ஸ்ரீஅமிர்தகடேசுவரர் உடனருளும் அன்னையாகிய இவள், தன் பக்தனுக்காக அமாவாசையன்று பௌர்ணமி நிலவைத் தோன்றச் செய்து அற்புதம் செய்தவள்.
அவளே, மற்றுமொரு காரணத்துக்காக ஒன்றோடொன்று சூட்சுமத் தொடர்புடைய ஆறு மந்த்ர பீட தலங்களில் அபிராமி என்ற பெயரை ஏற்றபடி அருள்பாலிக்கிறாள். திருக்கடவூரில் காலசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு, பரிபூரண ஆயுள் பெற்ற மார்க்கண்டேயரின் வேண்டுதலுக்கு இணங்கி, அவர் வழிபட்ட ஏனைய தலங்களிலும் அன்னை அபிராமியாகவே காட்சியளிக்கிறாள் அம்பிகை.

ஆதாரச் சக்கரங்கள் ஆறினை அடிப்படையாகக்கொண்டு இந்தத் தலங்களை ஆறு மந்த்ர சக்தி பீடங்களாக ஸ்தாபித்துள்ளார்கள் பண்டைய சோழ மன்னர்கள். சகஸ்ராரம் - திருக்கடையூர், ஆக்ஞா - மருத்துவக்குடி, அநாகதம் - பாணாபுரம், மணிபூரகம் - கொழையூர், சுவாதிஷ்டானம் - இலந்துறை, மூலாதாரம் - திருமலைராயன்பட்டணம் ஆகிய தலங்களே அவை.
இந்தத் திருத்தலங்களின் சிறப்புகளைப் பற்றி அறிவதுடன், இவை அனைத்தையும் தரிசித்து எல்லா வளங்களையும் பெறலாமே..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
`திருக்கடையூர்' அபிராமி
தலம் : திருக்கடையூர்
ஸ்வாமி : அபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேசுவரர்
திருத்தலச் சிறப்புகள்: இறைவன், அட்டவீரட்டத் தலங்களில் மார்க்கண்டேயருக்காக காலசம்ஹாரமூர்த்தியாக வெளிப்பட்டருளிய தலம். ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற யாக பூஜைகள் நிகழ்த்தி இத்தலத்து ஈசனை பக்தர்கள் மிருத்தியுஞ்ஜய மூர்த்தியாக வழிபடுகிற பெருமைக்குரியது.

சமயக்குரவர்கள் மூவராலும் பாடல்பெற்ற தலம். குங்குலியக் கலயர், காரி நாயனார் ஆகியோர் முக்தியடைந்த திருத்தலம். அபிராமிப்பட்டருக்காக அபிராமியம்மை அமாவாசை நாளை முழுமதி நாளாக்கிய தலம். தேவர்கள் கடைந்தெடுத்த அமுதக்குடமே அமிர்தகடேஸ்வரராக இங்கு அருள்பாலிக்கிறார்.

வழிப்பாட்டுச் சிறப்புகள் : மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதுடையவராய் இருக்க ஈசன் வரமளித்த தலம் இது என்பதால், இங்கு வழிபடுவோர், உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெறுவர் என்பது ஐதிகம். இத்தலத்து ஸ்ரீஅபிராமியை சரஸ்வதி தேவி பூஜித்து அருள்பெற்றுள்ளார். எனவே, அபிராமியை தரிசித்தால் கல்வி, கலை-ஞானம் அனைத்தும் கிடைக்கும்.
எப்படிச் செல்வது ? : மயிலாடுதுறை - தரங்கம்பாடி பேருந்து மார்க்கத்தில், மயிலாடுதுறையிலிருந்து 17 கி.மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. (தொடர்புக்கு : கணேச குருக்கள் - 94420 12133).
`மேல் மருத்துவக்குடி' அபிராமி
தலம் : மேல் மருத்துவக்குடி
ஸ்வாமி : அபிராமி சமேத ஸ்ரீஐராவதேஸ்வரர்
திருத்தலச் சிறப்புகள் : துர்வாசர் அளித்த சிவ நிர்மால்யமான எருக்கம்பூ மாலையை அலட்சியப்படுத்தியதால் சாபம்பெற்ற இந்திரனும் ஐராவத யானையும், இங்கு வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால், இங்குள்ள ஈசன் ஐராவதேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.சுமார் 2000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இத்திருக்கோயிலில் ஸ்வாமியின் திருவுருவம் வெண்மணலால் அமையப்பெற்றதாகும்.

விருச்சிக விநாயகர் என்ற திருநாமத்துடன் இத்தலத்து விநாயகர் விசேஷ மேனியுடன் அருள்வது சிறப்பம்சமாகும். வள்ளி தெய்வானை உடனாகிய சுப்ரமணிய சுவாமிமீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வழிப்பாட்டுச் சிறப்புகள் : விருச்சிக ராசியில், விருச்சிக லக்னத்தில், விருச்சிக மாதத்தில் (கார்த்திகை) பிறந்தவர்கள், விருச்சிக விநாயகரை வணங்க சகல சௌபாக்கியம் பெறுவர். மேலும் இங்கு நடைபெறும் வழிபாட்டில் கலந்துகொண்டால் பேரானந்த பெருவாழ்வு பெறுவார்கள் என்பது இத்தல விஷேசமாகும்.

எப்படிச் செல்வது ? : கும்பகோணம் - மயிலாடுதுறை பேருந்து மார்க்கத்தில், ஆடுதுறையில் இறங்கினால் தெற்கே 2 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. ஆட்டோ மற்றும் சிற்றுந்து வசதியுண்டு (தொடர்புக்கு: சிவஞான சம்பந்த சிவாசார்யர்
(94438 85212).
`பாணாபுரம்' அபிராமி
தலம் : பாணாபுரம்
ஸ்வாமி : அபிராமி சமேத ஸ்ரீபாணபுரீஸ்வரர்
திருத்தலச் சிறப்புகள் : ராமபிரான் வனவாசம் மேற்கொண்டிருந்த காலத்தில், சீதையைத் தேடிச் செல்லும் வழியில், தன்னுடைய பாணத்தால் தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட காரணத்தினால், இத்தலத்து இறைவனுக்கு ‘பாணபுரீஸ்வரர்‘ என்ற பெயர்.

திருக்கடவூரில் சிரஞ்ஜீவிப் பதம் பெற்ற மார்க்கண்டேயர் பாணாபுரத்து அன்னையை வழிபட்டார். அப்போது, இத்தலத்திலும் திருக்கடவூர் அபிராமி அன்னையாகவே காட்சியளித்தபடியால் இத்தலம் திருக்கடையூருக்குச் சமமாக கருதப்படுகிறது.
வழிப்பாட்டுச் சிறப்புகள் : பௌர்ணமியன்று இத்தலத்து அன்னையை அபிஷேகித்து வழிபடுவோருக்கு சகல வரங்களும் கிட்டும். வைகாசிப் பௌர்ணமியன்று வழிபடுவோருக்கு திருவடிப் பேறு கிட்டும். பாண தீர்த்தத்தில் நீராடி வழிபடுவோருக்கு தேவர்பதம் கிடைக்கும். இத்தலத்தில் ஆயுஷ்ஹோமங்கள் செய்வோருக்கு திருக்கடையூர் கோயிலில் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் கிட்டும் என்பதும் ஐதிகம்.

எப்படிச் செல்வது ? : கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ் சாலையில், கோவிந்தபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கே சென்றால் ஒரு பர்லாங் தூரத்தில் பாணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆட்டோ வசதியுண்டு (தொடர்புக்கு : மணிகண்டன் குருக்கள் 97917 82878).
`கொழையூர்' அபிராமி
தலம் : கொழையூர்
ஸ்வாமி : அபிராமி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர்
திருத்தலச் சிறப்புகள் : அகத்திய முனிவர் தென்திசை நோக்கி வரும்போது, கோயில் இல்லாத ஊர்களிலெல்லாம் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ வழிப்பாட்டைச் செய்துவந்தார். அவ்வாறு இங்கு அகத்தியர் வழிபட்ட ஈசன் அகத்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

`கூழையூர்' என அப்பர் பெருமானால் பாடல்பெற்ற இத்தலம், காலப்போக்கில் மருவி கொழையூர் என்றானது. ஆலய வளாகத்திற்குள் வரதராஜப்பெருமாள், யோக ஆஞ்சநேயர், வெள்ளைப் பிள்ளையார், வள்ளி தெய்வானை சகிதம் முருகர் என அனைவரும் அருள்பாலிக்கின்றனர்.
வழிப்பாட்டுச் சிறப்புகள் : காவிரியின் உபநதியான வீரச்சோழன் ஆற்றங்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் இரட்டை விநாயகர்களாக அருள்பாலிக்கும் வெள்ளைப் பிள்ளையாரைச் சுற்றி தண்ணீர் தொட்டி அமைத்து நீர் நிரப்பி வழிபட்டால், உடனே மழை பொழியும் என்பது நம்பிக்கை.சனிக் கிழமைகளில் யோக ஆஞ்சநேயரை 11 முறை வலம் வந்து தரிசித்தால், எண்ணிய காரியம் வெற்றியடையும் என்கிறார்கள்.

எப்படிச் செல்வது ? : கும்பகோணம் - ஆடுதுறை - தரங்கம்பாடி பேருந்து மார்க்கத்தில், கோமல் பேருந்து நிலையத்தில் இறங்கினால் 2.கி.மீ தூரத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது (தொடர்புக்கு: குமார் குருக்கள் 94429 33795).
`இலந்துறை' அபிராமி
தலம் : இலந்துறை
ஸ்வாமி : அபிராமி சமேத ஸ்ரீசுந்தரேசுவரர்
திருத்தலச் சிறப்புகள் : இலந்தை மர வனமாக இருந்தமையால், இவ்வூர் இலந்துறை என்றானது. வியாச முனிவர் ஸித்தி பெற்ற தலம் இதுவே. வியாச மகரிஷியால் பூஜிக்கப்பெற்ற லிங்கம் ‘வியாசேஸ்வரர்’ என்ற திருநாமம் கொண்டு திகழ, தனிக்கோயிலாக அமைந்துள்ளது.

இந்தத் திருத்தலத்தில் ஸ்ரீதேவி பூமாதேவி சமேதமாக ஸ்ரீபத்ரி நாராயணப்பெருமாள் அருள்பாலிக்கிறார். பெருமாள் தன்னிடமுள்ள சங்கு - சக்கரத்தை அம்பாளுக்கு அளித்துவிட்டபடியால், துளசி மாலையுடன் மட்டும் திகழ்வது இவ்வாலயத்தின் சிறப்பு.
வழிப்பாட்டுச் சிறப்புகள் : இங்குள்ள அபிராமி அன்னையை வழிபட, தோஷங்கள் நீங்கி சுக வாழ்வு பெறுவர். மேலும், அன்னையை அபிஷேகித்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்தால், ஞானமும் சகல சௌபாக்கியங்களும் பெறுவது கண்கூடு. முருகனுக்குரிய தலம் என்பதால், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அத்தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள்.

எப்படிச் செல்வது ? : கும்பகோணம் - எஸ்.புதூர் - காரைக்கால் பேருந்து மார்க்கத்தில், திருநீலக்குடி பேருந்து நிலையத்தில் இறங்கினால், தெற்கே 1 கி.மீ தொலைவில் ஆலயம் உள்ளது (தொடர்புக்கு சிவமணி சிவாச்சாரியார் - 94874 42880).
`திருமலைராயன்' அபிராமி
தலம் : திருமலைராயன்பட்டணம்
ஸ்வாமி : அபிராமி சமேத ஸ்ரீராஜசோளீஸ்வரர்
திருத்தலச் சிறப்புகள் : ராமதேவர் என்ற முனிவரைக் குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர் சோளீஸ்வரர் என்ற சிவபக்தர். இவர், குருநாதர் கொடுத்த அஷ்டபுஜ கால பைரவரை, திருமலைராஜன் உதவியுடன் இத்தலத்தில் கோயில் அமைத்து வழிப்பட்டார். இங்கு வந்து தரிசித்தவர் யாவரும் ராஜயோகம் கிட்டி செல்வ செழிப்புடன் வாழ்ந்தனர்.

அதனால் இத்தலத்து ஈசன் ஸ்ரீராஜ சோளீஸ்வரரர் என்றானார். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற தலம். இவ்வூரில் 108 கோயில்களும், 108 தீர்த்த குளங்களும் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
வழிப்பாட்டுச் சிறப்புகள் : சோளீஸ்வரர் முனிவர் கண்நோய் நீங்க இங்குள்ள நேத்திரப் புஷ்கரணியில் நீராடி, ஈசனை வணங்கி பலனடைந்த தலம். இத்தலத்து அம்மனுக்குக் கண்கொடுத்த அம்மன் என்ற பெயருமுண்டு. பிரதி வாரம் வெள்ளிக்கிழமையன்று ராகு கால நேரத்தில் பைரவரை வணங்க, எண்ணிய யாவும் கைகூடும் என்பது ஐதிகம். சாதாரண பக்தருக்கே ராஜயோகம் தந்த அபிராமி என்பது கூடுதல் சிறப்பு.

எப்படிச் செல்வது ? : நாகப்பட்டினம் - காரைக்கால் மெயின்ரோட்டில் திருமலைராயன்பட்டணம் உள்ளது. நடந்தே செல்லலாம். ஆட்டோ வசதியுண்டு (தொடர்புக்கு : முரளி குருக்கள் 99769 12649).