Published:Updated:

திருவருள் திருவுலா: கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

ஸ்ரீகுருவாயூரப்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீகுருவாயூரப்பன்

`பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா' என்று கண்ணனைக் கண்டு களிப்புற்று பாடுகிறார், மகாகவி பாரதி.

திருவருள் திருவுலா: கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

`பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா' என்று கண்ணனைக் கண்டு களிப்புற்று பாடுகிறார், மகாகவி பாரதி.

Published:Updated:
ஸ்ரீகுருவாயூரப்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீகுருவாயூரப்பன்

கல்யாணரூபாய கலௌ ஜனானாம்

கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே

கம்ப்வாதி திவ்யாயுதஸத்கராய

வாதாலயாதீஸ நமோ நமஸ்தே!

கருத்து: குருவாயூரப்பா... கருணாமிர்த சாகரா... மங்கலகரமான திருமேனியைக் கொண்டவரும், கலியில் பக்தர்களுக்கு மங்கலத்தை வாரி அருள்பவரும், சங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களைக் கைகளில் தரித்தவருமான உமக்கு நமஸ்காரம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா' என்று கண்ணனைக் கண்டு களிப்புற்று பாடுகிறார், மகாகவி பாரதி. ஆம்! கண்ணனின் பக்தர்களுக்கு எப்போதும் அவன் சிந்தனைதான்; அவர்கள் காணும் காட்சிகள் யாவும் அவன் காட்டியருளும் திருக்கோலங்கள்தான்.

திருவருள் திருவுலா: கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

ஆழ்வார்களுக்கும் அருளாளர்களுக்கும் அருள்செய்த அந்தக் கண்ணன் நமக்கும் அருள்செய்ய எண்ணற்ற தலங்களில் கோயில்கொண்டுள்ளான். வடக்கே மதுரா, துவாரகை, பண்டரிபுரம், பூரி முதலானவற்றையும் தெற்கே குருவாயூர், கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள் போன்ற புகழ்பெற்ற தலங்களையும் பெரும்பாலானோர் அறிவார்கள்.

இவை மட்டுமன்றி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய நேரில் சென்று வழிபட்டு வரம்பெறவேண்டிய இன்னும்பல தலங்களும் கோயில்களும் உண்டு கண்ணனுக்கு. கோடிப் புண்ணியம் தரவல்ல அந்தத் தலங்களில் சில இங்கே உங்களுக்காக...

காளிங்க நர்த்தனர்!

தலம்: ஊத்துக்காடு

ஸ்வாமி: ஸ்ரீகாளிங்கநர்த்தனர்

திருத்தலச் சிறப்புகள் : சங்கீத உலகுக்குக் கண்ணனின் அழகையும் கருணையையும் கவிதைகளாக அள்ளித் தந்தவர், ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர். அவருக்குச் சங்கீத ஞானத்தைத் தந்து அருளியவர், ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர்!

ஊத்துக்காடு ஸ்ரீகாளிங்கநர்த்தனர் கோயில், புராதன-புராணப் பெருமைகள் கொண்ட திருத்தலம். தேவலோகப் பசுவான காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் இருந்தது. ஒருமுறை, நாரதர் மூலம் காளிங்கநர்த்தன திருக்கதையைக் கேட்டறிந்த காமதேனு, மாயக்கண்ணன் மீது பக்திகொண்டது. அவனுடைய வேணு கானத்தை கேட்கவேண்டும் என்றும் அவனை தரிசிக்க வேண்டும் என்றும் ஏங்கித் தவித்தது. பசுவின் கோரிக்கையைக் கேட்காமல் இருப்பானா ஆயர்குலத்தோன்! அங்கேயுள்ள நீரோடையில், காளிங்கனின் மீது நர்த்தனமாடும் கோலத்தைக் காட்டியருளினான். பின்னாளில் இதனை அறிந்த சோழ மன்னன் ஒருவன், ஸ்ரீகாளிங்கநர்த்தனருக்கு இங்கு கோயில் அமைத்தான் என்கிறது தலபுராணம்.

ஸ்ரீகாளிங்கநர்த்தனர்
ஸ்ரீகாளிங்கநர்த்தனர்

வழிபாட்டுச் சிறப்புகள்: ரோகிணி நட்சத்திரக் காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இங்கு வந்து பிரார்த்தித்தால்,

சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். அதுமட்டுமா! தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும்; பாடுவதில், ஆடுவதில், வாத்தியக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெறவேண்டும் என விரும்புபவர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து ஸ்ரீகாளிங்கநர்த்தனரை பிரார்த்தித்துச் சென்றால், நினைத்த காரியம் இனிதே நடந்தேறும். உற்சவரின் திருப்பாதத்துக்குக் கொலுசு சார்த்தி வழிபடுவதும் சிறப்பு. சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் ஸ்ரீகண்ணனுக்கும் மெல்லிய நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் திகழ்கிற விக்கிரகத் திருமேனி, வியப்பின் உச்சம்!

எப்படிச் செல்வது?: கும்பகோணத்திலிருந்து தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர், ஸ்ரீவீரபத்திரர் கோயில், ஆவூர் பசுபதீஸ்வரர், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கை ஆலயம் ஆகியவற்றைக் கடந்து சென்றால், சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு.

கைகளில் ஏந்துவோம் கோபாலனை!

தலம்: மன்னார்குடி

ஸ்வாமி: ஸ்ரீவாசுதேவபெருமாள் (மூலவர்),

ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி (உற்சவர்)

திருத்தலச் சிறப்புகள் : ராஜமன்னார் எனப்படும் ராஜகோபாலன் குடிகொண்டுள்ள தலம் என்பதால், ராஜ மன்னார்குடி என்றும், மன்னார்குடி என்றும் ஊர்ப்பெயர் அமைந்ததாம். செண்பகாரண்ய க்ஷேத்திரம் என்றும் சர்வ தோஷ நிவர்த்தி தலம் என்றும் இந்தத் தலத்தைப் போற்றுகின்றனர் பக்தர்கள். ஸ்ரீரங்கத்துக்கு அடுத்து, 18 நாள்கள் பிரம்மோற்ஸவமும் 12 நாள் விடையாற்றியும் காணும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு. மேலும் வைணவ ஆசார்யரான மணவாளமாமுனிகளின் அபிமான ஸ்தலம் என்பது கூடுதல் சிறப்பு.

கோப்பிரளயர், கோபிலர் ஆகிய முனிவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து தவம் இருந்தனர். அதனால் மகிழ்ந்த பெருமாள், அவர்களுக்குக் காட்சி தந்தருளினார். முனிவர்களது வேண்டுகோளின்படி, இன்றளவும் பக்தர்களைத் தாமே தேடிச் சென்று அருள்பாலித்து வருகிறார் என்பது ஐதீகம். இக்கோயில் தாயாரின் திருநாமம்- ஸ்ரீசெங்கமலத் தாயார். இந்த ஆலயத்தின் உற்சவர், சேலையை வேஷ்டியாகவும் தலைக்கு முண்டாசாகவும் கட்டிக் கொண்டு காட்சி தருகிறார். வேறெங்கும் காண்பதற்கு அரிய கோலம் இது என்கின்றனர்.

ஸ்ரீவாசுதேவபெருமாள்
ஸ்ரீவாசுதேவபெருமாள்

வழிபாட்டுச் சிறப்புகள்: கல்வியில் மேன்மை, நல்ல இடத்தில் வேலை, வெளி நாட்டில் வேலைவாய்ப்பு, திருமணப் பாக்கியம், குழந்தை வரம்... என மனதில் என்ன வேண்டுதல் இருந்தாலும், இங்கு வந்து ஸ்ரீராஜகோபாலனை மனதாரப் பிரார்த்தித்தால், உடனே அவற்றை நிறைவேற்றி வைத்துக் காப்பார் என்பது நம்பிக்கை! ரோகிணி நட்சத்திர நாளில், இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்திப்பது கூடுதல் பலனைத் தரும் என்கின்றனர் பக்தர்கள்.

இங்கே, குழந்தை வடிவில் காட்சி தரும் ஸ்ரீசந்தான கோபாலனை, கைகளில் நாமே ஏந்திக்கொண்டு பிரார்த்தித்தால், கோபாலனைப் போலவே, அழகும் அறிவும் நிரம்பிய பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என அனுபவச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பிரார்த்தனை பலித்த பெண்கள்.

எப்படிச் செல்வது? தஞ்சாவூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்குடி. ஊரின் மையப்பகுதியில், பிரமாண்டமாகத் திகழ் கிறது ராஜ கோபால ஸ்வாமி ஆலயம்.

அத்திமரத்தில் தொட்டில் கட்டி...

தலம்: கோபிநாதமலை

ஸ்வாமி: ஸ்ரீகோபிநாத ஸ்வாமி

திருத்தலச் சிறப்புகள் : திண்டுக்கல்-பழநி சாலையில், ரெட்டியார் சத்திரம் அருகிலுள்ளது கோபிநாத மலை. குழலூதும் கண்ணன் இங்கே கோயில்கொண்டிருப்பதால், இறைவனின் பெயரே மலையின் பெயராகிவிட்டது!

மலையடிவாரத்திலிருந்து, 619 படிகள் ஏறிச் சென்றால் கோயிலை அடையலாம். கோபிநாத மலையின் எழிலார்ந்த சூழலில் அமைந்துள்ளது ஆலயம். மூலஸ்தானத்தில், ஆவினங்களை மேய்த்துக் காத்த கோபிநாத ஸ்வாமி, கையில் புல்லாங்குழலுடன், அழகே உருவாகக் காட்சி தருகிறார். உற்சவரோ, இரண்டு கைகளிலும் வெண்ணெயை வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.

ஸ்ரீகோபிநாத ஸ்வாமி
ஸ்ரீகோபிநாத ஸ்வாமி

வழிபாட்டுச் சிறப்புகள்: கோபிநாத ஸ்வாமிக்குப் பால் மற்றும் தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் யாவும் நடந்தேறும்; வீட்டில் வறுமை நீங்கும்; சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை! `கொஞ்சி விளையாடப் பிள்ளை இல்லையே' என வருந்துவோர், இங்கு வந்து கோபிநாத ஸ்வாமியை தரிசித்து, அத்தி மரத்தில் தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் கட்டி, தாலாட்டுப் பாடலாம் என்கின்றனர் பக்தர்கள்!

``இந்தச் சாமியைக் கும்பிட்டுட்டு, விதை நெல்லை விதைச்சா போதும். அமோக விளைச்சல் உறுதி’’ என்கின்றனர், இப்பகுதி மக்கள்.

இன்னொரு விஷயம்... மாடுகள் சரிவர உண்ணவில்லை எனில், ஸ்ரீகோபிநாத ஸ்வாமியை வணங்கிவிட்டு, மலையில் உள்ள தீர்த்தம் அல்லது ஒரு பிடி புல்லை எடுத்துச் சென்று, அந்த மாடுகளுக்குக் கொடுக்க, அதன்பின் தீவனத்தை வெளுத்து வாங்குமாம் மாடுகள்!

வீடு - வாசல், மாடு - கன்று என வளமுடன் வாழப் பிரார்த்தித்து, அந்தப் பிரார்த்தனை நிறைவேறியவர்கள், மாடு- கன்றுகளைப் போன்ற மண் பொம்மைகளைச் செய்துவைத்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

எப்படிச் செல்வது?: திண்டுக்கல்-பழநி சாலை யில் உள்ளது ரெட்டியார் சத்திரம். அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோபிநாத மலை.

உயரமான வழுக்குமரம்... நீளமான பல்லக்கு!

தலம்: மதுரை - வடக்குக் கிருஷ்ணன் கோயில்

ஸ்வாமி: ஸ்ரீநவநீத கிருஷ்ணன்

திருத்தலச் சிறப்புகள் : மதுரையிலேயே இரண்டு நவநீத கிருஷ்ணர்கள் உண்டு. முதலாமவர் மதுரை தல்லாக்குளத்தில் கோயில்கொண்டிருக்கிறார். இரண்டாமவர் குடியிருப்பது, வடக்குமாசி வீதியின் மையப் பகுதியில். சுமார் 100 ஆண்டுகளுக்குமுன் ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள்.

முழுக்க முழுக்கக் கல்கட்டுமானமாக கோயில் அமைந்திருப்பது சிறப்பு. மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் உள்ளதால், ‘வடக்கு கிருஷ்ணன் கோயில்’ என்றும் ஆதிகாலத்தில் கம்பத்தின் அடியில் கிருஷ்ணன் வீற்றிருந்ததால், ‘கம்பத்தடி கிருஷ்ணன் கோயில்’ என்றும் அழைக்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீநவநீத கிருஷ்ணன்
ஸ்ரீநவநீத கிருஷ்ணன்

வழிபாட்டுச் சிறப்புகள்: இவருக்கு ஒரு சிறப்பு உண்டு. குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று குழந்தைக்குச் சோறூட்டுவதாக வேண்டிக்கொண்டு (அன்னப்ராசனம்), அங்கு செல்ல இயலாதவர்கள், இந்த ஸ்ரீநவநீதகிருஷ்ணன் சந்நிதியில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ளலாம். புத்திரதோஷம் உள்ளவர்கள், இந்தக் கிருஷ்ணனை மனதாரப் பிரார்த்தித்து, அவருக்குக் கொலுசு அணிவிப்பதாகவும், கோயிலில் தொட்டில் கட்டுவதா கவும் வேண்டிக்கொண்டால், குறிப்பிட்ட தோஷம் நீங்கும்; விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயத்தில் தினம் தினம் விசேஷம்தான் என்றாலும், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் 2-ம் நாள் உறியடி வைபவம். அன்று தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது. அதேபோல் 9-ஆம் நாளன்று முளைப்பாரி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று, ஆசியாவிலேயே மிக நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோயிலின் புஷ்பப் பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணன். இப்படி, 15 நாள்கள் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீநவநீத கிருஷ்ணனை வழிபட்டு வர, நலன்கள் யாவும் ஸித்திக்கும்

எப்படிச் செல்வது?: மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலைச் சுற்றி அமைந்துள்ள மாசி வீதிகளில், வடக்கு மாசி வீதியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது, இந்தக் கண்ணனின் ஆலயம்.

குருவாயூருக்கு வாருங்கள்...

தலம்: குருவாயூர்

ஸ்வாமி: ஸ்ரீகுருவாயூரப்பன்

திருத்தலச் சிறப்புகள் : நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம், பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை ஆகிய நூல்கள் எல்லாம் போற்றும் அற்புதத் தலம் குருவாயூர். இந்த க்ஷேத்திரத்தின் மகிமைகளை, நாரத புராணத்தின் ‘குருபாவன புர மகாத்மியம்’ விவரிக்கிறது.

துவாபர யுகத்தில், ‘துவாரகையை ஏழு நாட்களில் கடல் கொள்ளும். அந்த வெள்ளப் பரப்பில் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை தேவகுரு பிருகஸ்பதி மூலம் பிரதிஷ்டை செய்யவேண்டும்’ என்று உத்தவரிடம் அருளினார் கிருஷ்ணர். குருவும் வாயு பகவானும் அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ய இடம் தேடினர். அப்போது, கேரளத்தில் தாமரைக் குளக்கரை ஒன்றில் சிவனார் தவம் செய்வதைக் கண்டார்கள். அவர் அருளியபடி, விஸ்வகர்மா நிர்மாணித்த கோயிலில் அந்த விக்கிர கத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் இந்தத் தலம் ‘குருவாயூர்’ ஆனது.

ஸ்ரீகுருவாயூரப்பன்
ஸ்ரீகுருவாயூரப்பன்

வழிபாட்டுச் சிறப்புகள்: குருவாயூரில் எல்லா நாள்களிலும் அன்னப்ராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குருவாயூரப்ப னின் சந்நிதியில் சோறு ஊட்டினால், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வளர குருவாயூரப்பன் அருள் புரிவான் என்பது நம்பிக்கை.

`அடிமை கிடத்தல்' என்றொரு பிரார்த்தனையும் இங்கே உண்டு. குழந்தைகளை பகவானின் குழந்தையாக பாவித்து, நடையில் கிடத்திவிட்டுத் திரும்புவர். பின்பு மற்றொருவர் மூலமாக குழந்தையை எடுத்து வரச் செய்வர். அதற்கான காணிக்கையை உண்டியலில் செலுத்துவர். இதற்கு அடிமை கிடத்தல் அல்லது நடை தள்ளுதல் என்று பெயர். அதேபோல், அங்கங்களில் நோய் நொடி உள்ள பக்தர்கள், தங்களது குறை தீர்ந்தால் குறிப்பிட்ட அங்கங்களைப் போன்ற உருவங்களை மரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் செய்து சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொள்வர். இதற்கு, ‘ஆள் ரூபம் சமர்ப்பித்தல்’ என்று பெயர்.

எப்படிச் செல்வது?: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தலம் இது. திருச்சூரிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலுள்ளது.