Published:Updated:

`மலைக்குப் பயணமாகும் வேல்!' - வேலெடுத்தல் திருவிழாவுக்குத் தயாராகும் திருப்பரங்குன்றம்

இந்தத் திருவிழா மழைவேண்டுகின்ற வழிபாடாகவும் கொண்டாடப் படுகிறது. முருகப் பெருமானின் வேல், காலை 9 மணியளவில் கோயிலிலிருந்து பல்லக்கு ஏறிப் புறப்படும். மலைமீது காசிவிஸ்வநாதருக்கு எதிரேயுள்ள 'மலைமேல் குமார'ரிடம் வேல் சேர்ப்பிக்கப்படும்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

முன்னொருகாலத்தில் திருப்பரங்குன்றத்துப் பகுதியில் பூதம் ஒன்று வாழ்ந்துவந்தது. தன் சாபம் தீரவேண்டி பூதம், சிவவழிபாட்டு நிந்தையிலிருந்து தவறியவர்களைச் சிறைப்பிடித்து வந்தது. ஆயிரம் பேரைச் சிறைகொண்டதும் அவர்கள் அனைவரையும் விழுங்கிவிடத் திட்டம் தீட்டியிருந்தது, அந்தப்பூதம். மொத்தம் 999 பேர் சிறைவாசிகளாயினர். ஆயிரமாவது ஆளுக்காகக் காத்துக்கொண்டிருந்தது பூதம்.

Murugan
Murugan

சிவனார் வாக்கினை எதிர்த்து வாதம்செய்த பாவத்தைப்போக்கிட நக்கீரர்பெருமான், குன்றத்தில் தவம் செய்தார். அப்போது, குளத்தில் ஓர் இலையைக்கண்டு வியந்து தவத்திலிருந்து விலகினார். இதனால் கோபம் கொண்ட அந்த பூதம் நக்கீரானாரைப் பிடித்துக் குகையிலடைத்தது. நக்கீரர் அஞ்சாது தன்னையும் சிறைப்பட்ட அனைவரையும் விடுவிக்க முருகனை நினைத்துத் திருமுருகாற்றுப்படை பாடினார், முருகன் மகிழ்ந்து காட்சிகொடுத்து, பூதத்தையும் சம்ஹாரம் செய்தார். 1000 பேரையும் சிறைமீட்டார்.

மலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..!

`நக்கீரர் தன் பாவம் தீர காசிக்குச்சென்று நீராடவேண்டும்' என எண்ணினார். நக்கீரரின் குறைதீர்க்க முருகக்கடவுள் தனது வேலால் பாறையைக்கீறி அங்கேயே காசித்தீர்த்தம் பொங்கச்செய்தார். அதில் நீராடிய நக்கீரர், பாவம் நீங்கினார் என்கிறது தலபுராணம்.

இந்த நிகழ்வினை நினைவூட்டும் வகையில் நக்கீரரைக் காக்க, முருகனின் வேல் மலைக்குச் செல்லும் வைபவம் வேலெடுத்தல் விழாவாக ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகிறது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

இந்த விழாவைச் சுற்றுப்புறக் கிராமத்து மக்களே எடுத்து நடத்துகின்றனர். இந்தத் திருவிழா மழைவேண்டுகின்ற வழிபாடாகவும் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானின் வேல், காலை 9 மணியளவில் கோயிலிலிருந்து பல்லக்கு ஏறிப் புறப்படும். மலைமீது காசிவிஸ்வநாதருக்கு எதிரேயுள்ள `மலைமேல் குமார'ரிடம் வேல் சேர்ப்பிக்கப்படும். பூஜைகளானதும், கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நடைபெறும். மாலையில் மலையிருந்து பல்லக்கில் புறப்படும் வேல், அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் சந்நிதியை வந்தடையும். பின்னர் இரவில், பூப்பல்லக்கில் புறப்பாடாகி மூலவர் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படும்.

குன்றத்து முருகர், குடைவரை மூலவர். ஆதலால் மூலவருக்குப் பதில் அவர் திருக்கரத்தின் வேலுக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan