திருத்தலங்கள்
சக்தி ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

திருவருள் திருவுலா: ஆஞ்சநேய தரிசனம்

ஆஞ்சநேயர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஞ்சநேயர்

சைலபதி

திருவருள் திருவுலா: ஆஞ்சநேய தரிசனம்

ண்ணிய செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்வதில் வல்லவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமருக்கு உதவ சிவாம்சமே அனுமனாக அவதரித்தது என்கின்றன சில ஞானநூல்கள். அனுமனை வழிபட்டால் விஷ்ணு, சிவன், பிரம்மன், ருத்ரன், இந்திரன் மற்றும் நவகிரகங் களை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பார்கள். அனுமனின் அவதார நாளான மார்கழி மூல நட்சத்திர நாளில் அனுமன் தலங்களுக்குச் சென்று வழிபட்டால் எண்ணியவை யாவும் ஈடேறும், அறிவு விசாலமாகும், உடல் வலிமை பெறும், மன உறுதி உண்டாகும்; தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் மீண்டெழுந்து நலம்பெறுவார்கள். பொதுவாக அனுமன் வீர கோலம், நின்ற கோலம், யோக கோலம், பயண கோலம் என்று நான்கு ரூபங்களில் ஆலயங்களில் அருள்பாலிப்பார். அந்த வகையில் திருவருள் திரு உலாவில் நான்கு அற்புதமான அனுமன் ஆலயங்களை தரிசிப்போம்; அஞ்சனை மைந்தன் அனுமனின் அருள்பெறுவோம்...

அனுமனுக்கு ஐந்து மாலைகள்!

தலம்: அனந்தமங்கலம்

திருத்தலச் சிறப்புகள்: திருக்கடையூர் தலத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிலுள்ளது, அனந்தமங்கலம். இங்கே, ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார் சமேத ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயிலில் தனிச் சந்நிதியில் அருள்கிறார், த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் ஆனந்தமாய்த் தங்கிய இடம் ஆதலால் அனந்தமங்கலம் என்று பெயர்பெற்றதாம் இத்தலம்.

வழிபாட்டுச் சிறப்புகள்: வியாழன் மற்றும் சனிக் கிழமைகளிலும் அனுமனுக்கு உகந்த விசேஷ தினங்களிலும் இங்கு வந்து அனுமனை வழிபடுவது விசேஷம்.

விசேஷ திருக்கோலத்தில் அருளும் அனந்த மங்கலம் ஆஞ்சநேயருக்குப் பாரிஜாதப் பூமாலை மற்றும் வடைமாலை சமர்ப்பித்து, குங்குமத்தால் அர்ச்சனை செய்து, பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட்டால், வியாபாரம் சிறக்கும், திருமணத் தடை அகலும் என்பது ஐதிகம்!

அதேபோல் இந்த அனுமனுக்கு பஞ்ச (ஐந்து) மாலைகள் அணிவித்து வழிபட்டால் சகலவிதமான தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்
த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்

பூமாலை: திருமணத் தடை நீங்கும்.

வடை மாலை: உள்ளத்தில் உறுதியும் தேகத்தில் ஆரோக்கியமும் மேம்படும்.

எலுமிச்சை மாலை: பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் நீங்கும், மாந்த்ரீகம் மற்றும் திருஷ்டி பிரச்னைகள் விலகும்.

வெற்றிலை மாலை: எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

துளசி மலை: சகல செல்வங்களும் பெருகும்.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ளது திருக்கடையூர். இங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிலுள்ளது அனந்தமங்கலம்.

மங்கல வாழ்வு தரும் மஞ்சள் காப்பு!

தலம்: அழியாநிலை கிராமம்

திருத்தலச் சிறப்புகள்: அறந்தாங்கி

அருகிலுள்ள அற்புதமான அனுமன் க்ஷேத்திரம் அழியாநிலை. இந்தத் தலத்தில் ஒரே கல்லாலான, சுமார் 12 அடி உயரத்துடன் அருள்கிறார் விஸ்வரூப ஆஞ்சநேயர். இதே கோயிலில் சுமார் 33 அடி உயரத்துடன் பஞ்சமுக ஆஞ்சநேயரும் அருள்கிறார். ஆகவே இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். தன்னை நாடி வருவோருக்கு தைரியத்தையும், நிம்மதியையும், சகல செல்வங்களையும் தந்தருள்கிறார் விஸ்வரூப ஆஞ்சநேயர்.

விஸ்வரூப ஆஞ்சநேயர்
விஸ்வரூப ஆஞ்சநேயர்

வழிபாட்டுச் சிறப்புகள்: இங்கு வந்து அனுமனுக்கு நெய் விளக்கேற்றி, வடைமாலை சமர்ப்பித்து வழிபட, வியாபாரம் சிறக்கும்; தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். ராமநவமி நாளில் அனுமனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் நடைபெறும். பக்தர்கள் மஞ்சள் அரைப்பதற்காக, இங்கு ஏராளமான அம்மிக் கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

அனுமனுக்கு மஞ்சள் அரைத்து அலங்கரித்தால் குடும்பத்திலுள்ள பிரச்னைகள் நீங்கும், தம்பதிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதிகம். குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியர் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்து, அந்த வெண்ணெய்ப் பிரசாதத்தைப் பெற்றுச் சாப்பிட்டு வந்தால் விரைவில் புத்திர யோகம் உண்டாகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

எப்படிச் செல்வது?: புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில், சுமார் 29 கி.மீ தொலைவில் உள்ளது அழியாநிலை கிராமம். புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியிலிருந்து பேருந்து வசதி உண்டு.

பிணிகள் தீர்க்கும் சஞ்ஜீவி ஆஞ்சநேயர்!

தலம்: திருச்சி

திருத்தலச் சிறப்புகள்: திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலுள்ளது ஸ்ரீசஞ்ஜீவி ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுதினமும் இவரை வணங்கி வழிபட்டுவிட்டே தங்களின் அலுவல்களைக் கவனிக்கிறார்கள் இங்குள்ளோர். புதுக்கோட்டை மன்னர் பரம்பரையினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஆலயம் இது என்கிறார்கள். சஞ்ஜீவி மலையை ஏந்தியபடி, வாலில் மணியுடன் கிழக்கு நோக்கி அருள்கிறார் அனுமன். இவருக்கு நாள்தோறும் விசேஷம்தான். பிரார்த்தனை நிறைவேறிய அன்பர்கள், இங்கு வந்து அனுமனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வடைமாலை சார்த்தி வணங்கிச் செல்கின்றனர்.

சஞ்ஜீவி ஆஞ்சநேயர்
சஞ்ஜீவி ஆஞ்சநேயர்

வழிபாட்டுச் சிறப்புகள்: மாதந்தோறும் மூல நட்சத்திர நாள், புதன்கிழமை மற்றும் சனிக் கிழமைகளில் இங்கு வந்து அனுமனை தரிசித்து வழிபட்டால் தீராத நோய் தீரும்; திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் இந்த அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதிகம்.

இந்த அனுமனுக்கு துளசிமாலை சார்த்தி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். வடை மாலை சார்த்துதலும் வெண்ணெய்க்காப்பு வழிபாடும் இவருக்கு உகந்தவை. அனுமன் ஜயந்தி விழாவின்போது ஜாங்கிரிமாலை, வடைமாலை அலங்காரம், அன்னதானம், கூட்டுப்பிரார்த்தனை என வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இந்த வைபவங்களில் கலந்துகொண்டு சஞ்ஜீவி அனுமனை வழிபட்டு வந்தால், நம் வாழ்க்கைச் சிறக்கும்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்.

எப்படிச் செல்வது?: திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது தலைமை தபால் நிலையம்.

மனநலம் அருளும் யோக ஆஞ்சநேயர்!

தலம் : சோளிங்கர்

திருத்தல சிறப்புகள் : பக்தனின் வாக்கைக் காப்பாற்ற உக்கிரமாகத் தூணிலிருந்து வெளிப் பட்ட நரசிம்மமூர்த்தி, உக்கிரம் நீங்கி யோக நரசிம்மராகக் கோயில்கொண்டு, பக்தர்களின் துயர் தீர்க்கும் அற்புதத் திருத்தலம் சோளிங்கர். இங்குள்ள பெரிய மலையில் யோக நரசிம்மரும் அதற்கு எதிரேயிருக்கும் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் கோயில்கொண்டு அருள்கிறார்கள்.

அனுமன் யோக நிலையில் அமர்ந்து, தன்னைத் தேடி வரும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு வரம் அளிப்பதோடு, அவர்களைக் காக்க தன் மேலிரு திருக்கரங்களில் சங்கு சக்கரத்தையும் கீழிரு கரங்களில் ஜப மாலையும் ஏந்திக் காட்சியளிக் கிறார். இங்குள்ள தீர்த்தம் ஹனுமத் தீர்த்தம் என்று போற்றப்படுகிறது.

யோக ஆஞ்சநேயர்
யோக ஆஞ்சநேயர்

வழிபாட்டுச் சிறப்புகள் : இந்த க்ஷேத்திரத்துக்கு கடிகாசலம் என்ற பெயரும் உண்டு. ஒரு கடிகை நேரம் அதாவது 24 நிமிடங்கள் இந்தத் தலத்தில் தங்கி, யோக நரசிம்மரை தியானித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதிகம். யோக ஆஞ்சநேயரை வழிபட்டால், மன உறுதி மேம்படும் என்கின்றனர்.

பயம், மனநோய் கொண்டவர்களை இந்தத் தலத்துக்கு அழைத்துச் சென்று, ஹனுமத் தீர்த்தத்தில் நீராட்டி, யோக ஆஞ்சநேயரை வழிபடச் செய்தால், விரைவில் மனநோய் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். அனுமனின் திருக் கரங்களில் காணப்படும் சங்கும் சக்கரமும், பக்தர்களுக்கு உண்டாகும் பகையை அழிக்க வல்லன. எனவே, இந்த ஆஞ்சநேயரை வேண்டிக் கொள்ள, சத்ரு பயம் நீங்கும்; காரியத் தடைகள் விலகும்; வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

எப்படிச் செல்வது ?: வேலூர்-திருத்தணி வழியில் திருத்தணியிலிருந்து 30 கி.மீ. தூரத்திலுள்ளது. சென்னையிலிருந்து அரக்கோணத்துக்கு ரயிலில் பயணித்து, அங்கிருந்து சோளிங்கருக்குச் செல்லலாம்.