்கத்தை தரிசனம் செய்து வழிபட்டு, அங்கு ஆலயம் எழுப்பிய நிகழ்வுகள் நம் நாடெங்கும் நடந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக பசுவால் அடையாளம் காட்டப் பட்ட ஈஸ்வர மூர்த்தங்களுக்கு பசுபதீஸ்வரர் என்ற திருப்பெயரே வழங்கப்படும். ஆனால், இந்தத் தலத்தில் ஈசன் திருமூலநாதராக அருள் பாலிக்கிறார். ஈஸ்வரன் சுயம்புவாகக் காணக் கிடைத்த ஊர் என்பதால் இந்த ஊருக்கு ஈஸ்வர கண்ட நல்லூர் என்றே பெயர் ஏற்பட்டது.

ஈசன் திருமூலநாதர்
ஈசன் திருமூலநாதர்

இங்கு கிழக்கு நோக்கிய சந்நிதியில் ஈசனும், தெற்கு நோக்கிய சந்நிதியில் அன்னை திரிபுர சுந்தரியும் எழிற்கோலம் கொண்டு அருள் கிறார்கள். மனத்தின் துயர்களை எல்லாம் களையும் அழகுத் திருமுகம் அன்னையுடையது. அன்னை தன் வலக்கரத்தால் அபயமும் இடக் கரத்தால் தன் தாளையும் காட்டி அருள்கிறாள். அன்னையின் தாள் பற்றுவோருக்கு என்னிலை யிலும் தாழ்வு இல்லை என்று போற்றுகின்றனர் அடியார்கள்.

ஆண்டில் ஆறு நாள்கள் இந்த ஆலயத்து இறைவனின் திருமேனியை சூரியன் தன் ஒளிக்கற்றைகளால் வருடித் தொழுகிறான். பங்குனி மாதத்தில் மூன்று நாள்களும் ஆவணி மாதத்தில் மூன்று நாள்களும் காலை ஆறு மணி முதல் ஏழு மணிவரை இந்த அதிசயம் நடைபெறும். எந்த தினத்தில் இந்த அற்புத வழிபாடு நடைபெறும் என்பதை அந்த ஈசனே உறுதி செய்வார் என்கிறார்கள் பக்தர்கள்.

திரிபுரசுந்தரி
திரிபுரசுந்தரி

சூரியனின் ஒளிபடர வாய்ப்பாக ஒன்பது துளைகள் கொண்ட கற்பலகை சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக ஒளி பாய்ந்து ஈசனின் மீது ஒன்பது கதிர்களாக விழுவதை, நவகிரகங்களும் ஈசனை வந்து வழிபடும் காட்சி என்று போற்றுகின்றனர் ஊர் மக்கள்.

ஆலயத்தில் நர்த்தன விநாயகர், சந்திரன், சூரியன், நவகிரக சந்நிதிகள் ஆகியனவும் வெளிப்புற பிராகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகப் பெருமான், சண்டிகேஸ்வரர், தட்சிணா மூர்த்தி ஆகியோரின் சந்நிதிகளும் காணப்படுகின்றன. காண்போரின் மனம் மயங்கச் செய்கிற விஷ்ணுவின் மோகினி ரூப சிற்பம் ஒன்றும் இங்குள்ளது.

திருமூலநாத சுவாமி திருக்கோயில்
திருமூலநாத சுவாமி திருக்கோயில்

ஆலயத்துக்கு அருகே உள்ள ஒரு கிணற்றை சுத்தம் செய்தபோது ஒரே கல்லால் ஆன ஸ்தூபம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் நரசிங்கப் பெருமாள், சக்கரம், சங்கு, நாமம் ஆகியவை காணப்படுகின்றன. அதுவும் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டால் கோயிலின் மகத்துவம் இன்னும் அதிகரிக்கும்.

ஆனால், இவையெல்லாம் குடத்தில் இட்ட விளக்குபோல ஒளிமங்கிக் கிடக்கின்றன. காரணம், இந்தக் கோயில் பராமரிப்பின்றிப் போனதுதான். கருங்கற்களால் எழுப்பப்பட்ட மதிற்சுவர், கற்களாலும் சுதையாலும் வடிவமைக்கப்பட்ட அழகிய கோபுரம் என ஒருகாலத்தில் எழிலோடு விளங்கிய இந்த ஆலயம், தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்து அறநிலையத்துறையின் பராமரிப்பில் இருக்கும் இந்தக் கோயிலில் தற்போது ஒரு கால பூஜைகூட நடைபெறுவதில்லை.

திருமூலநாத சுவாமி திருக்கோயில்
திருமூலநாத சுவாமி திருக்கோயில்

உலகை ஆளும் ஈசனின் சந்நிதி இருளடைந்து கிடக்கிறது. ஒளிபொருந்திய வைரத்தை இருண்ட பெட்டிக்குள் வைத்தது போல அருள் வழங்கும் அன்னையின் சந்நிதி களையிழந்து கிடக்கிறது. சுவர்கள் முழுவதும் புல்பூண்டுகள் முளைத்துக் கட்டடத்தின் உறுதியைக் குலைத்துப் போட்டிருக்கின்றன.

இந்த ஆலயம் குறித்து ஊர் மக்களிடம் பேசினோம்...

இந்த ஆலயம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட நல்ல முறையில் வழிபாடுகள் நடைபெறும் ஆலயமாக இருந்தது என்றும் அதன்பின்தான் இந்த நிலையை அடைந்தது என்றும் கூறுகின்றனர். வழிபாட்டில் இருந்த காலங்களில் கார்த்திகை மாத சோமவார வழிபாடு கோலாகலமாக நடைபெற்று வந்துள்ளது. சூரசம்ஹாரம், பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், வைகாசி பிரம்மோற்ஸவம் என்று திருவிழாக்கள் களைகட்டுமாம். ஆனால், இன்று ஐயனுக்கு பூஜை செய்யக்கூட ஓர் அந்தணர் இல்லை. வழிபட வரும் பக்தர்களே நேராகச் சென்று கற்பூரம் காட்டி வழிபட்டுச் செல்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்தக் கோயிலுக்கென்று 44 ஏக்கர் நிலம் சொத்தாக உள்ளது. சேந்த மங்கலம் கல்வெட்டில் இந்த ஆலயம் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இவ்வளவு இருந்தும் இந்த ஆலயத்தை பரிபூரணமாக சீர் செய்ய அறநிலையத்துறை முன்வரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலயத்தைச் சீர்செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது மக்கள் சில கோரிக்கைகளை வைத்தனர். அதை அறநிலையத்துறை ஏற்காததால் நிதி திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. அதன்பின் அதுகுறித்த பேச்சே எழவில்லை. இப்போது ஊர் கூடி முடிவு செய்து திருப்பணி செய்ய காத்திருக்கிறார்கள். பழைமை மாறாமல் எப்படி திருப்பணி செய்ய முடியுமோ அப்படிச் செய்ய ஒத்துழைப்பு தருவதாக முடிவெடுத்துள்ளனர்.

இந்த ஊரில் 500 குடும்பங்கள் உள்ளன. ஊர் தன் பழைய அழகை இழந்து நிற்கிறது. கோயில் மீண்டும் பொலிவு பெற்றால் தங்கள் ஊரும் பொலிவு பெறும் என்று ஊர் மக்கள் நம்புகின்றனர். அனைத்து குடும்பங்களும் முடிந்த அளவு உதவக் காத்திருக்கிறார்கள்.

ஓர் ஊரே ஈசனின் ஆலயம் எழுவதைக் காணக் காத்திருக்கிறது. அதற்கான ஆணையை எதிர்பார்த் திருக்கிறது. நாமும், இந்த ஆலயம் மீண்டும் பொலிவுடன் எழும்ப நம்மால் ஆன உதவியைச் செய்வோம். சிவாலயப் பணிக்குத் தரும் பொருள் சிறிதே ஆனாலும் அதை இறைவன் பெரிதாய்க் கணக்கிட்டு, நமக்கு நல்லருளாய்த் திருப்பித் தருவார். ஆலய வழிபாடென்பது பல ஆயிரம் ஆண்டுக்கால நம் மரபின் தொடர்ச்சி. அந்தச் சங்கிலித் தொடர் அறுந்துபோகாதவாறு காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

பொருளாய், பணியாய், சொல்லாய் இந்த அருந்திருப் பணியில் நாம் பங்கெடுக்க வேண்டும். விரைவிலேயே திருமூலநாதர் திருக்கோயிலில் எழுந் தருளிக் குடமுழுக்கு காண வேண் டும். திருப்பணியில் பங்கு பெற்று திரிபுர சுந்தரியின் அன்புக்கும் திருமூலநாதரின் அருளுக்கும் பாத்திரராவோம்.

எப்படிச் செல்வது : விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் 31 கி.மீ தொலைவில் உள்ளது ஈஸ்வரகண்ட நல்லூர் (தொடர்புக்கு: தட்சிணாமூர்த்தி- 96987 52644, பாலசுப்பிரமணியன்- 94872 41371).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism