Published:Updated:

திருநாங்கூர் பெருமாள் கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம்!

பெருமாள்
பெருமாள்

திருநாங்கூர் பெருமாள் கோயிலின் புதிய தேர்.

திருநாங்கூர் அருள்மிகு வண்புருஷோத்தம பெருமாள் கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பெருமாள்
பெருமாள்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 32-வது தலமான அருள்மிகு வண்புருஷோத்தம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ புருஷோத்தம நாயகி தாயார் சமேத ஸ்ரீ வண்புருஷோத்தம பெருமாள் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு திருத்தேர் ஒன்று இல்லாதது பெருமாள் பக்தர்களுக்கு பெரும் குறையாக இருந்தது. எனவே, பக்தர்கள் மற்றும் கிராம மக்களின் நன்கொடையில் பல லட்ச ரூபாய் மதிப்பில் 34 அடி உயரத்தில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. இந்தத் தேரின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது.

திருத்தேரின் வெள்ளோட்டத்தை முன்னிட்டுக் கோயில் மண்டபத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன. காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தாயாருடன், சுவாமி தேரில் எழுந்தருள, யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக்கொண்டு பட்டாச்சாரியார்கள் ரத பிரதிஷ்டை செய்து வைத்தனர். அதன் பின் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்று நான்கு வீதிகள் வழியே வலம் வந்தது. வழியெங்கும் இருபுறமும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளைத் தரிசித்தனர்.

தேர்
தேர்

இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் கிருஷ்ணமாச்சாரி, கர்ணன் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் செய்திருந்தனர். திருத்தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு திருவெண்காடு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு