Published:Updated:

திருவருள் திருவுலா: `குருவருள்’ திருத்தலங்கள்!

ஸ்ரீசதாசிவமூர்த்தி

வரும் குருப்பெயர்ச்சியில், கோச்சார ரீதியில் குரு பகவானின் திருவருளை - குரு பலத்தைப் பரிபூரணமாகப் பெற, அனுதினமும் குரு பகவானை தியானித்து வழிபட வேண்டும்.

திருவருள் திருவுலா: `குருவருள்’ திருத்தலங்கள்!

வரும் குருப்பெயர்ச்சியில், கோச்சார ரீதியில் குரு பகவானின் திருவருளை - குரு பலத்தைப் பரிபூரணமாகப் பெற, அனுதினமும் குரு பகவானை தியானித்து வழிபட வேண்டும்.

Published:Updated:
ஸ்ரீசதாசிவமூர்த்தி

கிரகங்களில், குருவை ‘பிரகஸ்பதி’ என்பர். ஸத்வ குணம் பொருந்தியவர் அவர். கிரக வரிசையில் செவ்வாய்க்கும் சனிக்கும் நடுவில் இருப்பார், குரு. அண்டவெளியில் அவரின் ஓடு பாதை, இந்த இரண்டு பேருக்கும் இடையே அமைந்திருக்கும்.

தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர், குரு பகவான். ஆம்! வாழ்க்கையின் திசையையே தடம் புரளச் செய்யும் ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கட்டுப்படுத்த, ஸத்வ குணம் அவசியம். அதனைத் தந்து அருள்பவர், குரு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந்தால், பாப கிரகத்தின் தன்மை சுப கிரகங்களுக்கும் வந்துவிடும். ஆனால், குருவோடு சேர்ந்த பாப கிரகங்கள், தனது இயல்பை மாற்றி, குருவின் இயல்பை ஏற்றுக்கொண்டு விடும். இப்படியொரு பெருமை, குருவுக்கு மட்டுமே உண்டு. இந்தப் பெருமை, பரம்பொருளான - உலக குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடமிருந்து கை மாறியது. அறிவுக்கு ஈசனை நாடு என்கிறது சாஸ்திரம் (ஞானம் மஹேச்வராதி ச்சேத்). அதுபோல, உலக குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அறிவுத் திறன், நவகிரக குருவுக்குள் ஊடுருவியது. ஆக, ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவானை வழிபடுவதன் மூலமும் குருவின் திருவருளை பரிபூரணமாகப் பெறலாம்.

திருவருள் திருவுலா
திருவருள் திருவுலா

வரும் குருப்பெயர்ச்சியில், கோச்சார ரீதியில் குரு பகவானின் திருவருளை - குரு பலத்தைப் பரிபூரணமாகப் பெற, அனுதினமும் குரு பகவானை தியானித்து வழிபட வேண்டும். வேதம் ஓதுபவர்கள் ‘ஸ்ரீகுருப்யோ நம:’ என்று குரு வணக்கத்தோடு செயல்படுவார்கள். அதேபோல், ‘கும் குருப்யோ நம:’ என்ற வரியைச் சொ00ல்லி 16 உபசாரங்கள் செய்து குரு பகவானை வழிபடலாம். `குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம:’ என்று செய்யுளைச் சொல்லியும் வணங்கலாம். இத்தகைய வழிபாடுகளுடன் குருபலம் அருளும் திருத்தலங்களையும் தரிசித்து வருவதால், குருவருள் ஸித்திக்கும். அதற்கேற்ப சில தலங்கள் இங்கே உங்களுக்காக...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவில்பாளையம்

தலம்: கோவில்பாளையம்

ஸ்வாமி: ஸ்ரீகாலகாலேஸ்வரர்

அம்பிகை: ஸ்ரீகருணாகரவல்லி

தலச் சிறப்பு: சிவலிங்கத் திருமேனியைக் கட்டித்தழுவிக்கொண்டிருந்த மார்க்கண்டேயனின் மீது பாசக்கயிற்றை வீசியதால், கடும் தண்டனைக்கு ஆளானான் எமதருமன்; அவனுடைய பதவியும் பறிபோனது. அதைத் தொடர்ந்து கௌசிகபுரி எனும் இந்தத் தலத்துக்கு வந்து நதியின் மணலையே எடுத்து சிவலிங்க மாக்கி, தவம்செய்து வழிபட்டான்; வரம் பெற்று, இழந்த பதவியைப் பெற்றான். பிறகு, விஸ்வாமித்திரர் எமதருமன் செய்த லிங்கத் திருமேனியை வழிபட்டார். அடுத்து, அந்த இடத்திலேயே அந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அழகிய கோயிலும் அமைக்கப்பட்டது என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீகாலகாலேஸ்வரர்
ஸ்ரீகாலகாலேஸ்வரர்

வழிபாட்டுச் சிறப்புகள்: சிவனாருக்கும் அம்பாளுக்கும் நடுவே முருகப் பெருமான் சந்நிதி கொண்டிருப்பதால், இதை சோமாஸ்கந்த அமைப்புகொண்ட ஆலயம் என்றும் திருமண வரம் அருளும் திருத்தலம் என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள். ஆயுள் பலமும் பதவி உயர்வும் தந்தருளும் சிவனார் திருக்காட்சி தரும் இந்தக் கோயிலில், ஸ்ரீதட்சிணாமூர்த்திதான் முக்கிய நாயகனாகத் திகழ்கிறார். உருவில் பெரியவர் இவர். இத்தலத்தை கொங்கு தேசத்தின் குரு பரிகாரத் திருத்தலம் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.

வழக்கமாக சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் காட்சிதரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, இங்கே மூலவருக்குத் தெற்கே தனிச் சந்நிதியில் திருக்காட்சி தந்தருள்கிறார். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கும்; குரு பார்வை கிடைக்கப்பெறுவோம்; குரு யோகம் கைகூடும் என்பது ஐதிகம்!

எப்படிச் செல்வது?! கோவைக்கு அருகில், கோவில்பாளையம் எனும் தலத்தில் அமைந்துள்ளது இந்தத் தலம். கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில், சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது கோவில்பாளையம்.

தேவூர்

தலம்: தேவூர்

ஸ்வாமி: ஸ்ரீதேவபுரீஸ்வரர்

அம்பிகை: ஸ்ரீதேன்மொழி அம்பாள் (ஸ்ரீமதுரபாஷினி)

தலச் சிறப்பு: தேவர்கள் இந்தத் தலத்தில் தங்கி, தவமிருந்து சிவனாரை வழிபட்டதால், இங்குள்ள ஸ்வாமிக்கு தேவபுரீஸ்வரர் என்ற திருப்பெயர் உண்டானதாம். கதலீவனம், விராடபுரம், அரசங்காடு, தேவனூர் எனப் பல பெயர்கள் உண்டு இந்தத் தலத்துக்கு. தற்போது தேவூர் எனப்படுகிறது. இங்கே யுள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர், அழகிய மூர்த்தமாகக் காட்சி தருகிறார். காவிரியின் தென்கரைத் திருத்தலங்களில், 85-வது தலம் இது. இந்தத் தலத்திலும் அம்பாள் மற்றும் ஸ்வாமி சந்நிதிகளுக்கு நடுவே முருகன் அருள்பாலிக்க, சோமாஸ்கந்த அமைப்பில் ஆலயம் திகழ்கிறது.

ஸ்ரீதேவபுரீஸ்வரர்
ஸ்ரீதேவபுரீஸ்வரர்

வழிபாட்டுச் சிறப்பு: வியாழ பகவான் இந்தத் தலத்தில் சிவனாரை நினைத்து நெடுங்காலம் தவம் இருந்து வழிபட்டார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குத் திருக்காட்சி தந்ததுடன், தேவ குருவாகவும் பதவி உயர்வு தந்து ஆசீர்வதித்து அருளினார். தவிர, இந்தத் தலத்தில் சிவனாரே அனுக்கிரக ஸ்ரீதட்சிணாமூர்த்தியாகவும் அழகுத் திருக்கோலத்தில் காட்சிதந்து அருள்வதால், குரு பரிகார புண்ணியத் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் மறைந்திருந்தால் அல்லது குரு பலம் இழந்திருந்தால் அல்லது குருவின் பார்வைபடாமல்இருந்தால், இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்குப் பரிகாரங்கள் செய்து, மனதார பிரார்த்தித்து, ஸ்வாமி, அம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோரை 16 முறை வலம்வந்து வணங்கினால், குரு யோகம் கிடைக்கப் பெறலாம்; காரியத் தடைகள் விலகி, நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதிகம்!

எப்படிச் செல்வது?: நாகை மாவட்டம் கீவளூர் வட்டம் தேவூரில் குடிகொண்டிருக்கிறார் ஸ்ரீதேன்மொழி அம்பாள் சமேத ஸ்ரீதேவபுரீஸ்வரர். நாகப்பட்டினம் - திருவாரூர் இடையே உள்ளது கீவளூர். இந்த ஊரிலிருந்து, சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் திருக்கோயில்.

திருவையாறு

ஸ்வாமி: ஸ்ரீஐயாறப்பர்

அம்பிகை: ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி.

தலச் சிறப்பு: ‘ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே’ என அப்பர் பெருமானால் போற்றப்பட்டவர் ஸ்ரீஐயாறப்பர் எனப்படும் ஸ்ரீபஞ்சநதீஸ்வரர். ஸ்ரீஐயாறப்பரை மனத்தில் நினைத்து, அவருடைய திருநாமத்தை உச்சரித்தால், நம்முடைய பாவங்கள் விலகும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதிகம்!

திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றாராம். எனவே, இந்தத் தலத்தின் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு, ஸ்ரீசிவயோக ஹரி குரு தட்சிணாமூர்த்தி என்று திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது தலப்புராணம்.

ஸ்ரீஐயாறப்பர்
ஸ்ரீஐயாறப்பர்

வழிபாட்டுச் சிறப்பு: வலக்கரங்களில் கபாலம், அபய முத்திரை; இடக்கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கி அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இங்கேயுள்ள தியான மண்டபத்தில், வடக்குப் பார்த்து அமர்ந்திருக்கிற ஸ்ரீஆதிவிநாயகரை தரிசித்துவிட்டுத்தான், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்பது இந்தத் தலத்தின் ஐதிகம். வள்ளலார் சுவாமிகள், தியாகய்யர் முதலான பலரும் இங்கே பல நாள்கள் தியானம் செய்து, இறைவனின் பேரருளைப் பெற்றுள்ளனர் எனும் சிறப்பு இந்த தியான மண்டபத்துக்கு உண்டு.

குருஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்குச் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

எப்படிச் செல்வது?: தஞ்சை மாவட்டம், தஞ்சையிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது திருவையாறு. கும்பகோணத்திலிருந்து சுமார் 36 கி.மீ தொலைவு. அனைத்து ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.

திருவேங்கைவாசல்

தலம்: திருவேங்கைவாசல்

ஸ்வாமி: ஸ்ரீவியாக்ர புரீஸ்வரர்

அம்பிகை: ஸ்ரீபிரகதாம்பாள்

தலச் சிறப்பு: சாபத்தின் காரணமாக காட்டுப்பசுவாக பூவுலகில் பிறந்த காமதேனு, கபில முனிவரின் அறிவுரைப்படி, தன் காதில் கங்கை நீரைச் சேமித்து எடுத்து வந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. ஒருநாள் புலி ஒன்று பசுவை வழிமறித்தது. ``சிவபூஜையை முடித்துவிட்டு வருகிறேன். அதற்குப்பிறகு, என்னை இரையாக்கிக்கொள்’’ என்று கேட்டுக்கொண்டது பசு; புலியும் ஒப்புக் கொண்டது.

ஸ்ரீவியாக்ர புரீஸ்வரர்
ஸ்ரீவியாக்ர புரீஸ்வரர்

சொன்னதுபோலவே சிவபூஜையை நிறைவேற்றிவிட்டு புலியிடம் வந்துசேர்ந்தது பசு. சிந்தையில் சிவத்தை நிறுத்தி, கண்களை இறுக மூடிக்கொண்டு புலிக்கு இரையாகக் காத்திருந்தது. ஆனால், புலி தாக்கவில்லை. புலி இருந்த இடத்தில் சிவபெருமான் காட்சிகொடுத்தார். பசு விமோசனம் பெற்றது. சிவனாரை கங்கா தீர்த்தம் கொண்டு காமதேனு வணங்கிய தலம் திருக்கோகர்ணம் என அழைக்கப்படுகிறது (கோ என்றால் பசு; கர்ணம் என்றால் காது). புதுக்கோட்டையில் உள்ளது இந்தத் தலம். பசுவுக்குச் சிவனார் புலியாகவந்து காட்சிதந்த திருத்தலம், திருவேங்கைவாசல் எனப்படுகிறது.

வழிபாட்டுச் சிறப்பு: இங்கு வந்து பிரார்த்தித்தால், சாபங்கள் யாவும் நீங்கப் பெறலாம் என்பது ஐதிகம். இங்கே யோக நிலையிலிருந்து கண்விழித்து பக்தர்களுக்கு அருள்வதற்காக எழுந்து வருவது போலான தோற்றத்தில் அருள்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. மிக விசேஷமான கோலம் இது என்கிறார்கள் பக்தர்கள். வியாழக்கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, மனதார பிரார்த்தித்துச் செல்கின்றனர். குருப்பெயர்ச்சி திருநாளில் இந்த ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால் குரு பலம் கூடும்; ராஜயோகம் பெறலாம்; நஷ்டத்தில் உள்ள தொழில் மளமளவென ஏற்றம் பெறும். குழந்தைகளின் ஞாபகசக்தி அதிகரிக்கும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்படிச் செல்வது?: புதுக்கோட்டை - கீரனூர் சாலையில், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்!

குருவித்துறை

தலம்: குருவித்துறை

ஸ்வாமி: ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள்

தாயார்: ஸ்ரீசெண்பகவல்லித் தாயார்

தலச் சிறப்பு: பெண்ணொருத்தி தந்த சாபம் அது! சப்த மலைகளாலும் சூழப்பட்டு, இந்திரலோகம் செல்ல முடியாமல் சிறையுண்டு கிடந்த தன் மகன் கச்சனுக்காக, குரு பகவான் தவமிருந்து திருமாலின் திருவருளைப் பெற்ற தலம் இது. சித்திரை மாதத்தில், ஆயிரம் சித்திரங்கள்கொண்ட ரதத்தில் வந்து திருக்காட்சி தந்தாராம் பெருமாள். ஆகவே, பெருமாளுக்கு சித்திர ரத வல்லப பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. குரு வீற்றிருந்த துறை என்பதால் இந்தப் பெயரே ஊர்ப்பெயராகவும் அமைந்தது என்கிறது தலப்புராணம்.

ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள்
ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள்

வழிபாட்டுச் சிறப்பு: இந்தத் தலத்துக்கு வந்து அருகிலுள்ள நதியில் நீராடிவிட்டு, சித்திர ரத வல்லப பெருமாளுக்குப் பொங்கலிட்டு தரிசித்தால், நம் தலைமுறையில் உள்ள மொத்த தோஷங்களும் விலகும்; திருமண தோஷங்கள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும்; பிள்ளை பாக்கியம் பெறலாம், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்கிறார்கள் பக்தர்கள்.

தனிச் சந்நிதியில் அருளும் குரு பகவானை தரிசித்து வழிபட்டால், குருவின் திருவருள் ஸித்திக்கும். மேலும், குருப்பெயர்ச்சியின் போது இந்தத் தலத்தில் நடைபெறும் ஹோமம் மற்றும் யாகத்தில் கலந்துகொண்டு குரு பகவானை வழிபட்டால் தொழில் சிறக்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

குருவித்துறைக்கு வந்து ஒருமுறை குருபகவானை வணங்கினால் எந்தத் துறையில் இருந்தாலும் சிறந்து விளங்கலாம்.

எப்படிச் செல்வது?: மதுரையிலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் உள்ளது சோழவந்தான். இந்த ஊரிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலம், குருவித்துறை. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு.

புளியறை

தலம்: புளியறை

ஸ்வாமி: ஸ்ரீசதாசிவமூர்த்தி

அம்பிகை: ஸ்ரீசிவகாமியம்மை

தலச் சிறப்பு: சமண ஆதிக்கம் மிகுந்திருந்த காலத்தில், தில்லை நடராஜப் பெருமானின் விக்கிரகத் திருமேனியை இங்கு கொண்டுவந்து, புளியமரப் பொந்தில் பாதுகாப்பு கருதி மறைத்து வைத்தார்களாம் அடியார்கள் சிலர். காலங்கள் ஓடின. இந்தப் பகுதியில் வசித்த அன்பர் ஒருவர் புளிய மரத்தில் ஆடல்வல்லானைக் கண்டு அனுதினமும் அவரை வழிபட்டு வந்தார்.

ஆதிக்கச்சூழல் நீங்கியதும் மீண்டும் நடராஜர் தில்லை கொண்டு செல்லப்பட்டார். எம்பெருமானைக் காணாமல் தவித்த அன்பர், அழுது புலம்பினார். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த இடத்தில் லிங்கம் ஒன்று தோன்றியது. அளவில்லா ஆனந்தம் அடைந்தார் அந்த அன்பர். சேர மன்னனுக்கும் தகவல் எட்டியது. அவன் மூலம் விரைவில் அங்கே திருக்கோயில் அமைந்தது. தலத்துக்குப் புளியறை என்ற பெயரும் அமைந்தது.

ஸ்ரீசதாசிவமூர்த்தி
ஸ்ரீசதாசிவமூர்த்தி

வழிபாட்டுச் சிறப்பு: இங்கே வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாக, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே தென்முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி. நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சம். அது மட்டுமா? ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியின் திருப்பாதத்தின் அருகில் சதுரக்கல் ஒன்றில் ஒன்பது ஆவர்த்த பீடங்கள் கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனை கிரகங்களும் தென்முக தெய்வத்துக்குக் கட்டுப்பட்டு இங்கே இருப்பதாக ஐதிகம். மேலும், சிவனாருக்கு எதிரிலேயே சிவாம்சத்துடன் இந்த ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி அருள்வதால், வியாழக்கிழமை மட்டுமல்லாது, அனைத்து நாள்களிலும் வந்து இவரை வழிபட்டு வரம்பெறலாம் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

எப்படிச் செல்வது?: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, கொல்லம் நெடுஞ்சாலையில்... செங்கோட்டையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது புளியறை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism