Published:Updated:

திருவருள் திருவுலா: பரிகாரத் தலங்கள்

பெரிய நாச்சியார் என்ற சிவகாமி அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
பெரிய நாச்சியார் என்ற சிவகாமி அம்மாள்

தாமிரபரணி வடமுக ஆற்றில் அம்மன் பாதத்தை தொடும் அமைப்பில் இந்தக் கோயில் மட்டுமே அமைந்திருப்பது மிகச்சிறப்பாகும்.

திருவருள் திருவுலா: பரிகாரத் தலங்கள்

தாமிரபரணி வடமுக ஆற்றில் அம்மன் பாதத்தை தொடும் அமைப்பில் இந்தக் கோயில் மட்டுமே அமைந்திருப்பது மிகச்சிறப்பாகும்.

Published:Updated:
பெரிய நாச்சியார் என்ற சிவகாமி அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
பெரிய நாச்சியார் என்ற சிவகாமி அம்மாள்

சுகப் பிரசவம் அருளும் குணவதி அம்மன்!

தலம் : முத்தாலங்குறிச்சி

அம்பாள் : நல்ல ஆண் பிள்ளை பெற்ற குணவதியம்மன்

திருத்தலச் சிறப்புகள்: முத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் தருபவளாக வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார் குணவதியம்மன். குணவதியம்மனின் கால் பாதத்தைத் தொட்டு வணங்கிவிட்டுத்தான் தாமிரபரணி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறது.

தாமிரபரணி வடமுக ஆற்றில் அம்மன் பாதத்தை தொடும் அமைப்பில் இந்தக் கோயில் மட்டுமே அமைந்திருப்பது மிகச்சிறப்பாகும். கோயில் பின்புறம் ஒற்றைப் பனை மரம் உள்ளது. அதனருகே 1,000 ஆண்டுகளைக் கடந்த மிகப் பழைமையான வேப்பமரம் உள்ளது.

நல்ல ஆண் பிள்ளை பெற்ற குணவதியம்மன்
நல்ல ஆண் பிள்ளை பெற்ற குணவதியம்மன்

வழிப்பாட்டுச் சிறப்புகள்: இந்தக் கோயில் திருவிழாவில் ‘மதுகுடம் பொங்குதல்' என்ற நிகழ்ச்சி மிகவும் விஷேசமாக நடைபெறும். திருவிழாவின்போது முதல் நாள் குடத்தில் வைக்கப்படும் நவதானியங்களிலிருந்து எடுக்கப்பட்ட பால் வேறொரு குடத்தில் பாதியளவில் ஊற்றி வைக்கப்படும். அடுத்த நாள் சூடு பண்ணாமலேயே இந்த பால் பொங்கி வழியும். இதை `மதுகுடம் பொங்குதல்’ என்று கூறுவார்கள். குடத்தைச் சுற்றி பால் நன்றாகப் பொங்கினால் அந்த ஆண்டு இந்தப் பகுதியில் நல்ல விளைச்சலை அம்மன் தருவாள் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
திருவருள் திருவுலா: பரிகாரத் தலங்கள்
திருவருள் திருவுலா: பரிகாரத் தலங்கள்

மேலும், கைகால் வலி உள்ளவர்கள் இந்த கோயில் திருவிழாவின்போது உருவம் எடுத்து வருவார்கள். இதில் கால் வலி என்றால் கால் உருவமும், கை வலி என்றால் கை உருவமும், உடல் வலி என்றால் உடல் போன்ற உருவமும் எடுப்பார்கள். திருவிழாவின்போது ஆயிரங்கண் பானை எடுப்பவர்களும் உண்டு. இதற்காக மக்கள் விரதமிருந்து நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள்.

சுகப்பிரசவம் வேண்டுவோரும் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்குகிறார்கள். நின்றுபோன திருமணம், தொழில் விருத்தி, காணாமல்போன பொருள் திரும்ப கிடைக்க, கைகால் வலி தீர இந்த அம்மனை வணங்கினால் பலன் நிச்சயம். நல்ல தாய், குணவதி, நல்லையா, நல்லசிவன் போன்ற பெயர் இருந்தால் அவர்கள் முத்தாலங்குறிச்சி அம்மனோடு தொடர்பு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

எப்படிச் செல்வது : நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது முத்தாலங்குறிச்சி. நெல்லை சந்திப்பிலிருந்து பேருந்து வசதி உண்டு.

நடை திறப்பு : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே.

எம பயம் போக்கும் செய்துங்கநல்லூர் வியாக்ரபாதீஸ்வர்!

தலம் : செய்துங்கநல்லூர்

இறைவன் : பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வர் (கூழையாற்று நாதர், திருவரங்ககேஸ்வரர், திருப்புலிஸ்வரமூடையார்)

அம்பாள் : பெரிய நாச்சியார் என்ற சிவகாமி அம்மாள்

திருத்தலச் சிறப்புகள் : செய்துங்க பாண்டியன் என்னும் அரசன் முறப்பநாட்டைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்து வந்தான். செய்துங்கன் வேட்டையாடுவதற்காக தாமிரபரணி கரையில் உள்ள கூழையாற்றுக்கு வந்தான். அங்கே, வியாக்ரபாதீஸ்வர் மற்றும் பதஞ்சலி முனிவர் தவமிருந்த தென்சிவகங்கை குளக்கரை காணப்பட்டது. மோன நிலையில் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தபோது, ஓர் அதிர்வு ஏற்பட்டது. அந்த இடத்தில் சங்கு ஒன்று ஆற்று நீரை எதிர்த்து நின்றபடி பஞ்சாசர மந்திரமான `ஓம் நமச்சிவாய’ மந்திரத்தை ஓதிக்கொண்டே இருந்தது. சிவபெருமான் தன் சடையில் உள்ள கங்கையை தீர்த்தமாக அளித்தார். அந்த ஓடையானது இன்றளவும் தாமிரபரணி வரை சென்று சேருகிறது.

அந்த இடத்தில் உருவாக்கப்பட்ட ஆலயம்தான் இது. கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் `சேஞ்ஞலூரான் திருவரங்கச் சதுர்வேதி மங்கலம்’, தாயார் பெயர் `பெரிய நாச்சியார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பெரிய நாச்சியார் என்ற சிவகாமி அம்மாள்
பெரிய நாச்சியார் என்ற சிவகாமி அம்மாள்

இக்கோயிலில் மொத்தம் 13 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் மிகவும் பழைமையானது மாறவர்மன் ஸ்ரீவல்லபனுடைய 17-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். அதனால் இம்மன்னன் காலத்தில் (1145 - 1162) இக்கோயில் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

வழிபாட்டுச் சிறப்புகள் : இத்தலத்தில் யோக தட்சணாமூர்த்தி வியாக்ரபாதீஸ்வரருக்கும், பதஞ்சலிக்கும் மோன நிலையில் அருள் உபதேசம் செய்வதாக ஐதிகம். எனவே, இவரை வணங்கினால் நினைவாற்றல் பெருகி கல்வியில் சிறந்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம் என்பது ஐதிகம்.

இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து வந்து சென்றால் ஆன்ம பலம் பெருகும். சனிக்கிழமைதோறும் நவகிரகங்களைச் சுற்றி வணங்கினால் நவகிரக தோஷம் நீங்கும். ஆணவம், மாயை, கண்மம் ஆகியவை அகலும். இங்குள்ள சிவனை வணங்கினால் மரண பயம் நீங்கி 16 செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிகை.

எப்படிச் செல்வது ? நெல்லையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது செய்துங்கநல்லூர். ஆட்டோ வசதி உண்டு. நெல்லை - திருச்செந்தூர் ரயில் மார்க்கத்திலும் செல்லலாம்.

நடை திறப்பு : காலை 7 மணி முதல் 9 மணி வரை; மாலை 4 மணி முதல் 7 மணி வரை.

அரசியலில் வெற்றி பெறவைக்கும் வெள்ளூர் ஈசன்!

தலம் : வெள்ளூர் (ஸ்ரீவைகுண்டம்)

இறைவன் : நடுநக்கர் (மத்தியபதீஸ்வரர்)

அம்பாள் : சிவகாமியம்மாள்

திருத்தலச் சிறப்புகள் : இத்திருக்கோயில் ஆகம விதிப்படி, 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பாண்டிய மன்னர்களான வீரபாண்டிய சடவர்மன், குலசேகர பாண்டியன் மன்னர்களால் கட்டப்பட்டது. செவ்வேள் முருகன் திருச்செந்தூரில் சிவபெருமானைப் பஞ்சலிங்கங்கள் அமைத்து வழிபாடு செய்தது போல் இவ்வூரிலும் நடுநக்கர் என்று போற்றப்படும் சிவபெருமானை வழிபட்டார். முருகப் பெருமான் வழிபாடு செய்ததால் வேளூர் என்று அழைக்கப்பட்டு இப்போது திரிந்து வெள்ளூர் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டு சிவநெறி செல்வர்களுக்கு இடையில் யார் சிறந்த சிவபக்தர் என்று ஏற்பட்ட போட்டியில் சிவபெருமானே முதியவர் போல தோன்றி `எல்லோரும் சரிசமான சிவபக்தர்களே’ என அறிவுறுத்தி அவர்கள் அறியாமையைத் தீர்த்துவைத்தார்.

இறைவன் துறவி வடிவில் வந்து தீர்ப்பு வழங்கியதால் `மத்தியபதீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

சிவகாமியம்மாள்
சிவகாமியம்மாள்

வழிபாட்டுச் சிறப்புகள் : அகத்திய மாமுனி இத்தலத்துக்கு வந்து வழிபட்டதாகப் புராணச் செய்திகள் கூறுகின்றன. அன்னை சிவகாமி அம்மாள் மீனாட்சி திருக்கோலத்தில் அருள்புரிகிறாள். சிவனின் வலப்புறத்தில் அம்மன் இருப்பதால் திருமணத்துக்கு முன்பு அன்னை தவக்கோலத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு வந்து வணங்குபவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுகிறது.

திருமணம் முடிந்த தம்பதிகள் 16 வகையான செல்வங்கள் வேண்டி சிவகாமிக்குப் பொங்கலிட்டு வழிபாடு செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இங்குள்ள தட்சணாமூர்த்தி கிரீடம் வைத்து ராஜ அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவரை வணங்கி நின்றால் ராஜயோகம் கிடைக்கும். அரசியலில் வெற்றி கிடைக்கிறது. எனவே, தேர்தலில் வெற்றி பெற இவரை வேண்டி நிற்கின்றனர்.

எப்படிச் செல்வது? நெல்லை - திருச்செந்தூர் ரயில் மார்க்கம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் இறங்கினால், அங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோயில். ஆட்டோ வசதி உண்டு.

நடை திறப்பு : காலை 7 மணி முதல் 9 மணி வரை; மாலை 4 மணி முதல் 7 மணி வரை.

மகப்பேறு அருளும் தென்பண்டரிபுரத்து விட்டலன்!

தலம் : விட்டிலாபுரம் (தென்பண்டரிபுரம்)

இறைவன் : பாண்டுரங்க விட்டலர்

தாயார் : ருக்குமணி சத்தியபாமா

திருத்தலச் சிறப்புகள் : முறப்ப நாட்டை ஆட்சிபுரிந்த விட்டலன் என்னும் மன்னன், மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரம் போல இங்கும் ஒரு தலத்தை அமைக்க வேண்டும் என விட்டிலாபுரம் பண்டரிபுரத்தை அமைத்தான். இத்தலத்து இறைவனை புரந்தரதாசர், நாமதேவர், துக்காராம், ஞானதேவன் போன்ற புண்ணியவான்களின் வாரிசுகள் ஆண்டுதோறும் வந்து வழிபட்டுச் செல்லுவர் என்ற நம்பிக்கை உண்டு.

ருக்குமணி சத்தியபாமா
ருக்குமணி சத்தியபாமா

இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சிபெற்றவர்கள் அரங்கேற்றத்துக்கு முன்பு இங்குள்ள பாண்டுரங்க விட்டலரை வணங்கிச் சென்று தங்களது அரங்கேற்றத்தை நடத்துகிறார்கள். நம்மாழ்வார் விட்டலரிடம் ஒரு வண்டைத் தூது விட்டாராம். ‘நீவிர் இருக்கும் இடத்தில் ஒருநாள் வந்து நான் சேவைபெற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாராம். இதை நினைவுபடுத்தும் விதமாக ஆழ்வார்திருநகரியில் கார்த்திகை திருவிழா முடிந்ததும், நம்மாழ்வார் உற்சவ மூர்த்தியை விட்டிலாபுரம் அழைத்துவந்து அங்கேயே எழுந்தருளச்செய்து திருவிழா நடத்துகின்றனர். இதனால் விட்டிலாபுரத்தில் உள்ள ஒரு வீதியின் பெயர் `ஆழ்வார் வீதி.’

திவ்ய சொரூபத்துடன் அர்ச்சாவதாரம்கொண்டு எழுந்தருளியுள்ள திருமால் கிருதயுகத்தில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்டவர். திரேதாயுகத்தில் முதலையால் துன்புற்று கஜேந்திரனால் பூஜிக்கப்பட்டவர். துவாபரயுகத்தில் பிரகஸ்பதியால் வணங்கப்பட்டவர். இல்லார் பிணி நீங்க ஐஸ்வர்ய நாயகிகளாக தாயார்களும் அருள்புரிகிறார்கள். தேவியின் அருளைப் பெற்று பெருமாளின் திவ்ய தரிசனம் கண்டு வாழ்வில் பலபேறுகளை அடையலாம்.

வழிபாட்டுச் சிறப்புகள் : இக்கோயிலில் திரட்டுப்பால், பால் பாயசம் மிக விசேஷம். திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் இக்கோயிலில் திரட்டுப்பால் செய்தும் கல்வி கேள்விகளில் குழந்தைகள் சிறந்து விளங்க பால் பாயசம் அளித்தும் வழிபடுகிறார்கள்.

எப்படிச் செல்வது ? : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கிறது விட்டிலாபுரம். நெல்லை - திருச்செந்தூர் மெயின்ரோட்டில் உள்ள செய்துங்கநல்லூரிலிருந்து ஆட்டோ வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.

நடை திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 9 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை.

நோய்களைத் தீர்க்கும் சேர்மன் சுவாமி!

தலம் : ஏரல் சேர்மன் சித்தர் பீடம்

இறைவன் : ஏரல் சேர்மன் சுவாமிகள்

திருத்தலச் சிறப்புகள் : ஏரல் பேரூராட்சியில் சேர்மனாக இருந்த அருணாசல சுவாமிகள் 27.07.1908 அன்று சமாதி நிலையை அடைந்தார். அவரது தந்தை கோயில் எழுப்பினார். இந்த சமாதியில் லிங்கமாக வடிக்கப்பட்ட புற்று வளர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த ஆலயத்தைப் பற்றி ஆங்கிலேயர் பேட் என்பவர் 1916 அரசு ஆவணத்தில் எழுதி வைத்துள்ளார்.அதில், `இந்த கோயில் முன்பு அனைத்து சாதி மதத்தினரும் கூடுகிறார்கள். நோயை குணமாக்கிச் செல்கிறார்கள். பில்லி சூனியம் தீருகிறது.

இங்குள்ள புற்று மண்ணைக் கையால் எடுத்து மருந்தாக உண்ணுகிறார்கள். உடம்பில் பூசி நோய் குணமடைகிறார்கள்’ என எழுதி வைத்துள்ளார். ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்தவர் ஏரல் சேர்மன் சுவாமிகள்.

ஏரல் சேர்மன் சித்தர் பீடம்
ஏரல் சேர்மன் சித்தர் பீடம்

வழிபாட்டுச் சிறப்புகள் : மருத்துவர்களால் கைவிடப்பட்ட வலிப்புநோய், மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் குணமாகிறது.

நோயாளிகள் தாமிரபரணியில் காலையிலும் மாலையிலும் நீராடி லிங்க அபிஷேக தீர்த்தத்தில் நிலக்காப்பைக் கரைத்து உடம்பில் பூசியும், குடித்தும் விரதங்கள் மேற்கொண்டு வந்தால் 21 நாள்களில் நோய் தீர்ந்து விடுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் தீர்த்தம், நிலக்காப்பு ஆகிய இரண்டையும் பூசியும் குடித்தும் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. விஷ கடி தீருகிறது.

இங்கு நாள்தோறும் திருவிழாதான். ஒவ்வோர் அமாவாசையிலும் பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபடுகிறார்கள்.

எப்படிச் செல்வது? நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் தென்திருப்பேரையிலிருந்து இடப்புறம் திரும்பிச் சென்று ஏரல் தாமிரபரணிக் கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் அருளைப் பெறலாம். குரும்பூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஏரல் உள்ளது. திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து பேருந்து வசதி உண்டு.

நடை திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை.