Published:Updated:

திருவண்ணாமலை: இந்த ஆண்டு குபேர கிரிவலத்துக்குத் தடை... அதென்ன குபேர கிரிவலம்?

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

இந்த ஆண்டு குபேர கிரிவலத்துக்குத் தடை! குபேர கிரிவலம் என்றால் என்ன? அதன் பலன்கள் என்னென்ன?

வரும் டிசம்பர் 13-ம் தேதி கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரி நாள் வருகிறது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் குபேர கிரிவலமாக திருவண்ணாமலையைச் சுற்றி வலம் வருவது வழக்கம். இந்த ஆண்டு குபேர கிரிவலத்துக்கு தடை விதித்துள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வெளியூர் மக்களுக்கு மட்டுமல்ல உள்ளூர் மக்களுக்கும் இந்த தடை பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் தெரியும். அதென்ன குபேர கிரிவலம்...?
திருவண்ணாமலை
திருவண்ணாமலை

ஆண்டுக்கு ஒருமுறை செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் சூட்சுமமாக திருவண்ணாமலைக்கு வந்து ஈசனை வழிபட்டு மலையை கிரிவலமாக வருவது வழக்கம். அது இந்த ஆண்டு 2020 கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அதாவது 13-12-2020 அன்று வருகிறது. இந்நாளில் குபேர பகவானோடு இணைந்து பக்தர்களும் கிரிவலம் வருவது வழக்கம். இந்நாளில் வலம் வருவதால் ஈசனின் திருவருளும் சித்தர் பெருமக்களின் ஆசியும் அதோடு குபேர பகவானின் திருவருளால் அநேக செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக இந்த நாளில் சரியாக மாலை 5 மணிக்கு குபேர பகவானே மலையான ஈசனுக்கு விசேஷ ஆரத்தி எடுத்து வழிபடுவதாக ஐதீகம்.

அந்நேரத்தில் கிரிவல பாதை எங்கும் கூட்டம் நிரம்பி வழியும். அந்த நேரத்தில் கிரிவலப் பாதையெங்கும் பக்தர்கள் அரிசி மாவு கோலமிட்டு தூப தீபங்கள் காட்டி, தேங்காய், பழங்கள் சமர்ப்பித்து விசேஷ ஆரத்திகள் எடுத்து மலையை வணங்குவார்கள். அடியார்கள் கூட்டம் கூட்டமாக கூடி பதிகங்கள் பாடியும் கும்மிகள் அடித்தும் சிவ கயிலாய வாத்தியங்கள் முழங்கியும் வழிபடுவது வழக்கம். பக்தர்கள் பலரும் திருவீழிமிழலை பதிகம் பாடுவதும் வழக்கம். சிலர் "ஓம் ரீம் தன தான்யம் அனுகிரஹ ஆகர்ஷய ஆகர்ஷய" என்று சொல்லி வணங்குவதும் உண்டு.

குபேர லிங்க வழிபாட்டு முறைகள்

இந்த ஆண்டு 13-12- 2020 அன்று ஞாயிறுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கிரிவலப் பாதையில் இருக்கும் குபேர லிங்க சந்நிதியை அடைய வேண்டும். அல்லது குபேர லிங்கம் இருக்கும் 3 கி.மீ பகுதிக்குள் இருக்க வேண்டும். பிறகு குபேர லிங்கத்தை அல்லது அந்த திக்கைப் பார்த்து வணங்கி கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.

வழக்கமான ஐதீகங்களுடன் நியம நிஷ்டைகளுடன் கிரிவலத்தை மேற்கொள்ள வேண்டும். இறுதியாக குபேர லிங்க சந்நிதியிலேயே நிறைவு செய்யவேண்டும் என்பது கட்டாயம். தொடங்கும் வேளை அல்லது கிரிவலம் முடிக்கும் வேளை ஏதாவது ஒரு வேளையில் கட்டாயம் குபேர லிங்க தரிசனம் காண வேண்டும். அதுபோல இந்த ஆண்டு அடியார்கள் குழுக்கள் பல இணைந்து இந்த ஆண்டு வலத்தில் பச்சை நிற ஆடை அணிந்து வரவேண்டும் என்று தீர்மானித்து இருந்தார்கள்.

குபேர கிரிவலம்
குபேர கிரிவலம்

காலையில் குபேர கிரிவலம் வரமுடியாதவர்கள் மதியம் 3 மணி முதல் 4 மணிக்குள் கிரிவலம் தொடங்கி நள்ளிரவு 12.31 மணிக்குள் கிரிவலத்தை குபேர லிங்க சந்நிதியில் முடிக்க வேண்டும். ஏராளமான பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த இந்த குபேர கிரிவல தரிசனம் தடை செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த குபேர கிரிவலம் செல்வதால் கடன் பிரச்னைகள் அகலும். செல்வம் பெருகும், சம்பள உயர்வு கிட்டும், வராது போன கடன் தொகைகள் வசூலாகும், சொத்து சம்பந்தமான வழக்குகள் நலமாக முடியும் என்றெல்லாம் பலவித நம்பிக்கைகள் பக்தர்களிடம் உள்ளது. குறிப்பாக அதிபதியான குபேரரின் ஆசியும், சிவபெருமானின் திருவருளும் பரிபூரணமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

தடை உண்டானாலும் கவலை வேண்டாம். ஈசனையும் குபேரனையும் அந்த நாளில் அதே நேரத்தில் (13-12-2020 மாலை 5 மணிக்கு) வணங்குங்கள். நிச்சயம் உங்கள் பிரச்னைகள் விலகும்.
அடுத்த கட்டுரைக்கு