Published:Updated:

திருவருள் திருவுலா: பஞ்ச வைத்தியநாத திருத்தலங்கள்!

திருவருள் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா

ஓவியம்: ம.செ;

திருவருள் திருவுலா: பஞ்ச வைத்தியநாத திருத்தலங்கள்!

ஓவியம்: ம.செ;

Published:Updated:
திருவருள் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் திருவுலா

தன்னை அடைந்தார்க்கு இன்பங்கள் தருபவனாகிய இறைவன், நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்க்கத் திருவுளங்கொண்டு, ஶ்ரீவைத்தியநாதர் எனும் திருப்பெயருடன் அருள்பாலிக்கிறார்.

சிவலிங்கத் திருமேனியராக ஐயன் திகழ, அம்மையோ தையல்நாயகியாக தைல பாத்திரமும், சஞ்சீவியும், வில்வ மரத்து அடிமண் ணும் எடுத்துக்கொண்டு ஸ்வாமியுடன் எழுந்தருள, இருவரும் சகல நோய்களையும் தீர்க்கும் வைத்தியர்களாக இந்த வையகத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

ஆம்! பூலோகத்தில் நோய்கள் பெருகியதால், அவற்றைக் கட்டுப்படுத்த திருவுளம் கொண்டார் இறைவன். விளைவு, ஆகாயத்திலிருந்து ஐந்து வில்வ இலைகள் சிதறி பூமியில் விழுந்தன.

அப்படி வில்வம் விழுந்த இடங்களில் எல்லாம் சிவாலயங்கள் உருவாயின. அவற்றில் ஶ்ரீவைத்தியநாதரும், ஶ்ரீதையல்நாயகியும் எழுந்தருளி தங்களை நாடி வரும் பக்தர்களுக்கு நோய் தீர்த்து அருள்கிறார்கள்.

இங்ஙனம் பூமியில் உருவான ஐந்து சிவத் தலங்கள் நாகை மாவட்டத்தில் மயிலாடு துறையைச் சுற்றி அமைந்துள்ளன. அவை: வைத்தீஸ்வரன் கோயில், திருமண்ணிப்பள்ளம், ராதாநல்லூர், ஐவநல்லூர், பாண்டூர்.

திருவருள் திருவுலா
திருவருள் திருவுலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேகப் பிணிகளை மட்டுமன்றி நம் பிறவிப் பிணியையும் தீர்க்கவல்ல அற்புத க்ஷேத்திரங்களுக்கு நேரில் சென்று தரிசித்து வலம் வந்து வழிபட்டால், நோய்களில்லா வாழ்வை வரமாகப் பெற்று மகிழலாம்.

தகவல்: முத்து. ரத்தினம், சத்தியமங்கலம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வைத்தீஸ்வரன் கோவில்

இறைவன் : ஶ்ரீவைத்தியநாத சுவாமி

இறைவி : ஶ்ரீதையல்நாயகி

வைத்தீஸ்வரன் கோவில்
வைத்தீஸ்வரன் கோவில்

திருத்தலச் சிறப்புகள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் போற்றிப் புகழ்ந்த தலம் இது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும், ஶ்ரீசெல்வ முத்துக்குமாரர்மீது குமரகுருபர சுவாமிகள் அருளிச்செய்த பிள்ளைத்தமிழ் பிரபந்தமும் மிகவும் சிறப்பானவை. நோய் தீர்க்கும் தலத்தில் முதன்மையானது இது. ஒருமுறை, செவ்வாய் பகவான் தனக்கு ஏற்பட்ட சருமநோய் நீங்க, இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி ஶ்ரீவைத்தியநாதரை வழிப்பட்டு நிவர்த்திப் பெற்றதால், அங்காரக க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது.

ஜடாயுவின் வேண்டுகோள்படி ராமபிரான் இத்தலத்தில் விபூதி குண்டத்தில் ஜடாயுவின் உடலைத் தகனம் செய்தார் என்றும், ஜடாயு குண்டம் என்றழைக்கப்படும் அந்தக் குண்டத்தில் உள்ள திருநீற்றினை இட்டுக்கொண்டால், பலவிதமான பிணிகளும் நீங்கப்பெறும் என்றும் கூறுவர். இங்கு சித்தர்கள் இறைவனின் திருமுடியில் தேவாமிர்தத்தால் அபிஷேகம் செய்தபோது, அந்த அமிர்தம் வழிந்து இக்குளத்தில் கலந்தமையால் சித்தாமிர்த தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சுதானந்தர் என்ற முனிவர் இதில் நீராடி தியானம் செய்யும்போது, பாம்பால் துரத்தப்பட்ட தவளை ஒன்று அவர்மீது பாய்ந்து, அவரின் தியானத்தை கலைத்தது. முனிவர் சினம்கொண்டு, `இத்தீர்த்தத்தில் எக்காலமும் தவளைகளும் பாம்புகளும் இல்லாது ஒழியக் கடவன' என்று சாபமிட்டார். இன்றுவரை தவளை, பாம்பு போன்றவை இத்தீர்த்தத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வழிபாட்டுச் சிறப்புகள் : ஏனைய தலங்கள் போலல்லாமல் அர்த்தயாம பூஜா காலத்தில் ஶ்ரீசெல்வ முத்துக்குமாரருக்கு வழிபாடு நடந்த பின்னர்தான், சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். இதற்கு ‘புழுக்காப்பு' என்று பெயர். இத்தலத்தில் பிரமோற்சவத்தின் ஐந்தாம் நாளன்று ஶ்ரீசெல்வ முத்துக்குமாரர், ஶ்ரீவைத்தியநாதரை பூஜித்து, செண்டு பெறும் காட்சி மிகச் சிறப்பானதாகும். செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தால் சகல நோய்களும் நிவர்த்தியாகும்; செவ்வாய் தோஷம் நீங்கும்.

எப்படிச் செல்வது ? : சிதம்பரம் - மயிலாடுதுறை ரயில், மற்றும் பேருந்து மார்க்கத்தில் வைத்தீஸ்வரன்கோவில் அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமண்ணிப்பள்ளம்

இறைவன் : ஶ்ரீஆதி வைத்தியநாதர்

இறைவி : ஶ்ரீதையல்நாயகி

திருமண்ணிப்பள்ளம்
திருமண்ணிப்பள்ளம்

திருத்தலச் சிறப்புகள் : 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்து கோயில் இது. அம்மையப்பனின் அருளாசியுடன் தன்வந்திரி மகரிஷி இத்தலத்தில் தங்கி, பக்தர்களுக்கு மருந்து கொடுத்து நோய்களைக் குணப்படுத்தி வந்தார். அப்போது, கடும்நோயால் அவதிப்பட்ட மன்னன் ஒருவன், தன் நோய் தீர ‘தன்வந்திரியை அழைத்து வாருங்கள்’ என வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

ஆனால் தன்வந்திரி, ‘தைல தீர்த்தத்தில் நீராடி ஶ்ரீதையல்நாயகி சமேத ஶ்ரீஆதி வைத்தியநாதரை வணங்கிவிட்டு வருபவர்களுக்கு மட்டுமே மருந்தளிப்பேன். எனவே மன்னனை இங்கு வரச் சொல்லுங்கள்' என்று வீரர்களைத் திருப்பி அனுப்பினார். இதனால் சினம்கொண்ட மன்னன் தன்வந்திரியைத் தீயிலிட ஆணையிட்டான்.அரசனின் ஆணை நிறைவேற்றப்பட்டது. ஆனால், தன்வந்திரியை இத்தலத்து ஈசனும் இறைவியும் உயிர்ப்பெறச் செய்து, இத்திருத்தலத்தில் அவர் பணியைத் தொடரவைத்தனர் என்பது தலவரலாறு. சிவபெருமானும் பார்வதியும் பந்து விளையாடியபோது, அந்தப் பந்து மண்ணில் பெரிய பள்ளத்தில் விழுந்துவிட்டதாம். அதனால் இவ்வூர் மண்ணில் பள்ளம் என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி மண்ணிப்பள்ளம் ஆயிற்று என்கிறார்கள்.

வழிப்பாட்டுச் சிறப்புகள் : ஶ்ரீதையல்நாயகி அம்பாள் கயிலாயத்திலிருந்து தைல பாத்திரம் ஏந்தி, இங்குள்ள தீர்த்தத்துக்கு வந்து நீராடியதால், இது தைல தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இத்தலத்தில் நவகிரகங்கள் இல்லை. தன்வந்திரி மகரிஷி அருள்கிறார். இறைவனும் இறைவியும் தன்வந்திரிக்கு அருள்பாலித்து, பிணி தீர்க்கும் பணியைக் கொடுத்த தலம் என்பதால், இங்கு வந்து வழிபடுவோரின் பிணிகளை நீங்குவதோடு, திருமணத் தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது ஐதிகம்.

எப்படிச் செல்வது ? : சிதம்பரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில், வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் மற்றும் பேரூந்து நிலையத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் மண்ணிப்பள்ளம் திருத்தலம் உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.(தொடர்புக்கு : சந்திரசேகர குருக்கள் - 97881 95632).

ராதாநல்லூர்

இறைவன் : ஶ்ரீஆதி வைத்தியநாத சுவாமி

இறைவி : ஶ்ரீதையல்நாயகி

ராதாநல்லூர்
ராதாநல்லூர்

திருத்தலச் சிறப்புகள் : ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மிகவும் பழைமையான ஆலயம் இது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தை சர்வநோய் நிவர்த்தி தலம் என்றழைக்கின்றனர். இங்கு இறைவன், இறைவி, முத்துக்குமாரசாமி ஆகியோரின் சந்நிதிகள் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ளதுபோலவே அமைந்திருப்பது வியப்பான செய்தியாகும்.

இறைவனும் இறைவியும் நீராட தண்ணீர் வேண்டும் எனக் கேட்டபோது, அவர்களது புதல்வன் முருகன், தன் கையிலிருந்த வேலைத் தூக்கி எறிய, அந்த வேல் விழுந்த இடத்தில் ஒரு நதி உருவானதாம். `சுப்ரமணிய நதி' என்றழைக்கப்பட்ட அதை, தற்போது மண்ணியாறு என்று பெயர் மாற்றி அழைக்கின்றனர். ஆலயத்தின் தென்புறம் இந்த நதி இன்றும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. தை மாதம் ஏழு நாள்கள் சூரியன் தன் பொற்கதிர்களால் கருவறையில் உள்ள ஈசனைத் தழுவி வழிபடுவது வழக்கம். இந்த சூரிய பூஜையில் ஏராளமானவர் கலந்து தரிசனம் செய்கின்றனர்.

வழிபாட்டு சிறப்புகள் : ஐப்பசி பெளர்ணமியில் இங்குள்ள ஈசனுக்கு அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வாழ்வில் உணவுக்குக் குறை ஏற்படாது என்பது நம்பிக்கை. அதுபோல் தங்களது உடம்பில் கட்டியோ, தேமலோ அல்லது ஏதாவது தோல் வியாதியோ ஏற்பட்டால், பக்தர்கள் இத்தலத்து இறைவனிடம் வேண்டிக்கொள்ள வந்த வியாதி கரைந்து மறைந்து போவது இத்தலத்தின் சிறப்பாகும். இங்கு வரும் பக்தர்கள் வெல்லக் கட்டிகளை வாங்கி வந்து திருக்குளத்தில் கரைத்து, தங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வது வழக்கமாக இருக்கிறது. திருவாதிரை, பிரதோஷம், சித்திரைப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபத்திருநாள் ஆகிய விசேஷ நாள்களில் இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது ? : சிதம்பரம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் வைத்தீஸ்வரன்கோயிலில் இருந்து மேற்கே 17 கி.மீ தொலைவில் ராதாநல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது.

(தொடர்புக்கு : கிருபாலநாத ஷர்மா - 95430 86322).

பாண்டூர்

இறைவன் : ஶ்ரீஆதி வைத்தியநாத சுவாமி

இறைவி : ஶ்ரீபாலாம்பிகை

பாண்டூர்
பாண்டூர்

திருத்தலச் சிறப்புகள் : பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, அவர்களுக்கு ஏற்பட்டிருந்த பாண்டுரோகம் என்ற கொடிய நோயிலிருந்து நிவர்த்திபெற வேண்டி, ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அறிவுரைப்படி, சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சூரிய புஷ்கரணி என்னும் தீர்த்தத்தில் நீராடி, சிவாராதனையும் செய்தார்கள். இறைவனும் அதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அருள்புரிந்து, அவர்களுடைய வியாதியைப் போக்கினார்.

எனவே பாண்டவர்கள் இத்தலத்து இறைவனை ஆதிவைத்தியநாத சுவாமியாகவும், தேவியை ஶ்ரீபாலாம்பிகையாகவும் போற்றி மகிழ்ந்தார்கள். `எங்களது இன்னல் தீர்த்தது போலவே இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பாண்டுரோகம் உள்ளிட்ட அனைத்துவித கொடிய வியாதிகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்' என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டார்கள். அதன்படி இன்றுவரை நோய் தீர்க்கும் தலமாக இது திகழ்கிறது. கடனால் பாதிக்கப்பட்ட அரிச்சந்திர மகாராஜன் இத்தலத்தில் அங்காரக விரதமிருந்து பூஜை செய்ததால், அவனுடைய கடன் நீங்கியதாக தல வரலாறு கூறுகிறது. பாண்டவர்கள் வந்து வணங்கி அவர்களுக்குரிய நோயிலிருந்து விடுபட்ட காரணத்தினால் இவ்வூர் பாண்டூர் என்றழைக்கப்படுகிறது.

வழிப்பாட்டுச் சிறப்புகள் : இத்தலத்தில் பைரவருக்குத் தனிச் சந்நிதி உண்டு. சூரிய புஷ்கரணியில் நீராடி இந்தப் பைரவரை வணங்கி வேண்டுவோருக்கு, தோல்நோய் முதலான சகல பிணிகளும் நீங்கும் என்கிறார்கள். பக்தர்களின் பிணி தொடர்பான பிரச்னைகளை பைரவர் ஏற்றுக்கொள்வதாக ஐதிகம். எனவே இத்தலத்து பைரவரின் திருமேனி திட்டு திட்டாக வெள்ளை உருவமாகத் திகழ்கிறது என்கிறார்கள். தையல்நாயகி அம்பாள் இங்கே ஶ்ரீபாலாம்பிகையாகக் காட்சி தருகிறாள். உபதேசம் செய்வோருக்கு அருள்புரிகிறாள். சகல வியாதிகள் தீரவும் கடன் பிரச்னைகள் நிவர்த்தி அடையவும் ஏராளமான பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வணங்கி நலம் பெறுகிறார்கள்.

எப்படிச் செல்வது ? : மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு மற்றும் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் பாண்டூர் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து கொறுக்கை மற்றும் காளி எனும் ஊருக்குச் செல்லும் சிற்றுந்துகள் இங்கு நிற்கும். ஆட்டோ வசதிகளும் உள்ளன. (தொடர்புக்கு : சதாசிவ குருக்கள் - 94420 13493).

ஐவநல்லூர்

இறைவன் : ஶ்ரீவைத்தியநாதர்

இறைவி : ஶ்ரீதையல்நாயகி

ஶ்ரீவைத்தியநாதர்
ஶ்ரீவைத்தியநாதர்

திருத்தலச் சிறப்புகள் : அடியார்களுக்கு கடும் துன்பங்கள் அளிக்கும் பிரச்னைகளின் கொடுமையான வெம்மையைப் போக்கும் குளிர்நிலவு ஐயன் ஈசனின் திருடிகள் என்பது பெரியோர் வாக்கு. அதற்கேற்ப `இமைப்பொழுதும் என் நெஞ்சை நீங்காதான் தாள் வாழ்க' எனும்படி சிவப்பரம்பொருளே கதி என்றிருக்கும் அடியவர்களுக்கெல்லாம் அருமருந்தென திகழ்கிறார் சிவபெருமான்.

மாமருந்தான அவருக்கு பிரமாண்டமான ஆலயங்களை அமைத்தனர் முற்கால மன்னர்கள். அவற்றில் ஒன்றுதான் ஐவநல்லூர் சிவாலயம். ஐவநல்லூர் பிணித் தீர்க்கும் திருத்தலமாக அமைந்திருக்கிறது. இங்குள்ள திருக்கோயில் சோழ மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட - சுமார் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் என்கிறார்கள். எனினும் இயற்கையின் சீற்றமோ அல்லது வேறு காரணத்தாலோ இந்த ஆலயம் சிதிலமுற்றது. தம்மை நாடி வருவோருக்கு வேண்டுவனவற்றை அருளி கருணை மழை பொழிந்த ஈசனின் இந்தக் கோயிலை, காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். மிக அற்புதமாக அமைந்திருந்த ஶ்ரீவைத்தியநாதர் ஆலயம் சிதிலமடைந்து தரைமட்டமானது. வெயிலிலும் மழையிலுமாக வெட்டவெளியில் கிடந்த இறைத் திருமேனிகளைப் பாதுகாக்க எண்ணிய கிராம மக்கள், தற்போது ஒரு தகரக் கொட்டகை அமைத்து அதனுள் அந்தத் திருமேனிகளை வைத்துள்ளனர். எனினும் எவருக்கும் இத்தலத்தின் மகிமை, புராணம் குறித்த தகவல்கள் தெரியவில்லை.

வழிபாட்டுச் சிறப்புகள் : ‘கோயில் விளங்கக் குடி விளங்கும்’ என்பது பழமொழி. கோயிலுக்குச் சென்று ஈசனை வணங்கி திருவிளக்கு இடுதல் மேலான ஞானத்தை அளிக்கும். `விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக் கரும்பினில் கட்டி போல்வார் இறைவன்' எனவும், `விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்' எனவும் தேவாரத் திருமுறை கூறுகிறது. அதற்கேற்ப, இந்த ஈசனைத் தேடி வரும் பக்தர்கள், அருகில் உள்ள வீட்டில் சாவி வாங்கி, ஈசனுக்கு விளக்கேற்றி வழிபட்டுச் செல்கின்றனர்.

எப்படிச் செல்வது ? : மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ தொலைவில் ஐவநல்லூர் உள்ளது. சிற்றுந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism