கல்யாண வரம் அருளும் அற்புதத் தலம் திருப்பூந்துருத்தி. அப்பரும் திருஞான சம்பந்தரும் பாடிப்பரவிய தலம் இது. இங்கே அருளும் ஸ்ரீபுஷ்பவனேஸ்வரரை `மங்கல வாழ்வு அருளும் மலரவன்' எனப் போற்றுவர்.
பொய்யிலியார், ஆதிபுராணன், பூந்துருத்தி உடையார், பூந்துருத்தி நாயனார் ஆகிய பெயர் களும் உண்டு இவ்வூர் ஈஸ்வரனுக்கு. அம்பிகைக்கு ஸ்ரீசௌந்தர நாயகி என்று திருப்பெயர்.
நந்திதேவருக்கு திருமழப்பாடி எனும் ஊரில் கல்யாணம் நடக்கும். அப்போது திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருநெய்தானம் ஆகிய ஊர்களில் இருந்து சீர்வரிசைப் பொருள் செல்லும். அவ்வகையில் திருப்பூந்துருத்தியில் இருந்து பூ மாலைகள் சீதனமாகச் செல்லும்.
இந்தக் காரணத்தையொட்டி இவ்வூர் சிவபிரான் புஷ்பவனேஸ்வரர் என்று திருநாமம் கொண்டார் என்கின்றன ஞானநூல்கள். திருமணத்தடை உள்ள அன்பர்கள் இந்த ஊருக்குச் சென்று அம்பாள் - ஸ்வாமிக்கு மலர் மாலைகள் சாத்தி வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாணம் கைகூடும்; மனதுக்கு இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதிகம்.அதேபோல் பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேரவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இந்த ஊருக்கு வந்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
தீர்த்தத்தாலும் சிறப்பு பெற்ற தலம் இது. காசிப முனிவர் ஒரு முறை தவம் செய்யும்போது, யோக நிலையில் ஒன்ற முடியாமல் தவித்தார். அவர் இந்தத் தலத்துக்கு வந்து, தம்முடைய தவ வல்லமையால் இங்குள்ள ஆதிநாயகர் கிணற்றில் கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, கோதாவரி உள்ளிட்ட 13 புண்ணிய தீர்த்தங்களை பொங்கி எழச் செய்தார்.
அப்போது காசிவிஸ்வநாதரும் முனிவருக்குக் காட்சி தந்ததாகச் சொல்கிறது புராணம். குறிப்பிட்ட அந்தக் கிணற்றுக்கு எதிரில் காசி விஸ்வநாதருக்கு தனிச் சந்நிதி உள்ளது. இந்த அற்புதம் நிகழ்ந்த நாள் ஆடி அமாவாசை. ஆகவே வருடம்தோறும் ஆடி அமாவாசை அன்று இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், முன்னோர் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.










2000 ஆண்டு பழைமையான இக்கோயிலில் அப்பர் 7 ஆண்டுகள் தங்கியிருந்து உழவாரப் பணிகள் செய்தார். அவர் தங்கியிருந்த மடம், கோயிலுக்கு அருகில் இப்போதும் உள்ளது. திருக்கோயிலில் மூலவருக்கு எதிரில், அமர்ந்த கோலத்தில் அருளும் அப்பரின் மூர்த்தம் உள்ளது.
திருவையாறு தலத்தில் அப்பருக்கு கயிலாய காட்சி அருளியதைப் போன்று, இஙகு அவருக்கு ரிஷபாரூடராக காட்சி தந்தாராம் ஈசன். ஆக, இங்கு வந்து வழிபடும் அன்பர்களுக்குக் கயிலை தரிசனப் புண்ணியம் வாய்க்கும் என்பது ஐதிகம்.
அப்பர் பெருமான் உழவாரம் செய்த கோயில் அல்லவா... ஆகவே, திருஞானசம்பந்தர் கோயிலுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்று ஈசனைப் பாடினாராம். அவரைக் காணும் ஆவலில், நந்தியை தள்ளி நிற்கச் சொன்னாராம் ஈசன். ஆகவே, இங்கு நந்தி விலகி இருக்கிறார்.
அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகியோரும் வழிபட்ட தலம் இது. கோயிலின் இடது புறத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி வீணையுடன் எழுந்தருளி உள்ளார். இங்குள்ள துர்காதேவி, ஒற்றைக் காலை ஊன்றி தவக் கோலத்தில் அருள்கிறாள். வேறெங்கும் காண்பதற்கரிய அம்சம் இது என்கிறார்கள்.
சாபத்தால் கழுகு உருவம் பெற்ற விஞ்சைய முனிவர், புஷ்பவனேஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார். அதேபோல், தட்சன் நடத்திய வேள்வியில் பங்கு பெற்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க, சூரியதேவன் இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, அதில் நீராடி ஸ்வாமியை வழிபட்டு விமோசனம் பெற்றார் என்கிறது தலபுராணம்.
18-ம் நூற்றாண்டில் வடநாட்டில் அவதரித்த நாராயண தீர்த்தர் என்ற மகான் பிரம்மஞானம் பெற்று, இந்த ஆலயத்துக்கு அருகிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்.
தொடக்கத்தில் ஆறு கால பூஜைகள் நடைபெற்று வந்த இந்தக் கோயிலில் தற்போது இரண்டு கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அமாவாசை, சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாள்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
திருமண வரம் பெறவும், பாவ விமோசனம் பெறவும், பித்ருக்கள் ஆசி பெறவும் விரும்பும் அன்பர்கள் அவசியம் ஒருமுறை இந்த ஆலயத்துக்குச் சென்று வணங்கி வரலாம்.
காலை 7 முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4:30 முதல் இரவு 7.30 மணி வரையும் திருக்கோயில் திறந்திருக்கும்.
எப்படிச் செல்வது? : தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில், சுமார் மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திருவையாறு வழியாகவும் திருப்பூந்துருத்திக்குச் செல்லலாம்.