Published:Updated:

திருவானைக்கா, ராமேஸ்வரம், திருப்பூவணம்... லாக்டௌனுக்குப் பிறகு ஆலய தரிசனம் எப்படி? வாசகர் பகிர்வு!

உத்திரகோசமங்கை - ஆலய தரிசனம்

லாக்டௌன் முடிவுக்கு வந்து ஆலயங்கள் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்ட நிலையில் தான் மேற்கொண்ட பயண அனுபவம் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர் ஹரி பிரபாகர்.

திருவானைக்கா, ராமேஸ்வரம், திருப்பூவணம்... லாக்டௌனுக்குப் பிறகு ஆலய தரிசனம் எப்படி? வாசகர் பகிர்வு!

லாக்டௌன் முடிவுக்கு வந்து ஆலயங்கள் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட்ட நிலையில் தான் மேற்கொண்ட பயண அனுபவம் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர் ஹரி பிரபாகர்.

Published:Updated:
உத்திரகோசமங்கை - ஆலய தரிசனம்

நீண்ட நாள்களுக்குப் பிறகு அன்றைய விடியல் சுதந்திரமாக விடிந்தது. அப்போது எங்கள் கார் செங்கல்பட்டைத் தாண்டி இருந்தது. ஏறக்குறைய 160 நாள்களுக்குப் பிறகு நீண்ட பயணத்தை மேற்கொள்ளப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் என் குடும்பத்தினர் பேசிக்கொண்டே வந்தனர். கொரோனா ஊரடங்கில் சொந்தபந்தங்களைக் காண முடியவில்லை, எந்த விசேஷத்துக்கும் போக முடியவில்லை, துக்கத்துக்குக்கூடப் போகமுடியாததெல்லாம் கடந்த மாதங்களில் நடந்தது நினைவிருக்கலாம். கடந்த ஒன்றாம் தேதி அரசு தளர்வுகளை அறிவித்துக் கோயில்களைத் திறக்க உத்தரவிட்டதுமே மகிழ்ந்தோம்.

திருவானைக்கா
திருவானைக்கா

சென்னை மயிலாப்பூரில் வசித்துவரும் நாங்கள் கபாலீஸ்வரரையும் கற்பகத்தையும் தரிசிக்காமல் ஒருநாளும் இருந்ததில்லை. கொரோனா காலத்தில் எங்கள் தாயும் தந்தையுமான அவர்களை தரிசிக்காமல் கஷ்டப்பட்டோம். கோயில் திறந்ததும் அவர்களை தரிசித்து ஆசி பெற்றோம். இனி எல்லாத் துன்பங்களும் ஒழியப் போகின்றன; மக்கள் சுபிட்சமாக இருக்கப் போகிறார்கள் என்று தோன்றியது. அடிக்கடி தல யாத்திரை செல்லும் நாங்கள் வரும் சனிக்கிழமை (5-9-2020) தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை தென்தமிழ் நாட்டுத் திருத்தலங்களுக்கு ஒரு புனிதப் பயணம் போகலாமே என்று தோன்றியது. உடனே புறப்பட்டோம். இதோ திருச்சி திருவானைக்கா கோயிலை அடைந்து விட்டோம்.

வாருங்கள் எங்களுடன் இந்தப் பயணத்தில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவானைக்கா கோயில் வாசலில் டெம்ப்ரேச்சர் செக் பண்ணி, கையில் சானிடைஸர் தெளித்து தகுந்த பாதுகாப்போடு அனுப்பி வைத்தார்கள். அப்போது நேரம் காலை 11.30 மணி என்பதால் வேகவேகமாக ஜம்புகேஸ்வரரை தரிசிக்கச் சென்றோம். அந்தச் சிறிய கருவறையில் ஆறு ஆறு பேராக அனுப்பி தரிசனம் செய்ய வைக்கிறார்கள். நீர் ஊறி எந்நாளும் ஸ்வாமியை அபிஷேகித்து வரும் நீர் தலமான திருவானைக்கா ஈசன் அன்று சர்வ அலங்காரத்தோடு 'நான் இருக்கிறேன்' என்று கம்பீரமாக அமர்ந்திருந்தார். கண்ணீர் மல்க அவரை தரிசித்துவிட்டு வெளியே வந்ததும் மங்கல சத்தம் ஒலிக்க யானை அகிலா ஸ்வாமியின் சந்நிதான மண்டபத்துக்கு வந்தது. அதன் பின்னே அம்பிகை சந்நிதி அர்ச்சகர் அம்பாள் திருக்கோலத்தோடு வந்தார்.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்

நேராக ஸ்வாமியின் கருவறைக்குச் சென்று அங்கு தனிமையில் பூஜை செய்துவிட்டு வந்தார். பிறகு ஸ்வாமியின் கருவறைக்கு எதிரே இருந்த மண்டபத்தில் இருந்த கறுமை நிற காராம்பசுவுக்குக் கோபூஜை செய்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த பூஜையைக் கண்டு மகிழ்ந்தார்கள். திருமணமாகாதவர்கள் இந்தப் பூஜையைக் கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. கோபூஜைக்குப் பிறகு அகிலாண்டேஸ்வரி அம்மனின் திவ்ய தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தோம். எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் கொடுத்து அந்த கோயிலின் விசேஷமான கோபூஜையும் காட்டி அருள் செய்த ஜம்புகேஸ்வரரின் அருளை வியந்து திருப்பெருந்துறை நோக்கிப் பயணித்தோம்.

எந்தவிதத் திட்டமிடலும் இன்றி தொடர்ந்த இந்தத் திருப்பயணத்தில் திருப்பெருந்துறை தரிசனம் எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. ஞானத்தின் அடையாளமாக பூமியில் அவதரித்த மாணிக்கவாசகப் பெருமானை ஆட்கொண்ட அருள் தலத்தில் நுழைந்ததுமே வியந்துபோனோம். தெற்கு புற வாசல் வழியில் தகுந்த பாதுகாப்புடன் சமூக இடைவெளியோடு சென்று ஆத்ம நாதரையும், யோகாம்பிகையையும் தரிசித்தோம். மாணிக்க வாசகருக்கு ஸ்வாமி அருள் காட்சி அளித்த குருந்த மரத்தையும் சிற்ப அதிசயமான மேற்கூரை கொடுங்கைகளையும் கண்டு அதிசயித்தோம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்த புழுங்கலரிசி பிரசாதத்தை வாங்கி உண்டோம். அங்கிருந்த மண்டபத்தில் அமர்ந்து குடும்பத்தோடு திருவாசகம் பாடி மகிழ்ந்தோம். இரவு நெருங்கியதும் அங்கிருந்து கிளம்பி பரமக்குடியில் இருந்த என் உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கினோம்.

மதுரை
மதுரை

மறுநாள் (6-9-2020) காலையில் பரமக்குடியில் இருந்து கிளம்பி ராமேஸ்வரம் சென்றோம். வழியில் மண்டபம் பிரப்பன் வலசை கிராமத்தைக் கடந்து சென்றபோது நேரமில்லாத காரணத்தால் மானஸீகமாக பாம்பன் ஸ்வாமிகளை மனதில் தியானித்துக் கொண்டோம். ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலுக்கு முன்புள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்கிருந்த பசுக்களுக்கு அகத்திக் கீரை வாங்கிக் கொடுத்தோம். அங்கிருந்த சந்நியாசிகளுக்கு அன்னதானம் செய்தோம். மகாளய பட்ச காலம் என்றாலும் அரசு விதித்துள்ள தடையால் அங்கு தர்ப்பணம் கொடுப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும் சிலர் மறைவாக கடைகளுக்கு பின்புறம் கொடுத்துக்கொண்டு இருந்தைக் கண்டோம். கிழக்கு கோபுரத்தின் வழியே வரிசையில் நின்று தகுந்த பாதுகாப்போடு உள்ளே சென்றோம். முதலில் ராமநாதரை தரிசித்துப் பேறு பெற்றோம். விபூதி கையில் கொடுக்கக்கூடாது என்ற விதியின் படி ஆலய நிர்வாகம் பேப்பர் கவரில் போட்டு வைத்துவிடுகிறார்கள். நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அம்பிகை பர்வத வர்த்தினியையும் கண்ணார தரிசித்து வெளியே வந்தோம். ஸ்வாமி, அம்பாள் சந்நிதி தவிர பாதுகாப்பு கருதி வேறெங்கும் பக்தர்களை அனுமதிக்கவில்லை.

ராமேஸ்வரம் விட்டு தனுஷ்கோடிக்குச் சென்று புனித நீராட சென்றோம். சாலையின் தொடக்கத்திலேயே அங்கு செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை மறுத்துவிட்டது. சுற்றுலா இடம் என்பதால் அங்கு அனுமதி இல்லை என்றார்கள். தனுஷ்கோடி புனிதத் தலமே தவிர சுற்றுலா தலமில்லை என்று கூறியும் யாரையும் அனுமதிக்கவில்லை. நாங்களும் அங்கிருந்து கிளம்பி உத்திரகோசமங்கை தலத்துக்கு விரைந்தோம்.

'மண் முந்தியோ, மங்கை முந்தியோ' என்று இந்த ஊரின் பெருமையை வியந்து கூறுவதுண்டு. முன்பு பாழ்பட்டுக் கிடந்த இந்த ஆலயம் இப்போது புதுப்பொலிவோடு காட்சி அளிக்கிறது. நாங்கள் சென்றிருந்தபோது பரமக்குடியில் இருந்து வந்த அடியார்கள் குழு அங்கு உழவாரத் திருப்பணி செய்து கொண்டிருந்தார்கள். மங்களேஸ்வரர், மங்களேஸ்வரி, மரகத நடராஜர், அக்னி தீர்த்தம், அதன் அருகே மாணிக்கவாசகர் சந்நிதி, 3000 ஆண்டுகள் பழைமையான இலந்தை மரம் என அனைத்தையும் பொறுமையாக தரிசித்து இன்புற்றோம். மாணிக்க பெருமான் பிறப்பதற்கு காரணமான இந்தத் தலத்தில் அமர்ந்தும் திருவாசகம் படித்தோம்.

உத்திரகோச மங்கை
உத்திரகோச மங்கை

மறுநாள் (7-9-2020) அதிகாலை கிளம்பி திருவாதவூருக்குச் சென்றோம். மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த இந்தத் தலத்தில் ஸ்வாமி வாதபுரீஸ்வரராக (மறைநாதர் என்றும் சொல்வதுண்டு) அருள்கிறார். அம்பிகை மறைநாயகி. கோயில் தொடக்கத்திலேயே உள்ள சிலம்பொலி மண்டபம் எழுத்தில் சொல்லமுடியாத அழகு அதிசயம் எனலாம். வாதம் தொடர்பான நோய்களைத் தீர்க்கக் கூடியவர் இந்த ஊர் சிவன் என்கிறார்கள். ஆலயத்தின் அருகேயே உள்ள மாணிக்கவாசகர் பிறந்த வீடும் இப்போது கோயிலாக உள்ளது. அங்கும் சென்று திருவாதவூராரை வணங்கித் திருவாசகம் பாடி மகிழ்ந்தோம். பிறகு அங்கிருந்து கிளம்பி ஸ்ரீபொன்னணையாள் கிள்ளி அழகுக் கொஞ்சிய திருப்பூவண நாதர் கோயிலுக்குச் சென்றோம்.

திருப்பூவண கோயிலுக்கு எதிரே வைகை நதிக்கரையில் பெருந்திரளான கூட்டம் ஒன்று பித்ருக்களுக்கான பூஜையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. காசியை விட பித்ருக்களுக்கான சிறப்பான தலம் பூவணம் என்று கூறுவார்கள். அதற்கேற்ப அங்கு தொடர்ந்து தர்ப்பணங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திருப்பூவணக் கோயிலில் புஷ்பவனேஸ்வரர் ஸ்வாமியையும் அம்பிகை சௌந்தர நாயகியையும் தரிசித்தோம். அந்தக் கோயிலின் ஆடல் மகளான பொன்னணையாள் கொஞ்சி மகிழ்ந்த நடராஜ பெருமானையும், அவள் கிள்ளியதால் உண்டான அந்தக் கன்னத்துத் தழும்பையும் கண்டு வியந்தோம். சிற்ப கலையழகு மிளிரும் அந்த ஆலயத்தை தரிசித்தபின்பு மதுரைக்குச் சென்றோம்.

திருப்பூவணத்தில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் வந்த கீழடிக்குச் சென்றோம். அங்கு கொரோனா காலம் என்பதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள். எனினும் வெளியே இருந்த தோண்டுகுழிகள் சிலவற்றைப் பார்த்து சில விவரங்கள் அறிந்தோம்.

கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையம்பதிக்குச் சென்றோம். அங்கு புதுமண்டபம் எதிரே உள்ள அஷ்டசக்தி மண்டபத்துக்கு இடதுபுறம் உள்ள மண்டபத்தின் வழியே தரிசனத்துக்கு அனுமதித்தார்கள். மொபைல் உள்ளிட்ட பொருள்களைக் கோயில் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு ஸ்வாமி தரிசனத்துக்குச் சென்றோம். முதலில் அருள்மிகு மீனாட்சி அன்னையைக் கண்டோம். இளம் பச்சை வண்ண சேலையில் வைர மூக்குத்தி மின்ன மீனாட்சி அம்மை அருளிய தரிசனம் மெய்சிலிர்க்க வைத்தது. மீனாட்சி தரிசனம் முடித்து வெளியே வந்ததும் அங்கு அளிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டோம். பின்னர் சொக்கநாதரை எளிமையான அலங்காரத்தில் கண்குளிர தரிசித்தோம். இங்கும் விபூதி, குங்குமப் பிரசாதங்கள் தனி கவர்களில் அளிக்கப்பட்டன. அபிஷேகம், அர்ச்சனைக்கென எந்தப் பொருளும் வாங்கவும் கூடாது என்று சொல்லி இருப்பதால் பக்தர்கள் யாரும் எங்கும் எந்தப் பொருளையும் கொண்டுவரவில்லை. இங்கும் ஸ்வாமி, அம்பாள் சந்நிதியைத் தவிர வேறெங்கும் அனுமதிக்கப்படவில்லை.

உத்திரகோச மங்கை
உத்திரகோச மங்கை

மறுநாள் (8-9-2020) காலை பரமக்குடியில் இருந்து கிளம்பி இளையான்குடி மாறன் நாயனார் வாழ்ந்த திருத்தலத்துக்குச் சென்று வழிபட்டோம். ஆண்டவனுக்கே அன்னம்பாலித்து அருள் பெற்ற மாறனாரையும் அவர்தம் அன்பு மனைவியான புனிதவதியையும் தரிசித்து மகிழ்ந்தோம். அங்கிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டோம். பல நாள்கள் ஆலய தரிசனம் செய்யாமல் சோர்ந்து கிடந்த உள்ளம் இந்தப் புனிதப் பயணத்தால் மீண்டும் உற்சாக நிலைக்கு மாறியது. ரீசார்ஜ் செய்துகொண்ட உற்சாகத்தால் காரில் ஒலித்துக்கொண்டிருந்த "சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற, அதனால் அவன் அருளாலே, அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழ..." பாடலோடு நாங்களும் பாடிக் கரைந்து கொண்டிருந்தோம்.

- கா. ஹரி பிரபாகர்