Published:Updated:

திருவாதிரை சிறப்புகள்: ஆண்டுக்கு ஒருமுறையே கிடைக்கும் திருவாரூர் தியாகராஜரின் பாத தரிசனம்!

திருவாதிரை

இன்றைய நாள் சிதம்பரத்தில் மட்டுமல்ல திருவாரூரிலும் மிக விசேஷம். ஆரூராரின் பாத தரிசனம் கிடைக்க கூடிய நாள் இது. வருடம் முழுவதும் தியாகராஜரின் முகத்தை மட்டுமே நம்மால் தரிசிக்க இயலும். திருவாதிரை நாளில்தான் தியாகராஜரின் வலது பாதத்தை தரிசனம் செய்ய முடியும்.

திருவாதிரை சிறப்புகள்: ஆண்டுக்கு ஒருமுறையே கிடைக்கும் திருவாரூர் தியாகராஜரின் பாத தரிசனம்!

இன்றைய நாள் சிதம்பரத்தில் மட்டுமல்ல திருவாரூரிலும் மிக விசேஷம். ஆரூராரின் பாத தரிசனம் கிடைக்க கூடிய நாள் இது. வருடம் முழுவதும் தியாகராஜரின் முகத்தை மட்டுமே நம்மால் தரிசிக்க இயலும். திருவாதிரை நாளில்தான் தியாகராஜரின் வலது பாதத்தை தரிசனம் செய்ய முடியும்.

Published:Updated:
திருவாதிரை
மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று திருவாதிரைத் திருநாள். மார்கழி மாதப் பௌர்ணமியோடு இணைந்து வரும் இந்த நாளை பண்டிகையாய்க் கொண்டாடுகிறோம். 

என்ன பண்டிகை? 

'திரு' என்கிற அடைமொழி இரண்டு நட்சத்திரத்திற்குத்தான் உண்டு. ஒன்று திருவோணம், இன்னொன்று இந்த திருவாதிரை. இன்றைய நாளை ஆதிரை நன்னாள் என்றும் கூறுவார்கள். நாம் கிருஷ்ணனுக்கு ரோகிணி நட்சத்திரம், ராமனுக்கு புனர்பூசம் நட்சத்திரம் என்று சொல்வதைப்போல் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம், இந்தத் திருவாதிரை நட்சத்திர நன்னாள்.

'ஆருத்ரா' என்றால் 'நனைந்த' என்று பொருள். சிவபெருமானுடைய கருணைக் கடலில் நாமெல்லாம் நனைந்து போகிறோமாம். அதனால் இந்த நன்னாளுக்கு ஆருத்ரா தரிசனம் என்றும் பெயர். அந்த சிவபெருமானை நினைத்து ஆராதனை செய்ய உகந்த நாள் இன்று. 

திருவாரூர் தியாகராஜர்
திருவாரூர் தியாகராஜர்

ஏன் அவரை நினைக்க வேண்டும்? 

சிவபெருமானுக்கு 'ஆசுதோஷி' என்று பெயர். நாம் வேண்டும் அனைத்தையும் அப்படியே நமக்கு ஆசீர்வதிப்பார் என்று பொருள். 

இந்த நாளின் சிறப்புகள்!

சேந்தனார் என்றொரு சிவபக்தர் சிதம்பரத்தில் வசித்து வந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு சிவனடியாருக்கு உணவு கொடுத்துவிட்டுதான் அவர் சாப்பிடுவார். இப்படி ஒரு திடமான கொள்கையைத் தன் வாழ்வில் கொண்டவர் இவர். சிவனின் மீது அப்படி ஒரு அளவற்ற பக்தி. எந்த ஒரு பொருளும் கையில் இல்லை என்றாலும் ஏதாவது செய்து பொருளை ஈட்டி சிவபெருமானுக்கு நெய்வேத்தியம் செய்து அதை ஒரு சிவனடியாருக்குக் கொடுத்து மகிழ்பவர்.

ஒரு நாள் அவர் கையில் எந்த உணவும் இல்லாதநேரம் சிவனடியார் ஒருவர் வந்துவிட்டார். இப்போது அவருக்கு உணவு கொடுத்தாக வேண்டும் தன்னிடம் உள்ள அரிசிகளைத் திரட்டி களியாகச் செய்து படைத்தார். அன்று அங்கு வந்து அவரை சோதித்து உணவு உண்டு சென்றது சிவபெருமான்தான்.

இது எப்படித் தெரிகிறது?

மறுநாள் தில்லை வாழ் அந்தணர்கள் கோயிலைத் திறந்து பார்த்த போது களி சிந்தியிருந்தது கண்டு வியப்படைகின்றனர். எப்படி இங்கே களி வந்தது என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர். அப்போது ஓர் அசரீதி ஒலித்தது.

"இது என் பக்தன் வீட்டில் நான் விரும்பி உண்ட களியமுது. இனி இந்த நாளை என் பக்தன் சேந்தனார் படைத்ததுபோல் களி செய்து என்னை ஆராதியுங்கள்" என்றது. அன்று தொடங்கி இன்றுவரை திருவாதிரை நன்னாளில் களி செய்து நெய்வேத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.

திருவாரூர்
திருவாரூர்

பக்தனுக்காக இரங்கிய இறைவன்! 

திருவாதிரைக்கு முதல் நாள், தேர் ஓடும் சிதம்பரத்தில். ஒரு தடவைத் தேர் சேற்றில் மாட்டிக்கொள்ள அதனால் நகர முடியவில்லை. எல்லோரும் முயன்று பார்த்தும் நகரவில்லை. அப்பொழுது ஒருவர் மீது திடீரென்று இறைவன் இரங்கி, "சேந்தனார் வந்து பல்லாண்டு பாடினால் தான் தேர் நகரும்" என்று கூறினார். இதைக் கேட்ட சேந்தனர் மனம் உருகினார். தேர் இருக்கும் இடத்துக்கு வந்து மனம் மகிழப் பல்லாண்டு பாடினார். அப்போதுதான் மன்னரும் மற்றவர்களும் அவர்தான் சேந்தனார் என்று அறிந்துகொண்டனர். தேரும் நகர்ந்து நிலை சேர்ந்தது. என்கிறது சிதம்பரம் தலபுராணம்.

அமுதாய் படைக்க வேண்டியவை:

இந்த நாளில் களி மட்டுமின்றி ஏழு வகை காய்கறிகளால் ஆன கூட்டும் செய்து படைக்க வேண்டும். வாழைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சக்கரவல்லி கிழங்கு, மொச்சை, இது போல் கிடைக்க கூடிய காய்கறிகளைப் போட்டுக் கூட்டாக்கி அமுது படைக்கலாம். இந்த நாளில் மனமுவந்து திருவெம்பாவை பாடி இறைவனை தியானித்தால் அவன் அருள் நீங்காமல் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

இன்றைய நாள் சிதம்பரத்தில் மட்டுமல்ல திருவாரூரிலும் மிக விசேஷம். ஆரூராரின் பாத தரிசனம் கிடைக்க கூடிய நாள் இது. வருடம் முழுவதும் தியாகராஜரின் முகத்தை மட்டுமே நம்மால் காண இயலும். அபிஷேக நேரத்தில் கூட அவருடைய மேனி யந்திரத்தால் மறைக்கப்பட்டிருக்கும். திருவாதிரை நாளில் தியாகராஜரின் வலது பாதத்தை தரிசிக்க முடியும்.

அடியும் முடியும் காணமுடியா சிவபெருமானின் பாதத்தை தரிசிக்க வாய்ப்பு நல்கும் இரண்டு நாள்களில் ஓன்று இன்றைய திருவாதிரை. மற்றொன்று பங்குனி உத்திரம். இந்த நாளில் பதஞ்சலி முனிவர் திருவாரூர் தியாகராஜரின் பாதத்தைக் காண எழுந்தருள்வாராம்.

இவ்விழாவிற்கு ஒரு நாள் முன்பாகவே தியாகராஜர் மண்டபத்திற்கு பதஞ்சலி முனிவர் அழைத்து வரப்படுவார். உடன் நீலோத்பலாம்பாளும், அவர் தோழி மற்றும் உற்சவ மூர்த்தியும் இந்த மண்டபத்திற்கு எழுந்தருள்வார்கள். இன்று அதிகாலை திருவாரூர் விளமல் எனும் இடத்தில் இருக்கும் பதஞ்சலி முனிவரின் மூலக்கோயிலிலிருந்து யாத்திரை பாதகரை சப்பரத்தில் அழைத்து வந்து ஆரூரரின் பாதத்தை காணச்செய்கிறார்கள்.

திருவாரூர் தியாகராஜர்
திருவாரூர் தியாகராஜர்

முன் காலத்தில் முனிவர் மட்டுமே கண்ட இந்த அற்புத தரிசனத்தை இன்று மக்கள் அனைவரும் காணும் வகையில் செய்திருக்கின்றனர். அதிகாலை முதல் மாலை வரை மக்களுக்கு பாதத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது. தரிசனம் முடிந்ததும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையின் இருபத்து ஒரு பாடல்களைப் பாடி ஆராதிப்பார்கள்.

அதோடு இன்று தியாகராஜருக்கு பிரசாதமாக இருபத்து ஒரு இனிப்புகள், கனிகள் என அடுக்கி வைத்து அமுது படைப்பர். ஆரூரில் பிறந்தால் முக்தி என்னும் வாக்கு போல் ஆரூருக்குச் சென்று வந்தவரைக் கண்டாலே தியாகராஜரின் அருள் கிட்டும் என்றும் சொல்லுவார்கள். 

வழக்கம் போல் திருவாதிரைத் திருநாளான இன்று திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில், தியாகராஜரின் பாத தரிசனம் காண அதிகாலையிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து ஆரூர் தேரின் வடம் போல் வரிசைகட்டி நின்று காத்திருக்கிறார்கள். கிழக்குக் கோபுரத்தின் கொடிமரத்திற்கு எதிரே தியாகராஜர் அருள்பாலிக்கிறார். 

இன்று திருவாரூரின் தியாகராஜரை திருவெம்பாவை பாடி ஆராதித்தால் சிவபெருமானின் பூரண அருள் கிடைக்கும்.