Published:Updated:

திருநாங்கூரில் 127வது ஆண்டு 11 கருடசேவை உற்சவம்! - துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்!

திருநாங்கூர் கருட சேவை
திருநாங்கூர் கருட சேவை

108 திவ்ய தேசங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் ஆண்டுக்கொரு முறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

வைணவத்தில் 'பெரிய திருவடி' எனப்படும், கருடாழ்வார் மீது இறைவன் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை'. கருட சேவையை தரிசித்தால் பல புண்ணிய பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த நிலையில், ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள நாங்கூர் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் 11 கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

108 திவ்ய தேசங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் ஆண்டுக்கொரு முறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

திருநாங்கூர் கருட சேவை
திருநாங்கூர் கருட சேவை

11 பெருமாள்கள் வரலாறு!

பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது நீங்க நாங்கூர் திருத்தலம் சென்று, 11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படிக் கூறினார் திருமால்.

சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார். அதன் நிறைவின்போது 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாகத் தோன்றி திருமால் காட்சி தந்தார். அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்கள் என்கிறது தலவரலாறு.

127 ஆண்டுகளுக்கு முன்பு 11 திவ்யதேசப் பெருமாளையும் ஒரு நாளில் திருநாங்கூரில் எழுந்தருளச்செய்யும் வைபவத்தை பக்தர்கள் ஏற்படுத்தினர். அந்த வைபவம் இடைவிடாமல் இன்றுவரை நடந்துவருகிறது. இந்த வைபவம் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு, அன்று மாலை திருநாங்கூரில் பெருமாள்களுக்கு மங்களாசாசனம் செய்து வைத்த நிகழ்வோடு தொடங்கியது. அன்றிரவு மங்களாசாசனம் முடிந்து இரவு அர்த்தஜாம பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து, உற்சவத்தின் சிறப்பு நிகழ்வாக, நேற்று (12.2.21 ) மதியம் 1.30 மணியளவில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திருக்கோயில்களிலிருந்து ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோயில்), ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோயில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய 11 பெருமாள் உற்சவமூர்த்திகள் திருநாங்கூர் மணிமாடக் கோவில் பந்தலில் எழுந்தருளினர். பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்தார்.

அதையடுத்து, இரவு 12 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருளினார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது. இன்று மாலை திருவெள்ளக்குளம், திருத்தேவனார்தொகை, திருவாலி ஆகிய தலங்களில் திருமங்கையாழ்வார் எழுந்தருள, திருப்பாவை, திருமஞ்சன சாற்றுமறையும் நடைபெற உள்ளன. பின்னர், ஆழ்வார் திருநகரியை அடைந்த பிறகு ஸ்ரீவயலாலி மணவாளன் கருட சேவையும், திருமங்கையாழ்வார் மங்களா சாசனமும் நடைபெறும்.

நாங்கூர் 11 கருட சேவை 127 வது ஆண்டு உற்சவத்தில், தமிழகம் மட்டுமன்றி பல மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சீர்காழி, நாகை, மயிலாடுதுறையில் இருந்து திருநாங்கூருக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு 11 பெருமாள்களையும் வழிபட்டு சாமி தரிசனம் செய்தார். இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுவதால் இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு