Published:Updated:

திருத்தணியில் ஆடிக்கிருத்திகையையொட்டித் தெப்பத்திருவிழா... 26ம் தேதி தொடங்குகிறது!

சைலபதி

திருத்தணியில் ஆடிக்கிருத்திகையையொட்டித் தெப்பத்திருவிழா 26.7.19 அன்று தொடங்கி 28.7.19 வரை நடைபெற இருக்கிறது.

திருத்தணி
திருத்தணி

முருகப்பெருமானை வழிபட உகந்த தினங்களில் ஆடிக் கிருத்திகை மிகவும் விசேஷமானது. ஆடிக்கிருத்திகை அன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடிக்கிருத்திகையையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

திருத்தணி
திருத்தணி

ஐந்தாம் படை வீடு என்று போற்றப்படுவது திருத்தணிகை திருத்தலம். முருகப்பெருமான் சினம் தணிந்து இங்கு காட்சி தருகிறார். அருணகிரிநாதர் தனது திருப்புகழிலும், நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையிலும், ராமலிங்க அடிகளார் தனது பாடல்களிலும் திருத்தணி முருகனைப் போற்றிப் பாடியுள்ளனர்.

சினம் தணிந்து வள்ளியோடு இங்கு வந்து அமர்ந்ததால் திருத்தணிகையில் சூரசம்ஹார விழா நடப்பதில்லை. அன்று முருகனைப் பெருமைப்படுத்த புஷ்பாஞ்சலி மட்டுமே நடைபெறுகிறது.

முருகன்
முருகன்

திருத்தணியில் ஆடிக்கிருத்திகைத் தெப்பத் திருவிழா 26.7.19 முதல் 28.7.19 வரை மூன்று நாள் திருவிழாவாக நடைபெற உள்ளது. மூன்று நாள்களும் தெப்பத் திருவிழா, மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் நடைபெறும்.

மூன்றுநாள்களும் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணி சுவாமி உற்சவமூர்த்திகள் எழுந்தருள்வர். தினமும் மாலை 6.30 மணிக்கு சுவாமி எழுந்தருளலும், 7 மணிக்கு தீபாராதனையும், 7.15க்கு தெப்பத் திரு உலாக் காட்சியும் நடைபெறும்.

முருகன்
முருகன்

மூன்று நாள்களும் சிறப்புக் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெப்பத் திரு உலாக் காட்சியை தரிசித்து வழிபட, துன்பங்கள் நீங்கி, வாழ்வில் இன்பங்கள் பெருகும் என்பது ஐதிகம்.