Published:Updated:

திருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்

நரசிம்மர், வீர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என ஐந்து தோற்றங்களில் காட்சி தந்தார் விஷ்ணு பகவான்.

பிரீமியம் ஸ்டோரி

தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பெரும் இடையூறு விளைவித்த இரண்ய கசிபுவை அழித்து அறத்தைக் காக்க, பக்த பிரகலாதனுக்கு அருள்செய்ய பகவான் விஷ்ணு நரசிம்மமாய் அவதரித்தத் திருக்கதை நமக்குத் தெரியும். `துஞ்சும்பொழுது அழைமின் துயர்வரில் நினைமின் துயர் இலீர், சொல்லிலும் நன்றாம் நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம்' என்று பிறவிப்பிணிக்கு அமுத மருந்தை உபதேசித்த திருமங்கையாழ்வார், நரசிம்மமூர்த்தியின் மகிமைமிகு திருக்கோலங்களைக் காட்டியருளும்படி பகவானிடம் வேண்டிக்கொண்டார். அதன்படியே திருமங்கையாழ்வாருக்கு உக்கிர நரசிம்மர், வீர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என ஐந்து தோற்றங்களில் காட்சி தந்தார் விஷ்ணு பகவான்.

திருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்

திருமங்கையாழ்வார் அடைந்த பெரும்பேற்றினை பக்தர்களாகிய நாமும் பெற்று மகிழும் வண்ணம், அந்த ஐந்து திருக்கோலங்களுடன் கோயில் கொண்டிருக்கிறார் நரசிம்மமூர்த்தி. நாகை மாவட்டம், சீர்காழி அருகே சுமார் 5 கி.மீ. தொலைவுக்குள் அமைந்திருக்கின்றன பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள். இந்தத் தலங்களை ஒரே நாளில் தரிசித்தால், எண்ணிய காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதிகம். வாழ்வில் வளம் பெற, ஒருமுறையேனும் பஞ்ச நரசிம்ம ஆலயங்களை வலம் வந்து வழிபட்டு வரம்பெறுவோமே...

திருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்

குறையற்ற வாழ்வு தரும் ஸ்ரீஉக்கிர நரசிம்மர்

தலம் : திருக்குறையலூர்

ஸ்வாமி : ஸ்ரீஉக்கிர நரசிம்மர்

திருத்தலச் சிறப்புகள் : பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்களில் முதலாவதாக சிறப்பிக்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரின் அவதாரத்தலம் இதுவாகும்.உக்கிர நரசிம்மராக இருந்தபோதிலும் முகத்தில் அதீத கோபம் காட்டாமல், அடிபணிவோர்க்கு அருள்பாலிக்கும் அற்புதத் தலமாகும். தனியார் நிர்வாகத்துக்குட்பட்ட இக்கோயிலில், ஸ்ரீதேவி, பூமாதேவியர் சமேதராக காட்சி தருகிறார் ஸ்ரீஉக்கிர நரசிம்மர்.

திருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்

வழிபாட்டுச் சிறப்புகள் : இப்பெருமான் அவதரித்த சுவாதித் திருநாளில், மாதந்தோறும் சுதர்சன யாக பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு வழிபடுவோருக்கு நவகிரக தோஷம், சத்ரு தோஷம் முதலானவை நீங்கும்; திருமணத் தடை விலகும்; புத்திர பாக்கியம் கிட்டும். அமாவாசையன்று எள் தீபமேற்றி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்வோர் பிதுர் தோஷம் நீங்கி மூதாதையரின் ஆசியைப் பெறுவர். அமாவாசை மற்றும் பிரதோஷ நாள்களில் கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை செய்யும் பெண்களுக்கு, மங்கலங்கள் பெருகும்.

எப்படிச் செல்வது ? : நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் மங்கைமடம் உள்ளது. அங்கிருந்து 3.கி.மீ தொலை வில் திருக்குறையலூர் உள்ளது. பேருந்து மற்றும் ஆட்டோ வசதியுண்டு.(தொடர்புக்கு : பார்த்தசாரதி பட்டாசார்யர் 94435 64650).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிறைவான வாழ்வுக்கு ஸ்ரீவீர நரசிம்மர்

தலம் : மங்கைமடம்

ஸ்வாமி : ஸ்ரீவீர நரசிம்மர்

திருத்தலச் சிறப்புகள் : திருமங்கையாழ்வார் குமுதவல்லியை மணம் செய்ய விரும்பியபோது, ‘ஒரு வருடகாலம் தினமும் ஆயிரம் வைணவர்க்கு அன்னதானம் அளிக்கும் விரதம் முடிந்தபின்பே மணம் செய்துகொள்வேன்’ என்றார். அதன்படி ஆழ்வாரும் குமுதவல்லியும் சேர்ந்து அன்னதானம் வழங்கிய தலமிது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூமாதேவியர் சமேதராக ஸ்ரீவீர நரசிம்மர் காட்சி தருகிறார். இக்கோயிலில், குமுதவல்லியுடன் திருமங்கையாழ்வாரும் தனிச் சந்நதி கொண்டுள்ளார்.

திருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்

வழிப்பாட்டுச் சிறப்புகள் : குமுதவல்லி, திருமணத்துக்குமுன் அன்ன தானம் எனும் சங்கல்பத்தை நிறைவேற்றிய தலம்; தன் விரதத்தைப் பூர்த்தி செய்த இடம் இது. ஆகவே, திருமணம் ஆகாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீவீர நரசிம்மருக்குத் துளசி மாலை சமர்ப்பித்து, தயிர் சாதம் படைத்து, தானம் தருவது விசேஷம். இதனால் திருமணத் தடைகள் விலகி, நல்ல வாழ்க்கைத் துணை அமையும்; 16 வகை செல்வங்களும் ஸித்திக்கும்.

எப்படிச் செல்வது ? : சீர்காழியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது மங்கைமடம். முதலில் திருக்குறையலூரை தரிசித்துவிட்டு இந்தத் தலத்துக்கு வரவேண்டும் (தொடர்புக்கு : பாலாஜி பட்டர் 94438 72893).

எதிரிகள் பயம் போக்கும் ஸ்ரீஹிரண்ய நரசிம்மர்

தலம் : திருநகரி

ஸ்வாமி : ஸ்ரீகல்யாண ரங்கநாதப் பெருமாள்,

ஸ்ரீஹிரண்ய நரசிம்மர். ஸ்ரீயோக நரசிம்மர்.

திருத்தலச் சிறப்புகள் : திருவரங்கத்துப் பெருமாளிடம் தமக்குத் திருமணக் கோலத்தில் காட்சி தரும்படி வேண்டிக்கொண்டாராம் திருமங்கையாழ்வார். அவரது வேண்டுதலுக்குச் செவிசாய்த்து எம்பெருமான் ஆழ்வாருக்குத் திருமணக்கோலத்தைக் காட்டியருளிய அற்புத க்ஷேத்திரம் இது. இந்தத் திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

திருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்

இந்த க்ஷேத்திரம் குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோ ரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்விய தேசமாகும். நாதமுனிகள், ராமாநுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டு போற்றியுள்ளார்கள்.

இந்தத் திருக்கோயிலில் இரண்டு நரசிம்ம மூர்த்தியர் அருள்பாலிக் கிறார்கள். அதாவது, பஞ்ச நரசிம்ம தரிசனத்தில் இரண்டு மூர்த்தியரின் தரிசனம் இந்த ஒரே திருத்தலத்தில் கிடைத்துவிடுகிறது. திருக்கோயிலின் திருமங்கையாழ்வார் சந்நதிக்குப் பின்புறம் வடக்கு நோக்கியபடி திகழ்கிறது ஸ்ரீஹிரண்ய நரசிம்மரின் சந்நிதி. ஸ்ரீரங்கநாதர் கருவறைக்குப் பின்புறம் கிழக்கு நோக்கியபடி அமைந்திருக்கிறது, ஸ்ரீயோக நரசிம்மரின் சந்நிதி.

யோகங்கள் அருளும் ஸ்ரீயோக நரசிம்மர்

வழிப்பாட்டுச் சிறப்புகள் : திருவாலி - திருநகரி ஆகிய இரண்டு தலங் களையும் இரட்டைத்திருப்பதி எனப் போற்றுவார்கள். இவற்றில் திருநகரி அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயிலில் மட்டும் இரண்டு நரசிம்மர்கள் அருள்வது சிறப்பு. அமாவாசை, பிரதோஷம், சுவாதி நட்சத்திர நாள்களில் இந்தத் தலத்துக்கு வந்து இரண்டு நரசிம்ம மூர்த்தி யரையும் தரிசித்து வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் பெறலாம்.

திருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்

யோக கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீயோக நரசிம்மர். இவரை வழிபட்டால் மனத்திலுள்ள சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கும்; காரிய ஸித்தி உண்டாகும்; யோக வாழ்வு ஸித்திக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இரண்யகசிபுவை வதம் செய்யும் திருக்கோலத்தில் அருள்கிறார், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர். இவரை தரிசித்து வழிபட்டால், நம்மைத் துன்புறுத் தும் சங்கடங்கள் அனைத்தும் விலகியோடும்; சத்ரு பயம் நீங்கும்.

`மூலவர் ஸ்ரீகல்யாண ரங்கநாதருக்கு நிலைமாலை சாற்றி,சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, திருமணம் ஆகாதவர்கள் வழிபட்டால் 48 நாள்களுக்குள் திருமணம் நிச்சயம்’ என்கிறார்கள்.

எப்படிச் செல்வது ? : மங்கைமடத்திலிருந்து வடக்கே 4 கி.மீ. தொலை வில் திருநகரி உள்ளது. முறையே திருக்குறையலூர், திருமங்கைமடம் ஆகிய தலங்களை தரிசித்துவிட்டு திருநகரியை அடையலாம் (தொடர்புக்கு: பத்மநாப பட்டாசார்யர் 94433 72567).

ஐஸ்வர்யம் அருளும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்

தலம் : திருவாலி

ஸ்வாமி : ஸ்ரீலட்சுமி நரசிம்மர்

திருத்தலச் சிறப்புகள்: இரணியகசிபுவை வதம் செய்தபிறகும் உக்கிரம் தணியாமல் இருந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு, ஸ்ரீமகாலட்சுமி தாயார் ஸ்வாமியின் வலது தொடையில் வந்து அமர்ந்தார். அவரை ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து, உக்கிரம் தணிந்து அருள்பாலித்தார் ஸ்ரீநரசிம்மமூர்த்தி. அதனால் இவ்வூர் திருவாலி என்றழைக்கப்படுகிறது.

திருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்

பெரும்பாலான ஆலயங்களில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோலத்தில் ஸ்வாமிக்கு இடப்புறத்தில் தாயார் வீற்றிருப்பார். இந்தக் கோயிலில் பெருமானுக்கு வலப்புறத்தில் தாயார் அருள்பாலிக்கிறார். அதிலும் அவர் தம்முடைய திருக்கரங்களைக் கூப்பி அனுக்கிரகம் செய்வது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிப்பாட்டுச் சிறப்புகள்: பிரதோஷ நாள்களில் பெருமாளுக்கு வில்வத் தால் அர்ச்சனை நடைபெறுவது இத்தலத்தில் சிறப்பானதாகும். இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மரை அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் பிரச்னைகள் நீங்கும்; செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்வது ? : திருநகரியிலிருந்து 4 கி.மீ தொலைவில், திருவாலி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது (தொடர்புக்கு : பாலாஜி பட்டர் 96297 58828)

படங்கள்: வெங்கடேச பிரசன்னா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு