Published:Updated:

திருவருள் திருவுலா: தைப்பூச தரிசனம்

தைப்பூச தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தைப்பூச தரிசனம்

தைப்பூச தரிசனம்

தோஷங்கள் தீர்க்கும் பிரான்மலை பாலமுருகன்

இறைவன் : ஸ்ரீகொடுங்குன்றநாதர், ஸ்ரீவிஸ்வநாதர்,

ஸ்ரீமங்கைபாகர்.

இறைவி : ஸ்ரீகுயிலமுதநாயகி. ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீதேனாம்பாள்.

திருத்தலச் சிறப்புகள் : ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே தங்களில் யார் பலசாலி எனும் போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் மேருமலையைச் சுற்றி வளைத்துக்கொள்ள, வாயு பகவான் தன் வலிமையால் அதைத் தூக்கி வீச வேண்டும் என்பதுதான் போட்டி. வாயுவின் விசையால் மேருமலையின் சில துகள்கள் மட்டும் பூமியெங்கும் சிதறி விழுந்தன. அவை விழுந்த இடங்கள், பிற்காலத்தில் சிவத் தலங்களாயின. அப்படி உருவான தலம்தான் பிரான்மலை.

தோஷங்கள் தீர்க்கும் பிரான்மலை பாலமுருகன்
தோஷங்கள் தீர்க்கும் பிரான்மலை பாலமுருகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருஞானசம்பந்தரால் `எம்பிரான் மலை' எனச் சிறப்பிக்கப்பட்டு, அதையொட்டி `பிரான்மலை' என்று பெயர் வந்தது என்பார்கள். அருணகிரியார் இத்தலத்து முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். இங்கு பாதாளம், பூலோகம், கயிலாயம் என மூன்று நிலைகளில் அருள்கிறார் ஈசன். பாதாளத்தில் குயிலமுதநாயகி சமேத கொடுங்குன்றநாதராகவும்; பூலோகத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதராகவும்; கயிலாயத்தில் தேனாம்பிகை சமேத மங்கைபாகராகவும் அருள்பாலிக்கிறார் இறைவன். மங்கைபாகரின் திருமேனி நவமூலிகைகளால் ஆனது. இந்தத் திருமேனிக்கு அபிஷேகங்கள் கிடையாது. பௌர்ணமிதோறும் புனுகும் சாம்பிராணித் தைலமும் சாத்தப்படுகின்றன.

இத்தலத்தில் முருகப்பெருமான் வயோதிகத் திருக்கோலத்தில் காட்சியளிப்பதாக ஐதிகம். யானையே வாகனமாகத் திகழ்கிறது. 27 நட்சத்திரத் துளைகளைக்கொண்ட கல் சாளரம் வழியாகத்தான் சுவாமியை தரிசிக்க முடியும்.

பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட தோஷம் விலக இரண்டு லிங்கங்களை நிறுவி முருகன் வழிபட்ட தலம் இது. அவர் வழிபட்ட சொக்கலிங்கம், ராமலிங்கம் ஆகிய லிங்கங்களை கொடுங்குன்றநாதர் சந்நிதியில் தரிசிக்கலாம்.

வழிபாட்டுச் சிறப்புகள் : இயற்கை எழில்சூழ்ந்த இந்த மலையின்மீது ஏறிச் சென்று வழிபாடு செய்வதே மிகச்சிறந்த ஆன்மிக அனுபவமாக அமையும். கடல் மட்டத்திலிருந்து 2,500 அடி உயரம்கொண்ட இந்த மலையில் அரியவகை மூலிகைச் செடிகளும் மரங்களும் நிறைந்துள்ளன. மூலிகைக்காற்று நம் மேனிமீது பட்டாலேபோதும் பிணிகள் தீரும். குறிப்பாக சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இந்த மூலிகைக் காற்றை சுவாசிக்க அவர்களின் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் பக்தர்கள்.

முருகனின் தோஷம் நீங்கிய இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டால், ஜாதக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இங்கு மகான் அருணாசல சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இவரின் சந்நிதியில் தங்களின் பிரச்னைகளைக் கூறி முறையிட்டால், மகானின் அருளால் விரைவில் அந்தப் பிரச்னைகள் விலகும்.

மகா சிவராத்திரியின்போது சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்துவந்து, பாலமுருகனை தரிசித்து வழிபடுகிறார்கள். அன்று முழுவதும் பாலமுருகனின் வேலாயுதத்துக்கு அபிஷேகம் நடைபெறும். அதேபோல், மாதந்தோறும் வரும் கிருத்திகை நாளிலும் வேலுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பால்குடம் எடுத்துவந்து இந்த முருகனை வழிபட்டால், திருமண வரமும் குழந்தை பாக்கியமும் விரைவில் கிடைக்கும் என்பது ஐதிகம்.

எப்படிச் செல்வது?: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவிலும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும் உள்ளது பிரான்மலை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குழந்தை வரமருளும் இலஞ்சிக் குமாரர்!

இறைவன் : வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீகுமாரர்

உற்சவர்: ஸ்ரீஇலஞ்சிக் குமாரர்

சிவனார்: ஸ்ரீஇலவாலுக நாயகர்

அம்பாள்: ஸ்ரீஇருவாலுக ஈசர்க்கினியாள்

திருத்தலச் சிறப்புகள்: திருமால், பிரம்மன், சிவபெருமான் ஆகிய மூவருள் யார் உலகத்தின் உட்பொருளாக விளங்குவது என்ற ஐயம் காசிபமுனி, கபிலமுனி, துர்வாசமுனி ஆகியோருக்கு ஏற்பட்டது. ஐயத்தைப் போக்கும்படி மூவரும் முருகப் பெருமானை வேண்டினர். இளமைப் பருவமுடையோனாய் அவர்கள் முன் தோன்றி, “யாமே விதியாக நின்று படைப்போம்; அரியாக நின்று காப்போம்; மற்றையோராக நின்று அழிப்போம்” எனச் சொல்லி, மூவினையையும் செய்யும் மும்மூர்த்தியராக அருள்கோலம்காட்டினார் முருகன்.

பரவசம் அடைந்த முனிவர்கள், “எங்களுக்குக் கிடைத்த இந்தப் பேறு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இளங்குமரனாய் இந்த இடத்தில் எழுந்தருள வேண்டும் குமரா” என வேண்டினார்கள். அதற்குச் செவிசாய்த்து அதே இடத்தில் இளங்குமரனாய் எழுந்தருளி கோயில் கொண்டார் குமரன்.

குழந்தை வரமருளும் இலஞ்சிக் குமாரர்!
குழந்தை வரமருளும் இலஞ்சிக் குமாரர்!

அகத்தியருக்கும் முருகன் அருள்செய்த தலம் இது. சிவ ஆணைப்படி உலகைச் சமன் செய்ய தென்னகம் வந்த அகத்தியருக்கு, சிவனாரின் திருமணக்கோலத்தைக் காணும் ஆவலும் ஏக்கமும் ஏற்பட்டன. இந்த நிலையில் அவருக்குக் காட்சியளித்து, `இலஞ்சி எனும் இந்தத் தலத்தில் சிவ வழிபாடு செய்தால் தந்தையின் மணக்கோலத்தைக் காணலாம்' என்று வழிகாட்டினாராம் முருகப்பெருமான். அதன்படி அகத்தியரால் வழிபடப்பட்ட வெண்மணலால் ஆன ஈசன், கிழக்கு நோக்கி ‘இருவாலுக நாயகர்’ என்ற பெயரில் அருள்கிறார்; அம்பாளின் திருப்பெயர் இருவாலுக ஈசர்க்கினியாள். இங்கே முருகன் அமர்ந்திருக்கும் மயில் வாகனம், முருகனுக்கு இடப்புறம் நோக்கியவாறு, இந்திர மயில் அம்சமாய்த் திகழ்கிறது. மகா மண்டபத்தில் தேவியரோடு அருளும் சண்முகரை தரிசிக்கலாம்.

வழிபாட்டுச் சிறப்பு: பிரம்மனும் இந்திரனும் வணங்கி அருள்பெற்ற தலம் இது. அருணகிரி நாதர் திருப்புகழில் இலஞ்சிக் குமாரரை `வரதராஜப் பெருமான்’ என்று பெயர் சூட்டி சிறப்பித்துப் பாடியுள்ளார். தைப்பூசம், சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், கந்த சஷ்டி ஆகியவை முக்கியத் திருவிழாக்கள் ஆகும். தைப்பூசத்தன்று ஸ்கந்த ஹோமம், 21 வகையான அபிஷேகத்துடன் விசேஷ தீபாராதனையும் மாலையில் திருவிலஞ்சிக் குமாரரின் வீதியுலாவும் நடைபெறும். மாதந்தோறும் வளர்பிறை சஷ்டியன்று, பாலபிஷேகம் செய்து, பால் கஞ்சி அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்து, சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம், வள்ளிக்குப் பச்சைப் பட்டு, தெய்வானைக்குச் சிவப்புப் பட்டு சாற்றி, மூவருக்கும் மல்லிகை மற்றும் செவ்வரளிப் பூமாலை அணிவித்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கி விரைவில் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

குழந்தைப் பேறு வேண்டுவோர் இதே வழிபாட்டைத் தொடர்ந்து மூன்று வளர்பிறை சஷ்டி தினங்களில் செய்து, 11 நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வேண்டினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும். அதேபோல் வியாபாரம் அபிவிருத்தி அடைய, கடன் பிரச்னைகள் நீங்க, வழக்கில் வெற்றிபெற... விசாக நட்சத்திர நாளில், இங்கு அருளும் சண்முகருக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து, சண்முகார்ச்சனை செய்து, ஆறு வகை நிவேதனம் செய்து (புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம், எலுமிச்சை சாதம், சுண்டல்) வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

எப்படிச் செல்வது? தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள இலஞ்சிக்கு பேருந்து, ஆட்டோக்களில் செல்லலாம். காலை 6:30 முதல் 12 மணி வரையிலும் மாலையில் 4:30 முதல் 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும் (தொடர்புக்கு: சுந்தர பட்டர் – 98421 81822, பாலசுப்பிரமணிய பட்டர் - 94867 02283).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வினைகள் தீர்க்கும் விராலிமலை வேலவன்!

இறைவன் : வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதர்

திருத்தலச் சிறப்புகள் : திருப்புகழ் பாடத்தொடங்கிய அருணகிரி நாதரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அவரை விராலிமலைக்கு வருமாறு அழைத்தார். விராலிமலைக்கு வழி தெரியாமல் அருணகிரியார் தவித்தபோது, முருகனே வேடன் உருவத்தில் வந்து அவருக்கு வழிகாட்டி அருளினார் என்கிறது தல புராணம். இந்த மலையில் சித்தர்களும் மகான் களும் மரங்களாக நின்று தவமியற்றுகின்றனர் என்பது ஐதிகம். இத்தலத்தில் சுனைக் கருப்பசுவாமி அண்ணனாகவும் மெய்க்கண்ணுடையாள் தங்கையாகவும் கோயில் கொண்டுள்ளனர். மலையடிவாரத்தில் நந்தியின் உறைவிடமான வீரகேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இறைவன் அகோர மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

வினைகள் தீர்க்கும் விராலிமலை வேலவன்!
வினைகள் தீர்க்கும் விராலிமலை வேலவன்!

வயலூரில் வாழ்ந்த சிறுவனுக்குக் காட்சியளித்து ஞானம் அருளி, அந்தச் சிறுவனை ஞானவரோதயர் ஆக்கினார் முருகப்பெருமான். அத்துடன் தனக்கு விராலிமலையில் ஓர் ஆலயம் எழுப்புமாறும் ஞானவரோதயரைப் பணித்தார். சிறுவனாக இருந்த ஞானவரோதயர், பேராம்பூரை அரசாண்ட அழகிய மணவாளனின் கண் நோயை முருகனருளால் தீர்த்துவைத்தார். அந்த அரசனிடமே ஆலயம் எழுப்பவும் உதவி கேட்டார். அவரின் வேண்டுகோளை ஏற்று விராலிமலையில் முருகனுக்கு ஆலயம் எழுப்பினான் அரசன். திருக்கோயிலில், கிழக்கு நோக்கியே சந்நிதியில் தேவியரோடு மயில்மீது அமர்ந்த கோலத்தில் பிரமாண்ட திருமேனியராக அருள்கிறார் சண்முகநாதர்.

வழிபாட்டுச் சிறப்புகள் : இங்கு முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசத் தேரோட்டம், தெப்பத்திருவிழா, வைகாசி விசாக பத்து நாள் உற்சவம், தேரோட்டம், கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை வெகுசிறப்பாக நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமி திருநாளில் முருகனுக்கு சங்காபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மூல நட்சத்திரத்தன்று அருணகிரிநாதர் விழா நடைபெறும். இந்த விழாக்களில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தால், தீராத நோய்களும் வினைகளும் தீரும் என்கின்றனர் பக்தர்கள்.

பௌர்ணமிதோறும் இங்கு நடைபெறும் கிரிவலம் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். குமரனும் சித்தர்களும் கொலுவிருக்கும் இந்த மலையை வலம்வந்து வழிபட்டால் காரிய வெற்றி, திருமணத் தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கடன் பிரச்னைகள் தீருதல் ஆகிய வரங்கள் கிடைக்கின்றன என்கின்றனர் பக்தர்கள்.

அபூர்வ வழக்கமாக இங்கு முருகனுக்குச் சுருட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. முற்காலத்தில், குமாரவாடி ஜமீனில் பணியாற்றிய கருப்பமுத்துப்பிள்ளை என்பவர் வெள்ளிக்கிழமைதோறும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வது வழக்கம். ஒருநாள் அவர் வழிபட்டுவிட்டுத் திரும்பிச் செல்லும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. குளிரில் தவித்த கருப்பமுத்துப்பிள்ளை தன்னிடமிருந்த சுருட்டைப் பற்றவைத்தார். அப்போது, குளிரில் நடுங்கியபடி வேறொருவர் அங்கு வந்தார். அவரைக் கண்டு மனமிரங்கிய கருப்பமுத்துப்பிள்ளை சுருட்டை அவரிடம் தந்தார். அதை வாங்கிக்கொண்டவர், ஆற்றைக் கடக்க உதவினார். மறுநாள் கருப்பமுத்துப்பிள்ளை முருகன் சந்நிதிக்குச் சென்றபோது, அங்கு அந்தச் சுருட்டு கிடப்பதைக் கண்டு சிலிர்த்தார். இருளில் வந்து வழிகாட்டி உதவியது முருகனே என்று அறிந்துகொண்டு மகிழ்ந்தார். அன்று முதல் இந்த ஆண்டவருக்குச் சுருட்டு சமர்ப்பிக்கும் வழக்கம் உருவானது. இந்த முருகனுக்கு சுருட்டு படைத்து வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் அருளும் வள்ளலாகவும் திகழ்கிறார் இந்த முருகன். இவரை வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், மீண்டும் இங்கு வந்து குழந்தையை சந்நிதியில் கிடத்தி, தவிட்டைத் தானமாகத் தந்து குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் சடங்கைச் செய்கிறார்கள்.

எப்படிச் செல்வது?: புதுக்கோட்டை மாவட்டம், திருச்சிராப்பள்ளி - மதுரை வழித் தடத்தில் தெற்கே 30 கி.மீ தொலைவில் இந்தத் தலம் அமைந்துள்ளது. காலை 7 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

தேக பலம் அருளும் வல்லக்கோட்டை முருகன்!

இறைவன் : வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர்

திருத்தலச் சிறப்புகள் : அருணகிரிநாதர் திருப்போரூரை தரிசித்து வழிபட்டு மறுநாள் திருத்தணி செல்லத் திட்டமிட்டார். அன்று இரவு அவரின் கனவில் எழுந்தருளிய முருகப்பெருமான், ‘வல்லக்கோட்டையை மறந்தாயே...’ என்று சொல்லி மறைந்தார். முருகப்பெருமான் சொல்லியருளிய தலத்துக்கு வந்து அங்கு சுப்பிரமணியராய் கோயில்கொண்ட கோடையாண்டவரைத் தொழுது அருணகிரியார் எட்டு திருப்புகழ்களைப் பாடி இந்த இறைவனைத் துதித்து மகிழ்ந்தார்.

தேக பலம் அருளும்
 வல்லக்கோட்டை முருகன்!
தேக பலம் அருளும் வல்லக்கோட்டை முருகன்!

வல்லக்கோட்டை புராண காலம் முதல் நிலைத்து விளங்கும் க்ஷேத்திரமாகும். இங்கு வல்லன் என்னும் அசுரன் கோட்டை அமைத்து ஆண்டுவந்தான். தேவர்களுக்கும் முனிவர்களும் தீராத தொல்லைகள் கொடுத்துவந்த இந்த அசுரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து இங்கேயே கோயில்கொண்டருளினார் என்று தல புராணம் கூறுகிறது. முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தலமாதலால் அறுபடை வீடுகளுக்கு இணையான மகிமையை உடைய தலமாக இத்தலம் விளங்குகிறது.

இலஞ்சி என்னும் தேசத்தை பகீரதன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். ஒருநாள் அவன் அவைக்கு நாரதர் எழுந்தருளினார். மகரிஷியை வரவேற்க வேண்டிய முறைகளை அறியாமல் பகீரதன் நாரதரை அவமதித்தான். இதனால் கோபமுற்ற நாரதர் அங்கிருந்து கிளம்பி தவம் செய்யச் சென்றார். வழியில் கோரன் என்னும் அசுரனைக் கண்டார். அவனிடம், இலஞ்சியை ஆளும் பகீரதனின் தேசத்தை வெல்லுமாறு கூறினார். அதன்படி கோரனும் இலஞ்சி சென்று பகீரதனைப் போரில் வெற்றிபெற்றான். குரு அபராதமே தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்த பகீரதன் நாரத முனியைத் தேடிச்சென்று அவர் பாதம் பணிந்தான். நாரதரும் அவனை மன்னித்து மீண்டும் அவன் சகலமும் பெற துர்வாச முனிவரை அணுகி ஆசிபெறும்படிக் கூறினார். துர்வாசரும் பகீரதனுக்கு இரங்கி, பகையை அழிக்கும் வல்லமை தரவல்லவர் முருகக் கடவுளே என்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து, பாதிரி மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட, அவர் அருள்கிட்டும் என்று உபதேசித்தார். அவ்வாறே பாதிரி மரத்தடியில் எழுந்தருளியிருந்த முருகப்பெருமானின் திருமேனியைக் கண்டு விரதமிருந்து வழிபட்ட பகீரதன், மீண்டும் தன் பலங்கள் யாவும் பெற்று பகை வீழ்த்தி தன் நாட்டை அடைந்தான். தனக்கு அருள்பாலித்த முருகப்பெருமானுக்கு பகீரதன் எழுப்பிய ஆலயமே வல்லக்கோட்டை.

இங்கு கிழக்கு நோக்கிய சந்நிதியில் முருகப்பெருமான் வள்ளி-தேவசேனா சமேதராகக் காட்சியருள்கிறார். அவருக்கு எதிரே இரட்டை மயில் வாகனம் அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பு. இங்கு கணபதி, கருமாரி, திரிபுரசுந்தரி ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

வழிபாட்டுச் சிறப்புகள் : இந்தத் தலம் இந்திரன் முதலான தேவர்கள் முருகனை வழிபட்ட தலம். இந்திரன் இங்குவந்து தன் வஜ்ஜிராயுதத்தால் பூமியில் குத்தி உருவாக்கிய தீர்த்தம் இன்றும் உள்ளது. வஜ்ஜிர தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் உடலும் புத்தியும் வல்லமை பெறும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து ஏழு வாரங்கள் முருகப்பெருமானை வழிபட்டு வேண்டுவோர்க்குத் திருமண வரமும் செல்வச் செழிப்பும் ஏற்படும் என்கின்றனர். இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பால் குடம், காது குத்தல், முடிக் காணிக்கை முதலிய நேர்த்திக் கடன்களைச் செலுத்துகின்றனர். இந்தத் திருத்தலத்தில் திருமணம் செய்துகொள்வது விசேஷமாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பதிவு அவசியம்.

எப்படிச் செல்வது? : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் கூட் ரோடிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை. ஒரகடத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ மூலம் வல்லக்கோட்டை செல்லலாம்.

காலை 5.30 முதல் மதியம் 1 மணிவரை, மாலை 3 முதல் இரவு 8.30 மணிவரை கோயிலின் நடை திறந்திருக்கும். ஞாயிறு, கிருத்திகை மற்றும் விசேஷ தினங்களில் முழுநேரமும் கோயில் திறந்திருக்கும்.

விதியை மாற்றும் குன்றாண்டவர்

இறைவன் : வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீசண்முகர்

திருத்தலச் சிறப்புகள் : முன்னொரு காலத்தில், இந்தத் தலத்திலுள்ள திருக்குளத்தில் சங்கம ரிஷி என்பவர் அமர்ந்து 14 ஆண்டுகள் சிவபெருமானை நினைத்துக் கடும் தவம் புரிந்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த ஈசன் முனிவருக்குக் காட்சி கொடுத்தருளினார். இறைவனின் தரிசனத்தால் மகிழ்ந்த ரிஷி, தன்னைப் போலவே இங்குவந்து வழிபடும் சகலருக்கும் இறைவன் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, ஈசனும் இங்கு அமையும் கோயிலில் எழுந்தருளத் திருவுளம் கொண்டார். அதன்பின்பு நீண்ட காலம் சங்கம ரிஷி இந்தத் தலத்திலேயே இருந்து மக்களுக்குத் தொண்டாற்றினார். சங்கம ரிஷி கடும் தவம் புரிந்த குளம் ஆதலால் இந்தக் குளம் சங்கமக் குளம், சங்கக்குளம் என்றெல்லாம் பெயர் பெற்றது.

விதியை மாற்றும் குன்றாண்டவர்
விதியை மாற்றும் குன்றாண்டவர்

பிற்காலத்தில் இத்தலத்தின் மகிமைகளைக் கேள்விப்பட்ட இரண்டாம் நந்திவர்ம பல்லவன் இந்த அழகிய குடைவரைக் கோயிலை உருவாக்கினான் என்கின்றனர் பக்தர்கள். இந்த குகைக் கோயிலில் ஈசன் பர்வதகிரீஸ்வரர் உமையாம்பிகை சமேதராகக் கோயில்கொண்டுள்ளார். மேலும் இங்கு வலம்புரி விநாயகரும் முருகப்பெருமானுக்கும் சந்நிதிகள் உள்ளன. இவை தவிர, மலை உச்சியில் முருகப்பெருமானுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானை சமேதராக சண்முகக் கடவுளாக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். குகைக் கோயிலுக்கு அருகே நூற்றுக்கால் மண்டபம் ஒன்று உள்ளது. இங்குள்ள குன்றில் முருகப்பெருமான் எழுந்தருளியதால், இக்கோயில் ‘குன்றாண்டார் கோயில்’ என்று அழைக்கப்பட்டு, காலப் போக்கில் ‘குன்னாண்டார் கோயில்’ மருவி வழங்கப்படுகிறது.

வழிபாட்டுச் சிறப்புகள் : குன்றின் உச்சியில் சண்முகர் சந்நிதிக்கு எதிரே பிரமாண்ட கல் விளக்கு இருக்கிறது. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தின்போது பிரமாண்ட கல் விளக்கில், பக்தர்கள் கொண்டுவரும் எண்ணெயை ஊற்றி விளக்கேற்றுகிறார்கள். தீபத்தன்று மாலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6 மணிவரை தீபம் இடைவிடாமல் ஒளிர்ந்துகொண்டிருக்கும். சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் வசிப்போர், இந்த தீபத்தை தரிசிப்பது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள். பக்தர்கள் விளக்கில் எண்ணெய் ஊற்றி ஸ்வாமியை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.

ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியின்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி என நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். அன்றைய தினம் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்களும் சந்தனக்காப்பு அலங்கார, ஆராதனைகளும் நடைபெறும். இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் விதியை - தலையெழுத்தை நல்லபடியாக மாற்றியருள்வார் குன்றாண்டார் கோயில் முருகன் என்பது நம்பிக்கை. இதையொட்டி ஜாதகத்தில் தோஷம் இருக்கும் குழந்தைகளை சண்முகருக்குத் தத்துக்கொடுத்து வழிபடுகிறார்கள். குறிப்பாகப் பெண் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் பிரார்த்தனையைச் செய்கிறார்கள். இதனால், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வளர்வார்கள் என்பது நம்பிக்கை. தத்துக்கொடுத்த பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைப்பதற்கு முன்பாக தவிடுகொடுத்து மீட்டுக்கொள்கின்றனர். குழந்தை இல்லாதவர்கள், பிறக்கும் குழந்தையைத் தத்துக்கொடுப்பதாக வேண்டிக்கொண்டால், விரைவில் அவர்களுக்குக் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும், குகைக்கோயிலில் உள்ள உமையம்மை சந்நிதி காலத்தால் மிகவும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது. அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற மஞ்சளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். திருமண தோஷம் உள்ள பெண்கள், விளக்கேற்றி அம்மன் சந்நிதியில் மஞ்சளை வைத்துச் சென்றால், தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம்.

எப்படிச் செல்வது ?: புதுக்கோட்டையிலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது குன்றாண்டார் கோயில். காலையில் 6 முதல் 12 மணி வரையிலும்; மாலையில் 5 முதல் 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.