Published:Updated:

திருவருள் திருவுலா - மகிமைமிகு மலைக்கோயில்கள்!

திருவருள் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா

இந்தக் கோயிலுக்கு வந்து, முருகனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், விரைவில் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர்.

திருவருள் திருவுலா - மகிமைமிகு மலைக்கோயில்கள்!

இந்தக் கோயிலுக்கு வந்து, முருகனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், விரைவில் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர்.

Published:Updated:
திருவருள் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா

வைகாசி விசாகம் கந்தப்பெருமானின் அவதார நட்சத்திர நாள் எனில், சரவணப்பொய்கையில் அவரை வளர்த்தெடுத்த கார்த்திகைப் பெண் களைச் சிறப்பிக்கும் திருநாள், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத் திருநாள். இந்தத் திருநாளில் கார்த்திகேயனை தரிசித்து வணங்குவது விசேஷம். அதனால் கல்வி, செல்வம், வேலை வாய்ப்பு, வீடுமனை யோகம், மங்கல வாழ்வு, சத்புத்ர பாக்கியம், குடும்பத்தில் சுபிட்சம் என சகல வரங்களும் வாய்க்கும்.

திருவருள் திருவுலா
திருவருள் திருவுலா

அந்த வகையில் முருகன் குடியிருக்கும் மலைக்கோயில்கள் நான்கை இந்த இதழில் தரிசிப்போம். புதுக்கோட்டைக்கு அருகில் ஓரிரு நாள்களில் தரிசிக்கும் வகையில் அமைந்த அந்தத் தலங்களின் மகிமைகளும் அவற்றை தரிசிப்பதால் கிடைக்கும் வரப்பயன்களும் அளப்பரியவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாதநோய் தீரும்!   - பக்தருக்கு அருள் கிடைத்த குமரமலை

குமரமலைக்கு அருகே குன்னக்குடிப்பட்டியில் சேதுபதித் தேவர் என்ற முருகபக்தர் வாழ்ந்தார். வருடம்தோறும் பழநி யாத்திரைக்குச் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார் இவர். ஒரு வருடம் வழியிலேயே உடல்நிலை ஒத்துழைக்காத தால் பயணத்தைத் தொடரமுடியாத நிலை. அருகிலிருந்த மலையின் அடிவாரத்தில் தங்கிவிட்டார்.

யாத்திரையைத் தொடரமுடியவில்லையே என்ற கவலையோடு படுத்தவர் அப்படியே உறங்கிப் போனார். கனவில் தோன்றிய கந்தன், ``வருந்தாதே. இந்தக் குன்றின் மீது சங்கஞ்செடி ஒன்று இருக்கும். அதன் அருகே விபூதிப்பையும் ருத்ராட்ச மாலையும் இருக்கும். எனது சாந்நித்தியம் நிறைந்த அந்த இடத்திலேயே என்னை எப்போதும் வழிபடலாம்’’ என்று கூறி மறைந்தார். விழித்தெழுந்த சேதுபதி தேவர் குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, கனவில் கந்தன் அருளியது போன்றே அனைத்தையும் கண்டார். மிக்க மகிழ்ச்சியோடு அந்த இடத்தில் வேலாயுதத்தை ஊன்றி வழிபட ஆரம்பித்தார். பிற்காலத்தில் அங்குதான் பாலதண்டாயுதபாணி கோயில் எழுப்பப்பட்டது.

குமரமலை
குமரமலை

வழிபாட்டுச் சிறப்புகள்: குமரமலைக்கு மேலே சங்கு சுனை உள்ளது. குமரமலை முருகனை வேண்டிக்கொண்டு, சங்கு தீர்த்த நீரைத் தலையில் சிறிது தெளித்துக்கொண்டு, சிறிது உள்ளுக்குப் பருகினால் வாத நோய் உள்ளிட்ட தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. வாத நோய் தீர்ந்தால் பாதம் அடித்து வைக்கிறோம் என்று வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். அவர்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுகின்றன. மலைப்படிக்கட்டுகளில் தென்படும் (காணிக்கை) பாதச்சுவடுகள், இதை உறுதிப்படுத்துகின்றன. அதேபோல் திருமண வரமும் குழந்தை பாக்கியமும் தந்தருள்கிறார் இந்தத் தண்டாயுதபாணி.

நடைதிறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் இரவு 8 மணி வரை இந்தக் கோயிலில் நடைதிறந்திருக்கும்.

எப்படிச்செல்வது?: புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி (காரையூர் வழி) செல்லும் வழியில், சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது குமரமலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தை வரம் கிடைக்கும்! - மலையக்கோவில் மகிமை

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலுள்ளது மலையக்கோயில். மலைக்கு மேலுள்ளது மலைக்கோயில் என்றும், அடிவாரத்தில் அமைந்திருப்பது கீழ்க்கோயில் என்றும் அழைக்கப்படுகின்றன. அடிவாரத்தில் கிழக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றுமாக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன.

கிழக்குக்கோயிலின் கருவறையில், மலைப் பாறையிலேயே செதுக்கப்பட்ட லிங்கமும் அதன் எதிரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் திருமேனி யும் அற்புதப் படைப்புகள். தெற்குக் குடைவரைக் கோயிலில் மேற்குநோக்கி அருளும் சிவனாரை வழிபட்டால் பிரமஹத்தி தோஷம் நீங்கும்.

மலைக்குமேல் சுப்பிரமணிய ஸ்வாமி கோயில் கொண்டிருக்கிறார். மேலே செல்ல சாரப் பாதை, படிவெட்டுப் பாதை என இரண்டு பாதைகள் இருக்கின்றன. பக்தர்கள் பெரும்பாலும் படிவெட்டுப்பாதையில் ஏறி, தரிசனம் முடிந்ததும் சாரப்பாதையில் இறங்குகின்றனர். திருப்படித் திருவிழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக நடைபெறும். முருகன் சந்நதிக்கு அருகேயுள்ள சரவணப் பொய்கை எனும் சுனையின் நீர், தீராத நோயையும் தீர்க்கும் அருமருந்து என்கிறார்கள்.

மலையக்கோவில்
மலையக்கோவில்

வழிபாட்டுச் சிறப்புகள்: குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இத்தல முருகனை மனமுருகி வேண்டிக்கொள்ள, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அப்படி வரம்பெற்ற பக்தர்கள் நன்றிக்கடனாகக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த தகவலை யும் அறிய முடிகிறது. பிணி தீர்க்கும் பெருமானாகவும் திகழ்கிறார் இவ்வூர் முருகன்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 9 முதல் மதியம் 1 மணி வரை; மாலை 3.30 முதல் 5 மணி வரை.

எப்படிச் செல்வது?: புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், நமணசமுத்திரம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் மலையக் கோவில் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்துகள், மலையக்கோவில் விளக்கில் நிற்கிறது. அங்கிருந்து ஒன்றரை கி.மீ தூரம் நடந்தால், மலையக்கோவிலை அடையலாம். ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.

செவ்வாய் தோஷம் நீங்கும்! - பழநி தரிசனப் புண்ணியம் தரும் வையாபுரி மலை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில், `பாலகிரி’ எனும் பெயர்கொண்ட வையாபுரி கிராமத்தில், மலைக்குமேல் கோயில் கொண்டிருக்கிறார் சுப்ரமணியர். குமரமலை போன்றே இந்த மலைக்கோயிலும், பழநிக்குப் பாதயாத்திரை செல்ல முடியாமல் வருந்திய இளையாத்தன்குடி வாச்சமாடி தேவர் என்ற பக்தருக்காக முருகன் குடிகொண்ட பதியாகும்.

முதுமையின் காரணத்தால் பழநிக்குச் செல்ல முடியாமல் தவித்த இந்தப் பக்தரின் கனவில் தோன்றி வையாபுரி மலையை அடையாளம் காட்டி, ``அந்தக் குன்றில்தான் குடியேறப் போகிறேன். அங்கு வந்து என்னை வழிபடலாம்’’ என்று அருள் பாலித்தாராம் முருகன். அடிவாரத்தில் சண்முக நதியில் நீராடி அல்லது கால் நனைத்து, படியேறத் தொடங்குகிறார்கள் பக்தர்கள். வழியில் ராஜகணபதி, இடும்பன் ஆகியோரை தரிசிக்கலாம். மலைக்குமேல் அகத்தியர், போகர் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. கருவறையில் வள்ளி தெய்வானையுடன் அருள்கிறார் முருகன். பிராகார வலத்தில் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசிக்கலாம். கார்த்திகை தீபம், கார்த்திகை சோம வாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் இங்கே விசேஷம்.

வையாபுரி மலை
வையாபுரி மலை

வழிபாட்டுச் சிறப்பு: பழநியின் பெயர்களில் வையாபுரி என்பதும் ஒன்று. அதே திருப்பெயரில் இத்தலம் விளங்குவதால், பழநி தரிசனப் புண்ணியம் தரவல்லது என்கிறார்கள். குடும்பம் முன்னேற்றம் அடைய, பிள்ளைகளைச் சுவாமியிடம் தத்துக் கொடுக்கும் சடங்குகளும் நடக்கின்றன. மேலும் செவ்வாய் தோஷம், திருமணத் தடை நீங்கவும் குழந்தை வரம் வேண்டியும் இந்தக் குமரனை வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

நடைதிறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 3 முதல் இரவு 8 மணி வரை.

எப்படிச் செல்வது?: புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி (பெருமாநாடு) செல்லும் சாலையில், சுமார் 27 கி.மீ தொலைவில் உள்ளது வையாபுரி. பேருந்திலிருந்து இறங்கியதுமே நுழைவுவாயிலைக் காணலாம். அங்கிருந்து ஒரு கி.மீ தூரம் நடந்தால் மலையடிவாரத்தை அடையலாம்.

பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர்! - சப்த ரிஷிகள் தவமிருந்த தபசுமலை

ப்தரிஷிகள் முருகனை நினைத்து தவமிருந்த இடம் தபசுமலை. அடிவாரத்தில் சப்தரிஷிகளுக்கான குடைவரைக் கோயில் உள்ளது. மலைக்கு மேற்குப்புறம் உள்ள குளக்கரையில் இரட்டை விநாயகர்கள் அருள்கிறார்கள்.

மலைக்கு 150 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். மலைக்கோயிலில் பாலதண்டாயுதபாணியாய் முருகன் அருளும் இந்தத் தலத்தில் பௌர்ணமி கிரிவலம் பிரசித்திபெற்றது. அன்று முருகனுக்குச் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கும். பங்குனி உற்சவம், தைப்பூசம், கார்த்திகை தீபம் ஆகியவை இங்கே விசேஷம். தற்போது, திருக்கார்த்திகையை யொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.

தபசுமலை
தபசுமலை

வழிபாட்டுச் சிறப்புகள்: இந்தக் கோயிலுக்கு வந்து, முருகனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், விரைவில் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். கிரக தோஷம், நாக தோஷம் உள்ளவர்களுக்கு முருகனின் சந்நிதியில் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. குழந்தை வரம் வேண்டுவோர், முருகனின் திருப்பாதத்தில் வைத்துப் பூஜித்துக் கொடுக்கப்படும் எலுமிச்சைச்சாற்றை அருந்தினால், விரைவில் குழந்தை வரம் கிட்டும். அதேபோல், அடிவாரத்திலுள்ள குளத்தின் தீர்த்தத்தை பாலதண்டாயுத பாணியிடம் வைத்து பூஜித்து தீர்த்தமாகக் கொடுக்கின்றனர். அதை அருந்தினால், சர்க்கரை நோய், வயிற்றுப்புண் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் தீரும் என்கின்றனர் பக்தர்கள். கந்த சஷ்டி நாளின்போது, தபசுமலைக்கு வந்து பாலதண்டாயுதபாணிக்குத் தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். முருகனை வழிபட்டுவிட்டு, அடிவாரத்தில் உள்ள சப்த ரிஷிகளை வணங்கி அங்கு அமர்ந்து முருகனை நினைத்துத் தியானிக்க ஞானமும் யோகமும் கிடைக்கும்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் மதியம் 12 மணி வரை; மாலை 3 முதல் இரவு 8 மணி வரை.

எப்படிச் செல்வது?: புதுக்கோட்டையிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ளது தபசுமலை. புதுக்கோட்டையிலிருந்து தபசுமலைக்கு அரசு (தடம் எண் 13-ஏ) மற்றும் தனியார் பேருந்து வசதி உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism