பங்குனி மாத பௌர்ணமி நாளில் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளையே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடுகிறோம்.
பரமேஸ்வரன் - பார்வதிதேவி, காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர், முருகப் பெருமான் - தெய்வானை, பிரம்மன் - கலைவாணி, தேவேந்திரன் - இந்திராணி, ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி, ரங்க மன்னார் - ஆண்டாள், அகத்திய மாமுனி - லோபாமுத்திரை, சந்திரன் - 27 கன்னிகையர்கள் என தெய்வத் திருமணங்கள் பலவும் இந்நாளிலேயே நடைபெற்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் பாடல் பெற்ற திருத்தலமாம் திருமழபாடியில், பங்குனி மாதத்தில் நடைபெறும் நந்திதேவரின் திருமண வைபவம், திருமணத் தடைகள் நீக்கும் ஒரு புண்ணிய வைபோகம் என்பர் ஆன்றோர்கள். மங்கலத் திருமணத்தை நிறைவேற்றித் தரும் இந்தப் புண்ணிய தினமாம் பங்குனி உத்திர நாள் வரும் 6.4.2020 அன்று வரவுள்ளது. இந்நாளில் திருமண வரமருளும் சில புண்ணிய தலங்களை தரிசித்து மனதுக்கு இனிமையான வாழ்வை வரமாகப் பெற்று மகிழ்வோம்.
வாழை மடுவில் திருவேதிக்குடி ஈஸ்வரன்!
இறைவன் - ஸ்ரீவேதபுரீஸ்வரர்
அம்பாள் - ஸ்ரீமங்கையர்க்கரசி
சிறப்பு : திருவேதிக்குடிக்கு வந்தால் திருமண யோகம் கைகூடும் என்பது முதுமொழி. திருவேதிக்குடி ஸ்ரீமகாதேவர், சதுர்வேத மங்கலத்து மகாதேவர் என்று இங்குள்ள கல்வெட்டுகள் ஈசனைத் துதிக்கின்றன. ஈசன் வாழை மடுவில் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால், வாழை மடுநாதர் என்ற திருநாமமும் கொண்டுள்ளார்.

எத்தனை சங்கடமான திருமணத் தடைகள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர் திருவேதிக்குடிக்கு வந்து ஸ்ரீவேதபுரீஸ்வரரையும் ஸ்ரீமங்கையர்க்கரசியையும் வழிபட்டு பிரார்த்தித்தால் மாங்கல்ய வரம் நிச்சயம் கிட்டும். ஆதிகால சோழ மன்னன் ஒருவனின் மகளுக்குத் திருமணம் தள்ளிக்கொண்டே போக, அவன் குடும்பத்தோடு இங்கு வந்து, அம்பாளையும் ஈசனையும் வழிபட்டு தகுந்த வரனை அடைந்தான். இதனால் இந்தக் கோயில் திருப்பணிக்கு ஏராளமான பொருளுதவிகள் செய்தான் என்கிறது தல வரலாறு. எனவே, இங்கு வந்து வேண்டிப்பாருங்கள். உடனே திருமணம் கைகூடும் என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
எங்கு உள்ளது? தஞ்சாவூரிலிருந்து அரியலூர் செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். இங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது திருவேதிக்குடி.
Also Read
கல்யாண வரம் அருளும் தென் சிதம்பரம்!
இறைவன் - ஸ்ரீதாண்டவேஸ்வரர்
அம்பாள் - ஸ்ரீபிரகன்நாயகி
சிறப்பு: திருத்தாண்டவத்தின் மூலம் படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என ஐந்தொழில்களையும் நடத்துகிறார் பரமன். ஐயனின் தாண்டவத்தைப் போற்றும் பல தலங்களில் ஒன்று கொழுமம்.

இங்குள்ள ஈசனார் தாண்டவேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டிருப்பதால் இந்தத் தலத்தை தென் சிதம்பரம் என்பார்கள். திருவாதிரை விழாவில் இங்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறும். அந்த நாளில் திருமணத் தடைகொண்ட பல இளைஞர்களும் கன்னிகளும் இங்கு பெருந்திரளாகக் கூடி வழிபடுவதைக் காணலாம். ஜாதக ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக இப்படி பலவிதங்களில் திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து, ஈசனையும் அம்பிகையையும் வேண்டிக்கொண்டால் விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது நம்பிக்கை. காலையில் விரதமிருந்து, மாலை சாத்தி, களி நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டால் நிறைவான மங்கல வாழ்வளிப்பார் தாண்டவேஸ்வரன் என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
எங்கு உள்ளது? : திருப்பூர் மாவட்டம், மடக்குளம் வட்டத்தில், அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கொழுமம் திருத்தலம். பழநியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
காரமடையில் புத்தாடை வேண்டுதல்!
இறைவன் - ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர்
அம்பாள் - ஸ்ரீலோகநாயகி அம்மை
சிறப்பு: விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் மைசூரில் உள்ள பிரசித்த பெற்ற நஞ்சன்கூடு தலத்தை மாதிரியாகக்கொண்டு, இந்தக் கோயிலை அமைத்தார்களாம். மதுரை ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயில் விமானத்தைப் போலவே, கோஷ்டத்தில் எட்டு யானைகள் சுவாமி விமானத்தைத் தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. லோகநாயகி அம்மை விஷமுண்ட ஈசனின் உடலில் நஞ்சு இறங்காமல் செய்து காப்பாற்றியதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். கணவன் மனைவி ஒற்றுமைக்கு இவர்களே காரணமாக இருப்பதால் இத்தலம் திருமண வரம் அருளும் ஆலயமாக விளங்குகிறது.

திருமணத் தடை, நாக தோஷம் கொண்டவர்கள் இங்கு வந்து ஈசன், அம்பாள் மற்றும் சிவதுர்கைக்குப் புது ஆடைகள் சாத்தி வேண்டிக் கொள்கிறார்கள். அதேபோல் வேண்டுதல் நிறைவேறிய பிறகும் ஈசனுக்கும் அம்பிகைக்கும் சிவதுர்கைக்கும் அபிஷேகம் செய்து புது ஆடைகள் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். உண்மையாகவே இங்கு வந்து பலரும் மாங்கல்ய பாக்கியம் பெற்றிருக்கிறார்கள் என்று சாட்சி சொல்கிறார்கள் ஊர் மக்கள்.
எங்கு உள்ளது? கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது காரமடை. இங்கு அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலை அடுத்துள்ளது ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்.
உன்னதபுரத்தில் பங்காள மஞ்சள் பிரசாதம்!
இறைவன் - ஸ்ரீஸித்தி புத்தி சமேத ஸ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகர்.
சிறப்பு: இந்தத் தலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஸித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி தலமானது, ஸ்ரீகர்க மஹரிஷியின் ஞான புராணத்தில் இடம் பெற்றிருக்கும் 108 கணபதி தலங்களில் 81-வது தலமாக அமைந்திருக்கிறது. காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மிதந்தபடி வந்தவர் என்பதால் இவருக்கு ‘மிதந்தீஸ்வரர்’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு. தெற்கு பார்த்து அருள்வதால் இவருக்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திருமணம் தடைப்பட்டு வரும் அன்பர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தி விநாயகரிடம் வேண்டிக்கொண்டால், உடனே திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

வெள்ளெருக்கம் பூவைப் பாலில் போட்டு குளிர்ந்த அம்மலரை விநாயகப் பெருமானுக்குச் சாற்றி வழிபடுவது, திருமண பாக்கியத்தை உடனடியாக அருளும் என்கின்றனர் இவ்வூர் மக்கள். திருமண வரம் வேண்டுவோர்க்கு, சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, பங்காள மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பூஜிக்கப்பட்ட மஞ்சள் ரட்சையைத் திருமண வரம் வேண்டுவோர் கையில் ஒரு கங்கணம் போல் கட்டுகின்றனர். அவ்வாறு கட்டப்பட்ட நாளிலிருந்து, ஒரு மண்டலத்துக்குள் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை.
எங்கு உள்ளது?: தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் பாதையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் மெலட்டூர். உன்னதபுரம் என்பதே இந்தத் திருத்தலத்தின் முதன்மைப் பெயராகும்.
அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் !
இறைவன் - ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர்
அம்பாள்- ஸ்ரீபாலமீனாம்பிகை
சிறப்பு: சுந்தரேஸ்வரர் - மீனாட்சியம்மை திருமணம் முடிந்து திருக்கயிலாயத்துக்குச் செல்லும் வழியில் மீனாட்சியின் தோழிகள், ‘எங்களுக்காக ஒருமுறை திருமணக் கோலத்தில் காட்சி தாயேன், மீனாள்’ என்று கேட்டுக்கொண்டனராம். அவர்களின் விருப்பத்தை அம்மை ஈசனிடம் தெரிவிக்க... அவரும் சம்மதித்தார். ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசுந்தரேஸ்வரரும் மதுரை அருகேயுள்ள அவனியாபுரத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தந்தருளினர். ஆதியில் இந்த அவனியாபுரத்துக்குப் பிள்ளையார் பாளையம் என்றொரு பெயர் இருந்ததாம்.

பாண்டிய மன்னனின் வெப்பு நோயைத் தீர்த்துவைக்க திருஞானசம்பந்தர் வந்தபோது, பாண்டிமாதேவியார் மங்கையர்க்கரசி இங்கே வந்து வரவேற்றாராம். பிள்ளைத் தமிழ் பாடி வெப்பு நோயைத் தீர்த்துவைத்த தலம் என்பதால், இந்த ஊருக்குப் பிள்ளையார் பாளையம் என்று பெயர் வந்ததாம். திங்கள்கிழமைகளில் இங்கு வந்து, சிவனாருக்கு வில்வத்தால் அர்ச்சனையும், ஸ்ரீபாலமீனாம்பிகைக்கு செவ்வரளியால் அர்ச்சனையும் செய்து வழிபட்டால் கல்யாணத் தடை அகலும். இங்கேயுள்ள ஸ்ரீசந்தான விநாயகர் பிள்ளை பாக்கியம் அருளும் தெய்வமாம்!
எங்கு உள்ளது?: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில், அவனியாபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.