திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

’ஈசன் காட்டிய திருத்தலம் திருநாவலூர்!’

திருநாவலூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருநாவலூர்

அருள்மிகு மனோன்மணி அம்மை சமேதராக அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோயில்

விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால், விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது திருநாவலூர். பாடல் பெற்ற தலம். அருள்மிகு மனோன்மணி அம்மை சமேதராக அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் புண்ணிய க்ஷேத்திராம் இது!

பக்தஜனேஸ்வரரா... திருப்பெயரே விசேஷமாக இருக்கிறது அல்லவா... ஆமாம்! தேடி வரும் பக்தர்களுக்கு அருள்வாரி வழங்கும் வள்ளல் இந்த சிவபிரான்.

பக்தஜனேஸ்வரர்
பக்தஜனேஸ்வரர்
சுந்தரர்
சுந்தரர்


சுந்தரர் வாழ்வில் அருளாடல் நிகழ்த்தி, அவர் வாயால் `பித்தா!’ என்று தம்மை அழைக்கவைத்து, எம்பெருமான் அவரை தடுத்தாட்கொண்ட தலம், திருவெண்ணெய் நல்லூர் என்பதை நாம் அறிவோம். இறைவனின் தோழன் என்றே ஞானநூல்கள் பலவும் போற்றும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அவதரித்த தலம், இந்தத் திருநாவலூர் என்கிறார்கள் பக்தர்கள்!

இங்கே பக்தஜனேஸ்வரராக சிவம் கோயில் கொண்ட திருக்கதை அற்புதமானது.

கயிலாயத்தில் பரமேஸ்வரனுடன் அளவளாவிக் கொண்டிருந்த உமையம்மைக்கு விநோதமான ஆசை எழுந்தது. பூவுலகில் வந்து தியானம் செய்து பரமனை அடைய வேண்டும். அதற்கான தக்க இடத்தைக் காட்டுமாறு பரமனையே வேண்டினார்.

ஜோதிப் பிழம்பாக பரமனார் நின்ற அண்ணாமலைக்கும், ஆனந்தத் தாண்டவம் ஆடியருளும் சிதம்பரத்துக்கும் இடைப்பட்டதாக திருநாவலூரைக் காட்டினார் ஐயன்.

விநாயகரையும் முருகனையும் அழைத்துக் கொண்டு, சேடிப் பெண்கள் புடைசூழ நாவலூர் அடைந்த பெருமாட்டி, தீர்த்தம் ஒன்றை உருவாக்கும்படி சூலினி சக்தியை பணித்தார். சூலினிதேவி, சூலத்தை நிலத்தில் அமிழ்த்த, பாதாள கங்கை பீறிட்டு வெளிக் கிளம்பியது. அதுவே ஜம்பூநத தீர்த்தமானது.

தீர்த்த நீரையும் விநாயகர் கொணர்ந்த மலர்களையும் கொண்டு, சிவராத்திரி இரவின் முதலிரண்டு ஜாமங்களில் பூஜை நடத்தினாள் அம்மை. பின்னர், வேலாயுதத்தால் முருகன் உருவாக்கிய சக்தி தீர்த்தத்தின் நீர்கொண்டு அடுத்த இரண்டு ஜாமங்களின் பூஜையை நடத்தினாள்.

நிறைவில் பரமனார், தமது அருள் நடனக் காட்சியையும் நல்கினார். தியான மார்க்கத்தைக் கைக்கொண்டு, மனத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி, இறைவனை அடைவதற்கான முறையை அம்பிகை இங்கே கைக்கொண்டதால், அம்பிகைக்கு ‘மனோன்மணி’ என்பது திருநாமம். மனத்தின் சக்தியைத் தட்டியெழுப்பி, இறைவனை அடைகிற வழியை, ஆன்மாக்களும் தேடவேண்டும் என்று பிரார்த்தித்த பிராட்டியார்,

‘பக்தர்களுக்கு அருள் வழங்கும் ‘பக்த ஜனேஸ்வரர்’ எனும் திருநாமத் துடன் பரமனார் இங்கே காட்சி தர வேண்டும்’ என்றும் கோரிக்கை வைக்க, அதன்படியே ஐயனும் இங்கே நிலைபெற்றார். அம்பிகையே சிவராத்திரி நாளில் இங்கு வழிபாடு நடத்தியதால், அதே நாளில் நாமும் வழிபாடு நடத்துவது, எல்லையில்லாத பலன்களைத் தரும்.

கோவலன் நான்முகன் வானவர் கோனும்
குற்றேவல் செய்ய
மேவலர் முப்புரம் தீயெழுவித்தவன் ஓர் அம்பினால்
ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து அனை
ஆளுங்கொண்ட நாவலனார்க்கு
இடமாவது நம் திருநாவலூரே


- என்று சுந்தரர் போற்றிய பக்தஜனேஸ்வரரை மனதால் வணங்கி ஆலயத்தை வலம் வருவோம்.

சிவாலயம்
சிவாலயம்
உள் பிராகாரம்
உள் பிராகாரம்
பக்தஜனேஸ்வரர் கோயில்
பக்தஜனேஸ்வரர் கோயில்
சுந்தர மூர்த்தி திருக்கோயில்
சுந்தர மூர்த்தி திருக்கோயில்


1300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் என்கிறார்கள். ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோபுர வாயில் கடந்து உள்ளே நுழைந்தால், அழகும் அமைதியும் ததும்ப காட்சி தருகிறது ஆலயம். பிரமாண்டமான நந்தி சிவச் சந்நிதியை எதிர்நோக்கி அமர்ந்திருக்க, அருகிலுள்ள சிங்க மண்டபத்தை ஒட்டியபடி அம்பாள் சந்நிதிக்கான பாதை செல்கிறது.

இதைக் கடந்ததும் உள் பிராகாரம். கிழக்குச் சுற்றில்- 16 பட்டைகளுடன் கூடிய நரசிங்க லிங்கம்; நரசிங்க முனையரையர் ஸ்தாபித்து வழிபட்டது. தெற்குச் சுற்றில்- பொள்ளாப் பிள்ளையார், சேக்கிழார், சைவ நால்வர், அறுபத்து மூவரும், தொகையடியார்களும். தொடர்ந்து சப்தமாதர்கள். தென்மேற்கு மூலையில்- வலம்புரி விநாயகர். அடுத்து சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர், பன்னிரு கரங்க ளுடன் மயிலேறுநாதராக அருள்கிறார்.

தொடர்ந்து நகர்ந்தால்... மேற்குச் சுற்றுத் திருமாளிகையில் முருகனுக்கு அருகில், விஷ்ணு சேவை சாதிக்கிறார். அடுத்து, கிருத யுக லிங்கம்; அதற்கும் அடுத்து, சண்டிகேஸ்வரர். தொடர்ந்து திரேதா யுக லிங்கம்; பிரம்மா; துவாபர யுக லிங்கம்; கலியுக லிங்கம்.

ஆறுமுகர்
ஆறுமுகர்
சுந்தர மூர்த்தி சுவாமி
சுந்தர மூர்த்தி சுவாமி
சப்த லிங்கங்கள்
சப்த லிங்கங்கள்


வடமேற்கு மூலையில் தனிச் சந்நிதியில் கஜலட்சுமி. வடக்குச் சுற்றில் சப்தரிஷிகள் பிரதிஷ்டை செய்த சப்த லிங்கங்கள்; வெவ்வேறு அளவுகளில் பாணங்கள் மட்டும் உள்ளன. தொடர்ந்து வந்தால், நடராஜர் சந்நிதி. கிழக்குச் சுற்றில் திரும்பினால், நவக்கிரகங்கள்.

அடுத்ததாக, அழகான ருத்திராட்ச விதானத் தின் கீழ் ஸ்ரீபார்கவலிங்கம்; சுக்கிரன் வழிபட்ட சிவலிங்கம் (பிருகு முனிவரின் மகன் என்பதால் பார்கவன் என்ற பெயரும் சுக்கிரனுக்கு உண்டு). அடுத்துள்ள இரண்டு சந்நிதிகளில் பைரவர் திருவுருவங்கள். அதனையும் அடுத்து, சூரியன் சந்நிதி. சுக்கிரனும் சூரியனும் இந்தத் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி உய்வு பெற்றனர்.

இப்போதும்... பங்குனி 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, சூரியக் கதிர்கள் கருவறைக்குள் ஸ்வாமி மீது விழுந்து வழிபடுகின்றன. உள்பிராகார வலத்தை நிறைவு செய்து ஸ்வாமி சந்நிதிக்குள் செல்கிறோம்.

கருவறையில், ஸ்ரீபக்தஜனேஸ்வரர்; வட்ட வடிவ ஆவுடையார். கிழக்கு நோக்கிய லிங்கத்தின் பாணம் சற்றே உயரமானது. நாவலேசர், தொண்டர் நாயகர், மனோன்மணி நாயகர், விஷ்ணுபூஜிதர், சாம்புபுரேசர், சண்டேச அனுக்கிரஹர், கருடானுகிரஹர், விஷபாத விமோசனர், கபர்தீசர், ஞானாச்சார்யர் முதலான திருநாமங்கள் கல்வெட்டுகளிலும் வழக்கிலும் காணப்படுகின்றன.

இறைவனை உள்ளம் உருக வணங்கித் தொழுது விட்டு, அம்பாளை தரிசிக்க நகர்கிறோம். சுற்று மண்டபத்திற்கு வெளிப்புறத்தில், வடக்கு திசை நோக்கி செல்லும் பாதை வழியே சென்றால் அன்னையின் சந்நிதியை அடையலாம்.

அம்பாள் சந்நிதியின் எதிரில் நந்தி. மகா மண்டபத்தில், ஒருபுறம் விநாயகர்; மறுபுறம் துர்கை. கருவறையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் மனோன்மணி அம்பிகை. இரண்டு கரங்களில் பாசம் மற்றும் அங்குசம்; மீதமிரு கரங்களில் அபயம் மற்றும் வரம் முத்திரைகள். நாவலாம்பிகை, சுந்தராம்பிகை ஆகிய திருநாமங் களும் இவளுக்கு உண்டு.

அன்னை சந்நிதிக்கு அருகில் ஸ்ரீதேவி-பூதேவி உடனுறை ஸ்ரீவரதராஜ பெருமாள் சந்நிதி உள்ளது. இரணியனை வதம் செய்வதற்கான பலம் பெறும் பொருட்டு திருமால் இத்தல ஈசனை வழிபட்டதாகச் சொல்கின்றன புராணங்கள்.

ஆலயத்தின் தென்கிழக்கு திசையில் சுந்தர மூர்த்தி நாயனார் சந்நிதி உள்ளது. சோழர் பாணி கட்டுமானம் அதிகம் உள்ளதை அறியமுடிகிறது. காஞ்சி மகா பெரியவரும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.

சுக்கிரனின் தவத்தால் மகிழ்ந்து காட்சியளித்த சிவபெருமான், பூலோகத்தில் உள்ள பல தலங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து வரும்படி அவரைப் பணித்தாராம். அப்படி, சுக்கிரன் வழிபட்ட தலங்களில் முதன்மையானது திருநாவலூர் என்கிறார்கள். சுந்தரர் இங்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்று ஞான தீக்ஷை பெற்றதாகச் சொல்கிறார்கள்.

மிக அற்புதமான இந்த ஆலயத்தின் பெருமைகள் குறித்து, இங்கு பூஜைகளைச் செய்துவரும் சந்திரசேகர குருக்கள் மற்றும் அவர் மகனிடம் பேசினோம்.

“இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தி. கிருத யுகத்தில் விஷ்ணுவும்; திரேதா யுகத்தில் சண்டிகேஸ்வரரும்; துவாபர யுகத்தில் பிரம்மாவும் இத்தலத்து ஈசனை வழிபட்டுள்ளனர். கலியுகத்தில் சுந்தரர் இறைவனை வழிபட்டுள்ளார்.

இங்கு, ரிஷப வாகனத்துடன் நின்ற கோலத்தில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியைப் பூராட நட்சத்திர அன்பர்கள் வழிபடுவதால், நன்மை உண்டாகும். அதேபோல், சுக்கிரரை, வெள்ளிக் கிழமை சுக்கிர ஓரையில் வழிபடுவது விசேஷம்.

பங்குனி மாத 23 முதல் 27-ம் தேதி வரையிலும் சூரியன் வணங்கும் வேளையில் நிகழும் விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். அதேபோல், இந்தக் கோயிலில் கொடி மரத்தின் அருகே உள்ள சுந்தர கணபதிக்கு மஞ்சள் மாலை கட்டி வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும்; வீடு கட்டும் ஆசையும் நிறைவேறும்.

சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் விழாவில், பஞ்ச மூர்த்தி உற்சவம் நிகழும். சுந்தரர் அவர்களை வணங்கி வழிகாட்டிச் செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரருக்கு விசேஷ பூஜை நடைபெறும். ஆடிச் சுவாதி மிகவும் விசேஷம். நவராத்திரியும் சிறப்பாக நடைபெறுகிறது!’’ என்கிறார்கள் இருவரும்.

அற்புதமான இந்தத் தலத்துக்கு அவசியம் ஒருமுறை குடும்பத்தோடு சென்று வழிபட்டு வாருங்கள்; பக்தஜனேஸ்வரர் அருளால் உங்களின் எதிர்காலம் சிறக்கும்!

******

சண்டேச பதம் தந்தார்!

இந்தத் தலத்தில் சண்டேஸ்வரருக்கு கூடுதல் சிறப்பு! திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்த அரசர்குலப் பெருமகன்- பசுபதி குணபாணி. தன்னிடமிருந்த பசுக்களை பராமரிக்கும் பொறுப்பை, அவர் பலரிடம் கொடுத்திருந்தார்.

அவ்வாறு பேணும்போது கிடைக்கும் ‘மொத்த பாலின் கால் பகுதி அரசர்க்கு, கால் பகுதி ஆலயத்துக்கு, கால் பகுதி ஊர் மக்களுக்கு, கால் பகுதி பராமரிப்பவர்களின் சொந்த உபயோகத்துக்கு’ என்றும் வரைமுறை வைத்திருந்தார்.

திருநாவலூர் பகுதியின் மாடுகளைப் பேணும் பொறுப்பு, கல்யாண சிவாசார்யருக்கும் அவருடைய மகன் சிவப்பிரியனுக்கும் இருந்தது. ஆலயத்தின் பங்கான பாலைக் கொண்டு போய் பக்தஜனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் பொறுப்பு, சிவப்பிரியனுக்கு உரியது.

கால் பங்கு பாலில் அபிஷேகம் செய்வது, சிவப் பிரியனுக்கு திருப்தி தரவில்லை. யாருக்கும் தெரியாமல் மற்றவர் பங்குகளிலிருந்தும் பால் எடுத்துக்கொண்டு ஆலயத்துக்குச் சென்று விடுவான். இதை கண்டுபிடித்து விட்ட கல்யாண சிவாசார்யர், ஒருநாள்... அவனறியாமல் ஆலயம் வந்தார்; அவனைத் தடுத்தார்.

சிவப்பிரியனுக்கு தந்தையார் கண்ணுக்குப் புலப்படவில்லை; சிவபூஜையைக் கெடுக்க வந்த துரோகியாகவே அவர் தெரிய, வாளெடுத்து அவரை வெட்ட முற்பட்டான். அப்போது சிவனார் தோன்றி சிவப்பிரியனைத் தடுத்தார்; சிவபூஜைகளைப் பாதுகாக்கும் உரிமையையும் சிவபூஜையைத் தடுப்பவர்களை தண்டிக்கும் உரிமையையும் அவனுக்கு வழங்கினார்; சண்டேச பதமும் தந்தார்; கல்யாண சிவாச்சார்யருக்கு நற்பேறு அளித்தார்.

சண்டிகேஸ்வரருக்கு அந்தப் பதவியை அளித்த இந்தத் தலம், சண்டேசபுரி என்றும், பசுக்களுக்கு நீர் தருவதற்காக சிவப்பிரியனால் உருவாக்கப்பட்ட ஓடை, கோமுக தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன.

திருநாவலூர் தலபுராணம் தரும் இந்த சண்டேச வரலாறு வேறுபட்டது. சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்திலும், பிற நூல் களிலும் காணப்படும் சண்டேஸ்வரர் கதை வேறு.

சேய்ஞலூரில் வாழ்ந்த சிறுவன் விசார சர்மன். பசுக்களைப் பராமரிப்பதில் அக்கறை கொண்ட இவன், மிகுந்த பாலெடுத்து மேய்ச்சல் காட்டிலேயே மண் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வந்தான்.

அதை அவன் தந்தை தடுக்க, அவருடைய கால்களை வெட்டினான் விசாரசர்மன். விசார சர்மனைத் தம் மகன் போன்று ஏற்றுக் கொண்ட பரமனார், சண்டேச பதமும் கொடுத்தார் என்பது பரவலாகத் தெரிந்த வரலாறு.

இருந்தாலும், இந்தப் பகுதி மக்கள், சண்டேச பதம் பெற்ற சிவப்பிரியன் மீது நிறைந்த பிரியம் வைத்திருக்கிறார்கள்!

சுந்தர மூர்த்தி சுவாமி திருக்கோயில்!

திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த ஊர் திருநாவலூர். இவ்வூரைச் சேர்ந்தவரும், இந்த ஆலயத்தில் இறைவனுக்கு வழிபாடு செய்து வந்தவருமான சடையனாரின் மகனே நம்பியாரூரன் ஆகிய சுந்தரர்.

சிவனார், வயோதிகர் வடிவில் சென்று சுந்தரரின் திருமண ஏற்பாட்டை நிறுத்தி, அவரை திருவெண்ணை நல்லூர் எனும் தலத்தில் தடுத்தாட்கொண்டர். தம்பிரான் தோழர் எனப் போற்றப்படும் சுந்தரரின் இல்லம் இருந்த இடத்துக்குச் சென்றோம். அங்கே சுந்தரருக்கு, முழுக்கவும் கருங்கற்களால் அமைக்கப்பட்ட அழகிய கோயில் ஒன்று உள்ளது.

அந்தக் கோயில் குறித்து அன்பர் நரசிங்கம் விவரம் பகிர்ந்தார்.

“சுந்தரமூர்த்தி நாயனாரின் வீடு இருந்த இடத்தில்தான் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மடம் இருந்ததாகக் கூறப்படும் இடம் வேறு. அவர் வாழ்ந்த இடத்தில் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று விருப்பம் கொண்டு அனைவரும் கலந்து பேசி, 2011-ல் அன்பழகன் என்பவர் தலைமையில் 20 நபர்கள் சேர்ந்து ‘தம்பிரான் தோழர்’ எனும் அறக்கட்டளையை ஏற்படுத்தினோம்.

பின்னர், சிவனடியார் திருக்கட்டட திருக்கூட்ட தலைவரான தியாகராஜன் என்ற அன்பர், முன்னின்று இந்த ஆலயத் திருப் பணிக்கு உதவி வருகிறார்.

கருவறை மற்றும் மண்டபத்தை மட்டும் கட்டி முடித்து, 2017 - நவம்பர் மாதம் தமிழில் குடமுழுக்கு நடத்தினோம். தற்போது சுற்று மண்டபத்தைக் கட்டி வருகிறோம்.

சுற்று மண்டபத்தில் சுந்தரரின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்களை வடிவமைக்கும் வேலை நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் குறிப்பிட்ட வரலாறை குறிப்பிடும் பணி மட்டும் பாக்கியுள்ளது. இன்னும் ஒரு வருடத்துக்குள் கோபுர கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

சுந்தரர் பிறந்த புரட்டாசி மாதமும்; அவர் கயிலாயம் சென்ற ஆடிமாதச் சுவாதி நட்சத் திரமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டும்” என்றார்.